Published:Updated:

’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu

’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu
’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu

’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu

சேவ் பரணி, ஓவியா ஆர்மி, பிந்து மாதவி என வாரம் ஒரு ட்ரெண்டாக லீடிங்கில் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். தமிழ் போலவே தெலுங்கு பிக் பாஸிலும் பரபரப்புக்குப் பஞ்சம் கிடையாது. ப்ராங்குகள், தண்டனைகள் என செம ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார் தெலுங்கு பிக் பாஸ். இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கும் தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்து ஹைலைட்ஸ் இதோ...

16 ஜூலை

தமிழ் போலவே முதல்  நாள் ஜூனியர் என்.டி.ஆர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ''இது கிச்சன், இங்கே சமைக்கலாம், காய்கறி நறுக்கலாம், பால் காய்ச்சலாம். இது பெட்ரூம்... படுக்கலாம், உறங்கலாம்'' என வீட்டைச் சுற்றிக்காட்டுவதிலிருந்து தொடங்கியது முதல் எபிசோடு. அர்ச்சனா, சமீர், முமைத் கான், ப்ரின்ஸ், பாடகி மது ப்ரியா, 'பர்னிங் ஸ்டார்' சம்பூர்னேஷ் பாபு, ஜோதி, பாடகி கல்பனா, மகேஷ் கத்தி, கத்தி கார்த்திகா, சிவ பாலாஜி, ஹரிதேஜா, ஆதர்ஷ், தன்ராஜ் என 14 போட்டியாளர்களையும் வீட்டுக்குள் அனுப்பிவைத்து விதிமுறைகளை ஸ்பீக்கர் வழியாகச் சொல்லியது அந்த ரிக்கார்டட் குரல். ''மைக் மாட்டியிருக்கணும், தெலுங்குலதான் பேசணும், லைட் அணைக்கும் முன்னர் தூங்கக் கூடாது'' என ரூல்ஸ்களை அடுக்கினார் பிக் பாஸ்.

17 ஜூலை

லிவிங் ரூமுக்கு வரும்படி போட்டியாளர்கள் அழைக்கப்பட, அத்தனை பேரும் அவசர அவசரமாக ஓடினார்கள். இரவு 3 மணி.  வந்து ஒருநாள்கூட நிறைவடையவில்லை. இந்தச் சூழலில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது,  ''பிக் பாஸ் வீட்டில் வசிக்க, தகுதி குறைவாக உள்ளவர் யார்?''  சம்பூர்னேஷ், கார்த்திகா, ஜோதி ஆகிய பெயர்களே அதிகம் சொல்லப்பட, ''இந்த மூவரில் ஒரு பெயரைச் சொல்லுங்கள்'' என்ற கேள்வி, சமீரிடம் வைக்கப்படுகிறது. கொஞ்சமும் தயங்காமல் அவர் ''சம்பூ'' எனக் கூற, "பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக சம்பூர்னேஷை நியமிக்கிறேன்" எனச் சொன்னார் பிக் பாஸ். சம்பூ முகத்தில் அத்தனை பிரகாசம்.

கேப்டனுக்கு எலிமினேஷனிலிருந்து விலக்கு, எந்த வேலையும் செய்யத் தேவையில்லை, அவருக்கு என ஸ்பெஷலான படுக்கை எனச் சில சிறப்புச் சலுகைகள் கேப்டனான சம்பூவுக்கு.  

18 ஜூலை

இரண்டாவது நாள், வீட்டில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என தன்ராஜ் இமிட்டேட் செய்து காண்பிக்க, மொத்த கூட்டமும் விழுந்து விழுந்து சிரித்தபடி விடிகிறது அந்தக் காலை. "ட்ரெட்மில்லில் யாரு துண்டைக் காயப் போட்டது?" என தன்ராஜே பிரச்னையை  ஆரம்பிக்க, அதைச் செய்த முமைத் கான் அவரைக் கட்டிப்பிடித்துச் சமாதானம் செய்துவைக்க இன்ஸ்டன்ட் சமாதானம் நடக்கிறது. திடீரென கேமரா முன் நின்று கல்பனா, ''கனகாங்கி ராகத்துக்கும், ரத்னாங்கி ராகத்துக்கும் சின்ன வித்தியாசம்தான்'' எனச் சொல்லி குட்டியூண்டு கச்சேரியை நடத்திக்கொண்டிருக்க, ''நைட் செய்த சாப்பாடு அப்படியே ஃப்ரிட்ஜ்ல இருக்கு கொஞ்ச நேரத்துல கெட்டுப்போயிடும்'' என சீரியஸ் வாக்குவாதத்தை ஒரு பக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார் ஹரிதேஜா. சோலோ பெர்ஃபாமன்ஸாக நீச்சல்குளத்துக்கு அருகில், ''பிக் பாஸ், இங்கே எல்லாரும் வயசு அதிகம் இருக்கிறவங்கதான். எனக்கு பேச்சுத் துணைக்கு என் வயசு உடைய ஒரு பொண்ணு இருந்தா நல்லாயிருக்கும்'' என பவ்வியமாக வேண்டுகோள் வைக்கிறார் ப்ரின்ஸ்.

இந்த நேரத்தில், இரண்டாவது டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதைப் பற்றி விவரிக்கிறார் ஹரிதேஜா,

"நீங்கள் கொண்டுவந்திருக்கும் உடைகள், பொருள்களில் உங்களால் அணிந்துகொள்ள முடிந்த அளவுக்கான (அதாவது நான்கு பேன்ட் வேண்டும் என்றால், ஒன்றன் மீது ஒன்றாக அதை நீங்கள் அணிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் உங்கள் உடலிலேயே அணிந்திருக்க வேண்டும்) பொருள்களை எடுத்துக்கொள்ளுங்கள். மீதம் இருக்கும் பொருள்களை பெட்டியில் வைத்து அடைத்து, எல்லோருடைய பெட்டிகளையும் ஸ்டோர் ரூமில் வைக்க வேண்டும்.

இந்தத் துணிகளை மறுபடியும் மீட்பதுதான் டாஸ்க். அதாவது நீச்சல்குளத்துக்கு அருகில் அக்னிக்குண்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும். அதில் தீ வளர்க்கத் தேவையான விறகுகள், நெய் போன்றவை இருக்கின்றன. அந்த அக்னிக் குண்டம் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்க வேண்டும். இதனிடையில் சைரனை ஒலித்து 'யாருடைய சூட்கேஸைத் திருப்பித் தரவேண்டும்?' எனக் கேட்கப்படும். அனைவரும் ஒருமனதாக ஒருவருடைய பெயரைச் சொல்ல வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நபருடைய சூட்கேஸையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருடைய சூட்கேஸும் திரும்பப் பெரும் வரை அக்னிக்குண்டம் எரிந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், டாஸ்க் இன்கம்ப்ளீட்"  என விநோதமான டாஸ்க் கொடுக்கப்பட, அதற்கும் ''ரெடி'' என வருகிறார்கள் 14 பேரும். அக்னிக்குண்டம் பற்றவைக்கப்படுகிறது. இடையில் "கேப்டனுக்குப் பொறுப்பே இல்லை" என அலுத்துக்கொண்டு பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறார் முமைத் கான். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு இரவு எல்லோரும் அக்னிக்குண்டத்துக்கு அருகில் கேம் ஃபயர் செட்டப்பில் அமர்ந்திருக்க, ஆதர்ஷ் மாத்திரம் சரிந்து விழுகிறார். எல்லோரும் என்ன ஆச்சோ எனப் பதறிக்கொண்டிருக்க, அது சும்மா ப்ராங்க் என முகத்தில் ஜாடை காட்டியவாறு ஆதர்ஷை அணைத்துக்கொள்கிறார் தன்ராஜ். இவரும் ஆதர்ஷும் சேர்ந்து போட்ட ப்ளான் உல்டாவாகி தன்ராஜைக் கடுமையாகக் கடித்துவைக்கிறார் ஆதர்ஷ். வலி தாங்க முடியாமல் தன்ராஜ் கதர, ஸாரி சொல்லி சமாதானப்படுத்தி, காயம் பட்ட இடத்தில் ஐஸ் வைத்துக்கொண்டிருக்க மறுபடி பதறவைக்கும் ரியாக்‌ஷன் கொடுக்கிறார் ஆதர்ஷ். அவரை அழைத்துக்கொண்டுபோய் படுக்கவைக்க "விஸ்கி விஸ்கி.... விஸ்கி வேணும்" என மூச்சு வாங்கியபடி கேட்கிறார். ''இங்கே அதெல்லாம் கிடைக்காது'' என எல்லோரும் சமாதானம் செய்தவாறு அந்த நாள் முடிகிறது.

19 ஜூலை

சூட்கேஸ் மீட்கும் டாஸ்கில் ஒவ்வொருவர் சூட்கேஸாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது நாள், அக்னிக்குண்டத்துக்கு அருகே ஹரிதேஜா, மது ப்ரியா இருக்க, அங்கு வரும் அர்ச்சனா. "நீயே எவ்வளோ நேரம் புகையில உட்கார்ந்திருப்ப" என்று கேட்கிறார். "சரி நீங்க இங்கே வாங்க அக்கா''. ''எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. உங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது" என்று சிடுசிடுத்தபடி புகையடிக்கும் பக்கம் வந்து அமர்கிறார். ''நான் அப்படி மீன் பண்ணலை மது'' என சமாதானப்படுத்துவதும்,  அதை மற்றவர்களிடம் அர்ச்சனா கூறுவதுமாக ஆரம்பிக்கிறது அந்த நாள். ஆதர்ஷ் ப்ரின்ஸுடன் "இங்கே இருக்கிறவங்கள்ல உனக்கு மட்டும்தான்டா கல்யாணம் ஆகலை" எனப் பேசிக்கொண்டிருக்க, "இப்போ இப்பிடியான பேச்செல்லாம் அவசியமா?" என சண்டையை ஆரம்பிக்கிறார் ஹரிதேஜா. அப்போது அங்கு வரும் சம்பூர்னேஷ் பாபு "ஏங்க,  யார்கிட்டயாவது சின்ன பின் சார்ஜர் இருக்கா?" எனக் கேட்டு அந்தச் சூழலை மாற்ற முற்படுகிறார். ஆனாலும், அதே பிரச்னையை விடாமல் தொடர்கிறார் ஹரிதேஜா.

பிறகு சிறிது நேரம் கழித்துதான் அவர்கள் பேசிக்கொண்டது சும்மா ப்ராங் எனச் சொல்லி விளக்கி எல்லோரையும் சமாதானப்படுத்துகிறார். இதற்கிடையில் சமீருக்கு ரகசிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. ''ஆதர்ஷ், அர்ச்சனா, தன்ராஜ், முமைத் கான், ப்ரின்ஸ் ஆகியோரின் லக்கேஜுகளைத் திரும்பப் பெற முடியாதவாறு செய்ய வேண்டும். இதைச் செய்யவில்லை என்றாலோ, மற்றவர்களுக்கு சொன்னாலோ அடுத்த வார நாமினேஷனில் நேரடியாக உங்கள் பெயர் இடம்பெறும்'' எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அதில் பெரிய ஆர்வம் காட்டாத சமீர், வெளியில் வந்து சகஜமாவதோடு முடிகிறது எபிசோடு.

20 ஜூலை

அக்னிக்குண்டத்தில் போடுவதற்கு விறகுகள் தீர்ந்துபோய்விட, "இன்னும் விறகு கொடுங்க ப்ளீஸ்" என ப்ரின்ஸ் கேட்கிறார். "டாஸ்க் முடியும் வரை அக்னிக் குண்டம் எறிய வேண்டும் என்பதுதான் ரூல். ஆனால் நீங்கள், அதைக் கடைப்பிடிக்கவில்லை. சமீருக்குக் கொடுத்த சீக்ரெட் டாஸ்கில் அவரும் தோற்றுவிட்டார். எனவே, மொத்தத்தில் நீங்கள் இந்த டாஸ்கில் தோல்வியடைந்திருக்கிறீர்கள்" என பிக்பாஸ் குரல் ஒலிக்கிறது. இதனிடையில் லக்ஸுரி பாயின்ட்ஸ் பற்றியும் பொருள்கள் வாங்குவது பற்றியும் அறிவிப்பு வருகிறது. என்னென்ன தேவை என ஆலோசித்துக்கொள்கிறது குழு. தேவையானவற்றை முடிவுசெய்து போர்டில் எழுதி ஸ்டோர் ரூமில் வைக்கிறார்கள்.  

நான்காவது நாள், "வீட்டுக்குள் தெலுங்குதான் பேச வேண்டும் என்பதையும், ஸ்மோக்கிங் ரூமுக்குள் ஒரு நேரத்தில் ஒருவர்தான் செல்ல வேண்டும் என்பதையும் நீங்கள் மீறியிருக்கிறீர்கள். எனவே, ஒரு கேப்டனாக சம்பூ தன் கடமையை சரிவர செய்யவில்லை என அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவதோடு, இனி கேப்டனாக எப்போதும் ஆக முடியாது'' என்றும் தெரிவிக்கப்படுகிறது. ''இந்த ஷோவைப் பார்ப்பவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். ஆனால், நீங்கள் மற்ற மொழிகளில் பேசி ஆடியன்ஸைச் சிரமப்படுத்துகிறீர்கள். முமைத் கானுக்கு தெலுங்கு பேசத் தெரியாது என்பதால், அவருக்கு தெலுங்கு சொல்லிக்கொடுக்கும் பொறுப்பை ஜோதிக்குக் கொடுக்கிறேன். வீட்டிலிருக்கும் மற்றவர்கள் தெலுங்கு தவிர வேறு பாஷை பேசினால், முமைத் கான் அவர்களுக்கு தண்டனை கொடுப்பார். வீட்டில் அனைவரைவிடவும் அதிகமாகத் தூங்கிய ஆதர்ஷ், சிவ பாலாஜி, தன்ராஜ், சமீர், சம்பு ஆகியோர் கார்டன் ஏரியாவில் உள்ள சைக்கிளை இரவு முழுக்க ஓட்டவேண்டும். யாராவது சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினாலோ, இறங்கினாலோ வீட்டுக்குள் விளக்குகள் எரியும், சைரன் ஒலிக்கும்" என பிக்பாஸ் கடுமையான குரலில் சொல்கிறார்.

சொன்னதுபோல கார்டன் ஏரியாவில் இருவர் அமர்ந்து ஓட்டும் சைக்கிள் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. லைட்ஸ் ஆஃப் சைரன் எல்லாமும் சில முறை நடக்க, பிறகு ''தண்டனை முடிந்துவிட்டது. நீங்கள் உள்ளே செல்லலாம்'' என்றபடி முடிகிறது அந்த நாள்.

21 ஜூலை

ஐந்தாம் நாள், தெலுங்கு தவிர வேறு மொழியில் பேசிய ப்ரின்ஸுக்கு முமைத் கான் தண்டனை தருவதிலிருந்து தொடங்குகிறது அந்த நாள். "முமைத் கான் மாதிரி பொண்ண இதுவரை, எங்கேயும் பார்த்ததே இல்லைனு, இங்கே இருக்கும் பத்து கேமராவுக்குப் போய் சொல்லு" என தண்டனை கொடுக்கிறார் முமைத் கான். அதைக் கடுப்புடன் செய்யும் ப்ரின்ஸை, சிரிச்சுக்கிட்டே ''சொல்லுப்பா'' என நக்கலடிக்கிறார் முமைத் கான். வீட்டில் இருக்கிறவங்க ஞாபகமாவே இருக்கு என அழுதபடி, எல்லோரிடமும் புலம்பிக்கொண்டிருக்கிறார் மது ப்ரியா. அவரைச் சமாதானப்படுத்த முமைத் கான், இந்தி டு தெலுங்கு டிரான்ஸ்லேட்டர் ஜோதியிடம் கேட்டு பேசுகிறார். "அழுதைனா நீ, அடிப்பேன் உன்ன" என கூகுள் டிரான்ஸ்லேட்டர்போல தத்தக்கா பித்தக்கா தெலுங்கில் பேசுவதைப் பார்த்து ஏரியாவே கலாட்டாவாகிறது. இடையில் "எனக்கு ஜோதி தெலுங்கு டீச்சரா வேணாம், மகேஷ் காரூவை டீச்சரா மாத்துங்க" என கேமராவைப் பார்த்து கொஞ்சுகிறார் முமைத் கான். அடுத்த டாஸ்காக வீட்டுக்கு கேப்டன் நியமனம் குறித்த அறிவிப்பு வருகிறது. நீச்சல்குளத்தில் உள்ள ஸ்மைலி பாலை வாயால் எடுத்து வந்து வாளியில் போட வேண்டும். இந்தப் போட்டியில் இருவர் கலந்துகொள்ள வேண்டும். ஜெயிக்கும் ஒருவரே கேப்டன். அந்த இருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என அறிவிப்பை வாசித்து முடிக்கிறார் மது ப்ரியா.

கல்பனா, முமைத் கான் கலந்துகொண்ட இந்த டாஸ்கில், கல்பனா வெற்றிபெற்று கேப்டனாகத் தேர்வாகிறார். ஸ்மோக்கிங் ஏரியாவுக்குள் ஒரே சமயத்தில் பலர் சென்றதால், சிகரெட்டை பிக் பாஸ் அனுப்பவில்லை. எனவே, தன்ராஜ், சிவ பாலாஜி மற்றும் சம்பூ ஆகியோர் கேமரா முன் நின்று தங்களுக்கு சிகரெட் வேண்டும் எனக் கேட்கிறார்கள். சிகரெட் வரும் வரை ரூல்ஸ் எதையும் ஃபாலோ செய்யப்போவதில்லை என, தன் பின்னால் ஒன்பது பேர்கொண்ட ஒரு புரட்சிப் படையை உருவாக்குகிறார் பாலாஜி. அதில் சப்போர்ட், சப்போர்ட் இல்லை என சில சலசலப்புகளும் உண்டாகின்றன. இது சம்பந்தமாகப் பேசுவதற்கு கேப்டன் கல்பனா பிக் பாஸால் அழைக்கப்படுகிறார். ''யாராவது ஒருவர் சிகரெட் பிடித்தாலும், வீட்டில் உள்ள மற்ற அனைவரும் பாத்ரூம் ஏரியாவுக்குச் செல்ல வேண்டும் என்பது, முன்பே கொடுக்கப்பட்ட தண்டனை. அதைக் கடைப்பிடிப்பதாக இருந்தால் சிகரெட் அனுப்புவேன்'' எனச் சொல்கிறார் பிக் பாஸ். எனவே, அதற்கு ஒப்புக்கொள்கிறோம் என்ற வாக்குறுதியை கேமரா முன் சொல்கிறார் தன்ராஜ். உடனே பிக் பாஸால் நான்கு பாக்கெட் சிகரெட் வழங்கப்படுகிறது. அதேபோல் 13 பேரும் பாத்ரூமில் காத்திருக்க சிகரெட் பிடிக்கவேண்டியவர்கள் ஸ்மோக்கிங் ஏரியாவுக்குப் போய் வந்தார்கள்.

இது தங்களுக்கு குற்ற உணர்வாக இருப்பதால், "இனி ஒருவருக்கு மேல் சென்று சிகரெட் பிடிக்க மாட்டோம். ப்ளீஸ், இந்த 13 பேர் கான்செப்டை மாற்றுங்கள்" எனக் கோரிக்கை வைக்கிறார்கள் தன்ராஜ், சம்பூ, ஆதர்ஷ், முமைத் கான், சிவ பாலாஜி, சமீர்.

ஜுலை 22

'பிக் பாஸ்' ஹிட்டானதில் சந்தோஷம் என்றபடி மேடையில் தோன்றுகிறார் என்.டி.ஆர். "இதுக்கு பரிசா பிக்பாஸுடைய கண்ணு எப்பிடி இருக்கும்னு காட்ட தோணுச்சு" எனச் சொல்லி, கேமரா கண்காணிப்பு அறைக்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். ஆறாவது நாள், "நீங்க ஏன் சிகரெட்டுக்கு சப்போர்ட் பண்ணீங்க?'' என கல்பனாவிடம் கேட்க, சம்பூ, மது ப்ரியாவுக்கு இங்கு தங்கவே பிடிக்கவில்லை என்ற பிரச்னைகளுடன் தொடங்குகிறது. ''நான் கிளம்புகிறேன். எனக்கு நெஞ்சு வலிக்கிறது'' என சம்பூ அழ ஆரம்பிக்கிறார். மருத்துவர் வரவழைக்கப்பட, சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் சம்பூ. "சம்பூவை இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கவைக்கிறேன். ஆனால், அடுத்த வாரம் அவரை நீங்களே வெளியே அனுப்பிடுங்க. அப்போ அவருக்கு இங்கே தங்கணும்னு தோணுச்சுனா தங்கட்டும், இல்லைன்னா அனுப்பிடுங்க" என சம்பூவுடன் சேர்ந்து கேமரா முன் சொல்கிறார் தன்ராஜ். இடையில் "ஒருவர் சிகரெட் பிடிக்கையில் மற்ற 13 பேரும் பாத்ரூமில் இருக்க வேண்டும் என்கிற தண்டனை தளர்த்தப்படுகிறது" என அறிவிக்கப்படுகிறது. தமிழில் 'அகம் டிவி' போல, தெலுங்கில் 'நா டிவி' வழியாக 14 பேருடனும் பேச ஆரம்பிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். மகேஷ் கத்தின் பனிஷ்மென்ட் டான்ஸ், முமைத் கானின் தெலுங்கு, கார்பெட்டை சுத்தம் செய்தது துடைப்பமா... பிரெஷ்ஷா? என்று கார்த்திகா - ஜோதிக்கு இடையில் நடந்த வாக்குவாதம், சின்ன பின் சார்ஜர், பகல் தூக்கம், சிகரெட் போராட்டம், தன்ராஜ் - ஆதர்ஷ் ப்ரான்க், ப்ரின்ஸில் கேர்ள் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட், ஹரிதேஜா ப்ரான்க் என ஐந்து நாள்கள் நடந்தவற்றை ரிகேப் செய்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். பிறகு, ஜூனியர் என்.டி.ஆரின் கார லட்டு டாஸ்க் முடிந்த பிறகு மது ப்ரியா, கத்தி கார்த்திகா, ஜோதி, ஹரிதேஜா, மகேஷ் கத்தி ஆகியோர் நாமினேஷனில் இருப்பது தெரிவிக்கப்படுகிறது. அதில் மது ப்ரியா, கத்தி கார்த்திகா சேஃப் ஸோனில் இருப்பதாகவும், மகேஷ் கத்தி வெளியேறுகிறார் எனச் சொல்லப்பட, "நான்தான் இவர் வெளியேறணும்னு நாமினேட் பண்ணேன். ஆனா, இவரு ரொம்ப நல்லவர். வெளியே அனுப்பாதீங்க!" எனக் குழந்தைபோல அழ ஆரம்பிக்கிறார் முமைத் கான். ''சரி ஓகே, யார் வெளியேறப்போறாங்கனு நாளைக்குச் சொல்றேன்'' என்று நிகழ்ச்சியை முடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூலை 23

எலிமினேஷன் பரபரப்புகளுக்கிடையே ஆரம்பிக்கிறது ஏழாம் நாள். அந்த ஏழு நாள்கள் நடந்தவற்றை எஸ் ஆர் நோ கேள்விகளாக என்.டி.ஆர் கேட்டு அவர்களை சகஜமாக்க முயற்சிக்கிறார். கூடவே பிக் பாஸ் எப்படி  இருப்பார் என கலர் ஸ்கெட்ச் பேப்பர் கொடுத்து வரைய சொல்கிறார். பிறகு, ''நாமினேஷனில் உள்ள மூவரில் ஜோதி வெளியேறுகிறார்'' என்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். தமிழ்போலவே எலிமினேட் ஆகிய ஜோதி, பிக் பாஸ் ஸ்டேஜில் ஏழு நாள்களைப் பற்றி நீதிமன்றக் கூண்டுபோல ஒரு செட்டப்பில் ஏற்றி விசாரிக்கப்பட்ட, ''எது நிஜம், இதுக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க?'' எனக் கேட்கப்பட்டு நிகழ்ச்சி முடிக்கப்படுகிறது. அதற்கு முன் ஜோதிக்கு ஒரு பவர் கொடுக்கப்படுகிறது. "நீங்க யார் பெயரைச் சொல்றீங்களோ, அடுத்த ஒரு வாரத்துக்கு எல்லோர் துணிகளையும் அந்த ஒருத்தர்தான் துவைக்கணும்" எனச் சொல்லவும் ப்ரின்ஸ் பெயரைச் சொல்கிறார். அப்படியே கையோடு ஜோதிக்கு ஒரு குறும்படத்தை டெடிகேட் செய்து நிகழ்ச்சியை முடிக்கிறார்கள்.

முதல் வாரம் தெலுங்கு பிக் பாஸில் நடந்தவை இவைதான்.   இரண்டாவது வாரம் நிகழ்ந்தவைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்!
டக்கு சிக்கு டக்கு சிக்கு பிக் பாஸ்

அடுத்த கட்டுரைக்கு