Published:Updated:

ஓவியாவை ஆரவ் தவிர்ப்பது, அவருடைய ஆண் மனநிலைதான் காரணமா? #BiggBossTamil

கிருத்திகா தரண்
ஓவியாவை ஆரவ் தவிர்ப்பது, அவருடைய ஆண் மனநிலைதான் காரணமா? #BiggBossTamil
ஓவியாவை ஆரவ் தவிர்ப்பது, அவருடைய ஆண் மனநிலைதான் காரணமா? #BiggBossTamil

இன்று எல்லோராலும் பேசப்படும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும், அந்த வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளையும் உளவியல் ரீதியாகப் பார்த்தோமானால், பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, அதிகம் பேசப்படும் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நமக்குச் சொல்லும் விஷயம் இதுதான். 

உளவியலில் உறவுகளில் முக்கியமான பாடம் உண்டு. தவிர்த்தல் (Avoidant), சார்ந்திருத்தல் (Dependent), உறுதியளித்தல் (Assertive). எல்லாரின் இயல்பிலும் இந்தக் குணங்கள் கலந்திருக்கும். இதில், யாருக்கு எப்போது எந்த இயல்பு மேலதிகமாக வருகிறது என்று சொல்ல இயலாது. தவிர்க்கும் இயல்பு அதிகம்கொண்டவர்கள், உறவுகளை எப்போது தவிர்ப்பார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். பெண்களை ஈர்க்கும் ஆண்களுக்கு இது கை வந்த கலை. எனக்குத் தெரிந்த ஒரு நிஜக் கதை இது. 

அவர், பெண்களிடம் நல்ல நட்பு வைத்திருக்கும் ஆண். நிலா, கவிதை என்று புகழ்ந்து நட்பாவார். உன்னைவிட்டால் உலகத்தில் வேறு யாருமில்லை என எல்லா நேரத்திலும் அவளுடன் தொடர்பில் இருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணும் இவரின் அன்பு வலைக்குள் சிக்குவாள். பல மாதங்கள் நன்றாகப் பழகியதும், வேறு ஒரு அட்ராக்டிவ் நட்பு கிடைக்கும். இங்கே பேசுவதைக் குறைத்துவிடுவார். அப்போது இந்தப் பெண்ணுக்குப் பொறாமை ஏற்படும். அந்த ஆணிடம் பொசசிவ் வரும். அதை அந்த ஆண் ரசிப்பார். அவருக்குப் பிடித்த மன விளையாட்டு இது. 

தன்னைப் பல பெண்கள் நேசிப்பதை அவரின் மனது விரும்புகிறது. அவர் மேலும் விலக, அந்தப் பெண் அவரை ஈர்க்க எந்தளவுக்கு இறங்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்குவார். இந்த விளையாட்டின் உச்சகட்ட பிரச்னையில் அந்தப் பெண் ஓடிவிடுவாள். தற்கொலைக்கு முயல்வதோ, கவுன்சலிங் பெற்று வாழ்வைத் தொடர்வதோ அந்தப் பெண்ணின் முடிவு. இவர் ஜாலியாக அடுத்த நட்பினைத் தொடர்வார். ஒரே சமயத்தில் பல பெண்களுடன் நட்பாக இருப்பார். இவரின் ஒரே நல்ல குணம்(?), அந்தப் பெண்கள் சொல்லும் ரகசியத்தைக் காப்பாற்றுவார். அதனால், காதல் மட்டுமின்றி நட்பில் சிக்கும் பெண்களும் அதிகம். 

இவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை தெரிந்தும், அடுத்த பெண் நம்பிக்கையாக வருவாள். ஏனென்றால், சக பெண்ணைத்தான் பெண்கள் நம்ப மாட்டார்கள். அந்த ஆணைப் பொருத்தவரை அவராக எந்தப் பெண்ணையும் வெறுக்கவில்லை. கடைசி வரை திட்டவோ, வெறுக்கவோ இல்லை. ஒதுங்கி கண்ணியமாகவே நடந்துகொண்டார். இதுதான் இவரின் நியாயம். 

இப்போது, 'பிக் பாஸ்' விஷயத்துக்கு வருவோம். இங்கு ஆரவ்வின் கண்ணியம், அந்த ஆணின் கண்ணியம்போலவே உள்ளது. ஆரம்பத்தில் ஓவியாவிடம் அதிகம் பேசி பழகி, அரட்டை அடித்தார். நாமினேட் செய்யும் கடைசி நாள்களில் கட்சி மாறினார். காயத்ரி, சினேகன் அணிக்குச் சென்றார். ஓவியா பற்றி குறைகள் சொல்லி, நாமினேட் ஆகாமல் தப்பித்தார். பிறகு, ஓவியாவுடன் பழக ஆரம்பித்தார். பாவம் கேமிரா, மனிதர்களுக்கு அடுத்தப் பக்கமும் இருக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. 

அடுத்து, ஆரவ் மனதில் ஒளிந்திருக்கும் அவாய்டன்ட் பெர்சானலிட்டி. இந்த விளையாட்டால் இன்னும் இன்னும் ஓவியாவை கவர முடியும். ஓவியாவின் பொசசிவைத் தூண்டுவதன் மூலம் நெருக்கத்தை கூடுதலாகப் பெறலாம். ஜெயிக்கும் வாய்ப்புள்ள ஓவியாவை மனரீதியாகத் தாக்குகிறார். அதேசமயம் தன்னை ஜென்டில்மேனாக காட்டிக்கொண்டு, கண்ணியமாக ஜொலிக்கிறார். என்றுமே ஓவியாவிடம் தெளிவாக, இது நட்புதான் என்று சொல்லி விலகவே இல்லை. ஓவியா தனக்குப் பின்னால் வருவதை ரசிக்கிறார். அடுத்தவரிடமோ, அது பிடிக்காததுபோல நடந்துகொள்கிறார். 

தனிமையினால் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட, நீ சரியில்லை என்று வாரா வாரம் குற்றம்சாட்டப்பட்ட, அதேசமயம் புகழ் வெளிச்சம் உச்சிக்கு வந்த ஒரு பெண்ணின் மனநிலையைப் பார்க்கலாம். தனிமை காரணத்தினால், உள்ளிருக்கும் டிபன்டன்ட் விழித்துக்கொள்கிறது. அவன் அவாய்ட் செய்தாலும், அதை ரசித்து பின்னாடியே போகச்செய்கிறது. அவனைச் சார்ந்தே முடிவு எடுக்கிறது. தவிர்க்கும் மனநிலை உள்ளவன், இதைச் சரியாகப் புரிந்துகொள்கிறான். தேவையான சமயத்தில் தவிர்த்து, பிறகு இணைந்து, பிறகு தவிர்த்து என விளையாடுகிறான். 

சார்ந்திருக்கும் மனநிலையில் உள்ளவர்களின் வாழ்வில் நிம்மதி இருக்காது. விலகுவதும் விரைவில் நடக்காது. மிகுந்த மனக்கசப்புகளுக்குப் பிறகே பிரிய நேரிடும். பலர் இந்த ஆட்டத்தை, பெண்ணின் காதல் மனது என்று உருகுவார்கள். இதற்குக் காரணம், சரியான மனப்பயிற்சி இல்லாததே. இது, புகழ்பெற்ற பல பெண்களின் வாழ்வில் நடந்துள்ளது. தன்னம்பிக்கையோடு பலரையும் அலட்சிய பாவத்துடன் கையாண்ட சில்க் ஸ்மிதாவின் மனச்சிக்கல் இந்த வகையே. 

இந்த இடத்தில் அசர்டிவ் வகையறா குணமும் உள்ளது. ஓவியாவிடம் இருந்த அதே குணம். அன்பாக இருந்தால் அன்பு செலுத்துவேன். விலகினால் விலகி இருப்பேன். சரியான அளவில் பேசுவேன் என்பது. இந்தக் குணத்துடன் இணையும் இணையர்கள், அதிக காலம் ஒன்றாக வாழ முடியும். ஆனால், இயற்கை எல்லாவற்றையும் சமவெளியாக படைத்துவிடாது. மலைகளும், மடுக்களும், நீர்வீழ்ச்சிகளும் இயற்கையின் அழகுதான். அதுபோல குணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். 

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஆரவ், ஓவியா என்பதைவிட, இந்தச் சமூகத்தின் ஆண், பெண் உறவின் வெளிப்பாடாகவே இதைக் கவனிக்கிறேன். ஓவியாவின் முகத்தில் காதலின் ஏமாற்றம், தவிப்பு, எப்படியாவது ஆரவ் அன்பைத் தக்கவைக்கும் வெறி தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அரசியல், சமூகம், மன உறவின் சிக்கல்களை அறியலாம். இதற்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி சொல்லலாம். 

அம்மா ஊரிலிருந்து போனில் பேசும்போது, 'உடம்பை சீரழிச்சிருந்தா அஞ்சு நிமிஷம்டி. இந்த ஆரவ், ஓவியாவின் மனசை சீரழிச்சுட்டானே' என்றார். ஒரு சீனியர் சிட்டிசனிடமிருந்து வந்த வார்த்தைகள் எனக்கு வியப்பைத் தந்தது. ஆக, முதியவர்களும் காதலின் தோல்வி பற்றிய சரியான எண்ணத்தில் இருப்பதை அறியமுடிகிறது. ஓவியாவுக்கு இது இன்னும் மனவலிமை சேர்க்கும். இந்த வலிகள் அவரைச் செம்மைப்படுத்தும்.