Published:Updated:

''அத்திப்பூக்கள் பார்த்துட்டு என்னைத் திட்டாத ஆளே கிடையாது!'' - 'வள்ளி' சீரியல் ராணி

''அத்திப்பூக்கள்  பார்த்துட்டு என்னைத் திட்டாத ஆளே கிடையாது!'' - 'வள்ளி' சீரியல் ராணி
''அத்திப்பூக்கள் பார்த்துட்டு என்னைத் திட்டாத ஆளே கிடையாது!'' - 'வள்ளி' சீரியல் ராணி

''அத்திப்பூக்கள் பார்த்துட்டு என்னைத் திட்டாத ஆளே கிடையாது!'' - 'வள்ளி' சீரியல் ராணி

"பாசிட்டிவ், நெகட்டிவ்னு எல்லா ரோலிலும் கலக்குவேன். ஆனா, எனக்குத் தொடர்ச்சியாக வந்த நெகட்டிவ் ரோலில் முழு பெஸ்டையும் கொடுத்ததால், அந்த கேரக்டர்கள் மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அதனால், மக்கள் என்னை 'பெஸ்ட் வில்லி'னு புகழ்ந்துகிட்டிருக்காங்க" எனச் சிரிக்கிறார் நடிகை ராணி. 'வள்ளி'யில் 'இந்திரசேனா' என்கிற பெயரில் வில்லியாக மிரட்டியும், 'குலதெய்வம்‘ ஆர்த்தியாக அன்பால் நெகிழச்செய்தும் ரசிகர்களை மகிழ்விப்பவர். 

“குழந்தை நட்சத்திரமாகக் கலக்கிய அனுபவம்...” 

“நான் ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். அப்பா ஆனந்த், மாற்று மொழிப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து புகழ்பெற்றார். அப்பா சினிமாவில் இருந்ததால், எனக்கு சைல்டு ஆர்டிஸ்டா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ரொம்பச் சின்னப் பொண்ணா இருந்த காலத்திலிருந்து ஒன்பதாவது படிக்கிற வரை ஐம்பதுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களில் சைல்டு ஆர்ஸ்டிஸ்டா நடிச்சுட்டேன்.'' 

“சினிமா டு சீரியல் பிரவேசம் எப்போ ஆரம்பிச்சது?” 

“தொடர்ந்து சைல்டு ஆர்டிஸ்டா நடிச்சுட்டு இருந்ததுனால படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியலை. அதனால், ஒன்பதாம் வகுப்போடு நடிப்புக்கு பிரேக் விட்டுட்டேன். படிப்பு, கல்யாணம் என வாழ்க்கை மாறிச்சு. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு தெலுங்கு சீரியல்மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தபோது, அப்போதான் புதுசா கேமிரா முன்னாடி நிற்கிற மாதிரி உணர்வு வந்துச்சு. அந்த சீரியலில்ல 'தீ விபத்தில் முகமெல்லாம் பாதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு வர்ற மாதிரியான சவாலான கேரக்டர் என்க்கு'. பெரிய பெயர் வாங்கி கொடுத்த கேரக்டரும்கூட. இப்போவரை சீரியல் பயணம் தொடர்ந்துட்டிருக்கு. என் சகோதரிகளான வரலட்சுமி மற்றும் சரஸ்வதியும் சினிமா, சீரியல்னு கலக்கினவங்கதான்." 

“தமிழ் சீரியல் என்ட்ரிக்கு பிறகுதானே நல்ல அடையாளம் கிடைச்சுது?” 

“உண்மைதான். ‘சிகரம்’ சீரியல் மூலமாக தமிழில் என்ட்ரி கொடுத்தேன். அடுத்து, ‘அலைகள்’ கவிதா என்கிற நெகட்டிவ் ரோல் பெரிய ரீச் ஆச்சு. அந்த சீரியல் மூலமாக எங்கே போனாலும் ‘அலைகள்’ ராணி என்றே கூப்பிடுவாங்க.'' 

“பல வருஷங்களாக பெஸ்ட் வில்லி பெயரை தக்கவெச்சுட்டு இருக்கீங்களே..." 

“இன்டஸ்ட்ரியிலும் அப்படித்தான் சொல்றாங்க. ‘அலைகள்’ சீரியலுக்குப் பிறகு சில சீரியல்களில் வேறு ரோல்களில் நடிச்சேன். 'சொர்க்கம்' சீரியலில் மறுபடியும் நெகட்டிவ் ரோல். அது ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலே ஒளிபரப்பாகி ஹிட் அடிச்சுது. அடுத்து, 'சரிகம' நிறுவனத்தின் ‘அத்திப்பூக்கள்' சீரியல்ல வில்லி கேரக்டரைப் பார்த்துட்டு என்னை திட்டின ரசிகர்கள் எண்ணிக்கை கொஞ்சநஞ்சமில்லே. அஞ்சு வருஷத்துக்கும் மேல ஓடின அந்த சீரியலுக்கு அப்புறம், அதே நிறுவனத்தின் தயாரிப்பில் ‘வள்ளி’ சீரியலில் கமிட் ஆனேன். அஞ்சு வருஷமா 'டான்' இந்திரசேனாவா நடிச்சுட்டிருக்கேன். ‘அத்திப்பூக்கள்’, ‘வள்ளி’ ரெண்டு சீரியலுக்குமே பெஸ்ட் வில்லிக்கான, 'சன் குடும்பம் விருது' கிடைச்சுது. குழந்தை நட்சத்திரமா ரசிகர்களைச் சிரிக்கவைத்தவள், இப்போ கண் பார்வையாலேயே மிரளவைக்கிறேனேனு நினைக்கிறப்போ எனக்கே ஆச்சரியமா இருக்கு.” 

“இப்போ ‘குலதெய்வம்’ ஆர்த்தியாக பாசிட்டிவ் ரோலிலும் கலக்குறீங்களே..." 

“பாசிட்டிவ், நெகட்டிவ்னு எந்த ரோல் வந்தாலும், அதை பெஸ்டா கொடுக்கணும்னு நினைப்பேன். தொடர்ந்து நெகட்டிவ் ரோலிலே நடிக்கிறோமேனு நினைச்சுட்டிருந்தபோது, ‘குலதெய்வம்’ ஆர்த்தி வாய்ப்பு வந்துச்சு. இதிலும் ஆரம்பத்தில் கொஞ்சம் நெகட்டிவ் கேரக்டராக போச்சு. அப்புறம் பாசிட்டிவா மாறி, இப்போ ரொம்ப நல்லவளா இருக்கேன். வில்லியாகவே என்னைப் பார்த்து கரிச்சுக்கொட்டிட்டிருந்த ரசிகர்கள், இப்போ புகழ ஆரம்பிச்சிருக்காங்க.'' 

“பதினைந்து வருஷங்களாகத் தொடரும் சீரியல் ஆக்டிங் அனுபவம் பற்றி...” 

“வாய்ப்புகள் கிடைக்கிறது ஈஸி. அதை தக்கவெச்சுக்கிறது ரொம்பக் கஷ்டம். பதினைந்து வருஷங்களாக ஃபீல்டுல நான் இருக்கக் காரணம், ஆடியன்ஸ் பல்ஸ் தெரிஞ்சு, அதற்கேற்ப என் நடிப்பை அவங்க மனசுல நிற்கிற மாதிரி செய்யறதுதான். சினிமாவுல பிரகாஷ்ராஜ் சார் பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு கேரக்டர்கள்ல கலக்கினாலும், அவரை வில்லனாதான் பலரும் ரசிக்கிறாங்க. அப்படி ரசிகர்களின் மைண்ட் செட்ல, என்னை வில்லியா நினைவில் வெச்சுகிட்டாங்க. ஒரு முத்திரைக்குள் சிக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லைன்னாலும், ரசிகர்களின் விருப்பத்தை மதிச்சு, அதில் பெஸ்டா நடிக்கிறேன். சினிமாவில் வில்லி கேரக்டர்கள் பெரிய அளவில் இல்லை. எனக்கு அங்கே வாய்ப்பு கிடைச்சா தூள் கிளப்ப ரெடி” எனப் புன்னகைக்கிறார் ராணி. 

அடுத்த கட்டுரைக்கு