Published:Updated:

அட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (44-ம் நாள்) #BiggBossTamilUpdate

அட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (44-ம் நாள்) #BiggBossTamilUpdate
அட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (44-ம் நாள்) #BiggBossTamilUpdate

அட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (44-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

ஒரிஜினல் நாயகி ஓவியா, நகைச்சுவை நாயகி ஜூலி ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் இல்லாததால் காமெடி சீன்களை வைத்து கல்லா கட்ட பிக் பாஸ் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது. ஆனால் நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை. இந்த நிகழ்ச்சி சலிப்புறத் துவங்கி விட்டது. 

துணிதுவைப்பது, பாத்ரூம் கழுவுவதையெல்லாம் பார்க்கவா நாம் அமர்ந்திருக்கிறோம்? சந்தானம் ஒரு திரைப்பட நகைச்சுவைக்காட்சியில் கேட்பதைப் போலவே “எங்களையெல்லாம் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது?” என்று பிக்பாஸைக் கேட்கத் தோன்றியது. 

‘முட்டை கணேஷ்’ நிதானமாக உண்பதை சிநேகனும் மற்றவர்களும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தான் உண்டு தன் முட்டை உண்டு’ என்று கருமமே கண்ணாயினராக இருக்கிறார் கணேஷ்.

அதற்கு முன், காலையில் ‘ஆடுகளம்’ திரைப்படத்திலிருந்து ‘ஒத்த சொல்லாலே’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பானது. ஒற்றைச் சொல்லை அடிக்கடி சொல்லி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட காயத்ரி நடனம் என்ற பெயரில் எதையோ செய்தார், உடற்பயிற்சியோ என்னவோ. பிந்து மாதவியின் நடனம் தேவலை. ஓவியா இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ. வழக்கத்திற்கு மாறாக சக்தியும் இன்று அதிக ‘சக்தி’ வந்து பிந்துவுடன் ஆடினார். 

வையாபுரி மறுபடியும் வாக்குமூலப் படலத்தை உருக்கமுடன் ஆரம்பித்து விட்டார். இனி நல்ல கணவனாகவும் பொறுப்புள்ள தகப்பனாகவும் இருப்பதாகத் தன் மனைவிக்கு வாக்களித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பல குடும்பத்தலைவிகளுக்கு அவரவர்களின் கணவன்மார்கள் குறித்து இப்படி தோன்றலாம். ‘இந்த மனுசனை கொண்டு போய் அங்க ஒரு மாசம் தள்ளி விட்டு வந்தாத்தேன் திருந்துவாரு போல”

சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்காததாலும் உடல் உழைப்பினால் ஏற்படும் வலியினாலும் வையாபுரி புலம்பிக் கொண்டேயிருந்தார். ‘சார்.. நீங்க மைண்ட் வாய்ஸ்’ல பேசறதா நெனச்சு சத்தமா பேசிட்டிருக்கீங்க’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டு வேலைகள் என்ற விஷயத்தையே இதுவரை செய்திராத குடும்பத் தலைவர்கள் இந்தக் காட்சியை ஒருவேளை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்களோ, என்னவோ. ‘இதையெல்லாம் பார்த்துட்டு பொண்டாட்டி அழுவா’ என்றவர், சட்டென்று ‘அழுவறாளோ.. சிரிக்கறாளோ..’ என்று இணைத்துக் கொண்டது நகைச்சுவை மத்தாப்பு. 

**
பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ‘Luxury budget task’ தரப்பட்டது. எந்த அணி ஜெயிக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே பட்ஜெட் தரப்படும். தோற்ற அணி லக்ஸரி பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது.  பிக் பாஸின் திருவிளையாடல் இது. ஆடம்பரமான உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தவர்களின் வயிற்றில் அடித்தால் அவர்களுக்குள் நிச்சயம் அடித்துக் கொள்வார்கள் என்கிற பயங்கரமான திட்டம் போல. ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ போது ‘நிச்சயம் சண்டை உண்டு’ என்று பிக்பாஸ் முடிவுசெய்து விட்டார் போல. நடக்கட்டும். 

பட்ஜெட்டிற்கான பொருட்களைப் பற்றி கலந்தோசிக்க தங்கள் குழுவுடன் தனியாக அமர்ந்த சிநேகன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னார். ‘இந்த விஷயம் ரகசியமாக இருக்கணும்’. மூலைக்கு மூலை புறம் பேசுவதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட அந்த இடத்தில் ஆகிற வேலையா இது?

பிக்பாஸ் சலவை மையம் என்பது task. தரப்படுகிற பழைய துணிகளை இரண்டு அணிகளும் துவைத்து தர வேண்டும். எந்த அணி அதிக எண்ணிக்கையிலான துணிகளை நன்றாக துவைக்கிறார்களோ, அந்த அணிக்கு மதிப்பெண்கள். சக்தி மற்றும் பிந்து மாதவி இதன் தரப்பரிசோதனையாளர்களாக இருப்பார்களாம். காலக்கொடுமை. 

பணிபுரிவதற்காக அவர்களுக்கு தரப்பட்ட உடை நகைச்சுவையாக இருந்தது. மேக்கப் இல்லாத ரைசா, கண்டாங்கி சேலையில் அசல் ‘கிராமத்து கிளி’யாகவே மாறி விட்டார். 

பிக்பாஸ் போட்டியாளர்களின் உடைகளை அவர்களே துவைத்துக் கொள்வார்களா, அல்லது வெளியில் இருந்து துவைத்து வருமா என்று பார்வையாளர்களுக்கு நீண்ட காலமாக இருந்த வரலாற்றுச் சந்தேகம் இன்று தீர்ந்து விட்டிருக்கும். குறைந்த எண்ணிக்கையிலான துணிகளை துவைப்பதற்கே அப்படி அலுத்துக் கொண்டார்கள் என்றால் தங்களின் துணிகளை எப்படி துவைப்பார்கள்? 

நெருக்கடி காலக்கட்டங்களில் விமானத்தில் இருந்து போடப்படும் உணவுப்பொட்டலங்களை கைப்பற்றுவது போல் பழைய துணிகளைப் பிடிக்க போட்டா போட்டி. ஆரவ் சமயோசிதமாக செயல்பட்டு அதிக துணிகளைக் கைப்பற்றினார். 

‘இதுவரைக்கும் குத்தவெச்சு உக்காந்ததே இல்ல. குறுக்கு வலிக்கு’ என்று அலுத்துக் கொண்ட வையாபுரி ‘இன்னமும் என்னென்ன விளையாட்டை வெச்சு சோதிக்கப் போறீங்களோ’ என்றார். பார்வையாளர்களாகிய நாங்கள்தான் அதை சொல்ல வேண்டும்.

தாம் துவைக்க எடுத்த ஒரு சட்டையில் லிப்ஸ்டிக் கறை இருப்பதை கண்டுபிடித்தார் ஆரவ். ‘எவன் முத்தம் கொடுத்ததுன்னு தெரியலையே’ என்று அவர் சொன்னது அட்டகாசமான topical காமெடி. தன்னுடைய சங்கடத்தை சுயபகடியின் மூலம் உடனே அவர் கடந்து வருவது சிறப்பு. இப்படி ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதன் மூலம் பணியைச் சுலபமாக்கிக் கொள்ள முயன்றார்கள். ‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது’ என்கிற கிராமத்து மக்களின் பழக்கம், தன்னிச்சையாக அவர்களிடம் வந்து விட்டது போல. 

**
‘இந்தாளுக்கு எந்த வேலை கொடுத்தாலும் காரெக்டராகவே மாறிடறான்யா’ என்று அயர்ன் வேலை செய்து கொண்டிருந்த சிநேகனைப் பார்த்து சொன்னார் சக்தி. சிநேகன் ஹீரோவாக நடிப்பதை விட ‘கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டிக்குதான் லாயக்கு’ என்று இதற்குப் பொருளா எனத் தெரியவில்லை.

‘எவன் பாட்டெழுத வாய்ப்பு தரலைன்னாலும் பரவாயில்லை, இனி அயர்ன் கடை வெச்சு பிழைச்சுக்குவேன்’ என்றார் சிநேகன். இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் மறக்காமல் இந்த முக்கியத் தகவலை குறித்து வைத்துக் கொள்ளவும். 

‘எப்படி பத்த வெக்கறது ப்ரோ’ என்று விசாரித்து தெரிந்து கொண்டார் கணேஷ். இதுவரை சாப்பாட்டுச்சாமியாராக இருந்த அவர், அதிகம் பற்ற வைத்து நிகழ்ச்சியை இனியாவது சுவாரசியமாக்குவார் என எதிர்பார்க்கலாமா?

சிநேகன் அணி கடின உழைப்பின் மூலம் துவைத்துத் தந்த துணிகளை, சக்தி நிராகரித்தது அநியாயம். பக்கத்தில் இருந்த எதிரணி காயத்ரி வேறு ஏத்திக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். 

‘இவன் ஜிம்பாடியை வெச்சுக்கிட்டு ஒர்க்அவுட் பண்ணிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிடுவான்.’ என்று கணேஷை தன் மைண்ட் வாய்ஸால் விமர்சித்தார் வையாபுரி. ‘சக்தியும் காயத்ரியும் ஒண்ணா உக்காந்து பேசியே காலத்தைக் கழிச்சுடுங்க’ … எனக்குத்தான் என்ன பண்றதுன்னுன்னெ தெரியலை.. என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். ஓய்வு பெற்று மூலையில் அமர்த்தி வைக்கப்படும் வயதானவர்களின் தனிமைப் பிரச்சினையைப் போலவே இருந்தது, அவருடைய புலம்பல். பிக் பாஸ் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம், பாவம். 

எதிர்பார்த்தபடியே துணிதுவைக்கும் இந்த விளையாட்டில் மெலிதான சண்டை மூண்டது. தங்கள் அணி சிரமப்பட்டு துவைத்த துணிகளை சக்தி வேண்டுமென்றே நிராகரித்தார் என்று சிநேகன் வருத்தப்பட்டாரோ, என்னவோ. மூலையில் சென்று சோகத்துடன் அமர்ந்து விட்டார். சக்தி இதை யூகித்து விசாரித்த போது  ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று மறுத்தார்.
 

ஆனால் இந்தச் சண்டை விரைவில் அடங்கி விட்டது பிக்பாஸிற்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆண்களின் சண்டை அத்தனை எளிதில் பற்றிக் கொள்வதில்லை. மேலும் அவர்கள் அற்ப விவகாரங்களை சண்டையாக எடுத்துக் கொள்வதில்லை

இன்றைய நாளில் சிநேகன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

பிக் பாஸ் வீடு, இரண்டு அணிகளாக பிரிக்க வைக்கப்பட்டதை, ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு சக்தி விவரித்தது ரகளை. அங்குள்ள ஒவ்வொருவரையும் திரைப்படப் பாத்திரங்களோடு இணைத்து கலாட்டா செய்ததும் ரசிக்க வைத்தது. என்ன செய்ய, சுவாரசியமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பிலிம் பெஸ்டிவல் திரைப்படத்தில் மொக்கையான நகைச்சுவைக்காட்சி வந்தால் கூட பார்வையாளர்கள் மிகையாக சிரித்து வைப்பார்கள். அது போல இதையேல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. 

ஏற்கெனவே ஒருமுறை குறிப்பிட்டதுதான். சுற்றி நடக்கும் விஷயங்களை கவனமாக குறித்துக் கொண்டு அதை நகைச்சுவையாக விவரிப்பதில் சக்திக்கு திறமை இருக்கிறது. இதைச் சரியாக அவர் வளர்த்துக் கொள்ளலாம். 

போட்டியாளர்களில் பெரும்பாலோனோர், வசதியான பின்னணியில் இருந்து உடல் உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இது போன்ற பல கடினமான பணிகளைச் செய்யும் எளிய மக்களின் சிரமங்களை இனியாவது அவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். தங்கள் வீட்டுப் பணியாளர்களை இனி கருணையோடு நடத்துவார்கள் என்று கருதலாம். பார்வையாளர்களுக்கும் இது சார்ந்த செய்தி இருக்கிறது. 
 

loading...

இன்றைய நாளின் தொகுப்பில் அதிக சுவாரசியமில்லை. புதிய போட்டியாளரான ‘நமது நிருபர்’ பிந்து மாதவியும் ஜோதியில் ஐக்கியமாகாமல் இன்னமும் விருந்தினராகவே இருக்கிறார். இப்படியே சென்று கொண்டிருந்தால்,  இந்த நிகழ்ச்சிக்கு நேரம் செலவழிக்க வேண்டுமா என பார்வையாளர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டு விடலாம். பிக் பாஸ் ஜாக்கிரதை! (என்ன செய்ய, ஜூலி, ஓவியா என பவர் பிளேயர்ஸை வைத்து செம ஷோ காட்டிவிட்டீர்கள். இப்போது சவசவ அத்தியாயங்கள் கடுப்படிக்கின்றன!)

...

அடுத்த கட்டுரைக்கு