Published:Updated:

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

Published:Updated:
ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

38-ம் நாளின் நள்ளிரவு டிராமாக்கள் இன்னமும் ஓயவில்லை. ஓவியா உபயோகித்த பாத்திரங்களைக் கூட அவர் கழுவாததற்காக காயத்ரி கடுமையாக கோபித்துக் கொண்டார். அனிருத் பாடலை விடவும் அதிகமான ‘பீப்’ ஒலிகள் அவருடைய வசனங்களில் உதிர்ந்தன. ‘தமக்கு ஆதரவாக இருப்பவர்’ என்பதையும் மறந்து சமாதானம் செய்ய வந்த சிநேகனிடம், எகிறி விழுந்தார் ஓவியா. காயத்ரி மீதிருந்த கோபத்தைத்தான் சிநேகனிடம் வெளிப்படுத்தினாரோ என்று தோன்றியது. ‘இப்படியெல்லாம் செய்கிறாரே’ என்று சிநேகன் மற்றவர்களை அழைத்து அங்கலாய்த்துக் கொண்டார். 

நேற்றைய ‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா' - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அத்தியாத்தில்  ஆரவ் மேல் ஓவியா கொண்டிருக்கும் காதல் பற்றி கேட்டிருந்தோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘காயத்ரி அக்கா இவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததில்லை’ என்று போலித்தனமாக காயத்ரிக்கு சார்பாக ஒத்து ஊதினார் ஜூலி. ‘நாங்கள் இதை விடவும் நிறைய பார்த்திருக்கிறோமே, போராளி மேடம்’ என்று அவரிடம் சொல்லத் தோன்றியது. அதிலும் ஆரவ், 'ஓவியா பொய் பேச மாட்டா' என்றதும், கேமராவை ஜூலி நோக்கி திருப்புவது எல்லாம், பிக்பாஸ் குறும்பு.

நள்ளிரவில் வெளியே சென்று மழையில் படுத்துக் கொண்ட ஓவியாவை உண்மையான அக்கறையுடன் சிநேகனும், வேறு வழியில்லாமல் வரவழைத்துக் கொண்ட அக்கறையுடன் ஆரவ்வும் சென்று சமாதானப்படுத்தினார்கள். 

**

காதல் தோல்வியின் மீதான ஓவியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடிப்பு, இவற்றின் பின்னணியில் பிக் –பாஸின் திரைக்கதை உள்ளது என்பது போன்று பல பார்வையாளர்கள் கருத்து சொல்வதையும் எண்ணுவதையும் பார்க்கிறேன். 

99% சதவீதம் இது நடிப்பு அல்ல என்றே நான் உறுதியாக கருதுகிறேன். ஏனெனில் என்னதான் திரைக்கதையை அமைத்துத் தந்தாலும் இத்தனை துல்லியமான நடிப்பை எத்தனை சிறந்த நடிப்புக் கலைஞராலும் தரவே முடியாது. ஆகவே ‘Task’- படிதான் செயல்படுகிறேன்’ என்று ஓவியா, ஆரவ்விடம் சொன்னதை ஒரு சுயபச்சாதாபத்தில் போட்டுக் கொண்ட தற்காலிக முகமூடி என்றே தோன்றுகிறது. 

காதல் நிராகரிப்பு, அது சார்ந்த தவிப்பு என்று நிஜ வாழ்வில் காதலர்களிடம் இருக்கக்கூடிய அத்தனை உண்மையான அடையாளங்களும் ஓவியாவிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களின் காதல் நிராகரிக்கப்பட்ட நிதர்சனத்தை அவர்களின் மனது அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ளாது, எனவே சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது போன்று தங்களைத் தானே தண்டித்துக் கொள்வார்கள். இதன் மூலம் எதிர் தரப்பின் கவனத்தையும், அனுதாபத்தையும் பெற முயல்வார்கள். ஓவியாவின் நடவடிக்கைகளில் இவை அத்தனையுமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. நள்ளிரவில் தூக்கம் கலைந்த எரிச்சலில் பேசிக் கொண்டிருந்த ஆரவ்விடம் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டு படுத்துக் கொண்டு கெஞ்சிய ஓவியாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. பிந்து மாதவி சொல்லியதைப் போல ‘உனக்கு இதெல்லாம் தேவையா, ஓவியா’ என்றே நாமும் கேட்கத் தோன்றுகிறது. 

ஓவியா ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறார்? நமக்கு காணக்கிடைத்த காட்சிகளின், கோணங்களின் படி இதைப் பற்றி யூகிக்கவும் ஆராயவும் முயல்வோம். 

**

பிக்பாஸின் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக தங்களுக்குள் அத்தனை அறிமுகம் இல்லாதவர்கள். இந்த வீட்டிற்குள் வந்த பிறகுதான் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முற்பட்டவர்கள். இதுவே ஆரவ் மற்றும் ஓவியாவிற்கு பொருந்தும். 

ஓவியாவின் வெளிப்படைத்தன்மையால் அங்கிருக்கும் பெரும்பாலோனோரின், குறிப்பாக பெண்களின் எரிச்சலை எளிதில் சம்பாதித்துக் கொள்கிறார். பல நல்லியல்புகளுடன் அவர் இருந்தாலும் பணிகளை பங்கிட்டுக் கொள்வது, அதைச்சரியாக நிறைவேற்ற முயல்வது போன்ற விஷயங்களில் ஓவியாவின் பங்கு துவக்கம் முதலே திருப்திகரமாக இல்லை. ‘ஒத்துழையாம இயக்கம்’ சார்ந்த பிடிவாதத்தை பலமுறை கடைப்பிடிக்கிறார். 

இது சார்ந்த சர்ச்சைகள், வாக்குவாதங்களினால் மற்றவர்களினால் தனிமைப்படுத்தப்படுகிறார். இந்த நேரத்தில் ஆரவ்வின் ஆதரவு அவரை சற்று ஆற்றுப்படுத்துகிறது. அவர்களுக்குள் நட்பு இறுகுகிறது. நட்பு காதலாக பரிணமிப்பது மிக மிக இயல்பானது. அதுவேதான் ஓவியாவிற்குள்ளும் நிகழ்கிறது. தன்னையும் அறியாமல் இதற்கான சமிக்ஞைகளை ஆரவ்வும் அளித்தாகத்தான் தெரிகிறது. எனவே தன்னிச்சையாக இந்தக் காதலில் விழுந்து விட்ட ஓவியாவால் அது சட்டென்று நிராகரிக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள முயலவில்லை. ஒரு குழந்தையின் கையில் இருந்து சாக்லெட்டைப் பிடுங்கிக் கொண்டால் எப்படியெல்லாம் பிடிவாதம் பிடித்து அதை நோக்கி அழுமோ ஏறத்தாழ அந்த விஷயத்தையெல்லாம் அவர் செய்கிறார். ‘உன்னை மதிக்காதவங்களை நீ ஏன் மதிக்கணும். தூக்கிப் போட்டுட்டு போலாம்ல’ என்று சிநேகன் உபதேசிக்கும் போது வெள்ளந்தித்தனமான முகபாவத்துடன் ‘ஆமாம்ல.. இது ஏன் எனக்கு தோணாமப் போச்சு’ என்கிற போது வளர்ந்த குழந்தையைப் போலவே தோன்றுகிறார். 

‘லவ் பண்லாமா, வேணாமா’ என்கிற சிம்புவின் பாடலைப் போலவே ‘லவ் இருக்கா, இல்லையா’ என்கிற கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளா விட்டால் அவருடைய தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது. 

அது மட்டுமே அவருடைய முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது. அவருடைய பலவீனமும் இதுவே. 

**

ஓவியா ஆரவ்விடம் தன்னுடைய காதலை அனைவரின் முன்பும் வெளிப்படையாக காட்டிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் போட்டியாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள் வரை பலரும் முகச்சுளிப்புடன் விமர்சிக்கிறார்கள். இதையே ஒரு ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளரிடம் செய்து கொண்டிருந்தால் சும்மாயிருப்பார்களா என்பது அவர்களின் கேள்வி. ஆம். நிச்சயம் அது பெரிய சர்ச்சையாகி இருக்கும். உறுதிப்படுத்தப்படா விட்டாலும் பரணிக்கு நிகழ்ந்ததும் அதுவே. 

‘கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்றான் பாரதி. இந்த நோக்கில் ஓவியாவின் நடவடிக்கைகள், காதல் வெளிப்படுத்துதல்கள், ஆரவ்விற்கு தரும் இடைஞ்சல்கள் அதீதமானதுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. 

ஆனால் – இதைப் பொதுப்புத்தியின் பார்வை கொண்டல்லாமல் ஓவியாவின் பிரத்யேகமான ஆளுமையின் நோக்கிலிருந்து பார்க்க முயல்வோம். 

‘Be Yourself’ என்பது ஓவியாவின் தாரக மந்திரம். தங்களின் உணர்வுகளுக்கு முகமூடி போட்டுக் கொள்ளாமல் ஒப்பனையின்றி அப்படியே வெளிப்படுத்தி விடுவது அவருடைய சுபாவங்களில் ஒன்று. பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்க முடியாத குணாதிசயம் இது.  நம்மால் பெரிதும் பின்பற்ற முடியாத இந்த குணாதிசயத்தை ஓவியா கொண்டிருப்பதால்தான் அவரை நமக்கு பெருமளவு பிடித்துப் போகிறது. ஓவியாவை நம்முடைய ‘ஆல்டர் ஈகோ’வின் கச்சிதமான பிம்பம் என சொல்லலாம். 

ஓவியாவிற்கான பிரத்யேகமான உலகில் அவருக்குத்தான் முன்னுரிமை தரப்படுகிறது. ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்றெல்லாம் மிடில் கிளாஸ் தனமாக அவர் அலட்டிக் கொள்வதில்லை. தன்னுடைய உலகின் விதிகளின்படி வெளிப்படையாக வாழ நினைக்கிறார். இதை மற்றவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. 

தனிநபர் சுதந்திரம் என்பது மேற்கத்திய நாடுகளில் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. காதலர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கையில் முத்தமிடத் தோன்றினால் அதை இயல்பாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள். சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கும் இது நெருடலாக தோன்றுவதில்லை அப்படியாக அவர்களின் கலாசாரம் பரிணமித்திருக்கிறது. ஓரெல்லை வரை தனிநபருக்கான சுதந்திரத்தை பொதுவெளியில் அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. ஏனெனில் சில அற்புதமான தருணங்களை நாம் அப்போது தவற விட்டு விட்டால் அந்த தருணங்கள் பிறகு வாய்க்காமலேயே போகலாம். 

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்கிற தத்துவத்தை நடைமுறையில் அனுமதிக்கிற, அது சார்ந்த சுதந்திரத்தை இயல்பாக பின்பற்றுகிற சமூகம் மனச்சிக்கல்கள் அதிகமில்லாமல் இருக்கும். 

ஆனால் நாம் அவர்களிடமிருந்து கலாசார ரீதியாக மட்டுமின்றி பல விஷயங்களில் சுமாராக இருநூறு ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நம் மண்ணுக்கென்று பிரத்யேகமான பண்பாட்டு, கலாசார பெருமைகள் இருந்தாலும் ‘நாலு பேர் என்ன சொல்வார்களோ, நினைப்பார்களோ’ என்கிற அச்சுறுத்தலுக்காகவே தனிநபர் சார்ந்த பல விருப்பங்களை விழுங்கிக்  கொண்டு பல்வேறு மனப்புழுக்கங்களோடு அவதிப்படுகிறோம். இதுவே சமூகத்தின் வெவ்வேறு குற்றங்களுக்கான காரணங்களாகவும் மாறுகின்றன. 

தெரிந்தோ, தெரியாமலோ ஓவியா மேற்குலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். எனவேதான் அவரது நடவடிக்கைகள் ஆசார மனோபாவமுடைய நமக்கு விசித்திரமாகத் தெரிகின்றன. 

அவர் தனக்குத்தானே மிக மிக நேர்மையாக இருக்க நினைக்கிறார். இதை ஆரவ் உள்ளிட்ட மற்றவர்களும் பல சமயங்களில் ஒப்புக் கொள்கிறார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு ஆடிய ஒரு விளையாட்டில் கூட ஓவியா நேர்மையின்றி நடக்கத் தயாரில்லை’ என்கிற ஓர் உதாரணத்தை ஆரவ்வே சொல்கிறார். 

ஆனால் இந்த தனிநபர் சுதந்திரத்திற்கு என ஒரு கறாரான எல்லையிருக்கிறது. ‘நீ கையை வீசுவதற்கான சுதந்திரம், அடுத்தவரின் மூக்கின் எல்லைவரைக்கும்தான் இருக்கிறது’ என்றொரு பழமொழி இருக்கிறது. தன் மீது திணிக்கப்பட்ட காதலை  எதிர்தரப்பிடம் வலியுறுத்துவதற்கான சுதந்திரம் ஓவியாவிற்கு எத்தனையுள்ளதோ, அதை மறுப்பதற்கான அதே சுதந்திரம் ஆரவ்விற்கும் உள்ளது. 

முதலில் இருந்தே ‘ நண்பர்கள்’ என்கிற எண்ணத்துடன்தான் தான் பழகினேன்’ என்கிறார் ஆரவ். அவர் சொல்வதில் பெருமளவு உண்மையிருக்கலாம். ஆனால் அப்படியாகத்தான் அவர் நடந்து கொண்டாரா என்றெழுகிற சந்தேகத்தை துடைக்க முடியவில்லை. 

‘எப்பவாவது உன் கிட்ட ஆரவ் ‘லவ் யூ’ன்னு சொல்லியிருக்கிறாரா என்று சிநேகன் நேரடியாக கேட்கும் போது ‘அப்படி சொன்னதில்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளும் ஓவியா, ‘ஆனா நமக்கு உள்ள தெரியும் இல்லையா,. அவர் நடந்துக்கிட்ட சில விஷயங்கள்… என்றும் சொல்கிறார். நேரடியாக சொல்லப்படாவிட்டாலும் சில நடவடிக்கைகளின் மூலமாக உள்ளுணர்வின் உந்துதலில் இந்த உணர்வை அறிந்து கொள்ள முடியும். அதிலும் பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் கூர்மையாக இருப்பார்கள். 

**

ஓவியாவின் தரப்பிற்கு இன்னமும் வலிமையூட்டும் காரணமாக இன்று வையாபுரியின் கோபம் அமைந்தது. பழைய தமிழ் திரைப்படங்களில் எல்லாம் ஒரு காட்சிக் கோர்வை வரும். திமிர் பிடித்த மனைவிக்கு அடிமைத்தனமான கணவன் இருப்பான். மனைவி மற்றவர்களுக்கும் தனக்கும் செய்யும் கொடுமையையெல்லாம் வாயில்லாப்பூச்சியாக தாங்கிக் கொள்வான். ஆனால் ஒரு கட்டத்தை தாண்டிய பிறகு கொடுமை தாங்காமல் துணிவு கொண்டு மனைவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைவான். 

‘அப்படிப் போடு’ என்று அவனுடைய துணிச்சலைக் கண்டு பார்வையாளர்களும் உற்சாகமாவார்கள். ஏறத்தாழ இதே உணர்வை இன்று வையாபுரி தந்தார். ‘என்ன நடந்தாலும் சரி, நான் உன் பக்கம் நிக்கறேன்.. உன் பக்கம்தான் உண்மையிருக்கு’ என்று ஓவியாவிடம் மிகுந்த உணர்ச்சியுடன் ஆவேசமாக அவர் வாக்குத் தந்தது ‘மாஸான’ காட்சியாக இருந்தது. ‘எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு.’ என்று அவர் குறிப்பிட்டது நெகிழ்வையளித்தது. ஒரு பொறுப்பான தகப்பனின் சித்திரத்தை வையாபுரி தந்தார். 

loading...

ஏறத்தாழ மற்றவர்கள் அனைவரும் ஓவியாவை தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்கும் போது அவர் தந்த அவமானங்களையெல்லாம் விழுங்கி விட்டு சிக்கலான தருணங்களில் உதவி  மற்றும் ஆலோசனைகள் தரும் சிநேகனின் ஜெண்டில்மேன்தனம் பாராட்ட வைக்கிறது. என்னவொன்று, இதை அப்படியே காயத்ரி கும்பலிடம் புறம் பேசும் போது மட்டும்தான் நெருடல் ஏற்படுகிறது. ‘ஆரவ் பிரச்னையை ஓவியாவை பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக காயத்ரி உபயோகித்துக் கொள்கிறார்’ என்று அவர் சொல்வது உண்மையான விஷயம். 

**

காதலில் விழுந்து விட்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஓவியாவின் சித்திரத்தின் மூலம் சமகால இளம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 


வெளிப்படையாகவும் இயல்பாகவும் இருப்பது, மற்றவர்களின் உள்ள குறைகளை ஊதிப் பெருக்கி புறம் பேசாமல் இருப்பது. மற்றவர்களின் புண்படுத்துதல்களை மனதிற்குள் வாங்கிக் கொள்ளாமல் அவற்றை புன்னகையுடன் கடப்பது என்று பல நல்ல விஷயங்கள் ஓவியாவிடம் இருந்தாலும் காதல் என்கிற உணர்வு மட்டுமே அவரைப் படாத பாடு படுத்துகிறது. ‘இந்த வீட்ல மற்ற விஷயங்கள எல்லாம் ஓகே. அதையெல்லாம் ஈஸியா மேனேஜ் செஞ்சிடுவேன்’. ஆனா காதல் விஷயத்துல மட்டும்தான் நான் வீக்’ என்று அவர் சொல்வதைப் பார்க்கலாம். 

முந்தைய பகுதியை படிக்க...

நட்பிற்கும் காதலுக்குமான துல்லியமான வித்தியாசத்தை புரிந்து கொண்டு எதிர்தரப்பிடம் பழக வேண்டும். அது ஆணோ, பெண்ணோ தன்னுடைய நிலையை துவக்கத்திலேயே எதிர் தரப்பிடம் தெளிவுப்படுத்தி விட வேண்டும். தாமாக வளர்த்துக் கொண்ட கற்பனைகளை பிறகு கைவிட முடியாமல் தம்மையும் துன்புறுத்திக் கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்தக்கூடாது.  இப்படிப்பட்ட பிரச்சினையைில் பெண்கள் மீது இளம் ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகளைப் பற்றி பல செய்திகளை தினமும் பார்க்கிறோம். 

‘விரும்பி வர்றவங்களை எனக்குப் பிடிக்கறதில்ல.. அவங்களை உடனே ஒதுக்கிடுவேன். இவர் விலகி விலகி போறதாலதான் பிடிச்சிருக்கு’ என்று ஆரவ் குறித்து ஓவியா சொல்வது பழமைவாத சிந்தனைதான் என்றாலும் ஒருவகையில் அதுதான் மனிதனின், குறிப்பாக பெண்களின் மனோபாவம். ‘விரும்பிப் போனால் விலகிப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும்’ என்று பெண்களின் உளவியல் குறித்த பொதுப்படையான கருத்து உண்டு. 

தமக்கு முன் வீசப்படும் அனுதாபங்களை ஓவியா பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது அவருடைய மனஉறுதியின் இன்னொரு அடையாளம். ‘ஏதோவொன்றை’ சாப்பிடச் சொல்லி போலிப்பரிவுடன் காயத்ரி நினைவுப்படுத்திய போது .. ‘நீங்க கவலைப்படாதீங்க.. எனக்கு அம்மா இருக்காங்க’ என்று மூக்குடைத்தது ஒருவகையில் நெருடல் என்றாலும் இன்னொரு வகையில் காயத்ரியின் அதுவரையான கொடுமைகளுக்கு ஒரே வாக்கியத்தில் ஓவியா அளித்த பதிலடியாக எடுத்துக் கொள்ளலாம். 

தனக்கு விருப்பமில்லாத task-ஐ கறாராக தொடர ஓவியா மறுப்பதிலிருந்து, தங்களுக்கு உவப்பில்லாத விஷயங்களை தயக்கத்தோடு ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்புடன் மறுப்பதற்கான வழக்கத்தையும் நாம் பின்பற்றத் துவங்கலாம். ‘BE YOURSELF’. மற்றவர்களின் தீர்மானங்களுக்காக நாம் வாழ முடியாது. வாழவும் கூடாது. 

**

இன்று தரப்பட்ட task-ல் நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து தர ஆவலுடன் முன்வந்த வையாபுரியை தடுத்து நிறுத்தி அந்த வாய்ப்பை ஜூலிக்குத் தந்த சக்தியின் செயல் நெருடலைத் தந்தது. ஆனால் பல திரைப்படங்களில் ஏற்கெனவே நடித்து புகழ் பெற்று விட்ட வையாபுரியை விடவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆக விரும்பும் ஜூலிக்கு வாய்ப்பு தரப்பட்டது சரியே. 

ஆனால் ஒரு வழக்கமான VJ மாதிரியே செயற்கைத்தனத்துடன் ஜூலி பேசியது சலிப்பு. இந்த விஷயத்தில் ‘கலக்கப் போவது யாரு’ தொகுப்பாளராக ஜாக்குலினுக்கு போட்டியாக வருவார் என்று தோன்றுகிறது. ஏன் நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரியான பாணியை பின்பற்றுகிறார்கள் என்று தெரியிவில்லை.  

கூட்டுக்குடும்பங்கள் அதிகமிருந்த  காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வயதில் முதிர்ந்த ஒரு உறவினர் ‘பஞ்சாயத்திற்கு’ வருவார். அதை நினைவுப்படுத்தும் வகையில், பிந்துமாதவி அந்த வீட்டின் பழைய விஷயங்கள் ஒவ்வொன்றையும் விசாரணை செய்வது சிறப்பு. நம்முடைய ஆதங்கங்களையே அவர் பிரதிபலிக்கிறார் என்கிற வகையில் அவரை பிடித்துப் போகிறது. அப்படி விசாரணை செய்யப்படும் நபர்களும் தங்களின் வாக்குமூலங்களை குற்றவுணர்வின் அடிப்படையில் தெரிவிக்கிறார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. வெளியில் இருந்து அதுவரை பார்த்த ஓவியாவிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியான ஓவியாவை அருகில் பார்க்கும் பீதி பிந்து மாதவியின்  முகத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. முந்தைய எபிசோடில் காயத்ரியிடம் பரணி பற்றி கேள்வி கேட்டது, ஓவியாவிடம்' இதெல்லாம் உனக்குத் தேவையா' ,  நேற்று ஆரவிடம், ' நீயும் கொஞ்சம் தப்பு பண்ணின. ஓவியா மேல தான் எல்லா தப்பும்னு நீ பழி போட முடியாது ' என கேள்வி கேட்பது என பிந்து மாதவி, மக்களின் கேள்விகளை எல்லாம் அங்கிருக்கும் நபர்களிடம் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்.

‘அவ ரொம்ப நேர்மையானவ. கோபத்தில் ஏதாவது போட்டு உடைப்பார். அல்லது தனக்கு தீங்கு ஏற்படுத்திக் கொள்வாரே தவிர, மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்’ என்று சக்தி, பிந்து மாதவியிடம் சொல்வது சரி. ஆனால் ‘அவளை அறையணும் போல கோபம் வருது’ என்று வேறு சமயத்தில் சொல்லும் போது, கமலால் கண்டிக்கப்பட்டும் கூட அவருக்குள் இருக்கும் ஆணாதிக்க உணர்வு அப்படியே வெளிப்படுகிறது. தான் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பது போல் 'நடிகனான' சக்தி தனக்கு இருப்பதாக நினைக்கும் நடிகன் என்கிற பிம்பம் உடைந்து இருப்பதை வெளியே வந்து நிகழ்ச்சியைப் பார்க்கும் போது உணர்வார் என்றே தோன்றுகிறது,

**
ஓவியா பிக் பாஸ் வீட்டில் தமக்கு தரப்படும் பணிகளை சரிவரச் செய்யாமல் டபாய்க்கிறார், சோம்பேறியாக இருக்கிறார், அவர் வேலையைச் சேர்த்து நாங்களும் செய்ய வேண்டுமா?’ என்று காயத்ரி நினைப்பது ஒருவகையில் சரிதான். ஆனால் அது சார்ந்த ஆட்சேபத்தை கோபமாகவும் வசைகளாகவும் அவர் வெளிப்படுத்துவதுதான் நெருடலையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 

ஓவியாவின் தற்போதைய பிரச்னை, வலி பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இந்தச் சமயத்தில் கூட பணியைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், அது சார்ந்த சர்ச்சையை உருவாக்கி பழிதீர்க்க முயல்வதும்  முறையானதல்ல. 

“ஏன் இந்த வேலைகளையெல்லாம் நான் செய்யணும்.. தலையெழுத்தா” என்று அவர் உண்மையாகவே  நினைப்பாராயின் இந்த விளையாட்டின் மையத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே ஆகிறது. 

கூடிவாழும் தன்மை, அது சார்ந்து எழும் சிக்கல்களின் மீதான சகிப்புத்தன்மை, இதர போட்டியாளர்களிடம் உண்மையாகவே காட்டும் இணக்கம் ஆகியவற்றை உணர்ச்சி மோதல்களின் வழியாக சோதிப்பதே இந்த விளையாட்டின் அடிப்படையான நோக்கமும் சவாலும்.  இதர போட்டியாளர்களை தங்களின் குடும்ப உறுப்பினர்களாக பாவிக்கவே முயற்சி செய்ய வேண்டும். மாறாக ‘இனி பிக் –பாஸ் வீடுதான் வாழ்க்கை’ என்கிற முறையில் நிரந்தர பகைமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நம்முடைய நிஜ வாழ்க்கையில் இவ்வாறான மனச்சிக்கலை உள்ள ஒரு குடும்ப உறுப்பினர் வீட்டில் இருந்தால், நாம் இவ்வாறுதான் கோபமாக நடந்து கொள்வோமா’ என்கிற மன முதிர்ச்சியை காயத்ரி அடைய வேண்டும் என்று தோன்றுகிறது. 

**

தனது அரசியல் வருகை சார்ந்து நீண்ட காலமாகவே பல குழப்பமான கருத்துக்களை ரஜினி சொல்லி வந்தாலும், அவருடைய ‘வாய்ஸ்’க்கிற்கு என்று இன்னமும் கூட ஒரு முக்கியமான எதிர்பார்ப்பு இருக்கிறது. முக்கியமான நேரங்களில் அவருடைய சிறிய அசைவு கூட பரபரப்பாக பேசப்படுகிறது. அதைப் போலவே இந்த பிக் –பாஸ் விளையாட்டின் தவிர்க்க முடியாத மையமாக ஓவியா இருக்கிறார். 

தனது இனிமையான நல்லியல்புகளால் பலரைக் கவர்ந்து கவனிக்க வைத்த ஓவியா தனது இன்னொரு புறமான நிறத்தினாலும் அதே விதமான கவன ஈர்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறார். அவர் இல்லாவிட்டால் பிக் – பாஸ் விளையாட்டின் செல்வாக்கு பெரிதும் சரிந்து விடும் என்று நிகழ்ச்சி வடிமைப்பாளர்களும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். இயந்திரக் குரலில் மற்றவர்களை கண்டிப்புடன் கையாளும் பிக் பாஸ், ‘ஸாரி.. இந்த task-ஐ என்னால் செய்ய முடியாது’ என்று ஓவியா கண்டிப்புடன் சொன்ன போது அதை எப்படிக் கையாள்வது என்கிற தடுமாற்றம் பிக் –பாஸின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. இந்த வகையில் பிக் –பாஸிற்கே பாஸ் ஓவியாதான். 

ஓவியாவிற்கு பெருகிக் கொண்டே வரும் மக்களின் ஆதரவையும், வாக்குகளின் எண்ணிக்கையும் கமலையும் ஆச்சர்யப்படவே வைக்கும். மற்ற போட்டியாளர்கள் தங்களைக் கீழாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது ஓவியாவை செல்லமாக தட்டியும் வைக்கிறார்.

loading...

அனைத்து துறைகளிலும் விளையாட்டுக்களிலும் ஆண்களின் வெற்றியே அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு சமூகத்தின் பெரும்பான்மையை தன்னைக் குறித்து பேசவும், சிந்திக்கவும், அன்பு செய்யவும் வைத்த ஓவியாவின் இந்த வெற்றி  பெண்ணிய நோக்கில் மிக முக்கியமானது. சில பிசிறுகள் இருந்தாலும் அவருடைய ஆளுமை, சமகால இளம் பெண்களுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism