Published:Updated:

சங்கராபரணம் டு அண்ணி பயணம்... சுவாரஸ்யம் சொல்கிறார் ராஜலட்சுமி!

கு.ஆனந்தராஜ்
சங்கராபரணம் டு அண்ணி பயணம்... சுவாரஸ்யம் சொல்கிறார் ராஜலட்சுமி!
சங்கராபரணம் டு அண்ணி பயணம்... சுவாரஸ்யம் சொல்கிறார் ராஜலட்சுமி!

"80-கள்ல பல மொழிகளிலும் சூப்பர் ஸ்டார்களா திகழந்தவங்களுக்கு ஜோடியா நடிச்சேன். அப்புறம் இளைய தலைமுறை சூப்பர் ஸ்டார்களுக்கு அம்மாவா நடிச்சேன். இப்போ சீரியல்ல நடிச்சு மக்கள் மனசுல இடம்பிடிச்சிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை ராஜலட்சுமி. சன் டிவி 'தெய்வமகள்' சீரியலில் அன்னப்பூரணியாக நடித்து நெகிழச்செய்தவர், இப்போது விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியலில் நடித்துவருகிறார்.

"மாஸ் ஹிட் அடித்த, 'சங்கராபரணம்' படத்தில் அறிமுகமானது எப்படி?"

"பிறந்து வளர்ந்ததெல்லாம், ஆந்திராதான். எங்கக் குடும்பத்துல யாரும் சினிமாவுல இல்லை. புகழ்பெற்ற இயக்குநரான விஸ்வநாத் சார், 'சங்கராபரணம்' படத்துல நடிக்க வைக்க ஒரு புதுமுக நடிகையை தேடிட்டு இருந்தாங்க. நிறைய புதுமுகங்களைப் பார்த்திருந்தாலும், அந்தச் சாரதா கேரக்டருக்கு அவர் நினைச்ச மாதிரி யாரும் அமையலை. அந்த நேரத்துலதான் பாவாடை தாவணியோடு என்னை பார்த்தவரு, 'கதைக்கு இந்தப் பொண்ணுதான் சரியா இருக்கும்'னு சொல்லி எந்த டெஸ்டும் இல்லாம, 15 வயசுப் பொண்ணான என்னை அந்தப் படத்துல ஹீரோயினா நடிக்க வெச்சாரு. 

அந்தப் படத்துல தம்புராவைப் பிடிச்சு, பாட்டுப் பாடிகிட்டு இருக்குறமாதிரி நிறைய காட்சிகள்ல நடிச்சிருப்பேன். அதனால அப்போ எனக்கு நிஜமாவே மியூசிக் தெரியும்னு பலரும் நினைச்சுட்டு இருந்தாங்க. ஆனா, எனக்கும் இசைக்கும் சுத்தமா தொடர்பே இல்லை. சினிமாவைப்பத்தி எதுவுமே தெரியாட்டியும், விஸ்வநாத் சார் சொன்னதைக் கேட்டு அப்படியே நடிச்சேன். அந்தப் படம் பல மொழிகள்லயும் ரிலீஸாகி, இந்தியா முழுக்க மாஸ் ஹிட்டடித்து, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு. ஒரு அறிமுக நடிகைக்கு, இவ்வளவு பெரிய புகழ் கிடைச்சிருக்கேனு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன்."

"ரஜினியுடன் 'மூன்று முகம்' படத்தில் நடித்த அனுபவம்?"

" 'சங்கராபரணம்' படத்துக்குப் பிறகு தென்னிந்திய மொழிகள்ல வரிசையா வாய்ப்புகள் வந்துச்சு. தமிழ்ல 'மூன்று முகம்'தான் என்னோட மூணாவது படம். ரஜினிகாந்த் சார் அப்போவே பெரிய ஸ்டார். அவரோட அந்தப் படத்துல ஜோடியா நடிச்சேன். 'நான் செய்த குறும்பு, உண்டாச்சு கரும்பு'னு நாங்க ஆடிப்பாடின டூயட் பாட்டு, பெரிய ஹிட். அந்தப் படத்துக்குப் பிறகு நான் எங்கப் போனாலும், 'அண்ணி வர்றாங்கடா'னு புகழ் மழைதான். அடுத்து 'கைக்கொடுக்கும் கை' படத்துலயும் ரஜினி சாருடன் நடிச்சேன். சமீபத்துல ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல அவரை சந்திச்சேன். இவ்வளவு வருஷம் கழிச்சுப் பார்க்கிறப்போக்கூட, ஆரம்பத்துல பழகின மாதிரியே சிரிச்சுப் பேசி கலகலப்பாக்கினார். 'நான் உங்ககூட நடிச்சிருக்கேன்'னு சொல்ல நினைக்கிறேன்... அதுக்கு முன்னாடி, 'நாம ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சிருக்கோமே. நியாபகம் இருக்கா'னு என்கிட்டக் கேட்டு ஆச்சர்யப்படவச்சாரு. அவர்கூட நடிச்ச எல்லா ஆர்டிஸ்டுங்ககூடவும், எப்பயுமே நல்லாப் பேசுவாரு."

"ரீ-என்ட்ரில விஜய், அஜித் கூட நடித்தீர்களே..."

(சிரிப்பவர்) "தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினா நிறைய படங்கள்ல நடிச்சேன். 90-களின் தொடக்கத்தில் எனக்குக் கல்யாணமானதும் நடிக்கிறதை சுத்தமா நிறுத்திட்டு சிங்கப்பூர்ல செட்டில் ஆனேன். 2000-ம் வருஷத்துக்குப் பிறகுதான் இந்தியா வந்தேன். அந்தச் சமயத்துல எனக்கு ஆக்டிங் வாய்ப்புகள் வந்துச்சு. ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கப் போனதால, புது அனுபவமாகத் தோணுச்சு. அப்படி என்னோட முதல் ரீ-என்ட்ரி படம்தான், 'திருப்பாச்சி'. நடிகர் விஜய்க்கு அம்மாவா அந்தப் படத்துல நடிச்சேன். அடுத்து 'திருப்பதி' மற்றும் 'வரலாறு' படங்கள்ல அஜித்குமாருக்கும், 'உத்தமபுத்திரன்' படத்துல தனுஷூக்கும், 'யாரடி நீ மோகினி'யில நயன்தாராவுக்கும்னு பல படங்கள்ல அம்மா ரோல்ல நடிச்சேன். நான் ஹீரோயினா நடிச்சப்போ, ரஜினி உள்ளிட்ட அப்போதைய பெரிய ஸ்டார்களுக்கு ஜோடியா நடித்தது போல, அடுத்து இந்தத் தலைமுறை சூப்பர் ஸ்டார்களுக்கு அம்மாவா நடிக்கிறோமேனு பெருமைப்படுவேன்."

"சினிமா டு சீரியல் அனுபவம்..."

"சன் டிவி 'மேகலா'தான் என்னோட முதல் சீரியல். அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கும்படியான சீரியல் வாய்ப்புகளும் வந்துட்டுதான் இருக்குது. அப்படி 'தெய்வமகள்' சீரியல்ல மூணு பொண்ணுங்களோட அம்மாவாவும், கணவர் இல்லாத குடும்பத்தை தலைமையேற்று வழிநடத்திக் கொண்டுபோகுறமாதிரியும் நடிச்சது... இல்லை நிஜமாவே அந்தச் சம்பூரணம் கேரக்டர்ல வாழ்தேன்னு சொல்லலாம். கிளிசரினே இல்லாம நிஜமாவே அழுது,  நடிச்சதெல்லாம் சவாலான அனுபவம். சினிமாவுல பல கேரக்டர்கள் வரலாம். ஆனா, அதைவிட சீரியல்ல சவாலான கேரக்டர்கள்ல நடிக்கும் வாய்ப்பு ரொம்ப அதிகமாகக் கிடைக்குது. அதுவும் தினமும் போராட்டக் களமான நம்ம எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கிற மாதிரி நடிக்கிறதால, தினமும் ரசிகர்கள் நம்மைப் பார்த்துகிட்டே இருக்காங்க. அதோடு, அவங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சு வெளியிடங்களுக்குப் போறப்போ பாராட்டிப் பேசுவாங்க."

"இப்போ, 'ராஜா ராணி' சீரியல்ல கொஞ்சம் நெகட்டிவ் ரோல் தென்படுதே..."

" 'ராஜா ராணி' சீரியல்லேயும் பையன் மேல அளவில்லாத அன்பை வெச்சிருக்கிற பாசிட்டிவ் அம்மா ரோல்தான். தன் பையனுக்கு ஆசையாய் கல்யாணம் செய்யலாம்னு நினைச்சுகிட்டு இருக்க, பையன் இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டிய சூழல். அதைத் தாங்கிக்க முடியாம, கொஞ்சம் கோபமா நடந்துக்கிற மாதிரி நடிக்கிறேன். அது பார்க்கிறப்போ நெகட்டிவ் மாதிரி தெரியும். போகப்போக, அன்பான அம்மாவா எல்லோரையும் பாராட்டவைப்பேன்" எனப் புன்னகைக்கிறார், ராஜலட்சுமி.