Published:Updated:

" 'வீட்டுல நான் இருக்கணுமா... நாய்கள் இருக்கணுமா'னு அப்பா அதட்டுவாரு!’’ - 'தெய்வமகள்' ஷப்னம்

" 'வீட்டுல நான் இருக்கணுமா... நாய்கள் இருக்கணுமா'னு அப்பா அதட்டுவாரு!’’ - 'தெய்வமகள்' ஷப்னம்
" 'வீட்டுல நான் இருக்கணுமா... நாய்கள் இருக்கணுமா'னு அப்பா அதட்டுவாரு!’’ - 'தெய்வமகள்' ஷப்னம்

" 'தெய்வமகள்' சீரியலுக்கு முன்னாடி பல சீரியல்கள்ல நடிச்சிருந்தாலும், இந்த சீரியல்தான் எனக்கு பெரிய அடையாளம் கொடுத்திருக்குது. அதுவும் என்னோட இன்னோசென்டான குணத்தைப் பிரதிபலிக்கிற மாதிரியே சீரியல் கதாபாத்திரமும் இருக்கிறதால, மக்கள் மனசுல ஈஸியா இடம் பிடிச்சுட்டேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ஷப்னம். சன் டிவி 'தெய்வமகள்' சீரியலில் தாரணி கதாபாத்திரத்தில் நடித்துவருபவர்.

"மீடியா பயணம் தொடங்கியது எப்படி?"

"பிளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்போ, ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் கன்டஸ்டென்டா கலந்துகிட்டேன். அடுத்தடுத்து சில வெளி நிகழ்ச்சிகள்ல ஆங்கரிங் பண்ற வாய்ப்பு வந்துச்சு. தொடர்ந்து சன் டிவி 'வசந்தம்' சீரியல் மூலமா ஆக்டிங் பயணம் தொடங்குச்சு. காலேஜ்ல பி.டெக் படிச்சுகிட்டே என் நடிப்பைத் தொடர்ந்தேன்."

" பெரிய பிரேக் கொடுத்தது, 'தெய்வமகள்' தாரணி கேரக்டர் தானே?"

"ஆமாம். 'வசந்தம்' சீரியல் மூலமாகத்தான் என்னோட கெரியர் ஆரம்பிச்சது. அந்த சீரியல் முடிஞ்சதும், 'மை நேம் இஸ் மங்கம்மா', 'மருதாணி', 'அழகான ராட்சசி'னு சில சீரியல்ல நடிச்சேன். அடுத்து கமிட் ஆன 'தெய்வமகள்' சீரியல்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்துச்சு. எங்கப்போனாலும், 'தாரணி'னு கூப்பிட்டு, ரசிகர்கள் என் நடிப்பைப் பாராட்டி, ஊக்கப்படுத்துறாங்க." 

"தாரணியா நடிக்கிறது உங்க நிஜ கேரக்டரா?"

"இந்தக் கேள்வியைத்தான் பலரும் என்கிட்டக் கேட்பாங்க. அந்த கேரக்டரும், என் நிஜ கேரக்டரும் ஏறக்குறைய பாதிக்குப் பாதி உண்மையானதுதான். நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும். அது பார்க்கிறவங்களுக்கு, நான் ரொம்பவே வெகுளியா இருக்கிறமாதிரி தோண வைக்குது. 'தெய்வமகள்' சீரியல் தொடக்கத்துல நான் ரொம்ப வெகுளியா இருக்கிற மாதிரி இருந்தாலும், போகப் போக நான் கொஞ்சம் தைரியமான பொண்ணா நடிக்கிறமாதிரி காட்சிகள் மாறிடுச்சு."

"சீரியல்ல மாமியாருக்கும் உங்களுக்குமான சண்டை முடிவுக்கு வராதா?"

"சீரியலோட சுவாரஸ்யமான விஷயங்களில், எனக்கும், என்னோட மாமியாரா வர்ற சபீதா ஆனந்த் ஆன்டிக்கும் இடையே நடக்குற சண்டையும் ஒண்ணு. அதனால, நாங்க எதிரும் புதிருமா இருக்கிறதைத்தான் ரசிகர்கள் ரொம்பவே ரசிக்குறாங்க. ஆரம்பத்துல அத்தையோட கொடுமைகளைத் தாங்கிகிட்டு இருக்கிற மாதிரி நடிச்சப்போ, 'ஏம்மா மாமியார் கொடுமையைச் சகிச்சுகிட்டு இருக்க? நீ திரும்பி அவங்களை திட்டவோ அல்லது அடிக்கவோ செய்மா'னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணுவாங்க. அடுத்து கொஞ்ச நாள்லயே, அத்தையைத் திட்டுறது, அவங்க தப்பைக் கண்டுபிடிச்சு மாட்டிவிடுற மாதிரியான காட்சிகள்ல நடிக்க ஆரம்பிச்சதும் ரசிகர்கள்கிட்ட இருந்து நிறையப் பாராட்டுகள் வர ஆரம்பிச்சுடுச்சு. 'இப்பதாம்மா நீ லூசுப் பொண்ணு மைண்டுல இருந்து சரியாகியிருக்க'னு சொல்ல ஆர்மபிச்சாங்க." 

"நிஜத்துல நீங்க ரெண்டு பேரும் எப்படி?"

"நடிப்புக்காகத்தான் நாங்க எதிரும் புதிருமாக இருக்கிறோம். நாங்க சண்டை போட்டுக்கிற மாதிரியான காட்சிகள்ல நடிக்கிறப்போ, அடிக்கடி டேக் வாங்கி சிரிச்சுகிட்டே இருப்போம். ஷாட் இல்லாத நேரங்கள்ல, நிஜ அம்மா பொண்ணு மாதிரி பாச மழையில நனைஞ்சுக்குவோம். ஒருத்தருக்கு ஒருத்தர் நலம் விசாரிக்கிறதுல தொடங்கி, எங்க தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துக்கிறதுனு ரொம்பவே பாசமா இருப்போம். குறிப்பா சபிதா ஆண்டி, நடிப்புலதான் நெகட்டிவ். ஆனால், அவங்க ரொம்பவே அன்பானவங்க. நாங்க ரெண்டு பேர் மட்டுமில்லை... எங்க சீரியல்ல நடிக்கிற எல்லோருமே ஒரு ஃபேமிலி பாண்டிங்லதான் பழகுவோம். அதனால 'தெய்வமகள்' ஷூட்டிங் நாட்கள்னாலே, 'ஐ... ஜாலி ஜாலி ஜாலி'னு உற்சாகமா கிளம்பிடுவேன்."

"நெகட்டிவ் ரோல்ல நடிக்கிற 'ராஜா ராணி' அனுபவம்..."

" 'தெய்வமகள்'ல பாசிட்டிவ் ரோல். ஆனா, இப்போ புதுசா ஒளிபரப்பாகுற விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல்ல நெகட்டிவ் ரோல்ல நடிச்சுகிட்டு இருக்கேன். ரொம்பவே வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும், அதைத்தாண்டி நம்ம நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இந்த மாதிரியான புதுப்புது ரோல் ரொம்பவே மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்குது." 

"வீட்டுக்குள்ளயே மினி சர்க்கஸ் சாகசங்கள் செய்றீங்களாமே..."

(சிரிப்பவர்) "எங்க வீட்டுல மிக்கி, ரோஸ்மா, அஸ்மன்னு மூணு நாய்களையும், ஒரு கிளியையும் வளர்க்கிறேன். அவங்க நாலு பேரும்தான் என்னோட உலகம். ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல வீட்டுல இருந்தா, நாலு பேரையும் வெச்சு நிறைய மல்டிபிள் ஆக்டிவிட்டி செய்வேன். பார்க்கிறவங்களுக்கு அது சர்க்கஸ் கூடாரம் மாதிரி தெரியலாம். ஆனா எனக்கு அது அன்பும், பாசமும் நிறைந்த சந்தோஷத் தருணங்கள். அதுங்களோட என் நேரத்தை செலவழிக்கிறதுனால 'இந்த வீட்டுல நான் இருக்கணும்... இல்லை நாய்ங்க இருக்கணும்'னு அப்பா அடிக்கடி செல்லமா கண்டிப்பாரு. தவிர, ஆதரவில்லாத நாய்களைப் பார்த்தா, உடனே அவங்கள மீட்டு தத்துக்கொடுத்துடுவேன்" எனப் புன்னகைக்கிறார் ஷப்னம்.