Published:Updated:

''பிக்பாஸில் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - மகன் பற்றி மனம் திறக்கும் வாசு #BiggBossTamil #VikatanExclusive

வே.கிருஷ்ணவேணி
''பிக்பாஸில் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - மகன் பற்றி மனம் திறக்கும் வாசு #BiggBossTamil #VikatanExclusive
''பிக்பாஸில் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - மகன் பற்றி மனம் திறக்கும் வாசு #BiggBossTamil #VikatanExclusive

பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்து தமிழக மக்களிடையே பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம், ஆரவ் ஓவியாவுக்குத் தந்த மருத்துவ முத்தம் தொடங்கி, சக்தியிடம் அரசியலுக்கு வரவேண்டும் என்று கமல் சொன்னது வரைக்கும் இன்னும் சுவாரஸ்யத்தோடு கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், சக்தி ஓவியாவிடம் கோபப்பட்டு கை ஓங்கியது, அவருடைய மனநிலை எப்படியிருக்கிறது, அவரின் ஒரிஜினல் கேரக்டர் என்ன என்பது குறித்தெல்லாம் அவருடைய குடும்பத்தாரிடம் பேசினோம், முதலில் பேசியவர் சக்தியின் மனைவி ஸ்மிர்த்தி, 

உங்கள் கணவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி?

''என் கணவருக்கு பிக் பாஸிலிருந்து அழைப்பு வந்தபோது, நான்தான் அவரை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சொல்லி ஊக்கப்படுத்தினேன். அந்த நிகழ்ச்சியை எப்படிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்கிற தயக்கம் பொதுவாகவே எல்லோருக்குமே இருந்திருக்கும். எங்களுக்கும் அதே மனநிலை இருந்தது. மேலும், என் கணவர் கமலின் தீவிர ஃபேன். அவர் ஆசைக்காகவாவது அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லணும்னு நினைச்சேன். மேலும், அந்த நிகழ்ச்சி மூலமாக நிறைய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மை கிடைக்கும் என்பதையெல்லாம் சொல்லித்தான் அவரை அனுப்பிவச்சேன்''. 

இவ்வளவு நாள் அவரைப் பார்க்காமலும், பேசாமலும் இருப்பதை எப்படி எடுத்துக்கிறீங்க?

''எல்லோருக்குமே  பார்க்க முடியலையேங்கிற ஃபீலிங் இருக்கும். அது எனக்கும் இருக்கச் செய்தாலும், அதையெல்லாம் ஸ்போர்ட்டிவாக எடுத்துட்டு இருக்கேன். எங்களுக்குத் திருமணமாகி, பத்தாவது நாள் ஒரு படத்திற்கான ஷூட்டிங் போயிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட் போன இடம் இன்டர்நெட், நெட்வொர்க் என எதுவும் கிடைக்காத ஏரியா. தலதீபாவளிகூட எங்களால கொண்டாட முடியல. நாற்பத்தைந்து நாள்களுக்குப் பிறகுதான் வந்தார். அந்த இடைபட்ட காலத்தில், ஒருத்தருக்கொருத்தர் மீது இருந்த அன்பு அதிகமாகியிருந்தது''. 

உங்கள் மகன் ஹர்ஷத் சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறாரா?

''வீட்ல நாங்க ஏதாவது ஒரு வேலையாக இருந்தால்கூட, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்துக்கு, ஹர்ஷத்  டி.வி முன்னாடி ஆஜர் ஆகிடுவான். ’அப்பா வருவாரு.. டி.வி போடுங்க'னு சொல்லுவான். மத்த நேரங்களில் 'அப்பா எங்கம்மா'னு கேட்கும்போது, ஷூட்டிங் போயிருக்காரு.. வந்துடுவாருனு சொல்லுவேன்'' என்றவரைத் தொடர்ந்து பேசினார் சக்தியின் அப்பா பி.வாசு.

உங்கள் மகன் சக்தியைப் பார்க்க முடியாத இந்த நாள்கள் பற்றி?

''சக்தி எப்படி அவன் மகனை நினைத்துப் ஃபீல் பண்றானோ.. அதே மாதிரிதான் நானும் என் மகனைப் பார்க்க முடியலங்கிற ஃபீலிங்ல இருக்கேன். கேமரா இருக்கிறதால அவனுடைய எமோஷனல் எங்களுக்குத் தெரியுது. ஆனால், அவன் மனைவி, நாங்களாம் ஃபீல் பண்றத கேமரா இல்லாததால காட்ட முடியல. 'அப்பா எங்கப் போயிருக்காருனு என் பேரன்கிட்ட ஒரு நாள் கேட்டேன். 'அப்பா என்னை மாதிரியே வின் பண்ணிட்டு வருவாரு'னு சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் கூட எவ்வளவு கான்ஃபிடன்டா இருக்காங்க. சக்தி நிகழ்ச்சிக்குப் போறதைக்கூட கடைசி நிமிஷத்தில் சொன்னான். இந்தி, ஆங்கிலம் என எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை. ஆரம்பத்துல எனக்கு ஒண்ணுமே புரியல. இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறதுனு புரியறதுக்கே பல நாள்கள் ஆச்சு. அதுக்கப்புறம், இப்போ உண்மையில் இப்படித்தான் நடக்கிறதுனு மக்களும் புரிஞ்சுக்கிட்டாங்க.''

கடந்த வாரம் கமல் உங்கள் மகனைப் பார்த்து 'நீங்களாம் அரசியலுக்கு வரணும்'னு சொன்னாரே..?

''கமல் ரொம்ப அழகா ஒரு இடத்தில் சொன்னார், 'நீங்களும் திருடன்னு சொன்னதும் கண்கலங்கினீங்கல்லியா?'னு. அப்போ, சக்தி, 'தலைவனாகவும் இருந்திட்டு, திருடனாவும் இருக்கச் சொன்னா என்னால எப்படிங்க இருக்க முடியும்'னு கேட்டான். அப்போ அவர் என்ன சொன்னார்னா, 'நீங்களாம் அரசியலுக்கு வரணும்'னு சொன்னார். தட் ஈஸ் கால்டு நல்ல அரசியல். கமல்ஹாசன் நல்ல அரசியல் வேணும்னு நினைக்கிறார். நீ தலைவனாகவும் இருந்து, திருடனாகவும் வேஷம்  போடுறதுனு சொன்னியே அதனால அரசியலுக்கு வா.. அரசியல்ல இருக்கும்போது தப்புப் பண்ணா கேட்கக் கூடிய ஆள்னு அர்த்தம். இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது. 'நீ பொய் சொல்ற, மேனிபுளேட் பண்ற'னு சொல்லிட்டு, நீ அரசியலுக்கு வரணும்னு கமல் சொல்லியிருந்தா அதுதான் தப்பு.  சக்தி கன்ஃபெஷன் ரூமுக்குப் போறதுக்கு முன்னாடியே ஒரு டயலாக் சொல்றார் கமல். அதாவது, மருத்துவ முத்தம்னு. அதை கேட்காமலே, சக்தி உள்ள வந்துட்டான். சக்தி உள்ளே வந்ததும், ஆரவ் சொன்னது புரிஞ்சுதானு கேட்டாரு, 'மருத்துவ முத்தம்ங்கிறது, மெடிக்கல் கிஸ் எனச் சொன்னார். இதெல்லாம் நீங்க கமலை ஷார்ப்பா புரிஞ்சிருந்தாதான் சில விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். கமல் மிக அட்வான்ஸ்டு பர்சன். படங்களாகட்டும், அவருடைய எண்ணங்களாகட்டும் அதை ஃபாலோ பண்ணாதான் உங்களுக்குப் புரியும். எனக்குப் புரிஞ்சதை வச்சு நான் சொல்றேன். தப்பை தப்புனு சொன்னார், ரைட்டை ரைட்டுனு சொன்னார். அதே மாதிரிதான் சக்தியும். ஹி ஈஸ் எ ஃபைட்டர். யாரையும் ஹார்ம் பண்ணமாட்டான்.’’

சக்தி, ஓவியாவை ஒரு முறை கை ஓங்கி அடிக்கப் போனாரே ?

''நான் எல்லா எபிசோடுகளையும் பார்க்கிறது இல்ல. என் வேலை அப்படி. இதைக் கேட்டதும்  எனக்கே கொஞ்சம் ஷாக்காகிடுச்சு. ஆக்‌ஷன்ல அடிப்பேனு சொன்னதக்கூட மறந்திடலாம். சொல்லாலக் காயப்படுத்தக் கூடாது. சக்தி சொல்லால காயப்படுத்தலனு நினைக்கிறேன். மத்தவங்க மேல மரியாதை எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா வைப்பான். கோபத்தில் வார்த்தையைவிட்டுட்டு, 'இப்படி சொல்லிட்டமே' அப்படினு ஃபீல் பண்ணுவான். அந்த நிகழ்வுக்குக் கூடப் ஃபீல் பண்ணான். சில நேரங்களில் சிலருக்கு, ரியாலிட்டி ஷோக்களில், இது ஷோ என்பதை மறந்து, நம்ம வீட்ல நடந்துக்கிற மாதிரி நம்மளையும் மீறி வந்துவிடும். அதை டெலிகாஸ்ட் பண்ணும்போதுதான் நம்ம தப்புத் தெரியும். சக்தி, தான் சொன்னதையோ, செய்ததையோ ‘நான் பண்ணல’னு சொல்ல மாட்டான். அதை ஒத்துக்கிட்டு, இதனாலதான் அந்த நேரத்தில் அப்படி நடந்துக்கிட்டேனு சொல்லுவான்.’’

ஆனால், சக்தி ஓவியாவிடம் அந்த நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கேட்கலையே?

’’ஓவியா வெளியில் கிளம்பினப்பக் கூட ‘திரும்பிப் பார்த்தால் மன்னிப்பு கேட்கலாம்னு நினைச்சேன்'னு சொல்லியிருக்கானே. தவறுனு உணரக்கூடிய ஆள். சண்டை போடுறதுக்கும், ஹார்ம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு வார்த்தை என்பது யாரும் மறக்க முடியாத விஷயம். இரண்டு அடி அடிச்சாக் கூட மறந்து போயிடும். பழிவாங்குவது, பொய் சொல்வது என எதுவுமே அவனுக்குத் தெரியாது. எனக்குத்தானே நடந்தது விட்டுடுங்க'னு ஏதாவது பிரச்னையில் நான் கோபப்பட்டாகூட என்னை கன்ட்ரோல் பண்ணுவான். இதுவரைப் பார்த்த வரைக்கும், ஓவியா விஷயத்தில் மட்டும்தான் எமோஷனலாகிட்டான். மத்தப்படி யார்கிட்டையும் அந்த மாதிரி நடந்துக்கல. இவங்கக்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டு, மத்தவங்ககிட்ட ஒரு மாதிரி பேச மாட்டான். அவன் அவனாக நடந்துகிட்டான். நீங்க பார்த்தீங்கனா தெரியும்.’’

காயத்ரி, சக்தி எப்பவும் ஃப்ரெண்ட்லியாகவே இருக்கிறார்களே? 

''ரகு மாஸ்டர் பொண்ணுங்கிறதால, சின்ன வயசுல இருந்து இரண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். நல்ல ஃப்ரெண்ட்ஸ். நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்க-ங்கிறதால, அப்படி பழகிட்டு இருந்தான். ஒரு இடத்துல, 'இனிமே யார் பேச்சையும் கேட்கக் கூடாது. நமக்கு என்ன தோணுதோ அதன்படி நடந்துக்கணும்'னு அவன் சொன்னதா சொன்னாங்க.’’

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் குடும்பத்தோடு பார்ப்பீங்களா?

’’சில நேரங்களில் கமல் தொகுத்து வழங்கிற வார இறுதி நாள்களின் ஷோவை கண்டிப்பாகப் பார்த்துடுவேன். சனிக்கிழமை இல்லனா, ஞாயிற்றுக்கிழமையாவது பார்த்துடுவேன். என் தொழில் அப்படி. நிறைய விஷயங்களை கேள்விப்பட்டுதான் சொல்றேன்.’’ 

கமல் எனக்கு மிகப்பெரிய ரோல் மாடல்னு சக்தி சொல்லியிருந்தாரே?

’’உண்மையான ஃபேன் அவன். 'விருமாண்டி' படம் வந்தப்போ மீசை எல்லாம் அதே மாதிரி வச்சிருந்தான். 'ஆளவந்தான்' வந்தப்போது, 'மொட்டை அடிச்சுட்டு' போட்டோலாம் எடுத்தான். நான் கூப்பிட்டு, 'உனக்கு என்ன ஆச்சு..ஏன் இப்படிப் பண்றே'னு கேட்டேன். எனக்கு அந்த போட்டோ எடுக்கிறதப் பார்த்துட்டு சிரிச்சுட்டேன். 'முழுக்க மொட்டை அடிச்சுட்டான். ஷேவ் பண்ணிட்டான். அதே போல் கமல் படம் ரிலீஸ் ஆனா எல்லாப் படத்துக்கும் ஓடிப் போயிடுவான். அவர் எப்படிப் பேசுவாறோ அதே மாதிரி பண்ணுவான். நடந்துப்பான். நாங்க எப்படி அந்த காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி இருந்தோமே.. அந்த மாதிரி அவன்.’’ 

சக்தியின் தலைவர் பதவி பற்றி?

’’அவனுக்கு தலைவர் என்கிற பொறுப்பை கொடுத்திருக்கக் கூடாதுனு நினைக்கிறேன். ஏன்னா, அதை வச்சுட்டு , தப்புப் பண்ணிடுவோமோங்கிற பயம் வந்துடுச்சு. அவன் பயந்து பயந்தே ஒரு மாதிரி ஆகிட்டான். அந்த டைம்லதானே, ஓவியாக்கிட்ட பிரச்னை வந்தது. அந்த டைம்ல வந்துட்டு இருந்த கேம் மாதிரி போயிட்டு இருந்த இந்தப் புரோகிராம் இன்னும் நல்லா இருந்திருக்கும். விளையாட்டா, அழகா, ஜாலியா இருந்தது. அப்படியே இருந்திருக்கலாம்.’’ 

நீங்கள் கமலை வைத்து ஏன் படம் பண்ணவில்லை?

’’கமலை வைத்துப் படம் எடுப்பதற்காக  ஏ.வி.எம், சிவாஜி புரொடக்‌ஷன்ஸ், மிசிரி புரொடக்‌ஷன்ஸ் என மூன்று வாய்ப்புகள் வந்தது. சப்ஜெக்ட், என்னுடைய டைம், அவருடைய டைம் மூணும் ஒண்ணு சேர முடியாததால அந்த வாய்ப்பு நழுவிப் போயிடுச்சு.  இன்னும் சொல்லப் போனா, பிரபு மாதிரி, முதல் ஃப்ரெண்ட் அவர்தான். சந்தானபாரதியும், கமலும் நல்ல ஃப்ரெண்ட். என்னைப் பாரதியாகவே ட்ரீட் பண்ணார். அப்போதான், என்னையும், பாரதியையும் கார்ல ஏத்திட்டுப் போவார் கமல்.  அவரைப் பார்க்கும்போதெல்லாம் அதுதான்  ஞாபகத்துக்கு வரும். 'பன்னீர் புஷ்பங்கள்' படம் பண்ணினப்போது, கதைக்கான டிஸ்கஷன் அவர் வீட்லதான் பண்ணோம். சாருஹாசன் மனைவியை கமல் மன்னினு கூப்பிடுவார். அவர் கூப்பிடுறதால, நாங்களும் அவரை மன்னினுதான் கூப்பிடுவோம்.  அந்தளவுக்கு க்ளோஸ். தினமும் அவர் வீட்லதான் லஞ்ச் சாப்பிடுவோம். இடைப்பட்டக் காலத்துல என்னால அவரை வச்சுப் படம் பண்ண முடியலையே தவிர, மத்தபடி அவர் அவ்வளவு நெருக்கம். நான் எப்போ போன் பண்ணாலும் அடுத்த நிமிஷம் 'வாங்க'னு கூப்பிடுவார்”.