Published:Updated:

அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (40-ம் நாள்) #BiggBossTamilUpdate

அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (40-ம் நாள்) #BiggBossTamilUpdate
அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (40-ம் நாள்) #BiggBossTamilUpdate

அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (40-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்த வரலாற்றுக் காரணத்தினாலோ என்னவோ, பிக் பாஸ் வீட்டிலும் இப்போதெல்லாம் நள்ளிரவில்தான் வரலாற்றுச் சம்பவங்கள் அதிகம் நிகழத் துவங்கி விட்டன. 

நேற்றைய ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்?- பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அத்தியாத்தில்  ஓவியாவிற்காக பேசுவதில் யார் நிஜமாக நடந்து கொள்கிறார்கள் ? என்பது பற்றி கேட்டிருந்தோம்அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறவனை தட்டி எழுப்பி “தூங்கிட்டிருக்கிறியா மச்சி?” என்றால் அவன் எப்படியெல்லாம் காண்டாவான்? அப்படியொரு கோபம் ஆரவ்விற்கு வந்திருக்கும். சரியாக 12.00 மணிக்கு நடுஇரவில் அவரை எழுப்பிய ஓவியா ‘முட்டாள்னு நெனச்சியா. குற்றவுணர்வு இல்லையா…மாத்திரை.. கமல் சார்.. என்றெல்லாம் ஏதேதோ சொன்ன போது விஷயம் ஆரவ்வைப் போலவே நமக்கும் புரியவில்லை. 

ஆனால் இதை முதலில் நிதானமாக கையாண்ட ஆரவ்வின் பொறுமையை பாராட்ட வேண்டும். ‘ப்ளே பாய்’ என்று சொல்லப்பட்டவுடன்தான் பொறுமையை இழந்தார். இதை அரையும் குறையுமாய் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த காயத்ரி குழு ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ என்கிற ரேஞ்சிற்கு தவறாக புரிந்து கொண்டு என்னென்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். வம்பு பேசுதலின் அடிப்படையான விஷயமே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வதந்திகளின் மீதாகத்தான் உருவாகிறது.  பொதுவாக ஆண்களும் பெண்களும் கலந்து செல்கிற பயணங்களில்  இரவு தங்கும் போது பாதுகாப்பிற்காக பெண்களின் அறையை பூட்டி வைப்பது வழக்கம். ஆனால் ‘எங்களைக் காப்பாத்துங்க பிக் பாஸ். ஆண்களின் அறையை பூட்டி வெச்சிடுங்க’ என்று அந்த வீட்டின் ஆண்கள் கதறும்படியாகி விட்டது நிலைமை. யட்சி போல இரவில் திரிந்து கொண்டிருக்கிற ஓவியா.. ஒற்றை ஆளாய் அந்த வீட்டையே மிரட்டிக் கொண்டிருக்கிறார். 

இதுவரையான பிக் பாஸ் நிகழ்வுகளில் ஓவியாவிற்கு நிறைய வசைகளும் அவமானங்களும் கிடைத்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர், அதிகம் காயப்பட்ட விஷயங்களில் ஒன்று ஜூலி சொன்ன பொய். அவர் அப்படி நினைப்பது முழு நியாயமே. உண்மையான கவலையுடன்  ஆறுதல் சொல்லச் சென்ற தன்னை வேறு மாதிரியாக சித்தரித்ததும் அல்லாமல் அந்தப் பொய்யை நெடுநாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிற ஜூலியின் மீது ஓவியாவிற்கு மட்டுமல்ல நமக்கே கூட கொலைவெறியாகத்தான் இருக்கிறது. 

எனவே கோபத்தில் ஜூலியை நோக்கி ‘இனிமே பொய் சொல்லாத. எப்படி ஒரு மாசமா ஒரு பொய்யை இழுக்க முடியுது’ என்று ஓவியா கேட்பதின் மூலம் பொய் சொல்லுதல் என்னும் சிறுமையை அவரால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை என்று தெரிகிறது. 

‘சரியான விஷயத்துக்காக கோபப்பட்டா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்று சிநேகனிடம் அன்றிரவு சொல்கிறார் ஓவியா. அவரின் பிரத்யேகமான ஆளுமைக்குணத்தை, அதிலுள்ள தூய்மைகளை, கறாரான தேர்வுகளை இது போன்ற உரையாடல்களிலிருந்து நம்மால் புரிந்து கொண்டு அவரை வியக்க முடிகிறது.  ***

பெண்கள் அறையிலிருந்து தன்னுடைய போர்வையை எடுத்துச் சென்ற ஓவியா, போகும் முன்..  ‘ஜூலி.. கடுப்புல இருக்கேன்.. ஏதாவது பாட்டு கீட்டு பாடினே.. செஞ்சிடுவேன்’ என்று மாரி ‘தனுஷ்’ மாதிரி மிரட்டி விட்டுப் போக, ஒப்பாரி வைக்க ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்த ஜூலி, அரைகிலோ காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் ‘அக்கா.. அவ.. என்னை செஞ்சிடுவேன்னு’ மிரட்டறாக்கா’ என்று ஏதோ கொலை முயற்சியை எதிர்கொண்டது போல காயத்ரியிடம் தஞ்சம் புகுந்தது ஒருவகையில் காமெடியாக இருந்தாலும் இன்னொரு வகையில் பரிதாபமாகவே இருந்தது. ‘எவண்டி.. உன்னைப் பெத்தான்’ என்று முன்பு ஓவியாவை கிண்டலடித்து கெத்தாக பாடிய ஜுலியா இது? எப்படி ஒடுங்கிப் போயிருக்கிறார், பாவம். 

காலை ஆறு மணிக்கு ஒரு மாதிரியாகவும், மாலை ஆறு மணிக்கு மேல் வேறு மாதிரியாக உருமாறுகிற வடிவேலுவைப் போல ‘பாடினே, செஞ்சுடுவேன்’ என்று இரவு மிரட்டிய ஓவியா, காலையில் புன்னகையுடன் ஜூலியை நோக்கி ‘தேவர் மகன்’ சிவாஜி மாதிரி ‘ஏதாவது பார்ரி…’ என்று கட்டளையிட ‘என்னடா இது இசைக்கு வந்த சோதனை…இது மேல வந்து பாய்ஞ்சிடுமோ’ என்று பயந்து கொண்டே சமய சந்தர்ப்பமில்லாமல் ‘வேர் ஈஸ் த பார்ட்டியை’ ஈனஸ்வரத்தில் பாடிய ஜூலியைப் பார்க்க சிரிப்பு தாங்க முடியவில்லை. ‘அவ உன் கிட்ட வந்து பேசினா.. சிரிச்சு பேசு.. என்ன.’ காயத்ரி உத்தரவு தந்தவுடன்தான் இந்த மாற்றம் ஜூலியிடம் நிகழ்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். அதற்கு முன் குட்மார்னிங் சொல்லி  ஸ்டோர் ரூமில் தாமாக  வந்து கட்டிப்பிடித்த ஓவியாவிடம் முகம் தராமல் போனார் ஜூலி. தனக்கென்று சுயபுத்தியும் தனித்தன்மையும் இல்லாமல் இன்னொருவரின் நிழலில் இருக்கிற அடிமைத்தனத்தோடு ஒருவரின் ஆளுமை இருந்தால் அது எத்தனை மொண்ணையாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பதற்கான சரியான உதாரணம் ஜூலி. ஒரு துளியாக இருந்தாலும் அது நம்முடைய சுயமான ஆளுமையாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் ஜூலியின் நேரெதிரான பிம்பம் ஓவியா. சரியோ, தவறோ.. அவர் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவரேதான் எடுக்கிறார். எதிரே இருப்பவர் கமல்ஹாசனா, போண்டா மணியா என்றெல்லாம் பார்த்து அதற்கேற்ப எதிர்வினை செய்யும் பழக்கமெல்லாம் அவரிடம் இல்லை. 

காயத்ரி, நமீதா, ரைசா, ஜூலி ஆகியோர் இணைந்து ஓவியாவை முன்பு தூங்க விடாமல் பாட்டுப்பாடி செய்த கலாட்டாவிற்கான பதிலடியை ஓவியா இன்று தந்து விட்டார் என்று தோன்றுகிறது. இதை ஒற்றை ஆளாய் அவர் செய்த சாதனையைக் கவனிக்க வேண்டும். சக்தி உள்ளிட்ட உருவங்கள் இருட்டில் சப்தமேயின்றி ரகசியக் குரலில் பேசிக் கொண்டு கமுக்கமாக அமர்ந்திருந்தன. 

‘என்னை செஞ்சுடுவேன்னு சொல்றாக்கா?’ என்றவுடன் செயற்கையான ஆச்சரியத்துடன் ‘What.. are you serious?” என்ற ரைசாவின் அதீதமான முகபாவம் இருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. சரோஜாதேவிக்கு அடுத்தபடியாக ஹெவி மேக்கப் போட்டு சாதனை படைக்கும் ரைசா, அந்த இருட்டிலும் கையில் கண்ணாடியை வைத்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது போன்ற ரைசாவின் மேட்டிமைத்தனமான உடல்மொழி பல சமயங்களில் நம்மை எரிச்சல்படுத்துகிறது. 

ஹாரர் படம் பார்த்த பயத்தோடு சப்தநாடியும் ஒடுங்க அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாப்பாக படுத்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்கிற பழமொழிற்கு ஏற்ப, அதுவரை அடக்கியிருந்த அத்தனை கோபத்தையும் ஒரே நாளில் வெளிப்படுத்திய ஓவியாவைக் கண்டு அவர்கள் அடங்கி ஒடுங்கியது மகிழ்ச்சியைத் தந்தது. 


**

உள்ளே தூங்க முடியாமல்.. வெளியே நீச்சல் குளத்தில்.. ‘ஐ லவ் யூடா.. என்று பினாத்திக் கொண்டே இருந்த ஓவியாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. 

காதல் என்கிற உணர்வு எத்தனை அதிக இன்பத்தை தருகிறதோ, அதற்கு நிகராக ஏன் சமயங்களில் அதற்கும் மேலாகவும் துன்பத்தையும் தருகிறது. முகத்தில் பொங்கி வழியும் கண்ணீருடன் நீச்சல் குளத்தின் ஓரத்தில் படுத்துக் கொண்டிருந்த ஓவியாவை நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாதா என்கிற ஏக்கம் ஏற்பட்டது. இதற்கு மேலும் இது பிக்பாஸ் உருவாக்கிய திரைக்கதை, ஓவியாவின் நடிப்பு என்றெல்லாம் ஒருவர் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. (இறைவனின் திருவிளையாடல் போல இதற்கான விளையாட்டுக் களத்தை உருவாக்கித் தந்தது பிக் பாஸ் என்பது வேறு).

பார்வையாளர்களின் ஏக்க குரல் காயத்ரிக்கு கேட்டிருக்குமோ என்னமோ, ஓவியாவை அழைத்து அருகில் அமர வைத்து உரையாடியது நெகிழ்வான காட்சி. ‘I Feel bad for her’ என்று அவர் காலையில் சொன்ன போது இந்த நல்லியல்பை காயத்ரி குழு முதலிலேயே கடைப்பிடித்திருந்தால், ஓவியாவிற்கு இத்தனை அவஸ்தை நேர்ந்திருக்காதோ என்று தோன்றிற்று. 

சரியான நேரத்தில் தரப்படாத வைத்தியம், பிறகு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது வீண். 

‘உங்களிடம் எனக்கு ஏதும் பிரச்னையில்லை’ என்று காயத்ரியை நோக்கி ஓவியா சொன்னது சிறப்பு. அவர் தன்னை நோக்கி எத்தனை கடுமையான வார்த்தைகளில் வசைந்திருந்தாலும் அது மேற்பரப்பில் உள்ள கோபம். தன் மனதின் ஆழத்தில் சென்று கடுமையாக பாதிக்கக்கூடிய அளவிற்கானதல்ல’ என்கிற புரிதல் இருந்தால்தான் இப்படி சொல்ல முடியும். 

loading...


‘ஆரவ் சென்று விட்டானே’ என்று தவறாக நினைத்து வருத்தப்பட்டு பிறகு குழந்தைத்தனமான ஆச்சரியத்துடன் ‘என்னது…  அவன் வீட்டுக்குள்ள இருக்கானா?’ என்று  ஓவியா வியந்தது எல்லாம் அவர் கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதையே காண்பிக்கிறது. போட்டியாளர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பே உளவியல் சிகிச்சை தருவது குறித்த முடிவை தாமாக முன்வந்து பிக் பாஸ் எடுத்திருக்க வேண்டும். மாறாக கடப்பாரையை முழுங்கினாலும் இஞ்சி கஷாயம் குடித்து அமைதியாக இருப்பது போல எல்லா கலாட்டாவையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்பது முறையா மிஸ்டர் பிக் பாஸ்?

முந்தைய பாகங்களில் கணேஷ் குறிப்பிட்டதையொட்டி, இந்த விளையாட்டிற்கு வருவதற்கு முன், போட்டியாளர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது’ என்று தெரிகிறது. ஓவியாவிற்கு முன்பே மனச்சிக்கல் இருந்திருந்தால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், போட்டியில் அனுமதித்திருக்கப்பட மாட்டார். பிக் பாஸ் நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு உளச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

**

புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல மறுநாள் காலையில் வேறு மாதிரியான ஓவியாவைப் பார்க்க முடிந்தது. எல்லோரையும் இழுத்து வைத்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். என்றாலும் வேதாளம் எப்போது முருங்கை மரம் ஏறுமோ என்று பதட்டமாகவே இருந்தது. இத்தனை கலாட்டாக்களுக்குப் பிறகு, ஆரவ் தன் நிலையை தெளிவுப் படுத்திய பிறகும் ஆரவ்வை அவர் தொடர்ந்து தொட்டுப் பேசுவதும் ‘ஐ லவ் யூ’ என்பதும் நிச்சயம் அத்துமீறல்தான். இதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆரவ் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டேயாக வேண்டும். 

ஆனால் ஓவியா தன்னுணர்வு அதிகம் இல்லாத குழப்பமான நிலையில் இதையெல்லாம் செய்கிறார் என்கிற அனுதாபத்தின் பின்னணியோடு இதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதே மனக்குழப்பத்தோடு ஒரு ஆண், பெண் போட்டியாளரிடம் நடந்து கொண்டால் இதே அனுதாபத்தோடுதான் பார்ப்பீர்களா என்றொரு கேள்வி எழலாம். நம் சமூக சூழலில் பெண்ணுக்குத் தரப்படும் சில பிரத்யேக சலுகைகள், அனுதாபங்கள் ஆணிற்குத் தரப்படுவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மன அழுத்தம் எனப்படும் தீவிரமான நிலையில் ஓவியா இருக்கிறார் என்பது தெளிவு. ‘இருக்கா இல்லையா” என்று அவர் ஆரவ்விடம் பஞ்சாயத்து வைத்து விட்டு அவர் இல்லை. என்றவுடன் ‘அடப்பாவி’ என்று ஆச்சரியப்பட்டு அல்லது கோபப்பட்டு விட்டு பின்பு சில நிமிடங்களுக்குள் அதே கேள்வியுடன் மறுபடியும் அவர் வருவதைக் கவனிக்கும் போது ‘இல்லை’ என்ற பதிலை அவர் மனம் ஏற்கவே மறுக்கிறது என்றுதான் தெரிகிறது. காலத்திற்கு மட்டும்தான் இந்தக் காயத்தை ஆற்றும் சக்தி உண்டு. அதுவரை அவர் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியவர். இது ஆணாக இருந்தாலும் பொருந்தும். 

முந்தைய பகுதியை படிக்க...


ஓவியாவின் உளச்சிக்கல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை யூகிக்க முயலும் போது அவர் அபாய கட்டத்திற்குள் விழவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் தனக்கு உளவியல் சிகிச்சை தேவை என்பதை அவரே உணர்ந்து அதை பிக் பாஸிடம் கேட்கிறார். இது சார்ந்த தன்னுணர்வு இருக்கும் வரை பெரிய பிரச்னையில்லை. இதையும் கடந்து விட்டால்தான் அவர் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று கொள்ளலாம்.

பொதுவாக நம் சமூகத்தில் மனநலம் சார்ந்த பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் மனநல மருத்துவரின் சேவையை நாடுவது குறித்தும் நிறைய தயக்கமும் மனத்தடையும் நம்மிடம் இருக்கின்றன. ‘நான் என்ன பைத்தியமாக்கா’ என்று ஜுலி நினைப்பதைப் போலவே, ‘பைத்தியம்’ என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பலர் அஞ்சுகிறார்கள். ஏன், அவர்களுக்கே கூட அம்மாதிரியான தயக்கம்தான் இருக்கிறது. உடலில் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகளைப் போலவே மனதிலும் ஏற்படும், அதற்கான சிகிச்சையை நாடுவது மிக இயல்பானது மட்டுமல்ல அவசியமானது என்கிற விழிப்பு உணர்வு பரவ வேண்டியது அவசியம். பொது மருத்துவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் மனநல மருத்துவர்களின் தேவை ஒரு சமூகத்திற்கு இருக்கிறது. ஆனால் இங்கு நிலைமை இப்படியில்லை. 

இந்த நோக்கில் தன் பிரச்னை குறித்து மிக தெளிவாக சிந்தித்து உளவியல் மருத்துவரின் சேவையை ஓவியா தானே நாட முயன்றது சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. 

‘இந்த விளையாட்டிற்கு தான் உகந்த போட்டியாளர் அல்ல, எனவே என்னை உடனே வெளியேற்றுங்கள்’ என்று பிக் –பாஸிடம் அவர் வேண்டிக் கொண்டது நெகிழ்வாக இருந்தது. 
 
**
இத்தனை தீவிரமான பிரச்சினை போய்க் கொண்டிருந்த போதிலும் தன் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும் பிக் பாஸ், கயிறு இழுக்கும் task வைத்தார். ஓவியா இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த விளையாட்டில் கணேஷிற்கு ஏற்பட்ட சிறிய காயத்தைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த ஓவியா, பிறகு அவர் நடிக்கிறார் என்று கூறுவது அவருடைய மனக்குழப்பதையே காட்டுகிறது. ‘இத்தனை முட்டை தின்றும் எப்படிய்யா கீழே விழுந்தான்’ என்று வையாபுரி ஒருவேளை மனதிற்குள் நினைத்திருக்கக்கூடும். 
 

கயிறு இழுக்கும் போட்டியில் தோல்வியுற்ற அணியைச் சேர்ந்தவர்களில் ஒருவரை வெற்றி பெற்ற அணியினர் நாமினேட் செய்யவேண்டும் என்பதால் சக்தி, ஆரவ் போன்றோர்களின் பெயர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகம் அடிபட்டன. முந்தைய வாரம் காயத்ரி பெயரை நாமினேட் செய்த பிந்து மாதவி, சக்தியின் பெயரை முன்மொழிந்தார். ஆரவ் பெயர் அதிகமாக நாமினேட் செய்யப்பட்டதன் மூலம், இந்தச் சிக்கலான சூழலில் இருந்து ‘ஆரவ்’வை வெளியேற்ற வீட்டு உறுப்பினர்கள் நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. 

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ரைசாவிற்கு தரப்பட்ட தண்டனை போல வாயில் பிளாஸ்திரியை ஒட்டிப் பார்த்தார் ஓவியா. மற்றவர்கள் அதை நீக்கச் சொல்லி வற்புறுத்திய போது ‘பேசினால்தானே பிரச்சினை’ என்றார். பிறகு அவரே அதை நீக்கிக் கொண்டார். என்ன செய்து இந்த மனச்சிக்கலில் இருந்து மீள முடியும் என்கிற உபாயம் அவருக்கு பிடிபடவில்லை. ஆனால் மீளவேண்டும் என்கிற தன்னுணர்வு அவருக்கு இருப்பது நிச்சயம் ஆரோக்கியமான விஷயம். 

**
இதற்கிடையில் ஓவியா நீச்சல் குளத்தில் விழுந்து கிடக்கிறார் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற மனச்சிக்கல் கொண்டிருப்பவர்களை மிக கவனமாக கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்கான பாடம் இது. உண்மையாகவே தற்கொலை எண்ணத்துடன் விழுந்தாரா, அல்லது கவன ஈர்ப்பிற்காகவா என்பதையும் பார்க்க வேண்டும். அவருடைய குழப்பம் அத்தகையது. தற்கொலையின் நுனிவரை சென்று பயந்து போய் திரும்பி வந்தவர்கள் நிறைய உண்டு. 

தன் தற்கொலை முயற்சி குறித்து  ஓவியா தானே கிண்டலடித்துக் கொண்டது சுவாரஸ்யமான காட்சி. சுயபகடி என்பது முக்கியமான விஷயம். தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் தன்னையே முன்வைத்து கிண்டலடித்துக் கொள்ள முடியும். இந்த காதல் விஷயத்தை தவிர இதர விஷயங்களில் அவர் அபாரமான மனஉறுதியுடன் என்றுதான் தோன்றுகிறது. 

‘பாசத்திற்கு முன்னாடி எலி, பகைக்கு முன்னாடி புலிடா..’ என்பது போல் ஓவியா உதிர்க்கிற பொன்மொழிகளையெல்லாம் எவராவது தொகுத்து வைக்கலாம். மிகச்சிறந்த வரலாற்று ஆவணங்கள் இவை. 

சனியன்று கமலை எதிர்கொள்ள சங்கடப்பட்டு அதற்குள் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றுதான் ஓவியா இத்தனை விஷயங்களை செய்கிறார் என்பது வையாபுரியின் கணிப்பு. ஆனால் இந்த வாரம் நிகழ்ந்த கலாட்டாக்களையெல்லாம் பார்த்திருந்த கமல், ‘எந்த ஓவியாவிடம் பேசுவது’ என்று தயங்கி இந்த வார பஞ்சாயத்தையே ஒத்தி வைத்திருந்தாலும் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஓவியாவிற்கு இருக்கிற மக்களின் ஆதரவை ஒருபக்கம் மனதில் வைத்துக் கொண்டே இதை இன்று கமல் சரியாக கையாள்வார் என்றே தோன்றுகிறது. தன் வாழ்நாளில் இது போன்ற மனிதர்களின் இயல்புகளை கமல் நிச்சயம் கடந்து வந்து இருப்பார். கமலுக்கு இதுவொரு சிறந்தாக டாஸ்காக இருக்கும் என்றே நம்பலாம். 

**
‘ஆக்சுவலி ஒரு நர்ஸா நான் ஓவியா பக்கத்தில இருந்திருக்கணும்’ என்று ஜுலி தன் தொழில்நிலையை இப்போதாவது உணர்ந்தது சிறப்பு. இதை அவர் முன்பே செய்திருக்கலாம். ஒரு செவிலியராக இருந்து கொண்டு ‘நான் பைத்தியமா’ என்று அவர் பேசியது அதுவொரு தாழ்வான நிலை என்றெல்லாம் பொதுப்புத்தியுடன் நினைத்துக் கொண்டது போன்றவை தன் தொழில் சார்ந்த அறிவில் பின்தங்கியிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

காயத்ரியைக் கூட மன்னிக்க முன்வந்த ஓவியா, சக்தி குறித்த நெருடலை வைத்துக் கொண்டிருப்பது, சக்தியின் ஆணாதிக்க உணர்வின் மீதான வெறுப்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘இந்தப் பொண்ணு கிட்ட பேசினா என்ன சொல்லி அவமானப்படுத்துமோ’ என்று நினைத்தாரோ என்னமோ, சக்தியும் ஓவியாவிடம் அதிகம் பேசாமல் நிலைமையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார். 

மீட்புக்குழு வரும் வரைக்கும் கூட ஓவியாவால் அங்கு தாங்க முடியவில்லை. அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார். காதலுணர்விற்கே உண்டான தவிப்பு இது.  நிலைமை இயல்பாக இருக்கும் போது காதலின் அருகேயே எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அந்த உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டால் அவர் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று தோன்றி உடனே விலகச் சொல்லும். 

 ’45 நாள் இருந்துட்டே.. ஒரு 45 நிமிஷம் இருக்க முடியாதா’ என்ற மாதிரியெல்லாம் பேசி காயத்ரி அவரை அற்புதமாக கையாண்டார். காயத்ரியின் இன்னொரு பக்கம் இது. 

‘ஏதாவது டெரரா.. ஒரு கதை சொல்லுங்க’ என்று சிநேகனிடம் வேண்டிக் கொண்டார் ஓவியா.. ‘நீ என்னைக் கொல்ற மாதிரி ஒரு கதை சொல்லவா’ என்று நகைச்சுவையாக சொல்லி நிலைமையை சுமூகமாக்க முயன்றார் சிநேகன். சிநேகனின் மீது சில குறைகள் இருந்தாலும் எவராவது சிக்கலான சூழலில் இருந்தால் தன்னுடைய அதுவரையான கோபம், மனக்குறை போன்ற அனைத்தையும் விட்டு விட்டு பாதிக்கப்பட்டவரின் பக்கத்தில் இருந்து ஆறுதலான மொழிகளைச் சொல்வது உயர்ந்த குணம். வையாபுரியும் தன் நகைச்சுவை உணர்வின் மூலம் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க முயன்றார். நகைச்சுவையைப் போல சிறந்த மருந்து உலகத்திலேயே கிடையாது. ‘கொட்ற மழைல படுத்துப் பார்த்திருக்கீங்களா.. நல்லா இருக்கும்..’என்று மழைத்துளிகளை வாயில் பிடிப்பது போல் செய்து ஓவியா செய்து காட்டியது ஒரு கவிதையான தருணம். மழையைக் கண்டால் உடனே பதறி ஒதுங்குகிறவர்களுக்கு மத்தியில் இயற்கையைக் கொண்டாட நினைப்பவர்கள் மிக அபூர்வமானவர்கள். கலையுணர்வும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். 

**
இந்தப் போட்டியிலிருந்து ஓவியா விலகுவது பார்வையாளர்களுக்கு பெரிய இழப்பும் வருத்தமும் என்றாலும் அவருடைய நோக்கில் அவர்  உடனடியாக விலகுவதே நல்லது. அவருக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ கண்காணிப்பும் நெருங்கிய உறவுகளின் அரவணைப்பும். 

வழக்கமாக ‘நாளை’ என்று போடப்பட்டு வழக்கமாக காட்டப்படும் காட்சிகளை இன்று காணவில்லை. ஓவியாவின் ரகளையைக் கண்டு பிக் –பாஸ் எடிட்டிங் குழுவே குழப்பத்தில் மூழ்கி இதை தவற விட்டதா அல்லது இதைக் காட்டாமல்  பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வணிக உத்தியா என்று தெரியவில்லை. 

ஓவியா வெளியேறினாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாமலேயே ஓவியாவின் ரசிகர்கள் இப்போதே சோகமாகி விட்டார்கள். சமூக வலைத்தளங்களில் இது குறித்த துயரமும் வருத்தமும் பொங்கி வழிகிறது. ‘இனி இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டோம்’ என்கிற பிரசவ வைராக்கியங்கள் ஆறாக ஓடுகின்றன. சரியான நிலைமையை அறிந்து கொள்ளாமல் இப்படி அவசரப்படுவது தவறு

இத்தனை குறுகிய நாட்களில் ஒவ்வொரு தமிழக மனதையும் நெருங்கிய உறவு போல் எண்ண வைத்தது ஓவியாவின் பிரத்யேகமான ஆளுமையின் மீதான சாதனை. அவருடைய கலைப்பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறந்து விளங்கட்டும் என்று அவரை வாழ்த்துவோம்.

அடுத்த கட்டுரைக்கு