Published:Updated:

ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate
ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

அறியாதவர்களுக்காக மட்டும் இந்த தகவலைச் சொல்கிறேன். மற்றவர்கள் பொருத்தருள்க. 

1950-ல் ரஷோமான் என்கிற ஜப்பானிய சினிமா வெளியானது. திரையுலக மேதைகளில் ஒருவரான அகிரா குரசேவா இயக்கியது. பின்னாளில் உருவான பல உலக சினிமாக்களுக்கு இந்த திரைப்படம் முன்னுதாரணமாக. ‘Rashomon Effect’ என்றே இதன் தனித்தன்மையான பாணி வகைப்படுத்தப்பட்டது. 

ஒரு கொலை நிகழும். அந்தச் சம்பவத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அவரவர்களின் கோணங்களில் வாக்குமூலம் தருவார்கள். உண்மை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது, அதை அறிய முயல்வது மிக கடினம், அதுவொரு காட்சிப்பிழை என்பதை மையப்பொருளாக இந்த திரைப்படம் கொண்டிருந்தது. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அந்த நாள்’ என்று உருவான தமிழ் திரைப்படமும் இதன் பாதிப்பில்/பாணியில் உருவானதே. 

இந்த திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வதற்கு தகுந்த காரணம் உண்டு. 

பிக் –பாஸ் வீட்டின் உறுப்பினர்களிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது. ஓர் அனுபவமுள்ள, திறமையான வழக்கறிஞருக்கு உரித்தான மேதமையுடன் தனது கேள்விகளை நுட்பமாக முன் வைத்தார் கமல். வாழைப்பழத்தினுள் ஒரு ஊசி அல்ல, பல ஊசிகள் இருந்தன. ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ என்று ஜூலியிடம் சொன்னது ஒரு சிறந்த உதாரணம். இதில் எத்தனை ஊசிகளை எதிர்தரப்பினர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதிலிருந்த நையாண்டியான குத்தலை சிலரால், சில தருணங்களில் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதுதான் சோகம். ‘ஆமாம் சார்.. ‘ என்று வெள்ளந்தியாக ஆமோதித்தார் ஜூலி. 

கமல் கிண்டித் தருவது நையாண்டி அல்வா என்பதே தெரியாமல் பிக் –பாஸ் போட்டியாளர்கள் அதை சுவாரசியமாகத் தின்று கொண்டிருந்தார்கள்.

கமல் வழக்கறிஞராக ஆகியிருந்தால் இன்னமும் சிறந்த நடிகராகியிருப்பார் என்று தோன்றுமளவிற்கு அவரது தோரணையும் முகபாவங்களும் பல்வேறு விதங்களில் ஜொலித்தன. அவற்றை எழுத்தில் கொண்டு வருவது  கடினம். மிக மிக நிதானமாக முன்வைக்கப்பட்ட கேள்விகளின் மூலம் தன் வியூகத்தை அமைத்தார். பின்பு இரை தூண்டிலில் நன்றாக மாட்டியவுடன் ஒரே ‘பச்சக்’தான்.. ஆனால் இந்த விசாரணையில் குறைகளும் இல்லாமல் இல்லை.
விதம் விதமான கேள்விகள். விதம் விதமான பதில்கள். விதம் விதமான பரிமாணங்கள். உண்மை துலங்கியதா?

கமலின் இந்த குறுக்கு விசாரணையைப் பற்றி பிறகு பார்ப்போம். அதற்கு முன் 42-ம் நாளின் நிகழ்வுகள். 

**

ஓவியாவின் பிரிவிற்கு இன்றும் பிக் –பாஸ் வீடு சோகத்தில் மூழ்கியிருக்கும் என நினைத்தால் நிலைமை நேர்மாறாக இருந்தது. வையாபுரியின் நகைச்சுவையின் காரணமாக சிரிப்பு மத்தாப்புகள் வெடித்தன. நல்லது, ஓவியா இருந்திருந்தாலும் இதைத்தான் வற்புறுத்தியிருப்பார். ‘வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்’

‘கமல் முன்னால் இதர வீட்டு உறுப்பினர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள்’ என்பதை அபாரமாக நடித்துக் காட்டினார் வையாபுரி. ரைசா அதிர்ச்சியடைவது போல் அவர் காட்டியது அருமை. ஜூலி வலியில் கத்திக் கொண்டு கீழே விழும் சமயத்தில் உடம்பு முழுதும் உதறலோடு முன்னர் ரைசா தந்த திகைப்புக் காட்சி நினைவிற்கு வந்தது. 

ஜூலி போல நடித்துக் காட்டியது ரகளை. அதற்கு ஜூலியும் வஞ்சனையேில்லாமல் சிரித்தது நல்ல விஷயம். சுயபகடி ஆரோக்கியமான ஒன்று. 

வையாபுரியின் இந்த நகைச்சுவைத் திறமையை தமிழ் சினிமா இன்னமும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
 
**

பிறகு துவங்கியது குறுக்கு விசாரணை.1975ம் ஆண்டு வெளியான அந்தரங்கம் படத்தில்  ‘ஞாயிறு ஒளிமழையில்' என்பது கமல் பாடிய பாடல் ஒன்றின் துவக்க வரி. அதன் துணையோடு நிகழ்ச்சியை துவக்கினார். 

கமலின் கேள்விகளில்  குறிப்பாக சில விஷயங்களை உறுதிப்படுத்தும் நோக்கமும் அது சார்ந்த உண்மைத்தகவல்களை போட்டியாளர்களின் வாயிலிருந்து எப்படியாவது பிடுங்கும் சமயோசிதமும் இருந்தது. 

ஒன்று, பரணியைப் போலவே ஓவியாவும் தனிமைப்படுத்தப் பட்டாரா, அதன் காரணங்கள் என்ன, அதை உருவாக்கிய பின்னணியில் இருந்த நபர்கள் யார்? 

இரண்டு, ஓவியா – ஆரவ் இடையே இருந்தது காதலா அல்லது நட்பு மட்டும்தானா? இதில் ஆரவ்வின் பங்கு என்ன? 

முதலில் வந்த சிநேகனின் நெகிழ்ச்சியான உரையாடலைக் கேட்டு கமலே நெகிழ்ந்து விட்டார். ‘ஆம். ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன். அது சார்ந்த குற்றவுணர்வு எனக்கு உள்ளது. அவருக்குள்ள பிரச்னை தெரிந்திருந்தால் இன்னமும் ஆதரவாக நின்றிருப்பேன்’ என்றவர், ‘ஓவியாவின் நெருக்கமான நண்பராக இருந்த ஆரவ் சரியாக செயல்பட்டிருக்கலாம். அந்தப் பிரச்னைதான் ஓவியாவை அதிகம் பாதித்தது’ என்று சொல்லவும் தவறவில்லை. ஆனால் சந்தடி சாக்கில், பாரதி, கண்ணதாசன் என்ற கவிஞர்களின் வரிசையில் கமலையும் வைத்தது ஓவர் ஐஸ். 

“என்ன வையாபுரி, வழக்கத்திற்கு மாறாக உங்க குரல் அழுத்தமாக கேட்டதே’ என்ற கமலின் நையாண்டி, வையாபுரிக்கு புரியவில்லை. இவர் பெரும்பாலும் ஆரவ்வை குற்றம் சாட்டினார். அந்தக் காதல் நிஜமா என்றதற்கு ‘இருக்கு.. ஆனால் இல்லை’ என்பது போல் பதில் வந்தது. 

அந்த ஒரு நாளில் பொறுப்பான தந்தை போல் சத்தமாக பேசி, ஓவியாவின் பக்கம் நின்றதால் வையாபுரி தப்பித்தார். இல்லையெனில் கமலின் கிடுக்குப்பிடி கேள்விகளில் மாட்டியிருக்கக்கூடும். 

அடுத்து வந்து மாட்டியவர் ஜூலி. ‘என்ன யோசிக்கறீங்க?’ என்றதும் “வீட்டுக்குப் போறதை பத்தி யோசிக்கறேன் சார்”

“அப்ப ஓவியா பத்தி யோசிக்கலையா?” என்று வில்லங்கமாக மாட்டி விட்டார் கமல். “முதலில் உங்களை அனைவரும் ஒதுக்கி வைத்த சமயத்தில் ஆதரவாக இருந்தவர் ஓவியா மட்டுமே. அவருக்கு நீங்கள் துரோகம் செய்ததாக உணரவில்லையா?” என்று தூண்டிலை இறுக்கியவுடன் “ஆமாம்’ என்று ஒப்புக் கொண்டார். 

ஓவியாவை அதிகம் பாதித்த விஷயங்களில் ஒன்று ஜூலியின் இந்தப் பொய்யும் துரோகமும். மேலும் அதற்காக ஜூலி உண்மையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்காததும் 

**

ஓவியா பிரச்னையின் மையமாக கருதப்படும் ஆரவ்விடம் தொடர்ந்தது விசாரணை. 

ஆனால் இது சற்று ஆழமான அந்தரங்கமாக, அளவை மீறிப் போனது ரசனைக்குரியதாக இல்லை. இது சார்ந்த நுண்ணுணர்வு கமலுக்கு நிச்சயம் உண்டு. ஆனால் மக்களின் உணர்வுகள் தந்த அழுத்தத்தாலும் ஓவியாவின் காதல் ஒருதலைப்பட்சமானதல்ல என்பதை நிரூபிக்க விரும்பியதாலும் இந்த ‘எல்லை தாண்டிய பயங்கரவாத’ செயலை நிகழ்த்தினார் என புரிந்து கொள்வோம். ஆனால் ஆரவ்விற்காகவும் ஒருபக்கம் அனுதாபப்பட வேண்டியிருக்கிறது. 

“எதையோ திருப்பிக் கொடுத்துடு’-ன்னு ஓவியா சொல்லிக்கிட்டே இருந்தாங்களே’, அது என்ன பண்டம்?’ என்று மெதுவான பந்தை முதலில் வீசினார் கமல். பிறகு யார்க்கர், கூக்ளி என்று பலவிதமான பாணிகளில் பந்துகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன.  முகம் வெளிறிப் போனார் ஆரவ்.

“ஓவியா உளைச்சலாக இருந்ததற்காக அவரை ஆற்றுப்படுத்த முத்தம் தந்தேன்’ என்றார் ஆரவ் ‘ஓ.. மருத்துவ முத்தமா? என்று இதற்குப் புதுப் பெயர் சூட்டினார் கமல். மறுபடியும் அதேதான் ‘நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர்’ தோரணை கமலிடம் வெளிப்பட்டது. ‘பல்வேறு விதமான முத்த அனுபவம்’ உண்டு என்றதும் கூட்டம் ஆரவரித்தது. 

இந்த மருத்துவ முத்தத்தை சபையிடம் சென்று வாக்குமூலமாக சொல்லச் சொன்னது அதீதம். ஒருவேளை ஆரவ் தரப்பில் மேலதிக தவறுகள் இருக்கின்றன என்பதற்கான காணொளி சாட்சியங்கள் பிக் பாஸிடம் இருக்கலாம். பொதுவாக இது போன்ற சங்கடங்களை கண்ணியமாக கையாளும் கமல் ஆரவ்வையும் அது போன்றே கையாண்டிருக்கலாம் என்று தோன்றியது. 30 காமிராக்கள் இருந்தாலும் ‘சில அந்தரங்க தருணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமேயானதுதானே’!

**

அடுத்து கெத்தாக வந்து அமர்ந்து பயங்கரமாக மூக்கு உடைபட்டவர் சக்தி. இவரிடம் அபாரமான நகைச்சுவையுணர்வும் விஷயங்களை கூர்மையாக கவனித்து அதைப் பற்றி சரியான அபிப்ராயங்களைச் சொல்லும் தன்மையும் இருப்பதை கவனிக்கிறேன். ஆனால் பெரிய பிரச்னையாக இருப்பது அவருடைய அகங்காரம்தான். செல்வாக்குள்ள பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு பொதுவாக இருக்கும் குணாதிசயம் இது. அதற்கு இவரை மட்டும் குறை சொல்லி உபயோகமில்லை. ஓவியாவை அறைய கை ஓங்கியதற்கு இவர் கடைசி வரை மனமார மன்னிப்பு கேட்கவேயில்லை என்றுதான் தோன்றியது. இந்த விஷயத்தில் இவரும் ஒரு ‘ஜூலி’யே.

‘மன்னிப்பு கேட்டீங்களா” என்று கமல் கேட்டதற்கு ‘அவங்க கேட்டாங்க சார். நானும் கை கொடுத்தேன்’ என்று அபத்தமாக வழிந்தார் சக்தி. ‘ஓ.. கை கொடுத்தா சாரி-ன்னு அர்த்தமா?’ என்று கமல் செருகிய நையாண்டி ஊசி, சக்திக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ‘ஒரு Sorry-ஐ தூக்கிப் போட்டிருக்கலாமே?” என்று சக்தியின் அலட்சியப் போக்கை கமல் சூசகமாக சுட்டிக் காட்டியதும் அவருக்குப் புரிந்ததா என தெரியவில்லை. 

‘Task-க்கிற்கு போய் ஏன் அழுதீர்கள்’ என்ற கேள்விக்கு ‘தலைவராகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க முடியவில்லை’ என்று சக்தி சொன்னதும், ‘அப்ப நீங்கதான் அரசியலுக்கு வரணும்’ என்று சட்டென்று கமல் சொன்னது அபாரமான satire. 

‘சமயத்துல நீ .. ன்னு சொல்றாங்க’ என்று சக்தி சுட்டிக்காட்டியது அபத்தமான புகார். இந்த மொழிப்பிரச்னை சார்ந்த தடைகள், தவறான புரிதல்கள்  பிக் – பாஸ் வீட்டில் நிறைய இருக்கிறது. இந்தியாவின் கலாசார எல்லைகள் சார்ந்த நடைமுறைப் பிரச்னைகளை இவை பிரதிபலிக்கின்றன. அதை சகிப்புத்தன்மையுடன் தாண்டி வருவதுதான் ஒரு குடிமகனுக்கு முன்உள்ள பொறுப்புள்ள சவால். 

தமிழில்  உள்ள  ‘நீ.. நீங்க..’ போன்ற ஒருமை, பன்மைகளை கையாள்வது ஒரு மலையாளிக்கு நடைமுறைச் சிரமம் என்பதை சட்டென்று மலையாளத்தில் பேசி கமல் உணர்த்தியது அற்புதம் (அவர் நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் சுவாரசியமான காட்சி நினைவிற்கு வருகிறது)

‘இந்த விளையாட்டை சந்தோஷமாக விளையாடுங்கள். இது சார்ந்த பிரச்னையினுள் உணர்ச்சிப்பூர்வமாக ஆழமாக விழுந்து விடாதீர்கள்’ என்று கமல் சொன்னது முக்கியமான அறிவுரை. விகடனின் இந்தத் தொடரிலும் கவனித்திருப்பீர்கள், ‘அடிப்படையில் இது ஒரு விளையாட்டு, பீம்சிங் படமோ, வாழ்க்கையோ அல்ல’ என்பதையே நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். 

**

மிகவும் எதிர்பார்க்கப்பட்டதில் காயத்ரியின் மீதான விசாரணை முக்கியமானது. சபை நாகரிகங்களுக்கு மீறிய சில தகாத சொற்களை காயத்ரி பல முறை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதை கமல் உணர்த்த விரும்பினார். ஆனால் காயத்ரியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது புரியாதது போல் நடித்தாரா?

தன் தலைமுடியை தொட்டுக் காட்டி கமல் அதை உணர்த்தியது அபாரமான தோரணை. அப்போதும் கூட காயத்ரியின் அகங்கார உணர்வு தணியவில்லை. தன் தவறை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வரவில்லை. ‘ஹேர் –ன்னுதானே சார் சொன்னேன்’ என்று நியாயப்படுத்த முயன்றது குழந்தைமையா, குரூரமா என்று தெரியவில்லை. 

ஓவியா பிரச்னைக்குள் ஆழமாக விழுந்த பிறகு தாமே முன்வந்து அனுசரணையாக இருந்த காயத்ரியின் நல்லியல்பையும் கமல் பாராட்டத் தவறவில்லை. 

பிக் –பாஸ் விளையாட்டு உலகின் பல நாடுகளில் ஒளிபரப்பானாலும், இந்தியில் பல பாகங்களைக் கடந்திருந்தாலும் தமிழிற்கு என்று ஒரு கலாசார பின்னணி இருக்கிறது. அது சார்ந்த மீறல் இந்த நிகழ்ச்சியில் இருப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கமல் சொன்னது பாராட்டு. 

இந்தியா என்கிற தேசத்தின் முக்கியமான அரசியல் பாகுபாடுகளில் ஒன்றான ‘வட இந்திய –தென்னிந்திய’ வித்தியாசத்தை அரசியல் நெடியுடன் கமல் சுட்டிக்காட்டியது உண்மை. ‘எதிர் அரசியல்’ என்று இது கருதப்பட்டு வழக்கு போடப்பட்டாலும் சந்திப்பேன் என்றார். ‘அடுத்த முறை எடிட் எல்லாம் செய்ய மாட்டோம். அப்படியே போட்டுடுவோம். ஓவியாவிடம் காட்டிய கனிவைத் தொடருங்கள்’ என்று கமல் உபதேசித்த ‘காயத்ரி மந்திரம்’ பொருள் பொதிந்தது. காயத்ரி இனியாவது மாறுவாரா? நிகழ்ச்சியில் மட்டும் அல்ல. 

**

அடுத்ததாக போட்டியாளர்களில் எவர் வெளியேறக்கூடும் என்கிற யூகம் பகிரப்பட்டது. ’48 வருடங்களில் கற்றுக்கொள்ள முடியாத அனுபவத்தை இந்த 41 நாட்கள் கற்றுக் கொடுத்தன’ என்று ஆத்மார்த்தமாக சொன்னார் வையாபுரி. 

எதிர்பார்த்தபடியே ஜூலியின் வெளியேற்ற அறிவிப்பு சபையில் அறிவிக்கப்பட்டது. பிக் –பாஸ் வீட்டில் அதிக சலனமில்லை. முன்பே எதிர்பார்த்தார்கள் போல. ‘யார் எவிக்ஷன்’ என்று கமல் கேட்ட போது முன்பு குதித்துக் கொண்டே ‘நான்.. நான்.. என்று உற்சாகமாக கூவிய ஜூலியால் உண்மையாகவே புலி வந்து முன்னால் நின்ற போது அந்த உண்மையை  இயல்பாக ஏற்க முடியவில்லை. 

ஏமாற்றமும் விரக்தியும் அவரது முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஜூலி மட்டுமல்ல, வெளியேறிய இதர உறுப்பினர்கள் கூட உள்ளே இருக்கும் போது ‘வெளியே செல்ல வேண்டும்’ என்று சலித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ‘வெளியேற்றம்’ அறிவிக்கப்பட்ட போது மனம் உடைந்து  கலங்கிக் கொண்டே வெளியேறுகிறார்கள். மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லையே என்கிற கலக்கமா, அல்லது இதுவரை பழகிய நண்பர்களைப் பிரிவது உண்மையாகி விட்டது என்கிற நடுக்கமா என தெரியவில்லை. இந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டியவர் ஓவியா மட்டுமே. 

‘இந்த வீட்டின் உறுப்பினர்களை மரணம் வரைக்கும் மறக்க மாட்டேன். – கடைக்குட்டி ஜீலி’ (ஜூலி 'ஜூலி' என்பதை 'ஜீலி' என்று தான் எழுதி இருந்தார்) என்கிற பிரியாவிடைச் செய்தியை எழுதினார். “ஓவியா அளவிற்கு ஏன் அண்ணே.. என்னைப் பார்த்துக்கலே..?’ என்று உரிமையுடன் சிநேகனிடம் சண்டை போட்டார். பாவமாக இருந்தது. 

**

பிறகு நடந்தது கமலுடன் ஓர் உரையாடல். ‘கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இந்த அனுபவம் இருந்தது’ என்ற ஜூலி, தனக்குப் பிடித்தமானவர்களின் அன்பு பட்டியலில் முதன்மையாக காயத்ரியை வைத்தார். பின்பு சிநேகன் என மாற்றினார். அவரது பட்டியலில் சில நாட்கள் மட்டுமே இருந்த ஸ்ரீ கூட இருந்தார். ஆனால் ஓவியா இல்லை. ஆரத்தியும் இல்லை. இதுவொரு நெருடலே. என்றாலும் இந்த விஷயத்திலாவது அவருடைய போலித்தனம் இல்லாதது ஓர் ஆறுதல். 

காயத்ரியை தனது குருவாக அவர் சொன்னதை புரிந்து கொள்வதற்கும் ஜீரணிப்பதற்கும் நாமும் ‘ஜூலியாக மாறினால்தான் முடியும் போல. ‘காயத்ரி ஓர் அப்பாவி’ என்றதும் இதே ரகம்தான். நாமறியாத காயத்ரி ஒருவேளை பெரிதும் காட்டப்படவில்லையோ, என்னவோ. 


இந்த சரியான சமயத்தில் ஜூலிக்கு ஒரு முக்கியமான குறும்படம் காட்டப்பட்டது. அப்போது அவரது முகபாவங்களைக் கவனிப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. துரோகத்திற்கே துரோகம் செய்யப்பட்டவை ஒளிபரப்பான தருணங்கள் என்று அவற்றை வர்ணிக்கலாம். தன் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அப்படியே விழுங்கிக் கொண்டு ‘விடுங்க சார்.. எங்க ஃபேமிலிதானே சொன்னாங்க’ என்று பெருந்தன்மையாக கடக்க முயன்ற போலித்தனத்தை கமல் மிக அபாரமாக அம்பலப்படுத்தினார். ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ ஆனால் இந்த நையாண்டிக் குறிப்பை ஜூலியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பாராட்டாக நினைத்து சிரித்து வைத்தார். அவர் அறியாமை குறித்து பரிதாபமே எழுகிறது. 

ஜூலி ஓவியாவிற்கு செய்தது ‘துரோகம்’ என்பதையும் ‘காயத்ரி’யின் கட்டுப்பாட்டில் அவர் இருந்ததையும், பரணி அண்ணனுக்கு இழைத்த அநீதியையும் அவருடைய வார்த்தைகளின் வழியாகவே கமல் திறமையாக வரவழைத்தார். இந்த வாக்குமூலங்களையும் மன்னிப்புகளையும் மனதார உணர்ந்து ஜூலி அளித்தாரா, இல்லையா என்பது அவருடைய அகத்திற்கே வெளிச்சம். 

இந்தச் சமயத்தில் ஜூலியைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் நாம் பரிசீலித்துதான ஆக வேண்டும். ஜூலியின் பிசிறுகள் பாதுகாப்புமின்மை உணர்ச்சியின் காரணமாக உருவான நடுத்தரவர்க்க மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. 

செல்வாக்கு, புகழ் அது சார்ந்த உயர்வு மனப்பான்மை போன்ற பின்னணிகளைக் கொண்ட பலமான போட்டியாளர்களின் இடையில் தனக்கு கிடைத்த தற்காலிக புகழின் வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு சாமானியராக இந்த விளையாட்டிற்குள் நுழைந்தார் ஜூலி. எவருமே தனக்கு ஆதரவு தரவில்லை என்று முதலில் ஆதங்கப்பட்ட அவர், அது தந்த பாதுகாப்பின்மையுணர்வு தந்த பயத்தில் எவரையாவது பற்றிக் கொண்டு நாட்களைக் கடத்த வேண்டிய சூழலினுள் தள்ளப்பட்டார். 

அந்த வீட்டினுள் அதிகாரத்தலைமையாக தன்னிச்சையாக உருவான காயத்ரியை ஜூலி பற்றிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. இவர்களின் மூலம் பிக் –பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் தனக்கு கிடைக்கவிருக்கும் திரையுலக ஆதாயங்களைப் பற்றிய கற்பனைகள் ஜூலிக்குள் இருந்திருக்கலாம். 

உடல் பலமுள்ளவர்கள் இருக்கும் சிறைக்குள் தள்ளப்படும் பலவீனமான ஒருவன் தன்  சுய பாதுகாப்பிற்காக அதிக பலமுள்ள ஒருவனிடம் அடிமையாக மாறுவதைப் போன்ற உளவியல் இது. 

என்னவொன்று, பிக் –பாஸ் இருப்பு என்பது தற்காலிகமானது, தன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது, அதில் நிகழும் சிறுபிசிறு கூட பூதாகரமாக ஆக்கப்படலாம் என்கிற யூகத்தைச் செய்ய ஜூலி தவற விட்டு விட்டார். மனச்சாட்சியின் குரல் பலமாக ஒலிக்கும் போது அதைக் கேட்காமலிருப்பது போன்று கள்ள மெளனம் சாதித்தால் அதற்கான விளைவுகளை பின்னாளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் கணித்திருக்கலாம். 

சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக கிண்டலடிக்கப்பட்டவர், கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. பாவம், செல்வாக்குள்ள பின்னணியிலிருந்து வராததால், அவர் தொடர்பான காட்சிப் பிசிறுகள் அப்படியே வெளிவந்தனவோ என்னவோ. .

‘என் தங்கையை வெளியே அனுப்புகிறேன். அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிற சமயோசிதமான குறிப்புடன் கமல் சொன்னது கண்ணியத்தின் அடையாளம். பார்வையாளர்களின் மன்னிப்பை ஜூலி கண்ணீருடன் தரையில் விழுந்து ஏற்றுக் கொண்டது மாற்றத்தின் அடையாளம். (பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது மாதிரியான ஒரு காட்சி, சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் ஜூலி மீதான மதிப்பு உயர்கிறது)

**

பிக் பாஸ் விளையாட்டின் ரசிகர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இந்த நிகழ்ச்சியை ரசிப்பது நல்லதென்று தோன்றுகிறது. 

காமிராக்கள் காட்சிகளை 24 மணிநேரமும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும் நமக்கு காட்டப்படுவது ஒருமணி நேரச் சுருக்கம்தான். அதை வைத்துக் கொண்டு சில உண்மைகளை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லை. மட்டுமல்லாமல் அந்த ஒரு மணி நேரத் தொகுப்பிலும் சிலருக்கான சாதகங்கள் மற்றும் சிலருக்கான பாதகங்கள் சார்ந்த சார்பு அரசியல் இருக்கக்கூடும். காமிராக்கள் பொய் சொல்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் அது எப்படி பேச வேண்டும் என்பதை மனித தவறுகளால் நிகழ்த்த முடியும். 

மற்றவர்களின் சறுக்கல்கள் அம்பலப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் குதிக்காமல், நம் வீடுகளிலும் காமிரா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிப்பதின் பெயர் – சுயபரிசீலனை. அதையும் செய்வோம். அதுவே இந்த நிகழ்ச்சியை நேரம் செலவு செய்து பார்த்ததற்கான நிகர மதிப்பாக இருக்க முடியும். 

பிக் –பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எவரும் நூறு சதவீத வில்லன்களோ, நாயகர்களோ அல்ல. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். நமக்கான பலங்களும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு. அது சார்ந்த பிரக்ஞையோடு அவர்களை அணுகுவோம். 

கமல் இந்த குறுக்கு விசாரணையை திறமையாகவே நிகழ்த்தினாலும் இதற்குப் பின்னால் மக்களின் உணர்வுகள், அது சார்ந்த வெளிப்பாடுகள், கருத்துகள் போன்றவற்றின் அழுத்தங்கள் கமலுக்கும், பிக் –பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கும் இருந்ததோ என்று தோன்றியது. மக்களின் பிரம்மாண்டமான ஆதரவை ஓவியா பெற்றிருப்பதால், அது சார்ந்த எந்தவொரு எதிர்மறையான அசைவையும் செய்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது. பாதிக்கப்பட்ட எளிய சமூகத்தின் சார்பாக திரையில் ஹீரோ வீராவேசமாக வசனம் பேசும் அதே மிகையான தன்மை இந்த நிகழ்ச்சியிலும் பிரதிபலித்தது. 

“அவங்க என்ன தப்பு செஞ்சாங்கன்னு நமக்கு எப்படி தெரியும். தீர்ப்பு சொல்ல நாம யாரு?” என்று பரணியின் வெளியேற்றத்தைப் பற்றி ரைசா முன்னர் ஆத்மார்த்தமாக வாக்குமூலம் தந்து பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிற்கு வருகிறது. 

தீர்ப்பு சொல்ல நாம் யார்? அதற்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு