Published:Updated:

’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்!’’ - விஜி சந்திரசேகர்

’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்!’’ - விஜி சந்திரசேகர்
’’கமலுக்காக பிக்பாஸ் பார்க்கும் விவசாயி நான்!’’ - விஜி சந்திரசேகர்

விஜி சந்திரசேகர்... இரண்டு தலைமுறைகளைக் கவர்ந்த நடிகை. 1981-ல் சினிமா உலகத்திற்கு 'தில்லு முல்லு' படம் மூலமா அறிமுகமாகி 1991-ஆம் ஆண்டு சின்னத்திரை உலகிற்குள்ளும் காலடி எடுத்து வைத்தவர். தற்போது சீரியல் - சினிமா இரண்டையும் திறம்பட கையாண்டு வருகிறார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை பத்தி சுவாரஸ்சிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள இவர்தான் பெஸ்ட் சாய்ஸ் என்று சில சீரியஸ் கேள்விகளை கேட்டோம். அப்போதுதான் 'நடிப்பு என்னோட பிரதான வேலையே இல்ல' என்றுச் சொல்லி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். 'நடிப்பு' அவரின் வேலையில் ஒருபாதி என்றால், மீதி பாதி எது? தவிர, இவரின் மகளும் சினிமாவில் நடிக்க ஆவலாய் இருக்கிறார். மகளையும் மீடியாவுக்கு அனுப்பும் மாடர்ன் அம்மாவா இருப்பாரா விஜி..? இப்படி பல கேள்விகளை அவர் முன் வைத்தோம்.

"சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?"

"பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குற விதத்துலதான் வித்தியாசமே இருக்கு. சினிமாவுல எப்படி ஆண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுதோ, அதை விட அதிகமா சீரியல்ல பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுது. இங்க கதாநாயகியும் நாங்கதான்... வில்லியும் நாங்கதான். இதுலதான் மக்களோட வீட்டைத் தேடி நம்ம போறோம். ஆனா சினிமாவைத் தேடி மக்கள்தான் தியேட்டருக்குப் போறாங்க."

"சீரியல் - சினிமா உங்களைப் பொறுத்தவரை எது பெஸ்ட்?"

"திருமணமான பெண்களுக்கு சீரியல்தான் பெஸ்ட். அதிகமாக உள்ளூர்லயேதான் ஷூட்டிங் நடக்கும். சினிமாவுல நடிக்க ரொம்ப மெனக்கெடவேண்டியது வரும். தவிர, சினிமாவுல முதன்மை கதாபாத்திரம் கிடைக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா, சீரியல் அப்படி இல்லை. பெண்களுக்கு முதன்மை கதாபாத்திரம் ஈசியா கிடைக்கும். அப்படி எனக்குப் பேரு வாங்கிக் கொடுத்தது சின்னத்திரைதான். சினிமாவைப் பொறுத்தவரை முக்கியமான கதாபாத்திரமா இருந்தா மட்டும்தான் அதுல நடிக்க சம்மதிப்பேன். ஆரோகணம், மதயானைக் கூட்டம், வெற்றிவேல் போன்ற  படங்கள் மாதிரி. மத்தபடி நடிப்புத் திறனை வெளிப்படுத்துறதும், கஷ்டப்பட்டு உழைப்பதும் ரெண்டுலயுமே ஒரே மாதிரிதான் இருக்கும்."

"நீங்க நடிக்குற எல்லா கதாபாத்திரங்களும் பரவலா பேசப்படுது எப்படி?"

" 'நமக்கு எல்லாம் தெரியும். என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிப்பேன்'ன்ற மனப்பான்மை இருந்துச்சுன்னா சுத்தமா நடிக்கவே முடியாது. ஒவ்வொரு படம் பண்ணும் போதும் புதுசா நடிக்கப் போற மாதிரி உணரணும். அப்போதான் அந்தக் கதைக்கு ஏத்த மாதிரி நம்ம கேரக்டரை மாத்திக்க முடியும். அப்படியான நடிகர்கள் கிடைத்தாலே போதும் இயக்குநர்கள் ட்ரைனிங் கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி அவங்களை மாத்திருவாங்க. சில பேர் 'ஹோம் வொர்க்' எல்லாம் பண்ணச் சொல்வாங்க. ஆனா அதெல்லாம் செஞ்சா சாத்தியமா நடிக்க முடியாதுங்க. கதைக்காக, கதாபாத்திரத்துக்காக எப்படி வேண்டுமானாலும் மாறலாம்'ன்ற மனப்பான்மை மட்டும் போதும் வெற்றி பெற."

"உங்களோட பை-போலார் டிஸார்டர் கேரக்டர் பத்தி..."

"ஆமாங்க... ஆரோகணம் படம் ஸ்கிரிப்ட் படிச்சப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. ஏதோ பை-போலார்னு சொல்றாங்க.. அப்படி நடிக்குறது ரொம்ப சவாலா இருக்கும்னு சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம அந்த மனநோய் உள்ளவங்க திடீர்னு சிரிப்பாங்க... திடீர்னு அழுவாங்கனு ஏகப்பட்ட விஷயங்களைக் கேட்டுக் கேட்டு குழம்பிப் போயிட்டேன். என்னை ஆஸ்பத்திரிக்கு போய் அங்க உள்ள மனநோயாளிகளை எல்லாம் பாருங்க; அவங்களோட பழக்க வழக்கங்களை எல்லாம் குறிப்பெடுங்கன்னு சொன்னாங்க. நான் ஏற்கனவே குழம்பிப் போயிருக்கேன். இதுல எப்படி இதையெல்லாம் செய்யுறதுனு விட்டுட்டேன். இந்த ரோல் பண்ண முடியுமான்னு ரொம்ப யோசிச்சேன். அப்போ இந்தப் படத்தோட இயக்குனர் லக்ஷ்மிதான் 'இதை உங்களால பண்ண முடியும்னு சொல்லி நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்தாங்க. எனக்கு வேண்டியது உங்களோட கண்ணுதான். கண்டிப்பா இந்த ரோல் உங்களுக்கு செட் ஆகும்னு சொன்னாங்க.' மறுபடியும் நான் சொன்ன மாதிரிதான் எந்த 'ஹோம் ஒர்க்'கும் பண்ணாம போனேன். அவங்க கத்துக் கொடுத்ததை அப்படியே பண்ணினேன். படமும் வெற்றியடைஞ்சுருச்சு."

"நடிப்பு தவிர என்னெல்லாம் பண்ணுவீங்க??"

"நடிப்பு எனக்கு பார்ட் டைம்தான். ஆர்கானிக் ஃபார்மிங்தான் என்னோட முதன்மை வேலையே. அப்படி விவசாய வேலைகள் போக மீதி நேரத்துலதான் நான் நடிக்கிறேன். அரிசி, எள்ளு, வேர்க்கடலை, கேழ்வரகு, காய்கறிகள் எல்லாமே பயிரிட்டு விவசாயம் பண்றேன். நான் அரிசி, எண்ணெய் மற்றும் காய்களை கடையில வாங்கவே மாட்டேன். தினமும் என்னோட நிலத்துல விளையுறதை வச்சுத்தான் சமைக்குறேன். எண்ணெய்க்கு வேர்க்கடலை மற்றும் சூரியகாந்திப் பூ இருக்கு. அதை வச்சு சன் ஃப்ளவர் ஆயில் மற்றும் கடலை எண்ணெய்  தயாரிப்பேன். உழவு பண்றது, ட்ராக்டர் ஓட்டுறது எல்லாமே நானே பண்ணுவேன்.

"தமிழ்-மலையாளம் ரெண்டு இண்டஸ்ட்ரிக்கும் இருக்குற வித்தியாசம்..."

"மலையாளம்ல மூணு படங்கள்தான் நடிச்சிருக்கேன். அங்க சினிமாத்தனம் அதிகமா இருக்காது. பட்ஜெட்ல தொடங்கி நடிகர்களின் மேக்-அப் செலவு வரைக்கும் எல்லாமே ரொம்ப யதார்த்தமா இருக்கும். கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவாங்க. வணிக மதிப்பீடு ரொம்ப குறைவா இருக்கும். குறிப்பா சொல்லப் போனா ஆவணப் படங்கள் சாயல்ல இருக்கும். ஆனா, இப்போ ட்ரெண்ட் மாறிக்கிட்டே வருது. அங்கேயும் நிறைய கமர்ஷியல் படங்கள் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க."

"உங்களோட மகள் லவ்லினையும் நடிக்க அனுப்புறீங்களா?"

"இப்போ இருக்குற பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. எந்த முடிவையும் அவங்க விளையாட்டுத்தனமா எடுக்குறது இல்ல. அதனால அவங்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் நம்ம செஞ்சு கொடுக்கணும். நடிப்பு அவளுடைய ஆர்வம். தவிர சினிமா வாய்ப்பு எல்லாருக்கும் ஈஸியா வந்துறாது. கோடியில ஒருத்தவங்களுக்குத்தான் அந்த பாக்கியம் கிடைக்கும். என் மகள் சைக்காலஜி படிச்சுட்டு இருந்தப்பவே எனக்கு நடிப்புல ஆர்வம் இருக்குனு சொன்னாங்க. அப்போவே நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, நான்தான் மொதல்ல படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டேன். இப்போ ஒரு தெலுங்கு படத்துலயும் ஒரு தமிழ் படத்துலயும் கமிட் ஆகியிருக்காங்க.

"கமல்- ரஜினியுடன் நடித்த அனுபவம் பத்தி..."

"நான் ரெண்டு பேரோட பரம விசிறினு சொல்லலாம். தில்லு முல்லு படம் பண்றப்போ நான் ரொம்ப விளையாட்டுத்தனமாதான் இருந்தேன். பாலச்சந்தர் சாரோட வழிநடத்தல் மட்டும் இல்லனா என்ன பண்ணிருப்பேன்னே தெரியாது. அப்போ ஒரு விஷயம் மட்டும்தான் நெனச்சேன். 'நடிப்பு ஒரு தவம். இன்னும் நிறைய விஷயங்களை கத்துக்கணும்'னு...அவ்வளோதான்..."

"பாலு மகேந்திரா சார் உங்களைப் பார்த்தப்போ என்ன சொன்னார்?"

"அவரோட படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலையேங்கிற வருத்தம் எனக்கு இப்போவரைக்கும் மனசுல இருக்கு. அவர் இறக்குறதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் அவரை சந்திச்சேன். அப்போ அவர் 'நம்ம கண்டிப்பா சேர்ந்து ஒரு படம் பண்றோம். உங்களுக்காக ஒரு கதை வச்சுருக்கேன்'னு சொன்னாரு. அவர் சொன்ன அந்த வார்த்தைகள் காதுல இன்னும் ஒலிச்சுட்டே இருக்கு. மணிரத்னம் சார், பாரதிராஜா சார், பாலசந்தர் சார் மாதிரியான பெரிய இயக்குநர்களோட சேர்ந்து படம் பண்ணிட்டேன். பாலு மகேந்திரா சாரோட படத்தில் நடிக்கலையேங்கிற வருத்தம் இருந்தாலும், அவர் எனக்காக படத்துல ஒரு ரோல் வச்சுருக்கேன்னு சொன்னதே போதும்."

"சினிமா பின்னணி இல்லாம நடிக்குறதுக்கு வாய்ப்பு வருமா?"

"சினிமா வாய்ப்பு அதிர்ஷ்டத்துனாலதான் எல்லாருக்கும் கிடைக்கும்னு நினைக்குறேன். பின்னணி இல்லாம நிறைய பேரு சமீபகாலமா இண்டஸ்ட்ரிக்கு வந்துருக்காங்க. இன்டர்நெட்லயே சினிமா தொடர்பான நிறைய பேரோட கான்டாக்ட் கிடைக்குது. அப்படி நூலைப் பிடிச்சு சினிமாக்குள் வர்ற ஆளுங்களும் இருக்காங்க தானே. சினிமால லக் ரொம்ப முக்கியம். ஒரு படம் நல்லா ஓடுச்சுன்னா அதுக்கு நடிகர்களின் அதிர்ஷ்டத்தைக் கூட ஒரு காரணமா சொல்லுவாங்க."

"ஹிந்தி-கொரியன் சீரியல்கள் நம்ம சின்னத்திரை கலாசாரத்தை உடைக்குதுன்னு நெனைக்குறீங்களா?"

"கண்டிப்பா... நம்ம கலாசாரங்களை கடத்துற முக்கியப் பணி மீடியாக்கு இருக்கு. அதை அப்படியே மாத்துறது மற்ற மொழி சீரியல்ஸ்தான். இப்போதெல்லாம் மக்கள் சீரியல்ல கூட கவர்ச்சியை எதிர்பாக்குறாங்க. அது தமிழ் சீரியல்ல இல்ல. தவிர தமிழ் சீரியலோட வரத்தும் சமீபகாலமா குறைந்திருக்கு. மற்ற மொழி சீரியல்கள் எல்லாமே டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கு மட்டும் நல்ல வாய்ப்பை அமைச்சு கொடுத்திருக்கு. மத்தபடி ப்ரொடக்ஷன் மற்றும் நடிகர்களுக்கு இது ஒரு சாபக்கேடுதான் சொல்லணும். அதை எல்லாம் விடுங்க... இந்த மாதிரியான சீரியல்களைப் பார்த்து மக்கள் கலாசாரத்தை மாத்தாம இருந்தா சரிதான்."

"பிக் பாஸ் மற்றும் கமல் பத்தி"

"நான் கமல் சாரோட தீவிர ரசிகை. அதுக்காக மட்டும்தான் பிக் பாஸ் பார்ப்பேன். அதுதவிர நாட்டுல பல பிரச்னை ஓடிட்டு இருக்கு. அதையெல்லாம் தவிர்த்துட்டு எல்லா நேரமும் பிக் பாஸ் பத்தியே மக்கள் பேசுறதைத் தவிர்க்கணும். தவிர, கமல் சார் எது பேசுனாலும், செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும். என்ன மாதிரியே அவருக்காக இந்த நிகழ்ச்சி பாக்குறவங்க நிறைய பேரு இருப்பாங்க. அவரை பத்தின கடும் விமர்சனத்தைக் கூட ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணுவார்" என்று முடித்தார் விஜி சந்திரசேகர். 

அடுத்த கட்டுரைக்கு