Published:Updated:

கொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (43-ம் நாள்) #BiggBossTamilUpdate

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலவெறி காயத்ரி...  மாற்றம் முன்னேற்றம் ரைசா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (43-ம் நாள்) #BiggBossTamilUpdate
கொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (43-ம் நாள்) #BiggBossTamilUpdate

கொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (43-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

42-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சி ஒளிபரப்பானது. 

ஓவியாவின் வாழக்கையை ‘பிக் பாஸிற்கு’ முன்னால் பின்னால் என்று பிரிக்க முடியும் என்று ரைசா சொன்னது சரியாக இருக்கலாம். அந்தளவிற்கான பாதிப்பை ஓவியாவின் வாழ்க்கையில் பிக்-பாஸின் அனுபவம் ஏற்படுத்தியிருக்ககூடும். அவர் தன்னுடைய உறுதியின் படி ஆரவ்வை தேடி இணைவாரா அல்லது ஆறு மாதத்திற்குள் இதையெல்லாம் நினைத்து சிரித்துக் கொண்டிருப்பாரா என்பதை யூகிப்பது கடினம். இந்த நிகழ்ச்சியின் விளைவுகளுக்கு பின்னால் பிக் பாஸ் இருப்பது போல, வாழ்க்கை என்கிற task-ன் பின்னால் இருக்கிற, நம்மால் உணர முடியாத அந்த பிக் பாஸ் என்ன முடிவு வைத்திருக்கிறாரோ.

‘ஒரு பொண்ணா சொல்றேன். ஒரு கிஸ் கூட ஆம்பளைங்களுக்கு எதிரான சாட்சியாக மாறி விடும்” என்றார் காயத்ரி. ‘சின்ன முத்தம் கூடவா?’ என்றார் ஆரவ். இனி மீதக்காலங்களில் எத்தனை முத்த வகைகளை பிக்பாஸ்ஸின் மூலமாக நாம் அறியப் போகிறோமோ என்று தெரியவில்லை. கமல்ஹாசனை இதற்கு தொகுப்பாளராக போட்ட சகுனமோ? ஓவியாவிற்கு நிகழ்ந்த அநீதியை பற்றி ஆரவ்வை கண்டிக்காமல் அவருக்கு சார்பாக பேசுவதின் மூலம் ‘சமயங்களில் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருப்பார்’ என்கிற வழக்கத்தை நிரூபித்து விட்டார். ஆரவ் இப்போது எதிர் அணியில் இருந்திருந்தால், இதே காயத்ரி ஆரவ் மீது வசை பொழிந்திருக்கலாம். 

ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தபடி இப்போது கமலை வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கி விட்டார் காயத்ரி. மனதிற்குள் ‘மூஞ்சியும் மொகரைக்கட்டையும்’ என்று நினைத்துக் கொண்டாலும் ‘நான் என்ன அப்படி கெட்ட வார்த்தை சொல்லிட்டேன்’, ஹேர் என்றது அத்தனை கெட்ட வார்த்தையா?’ என்றார். அந்த வார்த்தையை உபயோகித்து அவரை எவராவது பேசினால் விருது கிடைத்தது போல மகிழ்வாரா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். 

‘காயூ பேபி’ என்று சமயங்களில் மற்றவர்கள் குறிப்பிடுவதைப் போல மனதளவில் முதிர்ச்சியடையாமல் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறார். தன்னுடைய அடுத்த பஞ்சாயத்தில் கமல் இதை விசாரிப்பாரா என்று பார்க்க வேண்டும். 

**

இது வரை அமைதிச் சாமியாராக இந்த விளையாட்டை திறமையுடன் விளையாடிக் கொண்டிருந்த கணேஷ், கமல் அவரது diplomacy-ஐ குறிப்பிட்டுக் காட்டியவுடன் உஷாராகி விட்டாரோ அல்லது உண்மையிலே மனதார நினைத்துச் சொன்னாரோ தெரியவில்லை, பரணி தனிமைப்படுத்தப்பட்டு சுவரேறி குதிக்குமளவிற்குச் செல்ல நேர்ந்ததற்காக காமிரா முன்பு பரணியிடம் மன்னிப்பு கேட்டார். நீதி தாமதமாகவாவது வெல்வது மகிழ்ச்சி. 

காயத்ரியும் சக்தியும் இணைந்து தங்களைப் போலவே ஜூலியை மாற்றி விட்டார்கள் என்று வையாபுரியிடம் குற்றம் சாட்டினார் சிநேகன். ‘ஜூலி திறமையானவள்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார். உண்மைதான்.

ஆரவ் தந்த முத்தம் பற்றி போட்டியாளர்கள் விதம் விதமாக அலசினார்கள். ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றிய விஷயம் மற்ற உறுப்பினர்களுக்கு தெரியவந்தால்தான் அதிக ஃபுட்டேஜ் கிடைக்கும் என்பதுதான் பிக் பாஸின் உத்தி போலிருக்கிறது. அது வேலை செய்யத் துவங்கி விட்டது. 

**

இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டின் நடைமுறைகளுக்கு பழகிய  போட்டியாளர்கள், வெளியே சென்றவுடன் அது சார்ந்த பாதிப்புகள் தொடருமே, என்ன செய்வார்கள் என்று நான் முன்பே யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தை வையாபுரி நகைச்சுவையாக நடித்துக் காட்டினார். பிந்துவும் இணைந்து கொண்டார்.

ஆனால் நகைச்சுவை ஒருபுறமிருக்கட்டும், வெளியேறும் போட்டியாளர்கள் தங்களை நடைமுறை வாழ்க்கையில் உடனே பொருத்திக் கொள்ள சிரமப்படுவார்கள். அது சார்ந்த மனப்பாதிப்பு நிச்சயம் நீடிக்கும். எனவே தகுந்த உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்ட பிறகே அவர்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும். குறிப்பாக, தெரிந்தோ தெரியாமலோ பொதுமக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்ட ஜூலி போன்றவர்களுக்கு கட்டாயம் இந்த ஆலோசனை தேவை. பிக் பாஸ் இதைப் பின்பற்றுகிறதா என தெரியவில்லை.

மருத்துவ முத்தம் பற்றிய தகவலை ஆரவ் சபையில் வாக்குமூலமாக தெரிவித்த போது கணேஷ் காண்பித்த மிகையான உணர்வுகளையும் ஆர்வத்தையும் வையாபுரி நடித்துக் காண்பித்தது நகைச்சுவை ரகளை. 

**

43 –ம் நாள் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிபரப்பானது. உடனே சட்டென்று நினைவிற்கு வந்தது ஓவியாவின் நடனம்தான். அவர் இல்லாத வெறுமையை அப்பட்டமாக உணர முடிந்தது. அந்தக் குறையை ஓரளவிற்கு பிந்துமாதவி போக்கினார். காயத்ரி, ஆரவ்வை இணைத்துக் கொண்டு ஆட முயல, அவர் கும்பிடு போட்டு விட்டு விலகினார். எதற்கு வம்பு?

பாட்டு ஒலிக்கும் சமயங்களில் சக்தி செய்வது பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. போர்வையை விலக்கி காமிராவைப் பார்த்து விட்டு பின்பு சலிப்புடன் முகத்தை மூடிக் கொள்வார். 

ஒரு நாளின் துவக்கத்தை ஒவ்வொருவரும் எதிர்கொள்வதில் எத்தனை வித்தியாசங்கள்?

“காயத்ரி மாஸ்டரை முன்பே தெரியும். நான் ஹீரோவா.. நடிச்ச படத்துல.. ‘என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ஹீரோவா? இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் எப்போது நடந்தது? ‘வெள்ளந்தியாக’ இருந்த ஜூலியை corrupt செய்தது, காயத்ரி + சக்தி கூட்டணி என்பது பாசமிகு அண்ணன் சிநேகனின் எண்ணம். 

**

நாமினேஷன் படலத்தில் நிறைய பேர் வையாபுரியை தேர்வு செய்தார்கள். அதற்கு சொல்லப்பட்ட காரணம், வையாபுரி, தன் உறவினர் திருமணத்திற்கு செல்லத் துடிக்கிறார் என்பது. பிக்பாஸ் குறிப்பிட்டது போல இது தகுந்த காரணம் அல்ல. ‘இங்கு நூறு நாட்களுக்கு தங்க வேண்டியிருக்கும்’ என்கிற விஷயம் வையாபுரிக்கு முன்பே தெரியும். எனவே அது பொருந்தாத காரணமாகி விட்டது. அவர் கடுமையான மனஅழுத்தத்தில், வீட்டு ஞாபகத்தில் இருக்கிறார் என்பது பொருத்தமான காரணமாக இருந்திருக்கலாம்.

வையாபுரியின் முறை வந்த போது ‘இந்த கணேஷ் பயலை நெனச்சேதான் டென்ஷன் ஆகுது. முட்டையை எடுத்து தின்னுப்புடறான்’ என்று அதே பல்லவியை நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால் அந்த வீட்டில் நகைச்சுவைக்குரல் கேட்பது அவர் மூலமாகத்தான் மட்டுமே நடக்கிறது. 
பொதுவாக நகைச்சுவையுணர்வுள்ளவர்களின் மறுபுறம் சோகமாக இருக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். ஆங்காங்கே படுத்துக் கொண்டு பினாத்திக் கொண்டிருந்த வையாபுரியைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ‘எனக்காக யாரும் ஓட்டுப்போடாதீர்கள்’ என்ற வித்தியாசமான வேண்டுகோளை கண்ணீருடன் வைத்தார். நம் அரசியல் தலைவர்களில் எவராவது இப்படி என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா?

சக்தியின் ஆணாதிக்கம், காயத்ரியின் கெட்டவார்த்தை பேசுதல் ஆகிய இரண்டு சரியான காரணங்களைக் கூறியதால் ரைசாவின் தேர்வு ஏற்கப்பட்டது. இதர அனைத்து நபர்களின் காரணங்களும் பொருத்தமாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. ‘ட்ரூ.. ட்ரூ.. என்று தலையாட்டிக் கொண்டிருந்த ‘ரைசா’ தலைவரா என்று அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். குறிப்பாக சக்தி.. ‘ஆரவ்.. நீ தலைவரா இருந்துடேன்’ என்றது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆணாதிக்கவாதி’ என்ற ரைசாவின் புகாரை அது பிரதிபலித்தது. ஆனால், சக்தி கிளீனிங் டீமின் தலைவரைத்தான் சொல்கிறார் என்பது அங்கு இருக்கும் சிநேகன் போன்ற சக போட்டியாளர்களுக்கே புரியவில்லை என்பது தான் உண்மை.

சக்தியின் ஆணாதிக்க வெளிப்பாட்டு கமெண்ட்டைப் பற்றி வையாபுரியிடம் சிநேகனும் அங்கலாய்த்தார். கமல், சக்தியை அரசியலுக்கு வரச் சொன்னதின் பின்னால் உள்ள கிண்டலை அவர் உணரவில்லை என்று சிநேகன் சொன்னது சரியானது. எல்லாவற்றிற்கும் புரிந்தாற் போல் பாவனை தரும் சக்திக்கு சில எளிமையான விஷயங்கள் கூட புரிவதில்லை.

**

‘ட்ரூ’ பிஸ்கெட்டை சாப்பிட்டு வளர்ந்தாரோ என்னமோ, அது வரை மற்றவர்களின் பேச்சுகளுக்கு ‘ட்ரூ…ட்ரூ..’ என்றே தலையாட்டிக் கொண்டிருந்த ரைசாவிடம் இப்போது மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. ஒரு புது அவதாரம். மாற்றம், முன்னேற்றம், ரைசா.                    அதிலும் எப்போதும்  மேக்-அப் கிட்டுடன் இருந்த ரைசா இப்படி மேக்-அப் கூட இல்லாமல் மக்களின் கேள்விகளை ஆரவ்விடம் முன் வைத்தது அழகு.

ஓவியாவின் மனஅழுத்த பிரச்சினை, அவரது வெளியேற்றம், அதில் தனது பங்கு சார்ந்த குற்றவுணர்ச்சி, கமலின் ஆலோசனை ஆகிய விஷயங்கள் அவரின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியிருக்கிறது போல. 

காயத்ரி மற்றும் சக்தியின் புறம் பேசுதல்களுக்கு இதுவரை சாமர்த்தியமாக ‘ஆமாம் சாமி’ போட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்து மாறி எதையும் நேராக விவாதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது நல்ல மாற்றம். ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்கிற பாடலை பின்னணியில் போட்டால் பொருத்தமாகியிருக்கும் போல. ஓவியப்படை போல ‘ரைசா பேரவை’ இனி உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன் விளைவு, ஒரே நாளில் காயத்ரியின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டார். ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்பது காயத்ரியின் எண்ணம்.

போதாக்குறைக்கு ரைசா ‘தலைவி’யாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் அது சார்ந்த எரிச்சல், பிக்பாஸ் வீட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.

இதுவும் பிக்பாஸின் திருவிளையாடல்களில் ஒன்றோ, என்னமோ.

**

ஆரவ்வின் பிரச்சினையை அவரிடமே நேரடியாக ரைசா விவாதித்தது அழகு. ‘ஓவியா தொடர்பான காதலில் உங்களுடைய பங்கும் இருக்கிறதுதானே, ஓவியாவிற்கு ஆதரவாக இருந்த நீங்கள் ஏன் சட்டென்று நிறம் மாறி, காயத்ரி அணியில் ஒட்டிக் கொண்டீர்கள், அவர்களுக்கு பயப்படுகிறீர்களா, இந்த மாற்றம்தானே ஓவியாவை அதிகம் பாதித்திருக்கக்கூடும்’ என்றெல்லாம் பாயிண்ட் பாயிண்ட்டாக விஜய்காந்த்தின் தொடர் பஞ்ச் டயலாக் மாதிரி அடுக்கிக் கொண்டே போக ஆரவ் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஆரவ் இன்னமும் தனக்கு பாதுகாப்பான விஷயங்களையே முன்வைத்து தடுப்பாட்டம் ஆட முயன்று கொண்டிருக்கிறார். 

காயத்ரிக்கு பிரதான எதிரியாக மாறியதின் மூலம் இனி ரைசா சுவாரசியமான போட்டியாளராக மாறுவார் என நம்பலாம்.

ஆனால் பெண்கள் தரப்பு குறைவது ஆட்டத்தை அசுவாரசியமாக்குகிறது. பிக்பாஸ் கவனிக்கவும். சக்திகள் இல்லையேல் பிக்பாஸ் இல்லை. (காயத்ரி நிழலாக இருக்கும் ‘சக்தி’ யைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. அது வீண் சக்தி)

**

இந்த நாளின் பெரும்பான்மையான இடத்தை எடுத்துக் கொண்டது ‘காயத்ரி மந்திர’ வார்த்தைகளின் பிரச்சினை. 
‘தான் கெட்டவார்த்தைகள் பேசுவதை ஏதோ உலகமகா குற்றம் போல் கமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார், என்னை எவரும் discourage செய்தால் பிடிக்காது’ என்பதையே கோபத்துடனும் ஆற்றாமையுடனும் விதம் விதமாக சொல்லிக் கொண்டிருந்தார் காயத்ரி. அவருடைய இந்த குணாதியசத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டுமெனில் ‘A spoiled child’ எனலாம். 

இந்த விளையாட்டு துவங்கிய நாள் முதலே பல்வேறு சமயங்களில் காயத்ரி கோபத்தில் துப்பிய வசைகளைக் கண்டு பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் இதர போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். காட்டப்பட்ட காட்சிகளிலேயே இத்தனை வன்மம் என்றால் காட்டப்படாத காட்சிகளில் எத்தனை இருக்கும் என்கிற திகிலான யூகம் எழுகிறது. இது குறித்து முன்னர் நிகழ்ந்த ஓர் உரையாடலில் கமல் சொன்னது ‘காட்டினா அசிங்கம்-னு நாங்களே பல காட்சிகளை எடிட் செய்து விடுகிறோம்’ என்பதை நினைவில் கொள்ளலாம். 

‘நான்  திட்டறதை ஏன் காட்டுகிறீர்கள், நல்லதைக் காட்டுங்கள்’ என்று அவர் கேட்பது முட்டாள்தனத்தின் உச்சம். இந்த விளையாட்டின் அடிப்படையே மனிதர்களின் சகிப்புத்தன்மையை சோதித்து அதில் அவர்கள் இடறி விழும் தருணங்களை முதன்மையாக காட்டுவதுதான். இதன் வணிகம் அதைச் சார்ந்துதான் இருக்கிறது. அவர்கள் என்ன நீதிக்கதை வகுப்பா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

இந்த அடிப்படையை சரியாக புரிந்து கொண்டால் கூட ‘தன் கோபங்கள் காட்டப்பட்டது’ குறித்த காயத்ரியின் கோபம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம் என அவருக்குத் தெரியும். 
‘இது ஒரு கேம். அதைத்தான் ஃபோகஸ் செய்து காண்பிப்பாங்க’ என்று ரைசா அடைகிற புரிதலை கூட காயத்ரியால் அடைய முடியவில்லை. 

இத்தனைக்கும், மற்றவர்களின் சறுக்கல்களை மையப்படுத்தி பெருக்கிக் காட்டிய கமல், காயத்ரியின் தவறுகளை தொடர்ந்து இடதுகையால் ஒதுக்கி கண்டுகொள்ளாமலேயே இருப்பது ஏன் என்கிற ஆதங்கமும் எரிச்சலும் நீண்ட நாளாகவே பார்வையாளர்களிடம் இருந்தது.. இப்படி நிறைய முறை வாய்ப்பு தரப்பட்டும் அதை காயத்ரியால் உபயோகித்துக் கொள்ள முடியவில்லை. கோபம் கண்ணை மறைக்கிறது. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’.

‘கோபம் என் அடிப்படையான இயல்பு, மற்றவர்கள் தூண்டும் போது எப்படி என்னால் கோபப்படாமல் இருக்க முடியும்?’ என்கிற அவரின் கேள்வி ஒருவகையில் நியாயமானது. ஆனால் இதைச் சோதிக்கும் ஒரு விளையாட்டிற்குள் அவர் நுழைந்திருக்கிறார் என்பதை மறந்து விடுகிறார். தன் எதிர்மறை குணங்களை கட்டுப்படுத்திக் கொள்வதுதான் இந்த விளையாட்டில் உள்ள சவாலே. இப்படி தன் சிறுமைக் குணங்களை ‘சீராக்கிக்’ கொள்வது விளையாட்டிற்குப் பிறகு அவரது சொந்த வாழ்க்கையிலும் கூட உதவும். 

மட்டுமல்ல, எந்த விளையாட்டிலும் சில கறாரான விதிகள் உண்டு. சக போட்டியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், ஆபாசமாக திட்டினால் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துதான் ஆக வேண்டும். உதாரணமாக கால்பந்து விளையாட்டில் இதைப் பார்க்கலாம். எதிரே வருகிறவன் எப்படி சீண்ட முயன்றாலும் அதைச் சமாளித்து கோல் போஸ்ட்டை நோக்கி நகர்வதே முறை. அதை விட்டு விட்டு நடுவரின் ஆட்சேபத்தின் போது … ஏய்.. எங்க அப்பா யார் தெரியுமா? இதெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத” என்றெல்லாம் துள்ளினால் சிறுபிள்ளைத்தனமாக தெரியும். பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். 

‘கெட்ட வார்த்தை பேசுவதை குறைத்துக் கொள்ள முடியாது’ என்று கமலிடம் சொல்லி விட்டேன் என்று அவர் ஜம்படிப்பது இன்னொரு ‘சீரான’ பொய். 

**

‘Discourage’ எவர் செய்தாலும் எனக்குப் பிடிக்காது என்கிறார் காயத்ரி. ‘காயூம்மா. அந்த வார்த்தையை சொல்ல விட்டுட்டியே… எத்தனை அருமையான கெட்ட வார்த்தை தெரியுமா..  சொல்லிப் பாரு.. ஷோக்கா இருக்கும்’ என்று தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் மெட்ராஸ் தமிழில் கற்றுத் தந்து கமல் வழிகாட்ட வேண்டும் என காயத்ரி எதிர்பார்க்கிறாரா?

‘என் அம்மாவிற்கு மட்டும்தான் என்னைக் கண்டிக்க உரிமை இருக்கு’ ‘என் அப்பா கூட என்னைக் கண்டிச்சதில்ல’ என்றலெ்லாம் சொல்லுவதின் மூலம் தன் பெற்றோரைப் பற்றி பெருமையாக சொல்லவதாக ஒருவேளை காயத்ரி நினைக்கலாம். ஆனால் அவர்களின் வளர்ப்பு முறையிலுள்ள தவறுகளை தாமே முன்வந்து பொதுவில் அம்பலப்படுத்துகிறோம் என்பதை அவர் உணரவில்லை. 

‘நீங்க செய்யாதையா காட்டினாங்க?’ என்கிற சிநேகனின் கேள்வி முக்கியமானது. ‘யாருக்கும் நம்மை நிரூபிக்கத் தேவையில்லை’ என்கிற சக்தியின் ஆறுதல் கூட இருந்தே கெடுக்கும் கூடா நட்பு. 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுஷனையே கடிக்கும் கதையாக என்றாவது ஒருநாள் கமல் மீதே அவர் கெட்ட வார்த்தை அபிஷேகம் செய்யக்கூடும் என்று பார்வையாளர்கள் கருதியது மெல்ல உண்மையாகிக் கொண்டிருக்கிறதோ என்னமோ. அவருடைய மைண்ட் வாய்ஸ்களை பதிவு செய்யக்கூடிய கருவி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு அது உபயோகப் படுத்தப்பட்டால் இரண்டு விஷயங்கள் நிகழக்கூடும். ஒன்று, அந்தக் கருவியே பயத்தில் நடுங்கி எரிந்து தீய்ந்து விடலாம். இன்னொன்று, அதைக் கேட்டவுடன் கமலே இந்த நிகழ்ச்சியிலிருந்து நொந்து போய் விலகி விடலாம். 

‘I Want to go home. Am done’ என்று காயத்ரி முதன்முறையாக கண்ணீர் விட்டது ஒருபக்கம் பரிதாபமாக இருந்தாலும், இதுவரை அவரது செயல்களைக் கண்டு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்கள் சற்று ஆசுவாசமாக உணர்ந்திருப்பார்கள். 

கமலின் கண்டிப்பிற்காக அழுதாரா? வெங்காயம் வெட்டும் போட்டியில் தோற்று விட்டதற்காக அழுதாரா என்று வேறு குழப்பமாக இருக்கிறது. ‘ரைசா… இருடி.. உனக்கு வெச்சுக்கறேன்’
எத்தனை சந்தர்ப்பங்கள் தந்தும் அதை உணராமல் தன்னுடைய தவறுகளின் பள்ளத்திலேயே நின்று கொண்டிருக்கும் காயத்ரியின் பிடிவாதம் ஒருபக்கம் கோபத்தை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அவர் வெளியில் வந்தவுடன் மக்களின் பகைமையை எதிர்கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும், நெருங்கிய உறவுகளும் நட்புகளும் கூட காட்டப்போகும் ஆட்சேபங்களையெல்லாம் எப்படி எதிர்கொள்வார்?

‘கமல் உன் அப்பா மாதிரி’ என்று சிநேகன் சொல்ல, ‘அதற்காகத்தான் விடறேன்’ என்று காயத்ரியும் சொல்ல இந்த நாடகத்தின் வெம்மை சற்று இறங்கத் துவங்கியது. 

**

போட்டியில் வென்றவர்களுக்கான பரிசாக அவரவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பேசிய உரையாடலின் பதிவு ஒலிபரப்பப்பட்டது. கணேஷின் மனைவி நிஷா மிகுந்த முதிர்ச்சியான சொற்களில் அழகாக உரையாடினார். ‘வீட்ல நிறைய முட்டை வாங்கிச் வெச்சிருக்கேன்’ என்று ஒரு வார்த்தை சூசகமாக சொல்லியிருக்கலாம். 

மனைவியும் மகனும் அன்பாக உரையாடியதைக் கண்டு சக்தி நெகிழ்ந்தார். கண்கலங்கினார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. சக்தியின் ஆணாதிக்க தன்மையைக் கண்டு ‘உங்க வீட்ல பார்த்திருட்டிப்பாங்க’ என்று முன்பு கமல் கோடிட்டுக் காட்டியதும் நினைவிற்கு வந்தது. 

சிநேகனின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவருக்கு ஒலிச்சித்திரம் இல்லை. ஓர் அழுகை நாடகம் நடக்கும் என்பதை பொய்யாக்கிவிட்டு அதை இயல்பாக எதிர்கொண்டார் சிநேகன். 

ரைசா சுட்டிக்காட்டிய படி, ஜூலி இல்லாத வெறுமையை நாம் உணர்வது நிதர்சனம். ‘ஜில்ஜில் ரமாமணி’ இல்லாமல் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்ப்பது போல் இருக்கிறது. 

**

இந்த வாரம் ரைசாவைத் தவிர, அனைவருமே நாமினேஷன் பட்டியில் இருப்பதால் காயத்ரியை வெளியேற்ற எப்படியெல்லாம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் விதம்விதமாக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தில் சிறிய பங்கையாவது அதிகார அரசியல் வாக்களிப்பில் காட்டியிருக்கலாமே, மக்களே.

பிக் பாஸ் அனுபவத்தின் மூலம் ரைசா பக்குவமடைந்து உயரே சென்று கொண்டிருக்கிறார். அதன் மறுமுனையில் தன் சிறுபிள்ளைத்தனங்களின் மூலம் காயத்ரி இன்னமும் கீழே நகர்ந்து கொண்டிருக்கிறார். மனித இயல்புகளின் மாற்றங்கள். 

வேறு என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loading...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு