Published:Updated:

மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 36) #BiggBossTamilUpdate

மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 36) #BiggBossTamilUpdate
மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 36) #BiggBossTamilUpdate

மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 36) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

35-ம் நாளின் தொடர்ச்சி இன்னமும் முடியவில்லை. பிந்து மாதவி விருந்தினரா இல்லையா, என்று தெரியாமல் போட்டியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். வையாபுரி வேறு, 'எப்போது கிளம்புவீர்கள்' என்று  கேட்டுக்கொண்டேயிருந்தார். இது, விளையாட்டாக இருந்தாலும் உண்மையிலேயே தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மெள்ள குறைந்துகொண்டுவருவதை நடைமுறையில் கவனிக்கிறோம். எந்த விருந்தினராவது நம் வீட்டுக்கு வந்தால், ஒரு வேளைக்கு மேல் அவர் எப்போது கிளம்புவார் என்று தவிக்கத் தொடங்கிவிடுகிறோம். 

நேற்றைய, ரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா?!  அத்தியாயத்தின் இறுதியில் பிந்து மாதவியின் வருகை, ஓவியாவைப் பாதிக்குமா என்பது பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதில், எப்போதும் போல, ஓவியா பக்கமே இருந்தது. 

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே, அவர் மகளிடம், 'அங்கிளுக்கு டாட்டா சொல்லு' என்று கிளம்பச் சொல்கிற செய்தியை மறைமுகமாகச் சொல்லிவிடுவார். அவர் விளையாட்டுக்காகத்தான் செய்கிறார் என்றாலும் நிலைமை உண்மையிலேயே அப்படித்தான் ஆகிவிடும்போலிருக்கிறது. 

எண்களிடப்பட்ட அட்டையை, பிந்து மாதவி ஒவ்வொரு போட்டியாளருக்கும் மாட்டினார். ஓவியாவுக்கு எண்1. இதன் அர்த்தம் புரியாமல் காயத்ரியும் சக்தியும் தங்களின் சதியாலோசனையின்போது தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். "அஞ்சும் மூணும் எட்டு. அத்தோடு அஞ்சு கூட்டி மூணு கழிச்சா... என்று கருணாஸ் 'வசூல்ராஜா' திரைப்படத்தில் விளையாடும் நியூமராலஜி விளையாட்டு மாதிரி சக்தி இதற்கு விளக்கமெல்லாம் அளித்து, 'ஏழரையைக்' கூட்டினார். 
 

சேலை கட்டும் போட்டியில், கணேஷின் கவர்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டியிருந்தது. என்ன கொடுமை! இதில் தோற்றுப்போன சிநேகன், 'என்னைக் காப்பாத்த எந்த ஆம்பளையும் இல்லையா?' என்று விளையாட்டாகக் கதறிக்கொண்டே குளத்தில் விழுந்தார். போன வாரமும் 'சண்முகி' வேடம். இந்த வாரம் சேலை கட்டும் போட்டி. நாளைக்கும் பார்த்தால் ஆரவ் சிநேகனைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி தென்படுகிறது. . போட்டி முடிவதற்குள் சிநேகனை 'சிநேகிதியாக' மாற்றி அனுப்பிவிடுவார்களோ என்று பீதியாக இருக்கிறது. மனிதர் இதுநாள் வரை பெண்களிடம் செய்த 'கட்டிப்பிடி வைத்தியத்துக்கு' இத்தனை பெரிய தண்டனையா? பாவம்.


பத்மினி - வைஜெயந்தி மாலா போட்டி நடனப் பாடல் ரேஞ்சுக்கு ஜூலி vs ஓவியா நடனப்போட்டி நடந்தது. 'எப்படியாவது ஜெயிக்க வேண்டும்' என்கிற வெறியோடு 'குத்தி' ஆடினார் ஜூலி. கீழே விழுந்து எழுந்தாலும் அவருக்கே கோப்பை கிடைத்தது. 'நான்தான் அதிகம் அடிவாங்கியிருக்கேன். கிண்ணி எனக்குத்தான்' என்கிற அளவில் ஒரு அபத்த வெற்றி.

***

நாடகம் நடிக்கும்போது, சக்தி அங்கு ஆதிக்கம் செலுத்திவிடுகிறாராம். இதர ஆண் போட்டியாளர்கள் சலித்துக்கொள்கிறார்கள். ஏற்கெனவே சக்தி பேசும் போதெல்லாம், 'ஒரு ஆக்டரா நான் என்ன சொல்றன்னா'  என்று ஆரம்பித்து நம்மைக் கொல்கிறார். கமலுக்கே புரியாத முகபாவத்தையெல்லாம் தந்து, அவரையே குழப்பிவிடுகிறார். சக்தி எந்தத் திரைப்படத்தில் 'நடித்தார்' என்கிற விஷயமே தெரியாமல் இன்னமும் மர்மமாக இருக்கும்போது, அவர் நடிப்பில் ஆதிக்கம் செய்கிறார் என்பதெல்லாம் புகாரா இல்லை வதந்தியா என்கிற கேள்வி எழுகிறது.  பி.வாசு வேறு இப்போதே ஒரு திரைக்கதையை எழுதித் தயாராக இருப்பாரோ என்கிற யூகம் வேறு பீதியைக் கிளப்புகிறது. 

நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, தனது அந்தரங்கமான தகவலை, கமல் முன்பு பொதுச்சபையில் ஓவியா சொன்னதுதான் ரைசாவின் வருத்தத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இதை, கணேஷிடம் பஞ்சாயத்து வைத்து மறுபடியும் புலம்பிக் கொண்டிருந்தார். ஓவியா இன்னமும் அதற்கு வருத்தம் தெரிவிக்காதது வேறு ரைசாவுக்கு கூடுதல் எரிச்சல். கடந்த வாரத்தில், ஜூலி வருத்தம் தெரிவிக்காத விஷயம் இப்போது ஓவியா பக்கம் சாய்ந்திருக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்? சந்தோஷம்தானே, பட்டையைக் கிளப்புங்கள்.

***
36-ம் நாள், 

'அவன் இவன்' திரைப்படத்தின் நடன இசையோடு ரகளையாகத் தொடங்கியது. புதிய போட்டியாளர் பிந்து மாதவியின் நடனம், ரசிக்கத் தகுந்ததாய் இருந்தது. (ஓவியா பேரவை, நோ டென்ஷன் ப்ளீஸ்). ஓவியாவின் நடனமும் வழக்கம்போல ரகளை. காயத்ரி வழக்கம் போல குரூப் டான்சர். பாவம். 

ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில், தூக்கு மாட்டிக்கொண்டதாக நாடகம் போடும் செந்தில், 'அவா.. அவா.. ஹே.. அவா...' என்று நின்றுகொண்டே நடனம் ஆடுவார். ஜூலி அமர்ந்துகொண்டே ஆடியது செந்திலை விடவும் காமெடியாக இருந்தது. 
 

அடுத்து வந்தது ஒரு வில்லங்கமான கட்டம்.


 

இதர உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்பை, போட்டிக்கு வந்தவுடனேயே பிந்து மாதவிக்குத் தந்தது போங்காட்டம். என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம், அவர் காயத்ரியை நாமினேஷன் செய்ததுதான். செம ஜாலியாக இருந்தது. காயத்ரியையும் சிநேகனையும் பொதுவாக எவரும் வெளியேற்றத்துக்காக பரிந்துரைசெய்வதில்லை. அவர்கள், சமையல் நன்றாக செய்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். 'அம்மா' உணவகத்துக்காக அம்மாவையே மறுபடியும் தேர்வுசெய்த சாப்பாட்டுப் பிரியர்கள்தானே தமிழர்கள்!
 

காயத்ரியைத் தேர்வுசெய்தது பிந்து மாதவியின் நல்ல யுக்தி. காயத்ரியின் மீது வெறுப்புள்ள அத்தனை பார்வையாளர்களும் இந்தக் காரணத்தினாலேயே பிந்து மாதவியைக் கொண்டாடத் துவங்குவார்கள். இன்னொரு தேர்வாக, 'ஜூலி'யைத் தேர்வுசெய்து 'தான் ஒரு ராஜதந்திரி' என்பதை நிரூபித்தார் பிந்து மாதவி.  ஜூலியின் வெறுப்பாளர்களும் இணைந்து பிந்துவை கொண்டாடத் துவங்குவார்கள். 
 

ஆரவ், ஓவியாவை நாமினேட் செய்ததுதான் மிகப் பெரிய அதிர்ச்சி. கூடவே இருந்து நன்றாகப் பேசிக்கொண்டு, அவளைத் திருத்துவதாகச் சொல்லிக்கொண்டு இப்படிச் செய்தது துரோகம். அவரைப் போலவே, ஓவியாவும் பதிலுக்கு ஆரவ்வை நாமினேட் செய்து அதிர்ச்சி தந்தார். அதற்குக் காரணமாக அவர் கூறியது, 'am selfish'. அதிலும் ஓவியா நாமினேட் செய்யும்போது சொன்ன ஆரவ் , bcoz I am selfish.  ரைசா, bcoz she is selfish. ஓவியாவின் தத்துவப் பட்டியல் புதிதிது. இது ஒரு பக்கம் நேர்மையான அறிவிப்பாக இருந்தாலும் இதை எப்படிப் புரிந்து கொள்வது? போட்டியில் தான் வெற்றிபெற வேண்டும் என்கிற சுயநலமா? ஆரவ் வீட்டுக்குள்ளே இருந்தால், அவரை எவராவது அபகரித்துக்கொள்வார்கள், எனவே வெளியேற்றுவோம் என்கிற காதலுணர்வா?

காயத்ரி, சக்தி, ரைசா, ஜூலி போன்றவர்கள், ஓவியாவையே தேர்வுசெய்வார்கள். எத்தனை முறை நாமினேட் ஆனாலும், அவர்  மக்களின் ஆதரவோடு திரும்பத் திரும்ப வெற்றிபெற்றுவிடுகிறார் என்கிற விஷயம், இவர்களுக்குக் கடுப்பாக இருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, அனைத்துப் போட்டியாளர்களுக்குமே இந்த எரிச்சல் உள்ளுக்குள் இருக்கிறது. அதனால்தான், ஓவியா மறுபடியும் வெளியேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 
 

ஆகவே, ஓவியா பேரவையே... ராணுவப்  படைகளே.... போருக்கான நேரம் வந்துவிட்டது. முரசைக் கொட்டுங்கள். தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும். 

இதைப் போலவே ஜூலியும் காப்பாற்றப்பட வேண்டும். அவர் இல்லாவிட்டால், ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது. இது மட்டுமல்ல, அவர் வெளியே வந்துவிட்டால், ஏதாவது திரைப்படத்துக்கு நாயகியாகும் ஆபத்தும் இருக்கிறதாம். ஆகவே மக்களே... ஜூலி வெளியே வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. ***
 

கணேஷ் முட்டைகளை எடுத்துத் தின்றுவிடுவதை மறைமுகமாக கிண்டலடித்துக் காட்டினார் வையாபுரி. கேமரா நகர்ந்து காட்டியபோது 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி யோகநிலையில் அமர்ந்திருந்தார் கணேஷ். வையாபுரி இப்படியே வெறுப்பேற்றிக்கொண்டிருந்தால், ஒருநாள்  கணேஷ் அகோரியாக மாறி, வையாபுரியின்  குரல்வளையைக் கடித்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. உணர்ச்சிகளை அதிகம் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பவர்களிடம்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

'அவ ஒரு பச்ச மண்ணு ப்ரோ' என்று ஓவியாவைப் பற்றி ஆரவ்விடம் சொல்லிக்கொண்டிருந்தார் கணேஷ். சமீபத்திய எபிஸோடுகளில்தான் கணேஷின் குரலை அதிகம் கேட்க முடிகிறது. இதுநாள் வரை கேமராவின் பார்வையில் படாமல் எங்கெங்கோ ஒளிந்துகொண்டிருந்தார். 'inhumane' என்று ஓவியாவைப் பற்றி சொல்லிவிட்டு, மறுநாளே 'அவ குழந்தை' என்று எப்படி கணேஷால் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. எவரை வேண்டுமானாலும் நம்பலாம், இந்த கணேஷை மட்டும் நம்பவே முடியாது போல.


 

ஆரவ், சமயத்தில் புத்திசாலித்தனமாக யோசிக்கிறார். 'அவளுக்கு மக்களோட சப்போர்ட் இருக்கு ப்ரோ... பாருங்க,  அவ எத்தனை முறை நாமினேட் ஆனாலும் மக்கள் திரும்ப உள்ள அனுப்புறாங்க' 

அவருக்கு இப்போதாவது நிதர்சனம் புரிந்தால் சரி. 'அவளைத் திருத்தி சமுதாயத்தில் நல்லபடியா அனுப்பணும்' என்று ஆரவ் சொல்வதெல்லாம் ஓவர். எதற்கும் அவர் வெளியே வரும்போது, ஓவியா பேரவையின் கண்ணில் படாமல் காவல்துறை பாதுகாப்பு தந்து அழைத்துச்செல்வதுதான் அவருக்கு நல்லது. 

 'அவ அன்புக்கு ஏங்கறா ப்ரோ' என்று கணேஷ் சொன்னது மட்டும் மிகச்சரி. அந்த வீட்டில், ஓவியாவிடம் நேரடியாகப் பேசி, அன்பு செலுத்த எவருமில்லை. மிருகங்கள் நிறைந்திருக்கும் வனத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் நிலைமைதான் ஓவியாவுக்கு. 

***
 

'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சி நடத்தலாமா? என்று பஞ்சாயத்தைக் கூட்டினார் பிந்து மாதவி. புதுசு அல்லவா, ஆர்வக் கோளாறு. கே.பி. சுந்தராம்பாள் போன்று கணீர் குரலில்  ஜூலி பாட, போட்டி களைகட்டத் தொடங்கியது. "பாரு... இந்த அஞ்சும் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்குங்க. இதை வீடியோ எடுத்து வெச்சுக்கணும்... காணக் கிடைக்காத காட்சி' என்பது போல ஆண்கள் அறையிலிருந்து இவர்களைப் பார்த்து கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். 
 

அவர்கள் சொல்லியது போலவே, கண் பட்டது போல சிறிது நேரத்திலேயே போட்டி நின்றது. 'உள்ளே போகலாம்' என்று காயத்ரி உத்தரவிட, ரைசாவும் ஜூலியும் அடிமைகள் போல பின்னாலேயே சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பிந்து மாதவியும் ஓவியாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே குதூகலமாகப் பாடியது கவிதையான கணங்கள். 
 

'இரு பெண்கள் எத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு மெல்லிய பகைமைக் கோடு ஒட்டிக் கொண்டேயிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கும்' என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். உண்மைதான் போல. ஆண்கள் இவ்வாறல்ல. பிரிக்கவே முடியாத படி நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், எந்த சர்ச்சையிலாவது பிரிந்துவிட்டால், அது ஏறத்தாழ நிரந்தரம்தான். ஆனால், பெண்கள் கடுமையான சண்டையிட்ட அடுத்த நிமிடமேகூட ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக்கொள்ளும் நெருக்கத்தை மறுபடியும் உற்பத்திசெய்துகொள்வார்கள். பெண் மனசு.
 

'ஓவியா என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், அவருடன் பேசப்போவதில்லை' என்கிற அறிவிப்பை வெளிட்டார் ரைசா. 'yeah.. true.. true.. you are right.. correct' என்பதைத் தவிர இந்த நிகழ்ச்சியில் அவர் வேறு என்ன பேசிவிடப்போகிறார்? ஓவியாவிடம் மட்டுமல்ல, எவரிடமும் அவர் பேசாமலிருந்தால்கூட எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை. 'நாட்டாமை' திரைப்படத்தில் மிக்சர் தின்று கொண்டேயிருக்கும் ஒரு பாத்திரத்திற்கு நிகரானவர் இவர்.

 
 

'காதல் வாராதா, காதல் வாராதா, என் மேல் உனக்கு காதல் வாராதா" என்ற பாடலை ஆரவ்- வை நோக்கி பாடிக்கொண்டேயிருந்தார் ஓவியா. நிகழ்ச்சி முடிவதற்குள், இருவரில் எவராவது ஒருவர் பைத்தியமாகி அலைவார்கள் போலிருக்கிறது. 


***

 

அடுத்து வந்தது ஒரு விளையாட்டு. அந்த வீட்டின் சூழலை கச்சிதமாகப் பிரதிபலிக்கக்கூடியது. அதை, மனநல மருத்துவமனையாக கருதிக்கொண்டு, எவர் எவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை தர வேண்டும் என்று பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும். 
 

இதில், பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டியது ஓவியாவை. ' bipolar இருப்பதால் ஓவியாவுக்குத்தான் ஷாக் ட்ரீட்மென்ட் தர வேண்டும்' என்று தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றார் ரைசா. 'இதை நான் சொல்லவில்லை, அவரே சொல்லியதுதான்' என்று ஜாக்கிரதையாகவும் ஒரு வார்த்தை போட்டுவைத்தார். 


 

இது போன்ற அரிய வாய்ப்பை காயத்ரி தவறவிடுவாரா என்ன, அவரும் தன் பங்கிற்கு ஓவியாவுக்குத்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என்றார். ஆனால், தனக்கு எதிரான அத்தனை கமென்ட்டுகளையும் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் புன்னகையுடன் ஓவியா ஏற்றுக் கொண்டார். நல்ல மனநிலையில் உள்ளவர்களிடம் 'பைத்தியம்' என்று சொன்னால் கோபப்பட மாட்டார்கள். தன்னையறிந்தவர்கள் அவர்கள். மாறாக, மனச்சிக்கலும் தாழ்வுமனப்பான்மையும் உள்ளவர்கள்தான் அதீதமாகக் கோபப்படுவார்கள். 
 

விளையாட்டுப் போட்டியில்கூட இப்படி இவர்கள் வன்மத்தைக் கொட்டுவதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் யார் என்கிற கேள்வி எழுகிறது. 


இந்த நோக்கில்,  'சிகிச்சை தேவைப்படுவது காயத்ரிக்கு' என்று சொல்லி பார்வையாளர்களின் மனதைக் குளிர்வித்தவர், புதிய போட்டியாளர் பிந்து மாதவி. ராஜதந்திரி.

loading...


 

மனநலப் பிரச்சினைகள் என்பது, இவர்கள் விளையாடுவதுபோல கேலியான விஷயமல்ல. இது போன்ற நுண்ணுணர்வில்லாத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் பிக் பாஸ் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மனநிலை பிசகியவர்கள், உள்ளே இருப்பவர்களா, போட்டியை நடத்துபவர்களா அல்லது வெளியே பார்த்துக்கொண்டிருப்பவர்களா என்கிற சந்தேகம் வந்துவிடும். ***
 

இந்த சிகிச்சை விஷயத்தில், சிநேகன் ஜூலியைப் பற்றி விளையாட்டாக ஏதோ சொல்லிவிட, காயத்ரியை தனிமையில் அழைத்துக் கொண்டு மறுபடியும் கண்ணைக் கசக்கத் துவங்கிவிட்டார் ஜூலி. 'சண்முகியும் சண்முகி அக்காவும் பேசத் துவங்கிட்டாங்க' என்று ஓவியா இதுகுறித்து அடித்த கமென்ட், நகைச்சுவை ஆட்டம்பாம். சிரிப்பு அடங்க சற்று நேரம் ஆனது. 
 

'இந்த வாரம் முழுக்க அமைதியாத்தானே இருந்தேன். ஏன் என்னை நாமினேட் பண்ணாங்க?' என்று செந்தில் மாதிரி முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு கேட்டார் ஜூலி. அதற்கு கவுண்டமணி காயத்ரி தந்த விளக்கம், 'நீ தலைவர் ஆனவுடனே பயங்கர பந்தா பண்ணே, அதுதான்.'
 

ஆக.. ஜூலி அமைதியாக இருந்தால்கூட மற்றவர்களை எரிச்சலடையவைப்பதில் திறமைசாலியாக இருக்கிறார். இந்த வாரம் முழுக்கவும் அமைதியாக இருக்கப் போவதாக வேறு அறிவித்திருக்கிறார். 

loading...


 

பூகம்பம் ஒன்று பூவாக இருக்கப் போகிறதாம். இது, இன்னமும் ஆபத்தாயிற்றே... என்னென்ன நடக்கப்போகிறதோ!

அடுத்த கட்டுரைக்கு