Published:Updated:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியதா?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியதா?
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியதா?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியதா?

ஓரளவுக்குச் சமூக ஊடகங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கூட 38 நாட்களுக்கு முன் விஜய் டிவியில் நடிகர் கமலஹாசனை தொகுப்பாளராகக் கொண்டு  துவங்கிய ’பிக் பாஸ்’  ரியாலிட்டி நிகழ்ச்சி குறித்து நன்கு தெரிந்திருக்கும். எங்கெங்கு காணினும் பிக் பாஸ் என்பது போல் பரணி, ஓவியா ,காயத்ரி, ஜூலி, வையாபுரி, சினேகன் ஆரவ் என்கிற பெயர்களும் அவர்கள் பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளுக்கும்  வெர்ச்சுவல் தமிழ் உலகம் மீம்ஸ், ட்வீட், முகநூல் ஸ்டேட்டஸ் என விதவிதமாக ரியாக்ட் செய்து வருகிறது. ஆனால் நாம் பார்க்கும் ‘பிக் பாஸ்’ ஃபீவருக்கும் நடைமுறை எதார்த்தத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது என்பதே அதிர்ச்சிகரமான உண்மை. அதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான கடந்த மூன்று வார டிஆர்பி ரேட்டிங் பட்டியல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்பது இணையத்தில் அது அதிகம் பேசப்படுவதும், ஆண்கள் நிறையப்பேர் அதனைத் தொடர்ந்து பார்ப்பதுமே காரணம். மலையாள சேனல்களில் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தமிழில் முதல் முறையில் ஹிட் அடிக்கக் காரணம் கமல் என்கிற ஆளுமைக்கு உள்ள மதிப்புதான். அறிவுசார் கருத்துக்களை படங்களின் வாயிலாக எப்போதும் தெரிவித்து வரும் அவரின் மேலாண்மையில் நடக்கும் நிகழ்வு என்பதாலும், கமல்ஹாசனே நெறியாளும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்கிற ஆர்வமுமே காரணம். நிகழ்ச்சி துவங்கிய பின்னர் அது கொடுத்து “பீப்பிங் டாம்” உணர்வு எப்போதும் அது குறித்து பேசும் ஆர்வக்கிளர்ச்சியை தூண்டிவிட்டது. ஆனால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பர வருவாயே அதன் ஆயுளை நீட்டிக்கும். அப்படி ஆயுளை நீட்டிக்கக்கூடிய விளம்பர வருவாய் டிஆர்பியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் இந்தியாவின் முதன்மையான சேனல்களின் டாப் 10 லிஸ்ட்கள் துவங்கி ஒவ்வொரு மாநில மொழிகளிலும் உள்ள டாப் 5 சேனல்கள்,டாப் 5 நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியாகும்.

டிஆர்பி என்றால் என்ன ? எப்படிக் கணிக்கப்படுகிறது? 

'ப்ராட்காஸ்டிங் ஆடியன்ஸ் ரீசர்ச் கவுன்சில் இந்தியா ' என்கிற தன்னாட்சி கொண்ட அமைப்புதான் இந்த சர்வேயை எடுத்து வருகிறது. மத்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் விதிமுறைகளுக்கு ஏற்ப இயங்கிவருகிறது இந்த அமைப்பு. இந்தியா முழுவதிலும் உள்ள செட்டாப் பாக்ஸ் வாயிலாக தனக்கான டேட்டாவினை சேகரித்து அதை மொழிவாரியாகப் பிரித்து ஒவ்வொரு வாரமும் வெளியிடுகிறது, இது மட்டுமில்லாமல் ஒலிஅலைகளின் மூலமும் கணக்கீடு எடுக்கப்படுகிறது. மேற்படி இரண்டு முறைகளில் எடுக்கப்படும் சர்வே சரிபார்க்கப்பட்டு அதன் முடிவுகள் 32 பிரிவுகளில் ஒவ்வொரு வாரமும் டேட்டா சர்வே முடிவுகள் வெளியாகிறது. இதில் வெளியாகும் முடிவுகளில்  மொழிப்பிரிவுகளில் டாப் 5 சேனல்களும், டாப் 5 நிகழ்ச்சிகளும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. 

இந்த  முடிவுகளில்தான் அந்த அதிர்ச்சியான சர்வே வெளியாகியுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய ஜூன் 25ம் தேதியிலிருந்து கடைசியாக வெளியாகியுள்ள ஜூலை 28ம் தேதி வரையிலான நான்கு வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களில் கூட அந்த நிகழ்ச்சி வரவில்லை என்பதே நிதர்சனம். இணையத்தில் காணும் இடங்களில் எல்லாம் தென்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பிக்குள் இன்னும் வரவேயில்லை என்பது நிச்சயம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய செய்திதான். இன்னும் கூடுதலாக சொன்னால் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் சன் டிவியின் தொடர்கள் கூட பார்வையாளர்கள் இழப்பைச் சந்திக்கவில்லை. 


  
 

சளைக்காத சன் சீரியல்களின் ஆதிக்கம்...

இந்திய அளவில் அதிகப்பார்வையாளர்களை கொண்டதாக சன்டிவி உள்ள நிலையில் தமிழ் மொழி அடிப்படையிலான சர்வேயில்  டாப் 5 தமிழ் நிகழ்ச்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி, தெய்வமகள், வம்சம், குலதெய்வம், வாணி ராணி ஆகியவைதான் உள்ளன. அதே நேரம் விஜய் டிவியின் ரேட்டிங் சற்று உயர்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. பிக்பாஸ் டிஆர்பி அதிகரிக்காமல் இருப்பதற்கு காரணம், 25 முதல் 40 வயதுள்ளவர்கள் பெரும்பாலும் 'ஹாட்ஸ்டார்' தளத்திலேயே பார்த்துவிடுவதே என்று  சொல்லப்படுகிறது. 

ஆனால், சானல்கள் வரிசையில் நான்காம் இடத்தில் இருந்த விஜய் டிவி, இரண்டாம் இடத்தில் இருக்கு கே டிவியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்து அந்த சானலுக்கு புதிதாக வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையையே காட்டுகிறது. இரவு நேர பிரைம் டைமில், நாடகம் பார்ப்பவர்கள் பெரிய அளவில் மாறாத போது, சினிமா பார்க்கும் கூட்டம் அப்படியே பிக் பாஸிற்கு தாவி இருப்பது, அந்த சானலுக்கான ஆரோக்கியமான விஷயம். 

இதுவரை இல்லை என்றாலும் வரப்போகும் வாரங்களில் பிக்பாஸ் டிஆர்பியில் இடம் பெறுகிறதா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இன்று இணையத்தில் பலம் வாய்ந்த ராணுவமாக இருப்பது ஓவியா ஆர்மிதானே!
 

அடுத்த கட்டுரைக்கு