Published:Updated:

'ஹாரர் படம், ரொமான்ஸ் நாவல்லாம்... ஐ லவ் இட்!’ - ஓவியா பெர்சனல்

'ஹாரர் படம்,  ரொமான்ஸ் நாவல்லாம்... ஐ லவ் இட்!’ -  ஓவியா பெர்சனல்
'ஹாரர் படம், ரொமான்ஸ் நாவல்லாம்... ஐ லவ் இட்!’ - ஓவியா பெர்சனல்

`நாளை எதுவும் நடக்கும். இந்த நொடி சந்தோஷமாக இரு!' இந்தப் பொதுமொழி, நடிகை ஓவியாவுக்குப் பொருந்தும். நடிகையாக ஒரு படியைக் கடந்தவர், `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பல படிகளைக் கடந்துவிட்டார். `ஐ சப்போர்ட் ஓவியா', `ஓவியா ஃபார் சி.எம்', `ஓவியா புரட்சிப்படை' என நெட்டிசன்களின் இப்போதைய விளையாட்டுப்பொருள் இவர்தான். 

கேரளாவில் பிறந்த ஓமணப்பெண்; பி.ஏ பட்டதாரி. ஐந்தரை அடி அழகி. ஒரிஜினல் பெயர் ஹெலன். சினிமாவுக்காக `ஓவியா' எனப் பெயர் மாற, இப்போது `ஓவியா ஹெலன்' ஆகிவிட்டார். மாடலிங் மீதான ஆர்வம், சில `ராம்ப் ஷோ'க்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது. விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்கும் வேலையை ஆர்வமாகச் செய்தார். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது கனவு கிடையாது. குடும்பப் பின்னணியில் சினிமாவும் கிடையாது. `எதுவும் நடக்கட்டும், முயற்சி பண்ணுவோம்' என்றுதான் ஆடிஷனில் கலந்துகொண்ட ஓவியா, `கங்காரு' என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகை ஆனார். 

`நடிக்கணும்னு முடிவெடுத்தாச்சு, இறங்கிப் பார்ப்போம்' என முடிவெடுத்துதான் `களவாணி' ஆடிஷனில் கலந்துகொண்டார். மகேஸ்வரி கேரக்டர், மாற்றத்தைக் கொடுத்தது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது பெற்றார். கூடவே அரை டஜனுக்கும் அதிகமான பட வாய்ப்புகளையும். 

நடிப்பில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், நடிகையாக அறிமுகமான பத்து வருடங்களில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். அப்போதெல்லாம் கிடைக்காத ஆதரவும், வரவேற்பும், ரசிக்கும் மனோபாவமும் `பிக் பாஸ்' என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்குக் கிடைத்திருக்கின்றன. `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை கட்டிப்போடுகிறது, யாரையும் அதிகம் விமர்சனம் செய்வதில்லை, தனக்குப் பிடிக்காததை வெளிப்படையாகப் பேசுகிறார், நண்பரோ... எதிரியோ எந்தக் கருத்தையும் நேரடியாகப் பேசுகிறார், மழையில் நனைகிறார், டான்ஸ் ஆடுகிறார்... இன்னும் பல நிகழ்வுகள் மூலம் மனதில் கரைகிறார். `இதெல்லாம் நடிப்பு' என ஓவியாவின் அணுகுமுறையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது. ஏனெனில், அவரது பேட்டிகளையும் கடந்தகால நிகழ்வுகளையும் புரட்டினால், ஓவியாவின் மறுமுகம் பளீரெனப் பிரகாசிக்கிறது. அந்தப் பிரகாசத்தில் சந்தோஷம் இருக்கிறது; சோகமும் கலந்திருக்கிறது.

பேசிக்கொண்டே இருப்பது ஓவியாவுக்குப் பிடிக்கும். `கலகலப்பு' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விமலுக்கும் ஓவியாவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆனதாகக் கிசுகிசுத்துக்கொண்டிருக்க, ஓவியாவோ சகநடிகை அஞ்சலியுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். `சினிமாவுல உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் யாருனு கேட்டா, அஞ்சலினு சொல்வேன்!' என சியர்ஸ் காட்டியிருக்கிறார். ஓவியாவுக்குத் தனிமை பிடிக்கும். தனிமையில் பேசுவது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஜாலி மூடில் இருக்கும்போது நிலைக்கண்ணாடியைப் பார்த்து, அவருக்கு அவரே பேசிக்கொள்வாராம். `கேரவனில் யாரும் இருக்க மாட்டாங்க. ஆறுதலோ, பாராட்டோ... கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே பேசிக்குவேன்!' - சொன்னது ஓவியாவேதான்! 

நடிகைகளுக்கு ஃபிட்னெஸ், அழகு ரொம்ப முக்கியம். ஆனால், உடற்பயிற்சியோ, டயட்டோ ஓவியாவுக்கு `ஓவர்டோஸ்' ஃபீலிங்தான். சாப்பிடப் பிடிக்கும் என்பதால், விதவிதமாகச் சாப்பிடுவார். அம்மா சமைக்கும் பிரியாணியும் மீன்குழம்பும் ஓவியாவின் ஃபேவரைட். சென்னைக்கு வந்த பிறகு பொங்கல், வடை விரும்பிச் சாப்பிடுவாராம். `எது சாப்பிட்டாலும் குண்டாக மாட்டேன். இயற்கையாகவே என் உடல்வாகு இப்படியே இருக்கு!' எனக் காரணம் சொல்கிறார்.

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும்; விருதுகளைக் குவிக்க வேண்டும்... என்பதெல்லாம் ஓவியாவின் இலக்கு அல்ல. `ரசிகர்களுக்குப் பொழுதுபோகணும். அந்தப் பொழுதுபோக்குல நானும் இருக்கணும்' என்பார். கூடவே, `விருதுகளுக்காக நான் படம் நடிக்க மாட்டேன். என் நடிப்புக்கு விருதுகள் கிடைச்சா ஏத்துக்குவேன்' எனச் சொன்ன `கெத்து' பொண்ணு. 

நடிகர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதையும், தன்னைப் பற்றிய நெகட்டிவ் கருத்துகளையும் கேஷுவலாகக் கடந்துபோகும் பக்குவம் முதல் படத்தில் நடிக்கும்போதே இவருக்கு இருந்தது. `என்னைப் பற்றிய பாசிட்டிவ் கருத்துகளைவிட, நெகட்டிவ் கருத்துகளைத்தான் அதிகம் கவனிப்பேன். ஏனெனில், என்னைப் பிடிக்காதவங்கதான் நான் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்களைச் சுட்டிகாட்டுவாங்க!' என்றார். 

`யாருடைய படத்தில் நடிக்க வேண்டும்?' என நடிகைகளிடம் கேட்டால், கேள்வியின் முற்றுப்புள்ளிக்குக் காத்திருக்காமல் பல இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்கள். `பிடித்த இயக்குநர் யார்?' என்றால், `அவங்க படத்துல நான் நடிக்கணும்கிறதுக்காக சொல்லலை...' என அழுத்திச் சொல்லிவிட்டு ஷங்கர், மணிரத்னம், கெளதம் மேனன் பெயர்களைச் சொன்னார். `ஒரு பாலிவுட் படத்தில் நடித்தீர்களே..?' எனக் கேள்வியை முடிப்பதற்குள், `கால் பண்ணாங்க. சும்மா ட்ரை பண்ணலாமேனு போய் நடிச்சேன். அங்கேயே செட்டில் ஆகணும்னு எல்லாம் ஆசை கிடையாது. எனக்கு தமிழ் சினிமாதான் பிடிச்சிருக்கு!' பட்டெனப் பதில் சொன்னார். 

`பிடித்தது எது?' என்றால் பட்டியல் நீளும். ஹாரர் படங்களின் அதிதீவிர ரசிகை. அரசியல் தெரியாது. ஆனால், காங்கிரஸ் கட்சி பிடிக்கும். ரொமான்ஸ், காமெடி நாவல்களை விரும்பிப் படிப்பார். நாய்கள் மீது ஓவியாவுக்கு ப்ரியம் அதிகம். அவருடைய செல்ல நாய்க்குட்டியின் பெயர், `அப்பு'. தனிமையில் இசை கேட்பது ஓவியாவின் அலாதியான ஹாபிகளில் ஒன்று. வாழ்வின் அந்த நிமிடத்தை மகிழ்ச்சியாகக் கடக்க விரும்பும் இவருக்கு, அம்மா ஜான்சிதான் முழு பலம்! 

ஓவியா, வீட்டில் ஒரே பெண். அம்மா ஜான்சி ஓவியாவை `லட்டு' என்றுதான் அழைப்பாராம். படிப்பு ஏறாமல் அம்மாவிடம் அடிவாங்கிய அனுபவம் ஓவியாவுக்கு உண்டு. வளர்ந்த பிறகு ஓவியாவுக்கு என்ன பிடிக்குமோ, அதைச் செய்ய அனுமதித்தார் தாயார் ஜான்சி. பத்து வருடங்களில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். இதில் பல படங்களில் காமாசோமா வகையான படங்கள் என்றாலும், தொடர்ந்து நடிகையாகத் தக்கவைத்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகளுக்குப் பின்னால், அம்மா கேன்சர் நோயால் மரணம் அடைந்த சோகக் கதை இருக்கிறது. 

`அம்மா எனக்குப் பிடிக்கும். மோசமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தப்போகூட ரொம்ப கேஷுவலா இருந்தாங்க. அந்தத் தைரியம்தான், என்னை இப்பவும் வழிநடத்திக்கிட்டிருக்கு!' என நெகிழும் ஓவியாவுக்கு, `கோபம் கொஞ்சமா வரும். எதுக்கும் சட்டுனு உணர்ச்சிவசப்பட மாட்டேன். மூஞ்சியை சோகமா வெச்சுக்கவும் தெரியாது. ஜாலி டைப்பாவே வளர்ந்துட்டேன். எப்பவும் சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும். அதுதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே!' என சிம்பதி உருவாக்காமல், வலியைக் கடக்கும் பக்குவம் இருக்கிறது.

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தனக்குப் பிடிக்காத விஷயங்களை வலிக்காத அளவுக்குச் சொல்கிறார். எல்லோரும் தனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்க, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்துபோகிறார். யாரைப் பற்றியும் அவதூறு பேசிக்கொண்டிருக்காமல், சூழலை தனக்கான இடமாக்கிக்கொள்கிறார். `பிக் பாஸ்' தொடங்கும்போது கமல் கேட்ட `ஏன் இங்கே வந்தீங்க?' என்ற கேள்விக்கு `சந்தோஷமா இருக்கலாம்னு வந்தேன்!' எனப் பளிச் பதில் சொன்னார் ஓவியா. 

தன் அணுகுமுறையை ஓவியா ரசிக்கிறார்... ஓவியாவின் அணுகுமுறையை நாம் ரசிக்கிறோம்!