Published:Updated:

ஓவியா மியூஸிக் ப்ளேயர், ஜுலி மேப் - இது பிக் பாஸ் ஆப்ஸ்!

ஓவியா மியூஸிக் ப்ளேயர், ஜுலி மேப் - இது பிக் பாஸ் ஆப்ஸ்!
ஓவியா மியூஸிக் ப்ளேயர், ஜுலி மேப் - இது பிக் பாஸ் ஆப்ஸ்!

`பிக் பாஸ்' வீட்டினுள் பரணி அனுபவித்த அவஸ்தைகளைக் கண்டு, `Save Bharani' எனும் கேம் அப்ளிகேஷனை உருவாக்கியது இந்த தமிழ்கூறும் நல்லுலகு. அதேபோல் மற்ற பிக் பாஸ் போட்டியாளர்களையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு, வேறெந்த மாதிரியான அப்ளிகேஷன்களை உருவாக்கலாம் என எக்குத்தப்பாய் சிந்தித்ததில்...

ஜூலி வழிசொல்லி செயலி :

கிட்டத்தட்ட கூகுள் மேப்புக்கு இணையான ஒரு வழிச்சொல்லி செயலி. இந்தச் செயலி, பயனாளிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி வழி சொல்லாது. அவரவருக்கு ஏற்ற மாதிரி மாற்றி மாற்றிச் சொல்லும். மொபைலின் ஸ்பீக்கரை பெருவிரல்களைக் கொண்டு அழுத்திப் பிடித்தாலும், அதையும் மீறி சவுண்டு காதைக் கிழிக்கும். `ரைட்டு ரைட்டு... லெப்ட்டு லெப்ட்டு... ஸ்ட்ரெய்ட் ஸ்ட்ரெய்ட்...' என வழிச் சொல்லி அரக்கபரக்க அலறும் இந்தச் செயலி. அண்ணே, அக்கா என இருபாலருக்கும் தனித்தனி ஆப்கள் இருக்கின்றன.

ஓவியா மியூசிக் ப்ளேயர் :

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எந்நேரமும் ஜாலி மோடில் இருக்கும் ஓவியாவின் பெயரைக் கொண்ட மியூசிக் ப்ளேயர். அதனால், குத்து பாடல்கள் அல்லது ரொமான்டிக் பாடல்களை மட்டுமே இந்த ப்ளேயரில் கேட்கமுடியும். சோகப் பாடல்களுக்கு அனுமதி கிடையாது. பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது `ஷட் அப் பண்ணுங்க' என சொன்னாலே போதும். பாடல் ஒலிப்பது நின்றுவிடும். `ஸ்ப்ரே அடிச்சு போட்டுடுவேன்' என மிரட்டினால் அடுத்த பாடலுக்கு தாவி விடும் இந்த மியூசிக் ப்ளேயர்.

காயத்ரி வீடியோ எடிட்டர் :

`வீடியோவைக் காண்பிப்பதில்லை, அவங்க இஷ்டத்துக்கு எடிட் செய்கிறார்கள்' என அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் காயத்ரி. அதனால், `என் வீடியோ என் உரிமை' என்ற முழக்கத்தோடு அறிமுகமாகிறது இந்த `காயத்ரி வீடியோ எடிட்டர்'. அவரவர் இஷ்டத்துக்கு வீடியோக்களை இதில் எடிட் செய்துகொள்ளலாம். சிலபல கெட்டவார்த்தைகள், வாய்ஸ் மாடுலேஷன்கள் போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளும் சிறப்பு வசதி இதில் உள்ளது. 

ரைஸா போட்டோ எடிட்டர் :

அப்போதெல்லாம், போட்டோவில் முகம் தெளிவாகத் தெரிந்தால் `என்ன சோப்?' எனக் கேட்பார்கள். இப்போது `எந்த ஆப்?' என கேட்கிறார்கள். (பழைய ஜோக்தான் விடுங்க...) நம்மில் பெரும்பாலானவர்களின் புரொஃபைல் பிக் பளப்பளவென மின்னக் காரணம் போட்டோ எடிட்டர் அப்ளிகேஷன்களே. அதனால், பிக் பாஸ் வீட்டில் குடியேறிய எல்லோருக்குமே மேக் அப் செய்துவிட்ட ரைஸாவின் பெயரில், ஒரு போட்டோ எடிட்டர் ஆப். இந்த அப்ளிகேஷனில் புகைப்படத்தை அப்லோடு செய்தாலே போதும், அதுவாகவே நம் முகத்தை அரவிந்த் சாமி கலருக்கு மாற்றிக்கொடுக்கும். யா...யா...

ஆரவ் ஃபிட்னஸ் ஆப் :

எந்நேரமும் தம்புள்ஸும் கையுமாகத் திரியும் ஆரவ்வின் பெயரில் ஃபிட்னஸ் ஆப் ஆரம்பிப்பதுதான் சரியானதாக இருக்கும். நீங்கள் எந்த வேளையில் எவ்வளவு நேரத்துக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எந்தெந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆப் சொல்லிவிடும். மேலும், 'மருத்துவ முத்தம் கொடுப்பது எப்படி?' போன்ற மருத்துவ டிப்ஸ்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் பெறலாம். யோகா மற்றும் முட்டை பற்றிய தகவல்களை கணேஷ் கண்கட்டு முட்டை அப்ளிகேஷனில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

சினேகன் ஹக் இட் : 

ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ள பயன்படும் ஆப், இந்த சினேகன் ஹக் இட். தேவதையின் படத்தை லோகோவாகக் கொண்ட இந்த அப்ளிகேஷனை க்ளிக்கி விட்டு, எந்த மொபைலிலிருந்து ஃபைல்களைப் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்களோ, அந்த மொபைலை உங்கள் மொபைலால் `டச்' செய்தாலே போதும். தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஃபைல்கள் டிரான்ஸ்ஃபர் ஆகிவிடும். 

ட்ரிக்கர் சக்தி மற்றும் நமீதா டிரான்ஸ்லேட்டர் :

இது ஒரு ஷூட்டிங் கேம் அப்ளிகேஷன். இந்த கேமில் நம் சங்கை கடிக்க வரும் ஸோம்பிக்களை நோக்கி, ட்ரிக்கரை அழுத்தி போட்டுத்தள்ள வேண்டும். அவ்வளவுதான் ரொம்ப சிம்பிள். அடுத்ததாக, நமீதா ட்ரான்ஸ்லேட்டர் ஆப். சரி என்பதற்கு ஆமாங்க, நல்லாருக்கு என்பதற்கு நைஸ் இருக்கு, சுயமரியாதை என்பதற்கு சொரனி, ஜிஞ்சர் என்பதற்கு இஞ்சி போன்று மொழிமாற்றம் செய்து கொடுக்கும் இந்த ஆப், ரொம்ப நைஸ் ஆப்.