Published:Updated:

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate
ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

எதிர்பார்த்ததுதான் என்றாலும்...அதையும் தாண்டிய ஏகோபித்த வரவேற்பு இந்த தொடருக்கு. வாசகர்களுக்கும், முக்கியமாக ஓவியா-ஜுலிக்கும் நன்றிகள். நேற்று விகடன் தளத்தில் அதிகளவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாக முதல் அத்தியாயம் இருந்தது. அந்த வரவேற்பை தக்க வைக்க கை கொடுக்குமாறு பிக்பாஸை கேட்டுக் கொள்கிறேன்.

நேற்றைய, ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! அத்தியாயத்தின் இறுதியில் ஓவியா மீதான உங்கள் அபிமானம் பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதிலை கணிக்க முடியும். 

ஆம்... ஓவியா ஆர்மி ஓவியாவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பிக் பாஸ் டார்லிங் பட்டத்தை ஓவியாவே இப்போதும் தக்க வைக்கிறார். 

சரி... நேற்றைய (29/07/17) பிக் பாஸ் நிகழ்வுகளை அலசுவோம்..! 

பரணி வெளியேற்ற வைபவம் நடந்த போது 'வீட்டுக்குள்ள இத்தனை கஷ்டப்பட்டீங்க, எப்ப சந்தோஷமா இருந்தீங்க?' என்று கமல் பரணியிடம் கேட்டார். 'சனி,ஞாயிறு.. நீங்க வரும் போதுதான் சார்" என்றார் பரணி. ஒருவகையில் அது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் கூட பொருந்தும் என நினைக்கிறேன்.

அந்த வாரம் முழுக்க நடந்த பரபரப்புகளுக்கான வேறொரு பரிமாணத்தை, அதற்கான விடைகளை, தீீர்ப்புகளை அவர் தருவார் என்று நீதிபதியை ஆவலாக எதிர்நோக்கி அமர்ந்திருப்பது போன்று நாம் காத்திருக்கிறோம். அம்மாவினால் தண்டிக்கப்பட்ட சிறுவன், அழுது கொண்டே  'இரு.. அப்பா வந்ததும் அவர் கிட்ட சொல்றேன்' என்று தன் மனக்குறையைக் கொட்ட அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல கமல் வருகையை வார இறுதியில் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. வெளி மனிதர்களையே அதிகம் பாா்த்திராத போட்டியாளர்களுக்கும் கமலின் வருகை பயங்கர உற்சாகத்தையும், பயம் கலந்த ஆவலையும் ஏற்படுத்தும் என யூகிக்கிறேன். 

சிறந்த ஒப்பனையுடன் வரவேற்பறையில் அவர்கள் பவ்யமாக அமர்ந்திருக்கும் தோரணையிலேயே இது தெரிகிறது. வாத்யாரைக் கண்ட பள்ளி மாணவர்கள் போல வரவழைக்கப்பட்ட மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார்கள். 'என்னப்பா... ஏதோ சண்டையாமே?' என்று விசாரிக்கப்படும் போது .. 'சண்டையா.. இல்லையே.. அப்படின்னா... என்ன..அது எங்கோ திருநெல்வேலியிலோ . தூத்துக்குடியிலோ இருக்கும் சார்.. எங்களுக்குத் தெரியாது ' என்று பூசி மெழுகப் பார்க்கிறார்கள்..  30 காமிராக்கள் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து 'என்ன நடந்துச்சுன்னா.. ' என்று அபத்தமாக விளக்கம் தர முனைகிறார்கள். அவர்களின் அகவுணர்வுகளை மட்டுமே காமிராவால் பதிவு செய்ய முடியாது. 

கமலின் முன்னால் போட்டியாளர்கள் இப்படியிருக்கும் போது, சற்று கவனித்துப் பார்த்தால் ஓவியா மட்டுமே இங்கு வித்தியாசப்படுகிறார். மற்றவர்கள் அதுவரை பல பிறாண்டல்களில், உரசல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கமல் முன்னால் அத்தனையையும் மழுப்புகிறார்கள்; நடிக்கிறார்கள். இதற்கு நேரெதிராக ஓவியா இருக்கிறார்.  வீட்டினுள் ஏற்படும் பல சர்ச்சைகளை பொறுமையாக கடக்கிறார். சமயங்களில் வெடிக்கிறார்.

ஆனால் கமல் முன்னால் போலியாக எதையும் நடிப்பதில்லை. அது கோபமோ, மன்னிப்போ, சந்தோஷமோ சட்டென்று அப்படியே வெளிப்படுத்தி விடுகிறார்.. இதுவே அவருடைய நேர்மையையும் தனித்தன்மையையும் காட்டுகிறது. இது போன்றவர்கள் வெளியுலகத்தை விட தங்களுக்குத் தானே உண்மையாக இருப்பதற்கே முக்கியத்துவம் தருவார்கள். மற்ற குறைகள் இருந்தாலும் இந்தக் குணத்திற்காகத்தான் ஓவியா மிக அதிகமாக கொண்டாடப்படுகிறார். பெரும்பான்மையோரிடம் இல்லாத அரிய விஷயம் இது.

ஜூலி தனக்கு செய்த அபாண்டமான துரோகத்தையும், நெஞ்சழுத்தத்துடன் இன்னமும் அதை சாதிப்பதையும் ஓவியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்தக் கீழ்மை அவருக்கு வெறுப்பையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. அதைச் சகிக்க முடியாமல் கோபப் பட்டுக் கொண்டே இருக்கிறார்.  மற்றவர்களின் கடுமையான வசைகளையும் வெறுப்பையும் உடனே மறந்து ' ok fine, no problem' என்று உதறி விட்டுச் செல்லும் ஓவியாவால், ஜூலியின் இந்த நேர்மையின்மையை சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பது ஒருவகையில் நியாயமே..

இன்னொரு புறம், இந்த விஷயத்தில் ஜூலி இன்னமும் கூட மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்றே தெரிகிறது. வாத்தியார் அதட்டி, 'என்னடா மன்னிப்பு கேட்கறியா?' என்றவுடன் 'சரிங்க .. சார்..' என்று பவ்யமாக கூறி விட்டு வாய் வார்த்தையாக மன்னிப்பு கேட்கும் பள்ளி்ச் சிறுவனைப் போல்தான் ஜூலி நடந்து கொண்டிருக்கிறாரே ஒழிய, எவருடைய கட்டாயமும் உந்துதலும் இல்லாமல் தன்னிச்சையாக மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கவில்லை. கடந்த வாரமும் சரி, இந்த வாரமும் சரி அதுவே நிகழ்ந்தது. இதுதான் ஓவியாவை அதிக மன உளைச்சலுக்கு தள்ளுகிறது. தாமே முன் வந்து பேசி. ஜூலிக்கு சில வாய்ப்புகள் தந்தும் கூட அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கடந்து செல்வது அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கமல் முன்னாலேயே 'அவ இன்னமும் திருந்த மாட்டா சார்..எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்ல வைக்கிறது.

ஆனால் ஒன்று தோன்றுகிறது. ஓவியா இல்லாவிட்டாலும் கூட நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். ஜூலி இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி கணிசமான வெறுமையை அடையும் என்று நினைக்கிறேன். பிரபல அந்தஸ்து ஏதுமில்லாமல் ஒரு சாதாரண பின்னணி கொண்ட பெண்ணால் ஒரு நிகழ்ச்சியில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும், தனக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒருவகையில் அவரின் பலம்.  'எங்களை விடவும் அவங்க நல்லா நடிக்கறாங்க சார்' என்று ஓவியா, கச்சிதமான நேரத்தில் போட்டுக் கொடுத்தது ஒருவகையில் சரியான அனுமானம். 


 

சரி, நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.

வழக்கம் போல் ஓவியாவின் ரகளையான நடனம். இதைப் பாராட்டி பாராட்டி நமக்கே சலித்து விட்டது.

ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்த ஒரு தவளையிடம் ஓவியா பேசுவதும் அது நகர்ந்த போது பதறி ஓடி வந்ததும் பார்க்க ஜாலியாக இருந்தது. போலவே ரைசாவும் தவளையைக் கண்டு அதீதமாக பயந்தது நகைச்சுவை. பெருநகரத்தைச் சார்ந்த உயர்வர்க்க பெண்களின் தோரணையே அவர்களிடம் தெரிந்தது. மாறாக, விவசாயப் பின்னணியிலிருந்து வந்ததாலேயோ என்னமோ, ஜூலி தவளையைக் கையால் பிடித்து அப்புறப்படுத்தினார். ஒருபுறம் இது வேண்டாத வேலைதான். அப்படியே விட்டிருந்தால் அது போயிருக்கும்.  கையில் பிடித்து முறுக்கு பிழிந்திருக்க வேண்டாம். 


 

காயத்ரி இப்போது அடக்கி வாசிப்பது, தன்னுடைய பிம்ப சேதத்தை சரிசெய்யும் முயற்சி முயன்றாலும், அவருடைய கடுமையான முகம் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. 'கார்ப்பெட் இழுக்கப்பட்ட விவகாரத்தில்' "ஓவியாவின் மீது அதிக கோபம் வந்தது' என்கிறார். இது ஜூலி மீதுள்ள பாசமா அல்லது தன்னிடமிருக்கும் அடிமையை தக்கவைத்துக் கொள்வதற்கான உந்துதலா என்பது ஆராயத்தக்கது.

ஜூலி தலைவர் ஆனதும் அதிக பந்தா செய்தது பிரச்னைக்கு முக்கியமான காரணம். ஓவியாவை பழிவாங்க வேண்டுமென்றே அவர் காய்களை நகர்த்திய தந்திரமும். (இந்தச் சூழலை உருவாக்கித் தந்த பிக் பாஸ் மூல காரணம் என்றாலும்). 

'சின்ன பிக் பாஸ்' என்கிற தற்காலிக கிரீடம் கிடைத்தாலும் ஆரவ் அதை வைத்துக் கொண்டு அதிக பந்தாவேதும் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அந்த நிலையை சரியாக கையாண்டார். தண்டனைக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களிடம் அதற்கான காரணத்தை, இயல்பான பணிவுடன் சொல்லி நம்மைக் கவர்ந்தார். ஜூலி இதைச் செய்யவில்லை. 'பதவி வரும் போது பணிவு வரவேண்டும்' என்கிற தங்க வாக்கியம் இங்கு நினைவுகூரத்தக்கது.

தலைவர் ஆனாலும் ஒருவகையில் அது ஜூலிக்கு அளிக்கப்பட்ட தண்டனையே. சிறிது நகர வேண்டுமானாலும் 'ரெட் கார்ப்பெட்' சேவை தேவை. அதற்கு ஓவியாவை அழைக்க வேண்டும். பிறகென்ன, சண்டைதான், சச்சரவுதான். 'பிக் பாஸின்' இந்த ஏற்பாடு பிரமாதம். நூறு நாரதர்கள் சேர்ந்தாலும் இது போன்ற டெரரான ஐடியாக்களை யோசிக்க முடியாது.

'சூசு' போவதற்காக ஜூலி  ஆரவ் பெயரைச் சொல்லி அழைக்க, "ஏன், என் பெயரைச் சொல்லி கூப்பிடட்டும்' என்று ஓவியா சொன்னது ஜாலியான பந்தா. ஒருவகையில் அது சரிதானே? 'டயர்ட் ஆன மாதிரி இருக்கே. காலைப் பிடிச்சு விடட்டுமா?' என்று ஜூலியை அவர்  விளையாட்டாக சீண்டிக் கொண்டேயிருந்தார். தலைவர் பதவி எப்போதும் பிரச்னைதான் போல. முள் கிரீடம் அணிந்தது போல. பாவம் ஜூலி. 

***
'ஒரு பொய் நூறு பொய்களுக்கான விதை' என்கிற மகா தத்துவத்துடன் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் கமல். தமிழக அமைச்சர்களுடன் இடும் சண்டை ஒருபுறம், கடுந்தமிழில் 'ட்வீட்கள்' எழுத வேண்டிய கடமை ஒருபுறம், ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய கண்ணியம், சபாஷ் நாயுடு.... என்று இருக்கிற ஆயிரம் பணிகளுக்கிடையில் அது சார்ந்த சலிப்பு முகத்தில் ஏதுமில்லாமல் புத்துணர்ச்சியோடு வந்தார். வழக்கமான கருப்பு உடை கனஜோராக இருந்தது. ஆனால் காமிராவை முறைத்து பார்த்துக் கொண்டே 'ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு' என்று பயமுறுத்துவதை தவிர்க்கலாம். 


 

கடந்த வாரங்களைப் போல், 'வழவழா கொழகொழா' நாட்டாமையாக இல்லாமல் தேங்காய் உடைத்ததைப் போன்று தெளிவாக பிரச்னைகளை  நோக்கி கமல் நகர்ந்தது பாராட்டு. மாற்றம், முன்னேற்றம், கமல்.

ஆனால் என்னவொரு   நெருடல் என்றால்.....

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். மேலாளராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பெண்களைப் பார்த்ததும் இளிப்புடன் வழிவார். ஆனால் ஆண்களைப் பார்த்ததும் முகம் கடுகடுவென்று மாறும். இதற்கேற்ப பின்னணியில் 'சுந்தரி நீயும் சுந்தரம் ஞானும்' பாடல் ஓடும். (அட, இதுவும் கமல் பாட்டுதான்).

இதைப் போலவே சுற்றிச் சுற்றி வந்து ஜூலியின் பொய்யை இரண்டு வாரமாக மிக நீண்ட குறுக்கு விசாரணை செய்யும் கமல், காயத்ரி செய்த ராவடிகளை போகிற போக்கில் கடந்து செல்வது ஏன்.. ஏன்.. என்கிற கேள்வி நெருடிக் கொண்டேயிருக்கிறது. ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி டீம் செய்த அக்கிரமங்களை 'குறும்படமாக' உருவாக்கும் இயக்குநராக கமல் ஏன் மாறவில்லை? ஏதேனும் பட்ஜெட் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் சார்பு அரசியலா?

'தாங்கள் சார்பற்றவர்கள்' என்று என்னதான் பல்வேறு விதமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும் இத்தனை பெரிய நெருடலை அவர்களால் கடக்க முடியவில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் எதிர்வினைகளை கமலும், பிக் பாஸ் டீமும்  நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேற்குறிப்பிட்ட நெருடல் பல பார்வையாளர்களிடம் இருப்பதை சமூக வலைத்தளங்களில் எழும் கொதிப்புகளின் மூலம் உணர முடிகிறது. இந்தக் கேள்விக்கான சரியான பதிலை விளக்குவது நலன் பயக்கும், அவர்களுக்கு. 


 

'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நடித்துக் காண்பிக்க வேண்டும் என்றொரு task தரப்பட்டது. 'எது பொய், எது உண்மை, பெண்ணாக வேடமிட்ட ஆண்..' என்கிற கருத்தாக்கம், இந்த திரைப்படத்தில் இருந்ததால் இதைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் கமல்.

இரு அணிகளின் பங்களிப்பில், சக்தி குழுவின் நடிப்பு சிறந்ததாக இருந்தது. நாகேஷின் தோரணையை இயன்ற வரையில் பிரதிபலித்தார் சக்தி. காயத்ரியின் நடிப்பும் ஓகே. ஜூலியின் பிராமண உச்சரிப்பு பரவாயில்லை. 'டெல்லி் கணேஷாக' ஆரவ் கலக்கியது ஆச்சரியம். இறுதிப்பகுதியில் மாராப்பை மூடிய படி ஜூலி தந்த எக்ஸ்பிரஷன் ரகளை. 

வையாபுரி டீமில் அவருடைய நடிப்பு அட்டகாசம். கூடுதலாக பல வசனங்களைச் சேர்த்து பிரமாதப்படுத்தினார். சந்தடி சாக்கில், தன் வழக்கமான புராணமான, புஷ்டியான கணேஷை 'சாப்பாட்டு ராமன்' என்று கிண்டலடிக்கவும் தவறவில்லை. பிராம்ப்டிங் தர வேண்டியிருந்த ஓவியா பயங்கரமாக சொதப்பினார். பெண்  வேடத்தில் சிநேகனைப் பார்க்க செம காமெடியாக இருந்தது. மன்மோகன் சிங்கை நினைவுப்படுத்துவது போல இருந்தார். 

நாடகம் முடிந்ததும் நிஜ நாடகம் நடந்தது. 'அந்த ஐந்து விநாடி வீடியோவை ஏன் துருவிக் கொண்டேயிருக்கிறீர்கள்' என்று கமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 'என் மேல் நம்பிக்கையில்லையா?"

'திரும்பவும் போட்டுப் பார்க்கலாமா?' என்கிற கேள்விக்கு 'வேண்டாம் சார்' என்று ஜூலி சொன்னது ஒருவகையில் புத்திசாலித்தனம். ஆனால் இந்த விஷயத்தைதானே இரண்டு வாரங்களாக 'திரும்பத் திரும்ப பேசற நீ' யாக அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார் என்று எரிச்சலாகவும் வந்தது. 

'அவ்வை சண்முகி' காட்சிகள் நடிக்கப்பட வைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு 'அதுல நெறய பொய் வருது' என்று முதலில் சரியாக சுட்டிக் காட்டியது ஒருவகையில் அவரை வெளிப்படுத்தியது. நுணலும் தன் வாயால் கெடும். (காலையில் வந்த தவளை). 

ஜூலி கேட்ட மன்னிப்பில் வழக்கம் போல் உண்மைத்தனம் இல்லை. ஒரு கட்டாயத்திற்காக சொன்னது போல்தான் இருந்தது. ஓர் அற்பமான பிரச்னையை பிடித்துக் கொண்டு வருடக்கணக்கான பகைமையுடன் உளைச்சல் கொள்ளும் நமக்கும் இதில் பாடம் இருக்கிறது. உறவுகளுடன் கழிக்க வேண்டிய எத்தனை மகிழ்ச்சியான தருணங்களை இது போன்ற அசட்டுத்தனமான பிடிவாதத்தின் மூலம் இழக்கிறோம்?


 

சக்தியின் 'ஆணாதிக்க' உரையாடலை, கமல் நேரடியாக கண்டித்தது பாராட்டு. ஆனால் சக்தி இன்னமும் கூட அதை நேரடியாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. கமல் பேசுவதைப் போலவே 'வழவழா' என்று சுற்றி வந்தார். அப்போது கூட தான் கையை ஓங்கியதற்காக மனம் வருந்தி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. ஒருவகையில் இதுவும் 'ஜூலித்தனமே'.

காயத்ரியின் நிழலாக இருக்கும் சமயங்களில்தான் சக்தி பாழாகிறார் என்றாலும், அவர் மற்றவர்களை அவதானிக்கும், கிண்டலடிக்கும் விஷயங்களில் கூர்மையானவராக இருப்பதைக் கவனிக்கலாம். 'ஜூலி இல்லைன்னா.. எந்த ஸ்டோரியும் இல்ல' 'அடிபட்ட பாம்பு மாதிரியே படுத்திருக்கா' என்பது போன்ற உரையாடல்களில் ஜாலித்தனத்தோடு புத்திசாலித்தனமும் இருக்கிறது. 

கமலின் விசாரணையின் போது ஜூலியின் வரவழைக்கப்பட்ட சிரிப்பிற்கும் ஓவியாவின் தன்னிச்சையான சிரிப்பிற்கும் இடையே ஆயிரம் வித்தியாசம் இருந்தது. 'கார்ப்பெட்' இழுத்தது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டபோது அதை உடனே ஒப்புக் கொண்டதில் ஓவியா கவர்ந்தார். 'பொய் சொல்றவங்களை என்னால் ஏத்துக்க முடியாது.. சார்..' என்று அவர் சுட்டுவது நியாயமான காரணமே. அவரது ஆளுமைக் குணம் அப்படி. 

***
பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்கிற கருத்து பல பார்வையாளர்களின் மனதில் இருப்பதை பார்க்கிறேன். இதைப் பற்றி வரும் கட்டுரைகளில் விரிவாகப் பேசுவோம். 'தன்னைத் தானே வரைந்து கொள்ளும் சித்திரம்' என்று கச்சிதமான வார்த்தையில் கமல் குறிப்பிட்டது இதைத்தான். 

திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில், பின்னணயில் மனிதர்கள் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. அதில் போலி இல்லை. அது திட்டமிட்ட நடிப்பு என்றால் பிக் பாஸ் போட்டியாளர்கள்தான் உலகின் மிகச்சிறந்த நடிகர்களாக இருக்க முடியும். ஆனால் திரைத்துறையில் அவர்கள் அத்தனை சிறந்தவர்கள் இல்லை என்கிற யதார்த்தத்தை கவனியுங்கள்.


உண்மையான பாவங்களுடன் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகளை திறமையாக ஒழுங்குபடுத்துவதின் மூலம் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் திரித்துக் காட்ட முடியும். தொடர்ச்சி அறுபடாமல் செய்வதுதான் இதிலுள்ள சவால். எடிட்டிங் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. (கவண் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வருகிறதா?) ஆனால் சினிமா ஞானம் அதிகமுள்ள கமல் இதை மறுக்க அல்லது மழுப்ப முயன்றது, சின்ன உறுத்தல். சில விஷயங்களை காட்டாமலிருப்பதின் மூலமும், சில காட்சிகளை கோடிட்டு அழுத்தம் திருத்தமாக காட்டுவதின் மூலம் பல 'உண்மைகளை' கட்டமைக்க முடியும். 

'காமிரா பொய் சொல்லாது. அது சிந்தனைக் கருவியல்ல' என்று அவர் சொன்னது மட்டுமே அடிப்படையான உண்மையாக இருக்க முடியும். 


 

கேமராவின் பிரக்ஞை இல்லாமலிருப்பதே ஒரு நடிகனுக்கான அடிப்படை தகுதி என கமல் சொல்லியது முக்கியமான விஷயம். எந்தவொரு சினிமாவிலும் ஒரு துளி நேரமாவது நடிகர்கள் காமிராவைப் பார்த்து, அது எடிட்டிங்கிலும் தப்பி வெளியே வந்து விட்டால், சாதத்தில் கல்லைக் கடித்தது போல பார்வையாளர்களிடம் சட்டென்று ஒரு விலகலை ஏற்படுத்தும். 
***
'வெளியே வந்தா கையைக் காலை உடைச்சுடுவேன்'னுலாம் சொல்லாதீங்க.. நான் இங்க இருக்கேன்' என்று காயத்ரியை மறைமுகமாக அவர் குறிப்பிட்டது 'நச்'. ஆனால் அந்த வசனம் காயத்ரியை இடித்துரைக்கவா, அல்லது சமகால அரசியல் பூசல் தொடர்பான வசனமா என்பது குழப்பம். 'பிக் பாஸ்' சூழலையும் 'தமிழக அமைச்சர்கள் - கமல் மோதல்' என்கிற அரங்கிற்கு வெளியேயுள்ள சூழலையும் இணைத்து நையாண்டி செய்ததில் கமலின் சமயோசிதம் பாராட்ட வைக்கிறது. 

ஆனால் - 'அவங்க எல்லாம் தேவையில்லை (ரசிகர்கள்). நான் ஒருத்தனே போதும்' என்று வெளியே அறிக்கை விட்ட அதே சவடாலை அரங்கின் உள்ளேயும் வைத்தார். ஒரு விளி கேட்கிறது! 

loading...
அடுத்த கட்டுரைக்கு