Published:Updated:

அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate
அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate

அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

பிக்பாஸ் வீட்டில் திருப்பள்ளியெழுச்சிக்கு ஏன் எப்போதும் சமகால திரையிரைசப்பாடல்களே ஒலிபரப்பாகின்றன? முந்தைய தலைமுறையைச் சார்ந்த பாடல்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் இப்படியா? சற்று கற்பனை செய்து பார்ப்போம். ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.வி பாடலுக்கு ஓவியாவின் நடனம் எப்படியிருக்கும்?

பிக் பாஸ் காதில் எனது மனவோட்டம் சென்று சேர்ந்து விட்டதோ, என்னமோ, ரீமிக்ஸாக இருந்தாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இருந்து ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ பாடலை ஒலிக்க விட்டார். 


வழக்கம் போல் அதேதான். சூரியன் இல்லாத பிரபஞ்சம் போல ஓவியாவின் இருப்பும் நடனமும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கிறது பிக் பாஸ் வீடு. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ). 

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்கிற பாடல் வரிகள் கூட ஓவியாவை குறிப்பது போலவே இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருக்குமே.. ஓவியாவைப் போல காலைப்பொழுதை உண்மையான உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.. சோர்வாக எழாதீர்கள் அல்லது உற்சாகமாக இருப்பது போல் நடிக்க செய்யாதீர்கள்’ என்று சொல்ல வருகிறார்களோ, என்னமோ. (போய்த்தான் பார்ப்போமே)

**

‘சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும்’ சப்பாணி போல நேற்று வரை ‘வீட்டுக்குப் போகணும்’ என்று அனத்திக் கொண்டிருந்த வையாபுரி, மயில் தந்த உற்சாகத்தில் சப்பாணிக்கு திடீர் வீரம் வந்தது போலவே திடீர் மனமாற்றத்துடன் நூறு நாட்களை இங்கேயே கழித்து விடுவது என முடிவு செய்து விட்டார். இந்த மாற்றத்தின் பின்னணி என்னவென்று தெரியவில்லை. ‘இங்க ரேஷன் கார்டு பிரச்னை, ஆதார் கார்டு பிரச்னை’ன்னு நெறய ஓடிட்டு இருக்கு. நீங்க பேசாம அங்கனயே இருந்துட்டு வாங்க’ என்று வீட்டம்மணி தகவல் அனுப்பி விட்டார்களோ, என்னமோ. நேற்று சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு மட்டும் லக்ஸரி பொருட்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டது. ரைசாவின் கையெழுத்து அவரைப் போலவே அழகாக இருக்கிறது. (ரைசா பேரவையின் முதல் உறுப்பினர்) கடலை மிட்டாய் எல்லாம் லக்ஸரி பட்ஜெட்டில் வருமா, என்ன? GST வந்தவுடன் விலையேறி விட்டதோ? 

தன்னுடைய காலையுணவு வந்தவுடன் ‘ப்ரோ.. இதுல 2 முட்டை போட்டீங்கதானே’ என்று கேட்டு கணேஷ்  உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சாப்பிடத் துவங்கினார். ப்பா.. என்னவொரு தெளிவு!இதனால் அறியப்படுவது யாதெனில் கணேஷ் இனி திருந்துவது என முடிவு செய்து விட்டார். அவரது மனைவியின் உபதேசத்தைக் கேட்ட பிறகு இந்த மாற்றம். வீட்டில் ‘மீனாட்சி’ ஆட்சி போலிருக்கிறது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒவ்வொரு சாவி இருக்கிறது. சரியான சாவியைத் தேடாமலிருப்பதுதான் பிரச்னை. இதுநாள் வரை மற்றவர்கள் ஜாடை மாடையாக சொல்லுவதையெல்லாம் கவனிக்காதது போல் இருந்தவர் வீட்டிலிருந்து வந்த சில நிமிடத்துண்டு உபதேசத்திற்கு (கட்டளைக்கு ?)  எத்தனை முக்கியத்துவம் தருகிறார்? வெளியில் வீறாப்பாக திரிந்தாலும் இந்த கணவர் சமூகம் பெரும்பாலும் சரணாகதி கோஷ்டிதான் போலிருக்கிறது. 

அல்லது இப்படியும் இருக்கலாம். ‘என்னய்யா . இவ்ள சம்பளம் கொடுத்துட்டு.. அவரால எந்தவொரு சென்ஷேனல் ஃபுட்டேஜூம் கெடைக்கலை. காமிரா கண்ல படாம யோகா பண்றன்னு எங்கயாவது உட்கார்ந்து தூங்கறாரு, ஏதாவது பண்ணுங்க’ என்று பிக் பாஸ் மற்றவர்களுக்கு சூசகமாக உத்தரவிட்டாரோ என்னமோ. 

‘என்கிட்ட என்னென்ன பிரச்னைன்னு சொன்னீங்கன்னா.. சரி செய்துவிடுவேன்” என்று  தன் குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அடப்பாவி! அப்ப இத்தனை நாள் மத்தவங்க ஜாடையா சொன்னதெல்லாம் காதில் விழாத மாதிரியே நடிச்சிருக்காரு, மனுஷன். கணேஷின் பிரியமான நண்பரான வையாபுரிதான் இந்தப் பஞ்சாயத்தை துவக்கி வைத்தார். “இவன் தொடர்ச்சியா 3 சீசனுக்கு கூட தாங்குவான் போலிருக்கு. அத்தனை ஷூ, டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கான். அப்படியே போட்டு வெச்சிருக்கான். கொசு வேற புடுங்கியெடுக்குது. (என்னது! பிக்பாஸ் வீட்டில் கொசுவா? ஐயகோ.. எனில் ஓவியா காயத்ரி குழுவைத் தவிர நிஜகொசுக்களுடன் அத்தனை நாட்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாரா? ஓவியப்படைக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் இன்னமும் மனம் நொந்திருப்பார்களே)

வையாபுரியுடன் மற்றவர்களுடன் இணைந்து புகார்ப்பட்டியலை வாசித்தார்கள். ‘ந்தா பாருப்பா.. நீயுண்டு உன் முட்டையுண்டு –ன்னு ஒரு பறவை போல வாழறே.. இங்க கொலையே நடந்தா கூட கமுக்கமா யோகா பண்றேன்னு பேர்வழி-ன்னு ‘அப்பா’ திரைப்படத்துல வர்ற பையன் மாதிரி, ‘நாலு பேர் கண்ல விழாம சும்மா இருப்போம்’ ன்ற மாதிரியே இருக்க.:”, மத்தவங்களுக்கு வேணுமே-ன்னு பார்க்காம.. முட்டை, சிக்கன்லாம் எடுத்து தின்னுப்புடற. ஷேர் செஞ்சு சாப்பிடுவோம்-னு உனக்கு தோண மாட்டேங்குது’. எத்தனை நாள்தான்யா நாங்களும் வலிக்காத மாதிரியே நடிக்கறதே.. எங்களுக்கு மேல நீயும் நடிக்கறே..” 
என்று பட்டியல் நீண்டது. ‘யார்ரா.. இவன்.. பனியன் விளம்பரத்துல வர்றவன் மாதிரியே இருக்கான்’ என்று சந்தானத்தால் திரைப்படக்காட்சியில் கிண்டலடிக்கப்பட்ட கணேஷ், இவற்றையெல்லாம் ஓர் ஆன்மிக புன்னகையோடு பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த விளையாட்டை சகிப்புத்தன்மையுடன் திறம்பட ஆடிக் கொண்டிருப்பவர்களில் கணேஷ் முதன்மையானவர். ஆனால் ‘கூடிவாழும் தன்மை’ எனும் நோக்கில் அவர் பிரச்னைகளில் இருந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ ரகுவரன் மாதிரி ஒதுங்கியிருப்பது மிக முக்கியமான குறை. சமூகப் பிரச்னைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் சுயநலம் பிடித்த மேல்தட்டு வர்க்க சித்திரம் கணேஷிற்குப் பொருந்துகிறது. 

**

ஆரவ், நெல்லை வழக்கு மாதிரி எதையோ பேசி சக்தியை கலாட்டா செய்து கொண்டிருந்தார். சக்தி குழந்தை மாதிரி அமர்ந்திருந்தார். ஆரவ் ஓவராக கிண்டலடித்த சமயத்தில் தாய்ப்பறவை மாதிரி உடனே ஓடி வந்து ஆரவ்வை விளையாட்டாக தடுத்தார் காயத்ரி. இவரிடம் எதிர்மறை குணங்கள் இருந்தாலும் தாய்மை சார்ந்த குணநலன்கள் இருப்பதைக் கவனிக்கலாம். ‘தனக்கான சாப்பாட்டுத் தேவை குறைவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சமைத்து தருவதை தடுக்கும் வகையில் சமையல் பொருட்களை கட்டுப்படுத்தும் taskகளை பிக்பாஸ் தந்த போது அவர் நேற்று சலித்துக் கொண்டதை கவனித்திருக்கலாம்..காயத்ரியும் சக்தியும் இணைந்து புறம் பேசிக்கொண்டேயிருப்பது ரசிக்கத்தக்கதல்ல என்றாலும் அவர்களுக்கு இடையேயான அன்பும் பாசப்பிணைப்பும், சக்தியின் கிண்டல் பேச்சுக்களை ரசித்து காயத்ரி கேட்கும் விதமும் சமயங்களில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி முதலில் வெளியேறினால், காய’த்ரி’ பிரிவு சோகத்தில் பாதியாகி காய ‘ஒன்றரை’யாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குழந்தையில்லா வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்த கதையாக, ஓவியா இல்லாத வீட்டில் இந்த இரண்டு பேரும் இணைந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

**

துணிகள் அனுப்பப்படுவதற்கான சைரன் ஒலித்தது. அவைகளை முதலில் பிடிப்பதற்காக சறுக்குப் பாதையின் மேலேயே ஏறி வசதியாக அமாந்து கொண்டார் ஆரவ். ‘நாங்களும் ஏற மாட்டோமா.. எங்களுக்குத் தெரியாதா’ என்றெல்லாம் சவடால் விட்ட சக்தி அதற்கு முயன்று ‘வழுக்குது’ என்று கைப்புள்ள வடிவேலு மாதிரி இறங்கி விட்டார். ‘இது என்ன சினிமா ஷூட்டிங்கா.. சக்தி ப்ரோ.. ஷாட்டை கட் செஞ்சி,. டூப்பை மேலே ஏற அனுப்புவதற்கு’. 

லாவகமாக மேலே ஏறி துணிகளைப் பிடித்துக் கொண்டிருந்த ஆரவ்வை பாசத் தூண்டிலால் மடக்க முயன்றார் எதிரணி காயத்ரி. ‘தம்பி.. இறங்கிட்றா’ 

‘இந்த அக்கா –தம்பி பாசத்தையெல்லாம் வீட்டிற்கு வெளிய வெச்சுக்கோ. கேம்னு வந்தா சீரியஸா இரு’ என்று உண்மையிலேயே சீரியஸ் ஆனார் ரைசா. மேக்கப் கிளியாக இருந்த ரைசாவிடம் எத்தனை முன்னேற்றம். காயத்ரிக்கும் இவருக்கும் இடையில் பகைமைக்கான மெல்லிய கோடு ஓடிக் கொண்டிருக்கிறது போல. எனில் அது சார்ந்த சண்டை வரும் வாரங்களில் நிச்சயம் நடக்கும். எனவே துண்டை விரித்துப் போட்டு அமர்ந்து ஆவலாக காத்திருக்கலாம். இதைப் போலவே சக்தி துணிகளை வேண்டுமென்றே நிராகரிக்கிறார் என்கிற வெறுப்புடன் சிநேகன் அடிபட்ட பாம்பு மாதிரி உலாவுகிறார். துணிகளைப் பிடித்துக் கொண்டு ஆரவ்வை ‘கிச்சு கிச்சு மூட்டி’ சக்தி இடையூறு செய்து விட்டார் என்கிற கோபம் வேறு அவருக்கு இருக்கிறது. எனவே சண்டை நிச்சயம் உண்டு. ஆண்டவன் நம்மை அப்படியெல்லாம் கை விட்டு விட மாட்டான். காத்திருப்போம். 

உடல்உழைப்பு சார்ந்த இந்த விளையாட்டை மிக உற்சாகமாக எதிர்கொள்கிறவர் ஆரவ் மட்டுமே. ரைசாவுடன் இணைந்து ஜாலியான கமெண்ட்டுகளாக சொல்லி அடி பின்னுகிறார். (கடவுளே.. அடுத்த குறும்படம் உருவாகும் அளவிற்கு நிலைமை போய்விடக்கூடாது).

**

“சின்ன வயசுலதான் அவ்ள கஷ்டப்பட்டோம். அந்தப் பலனுக்காக இப்ப சற்று வசதியான வாழ்க்கைக்குள் நுழைந்து விட்ட பிறகும் இது போல உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களில் கஷ்டப்பட வேண்டுமா’ என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசி ‘வலிக்காத மாதிரியே எவ்ளதான்யா நடிக்கறது” என்று வாய்விட்டு அழுதே விட்டார் வையாபுரி. மற்றவர்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை என்பதுதான் வித்தியாசம். ‘வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட இப்படி கஷ்டப்படுகிறார்களே’ என்று பக்கத்து இலைக்கும் பாயாசம் தேடிக் கொண்டார். 

‘கழிவறைக் கதவுகளை மூடி வைத்த விளையாட்டில்’ முன்பு ஆக்ரோஷமாக ஆட்சேபம் தெரிவித்தது போல இப்போதும் அவர் தெரிவித்திருக்கலாம். வையாபுரி போன்ற வயதான போட்டியாளர்களுக்கு உடல்உழைப்பு சார்ந்த task-ஐ பிக் பாஸ் தவிர்ககலாம். சக்திக்குப் பதிலாக வையாபுரிக்கு தரப்பரிசோதனையாளர் பாத்திரம் தந்திருக்கலாம். முதலில் இருந்து கவனித்தால், சக்தியும் காயத்ரியும் எப்போதும் ஓரணியில் இருப்பது போலவே அமைகிறது, இது தற்செயலா, திட்டமிடலா? மட்டுமல்லாமல் உடல் உழைப்பு அதிகமில்லாத பணிகள் மட்டுமே அவர்களுக்கு தரப்படுவது போலவே தோன்றுகிறது. ரைசா கருதுவது போல, Are they really an influence people in the industry? 

**

சக்தி விவரித்த நகைச்சுவையின் படி வீட்டிற்கு இடையில் கோடு கிழிக்கப்பட்டு தனித்தனி சமையல் நடைபெறுகிறது. ‘நம்ம வீட்டு சாம்பார் ஏன் பழசுன்னு அவங்க கிட்ட சொல்ற” என்று உண்மையான குடும்பத்தலைவி போலவே ஜோதியில் நன்றாக ஐக்கியமாகி விட்டார் ரைசா. மேக்கப் இல்லாமல் அவரை சேலையில் பார்க்க இளம்வயது சோனியா காந்தி ஜாடை தெரிகிறது. 

‘பேண்ட்ல பட்டன் இந்தப் பக்கம் இருக்கணுமா, கூடாதா” என்றொரு சீரியஸான லாஜிக் கேள்வியை கணேஷ் கேட்டுக் கொண்டிருக்க, பெண் பார்க்க வந்தது போல பிந்துமாதவி வெட்கப்பட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அம்மணி காமிராவில் படும் காட்சிகளே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இவர் ஓவியாவிற்கு பலத்த போட்டியாக இருப்பார் என்றெல்லாம் முதலில் பேசப்பட்டது. சிங்கம் மாதிரி உறுமுவார் என்று பார்த்தால் பூனையின் சத்தம் கூட இல்லை. ‘இவர் ஒரு மாதிரியாக விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தால், உளவியல் ஆலோசகருக்கு அடுத்த வேலை வந்து விடும் போலிருக்கிறது. ‘என் பொன்னான கைகள் புண்ணாகினாலும் பரவாயில்லை. உழைத்துக் கொண்டேயிருப்பேன்’ என்று பஞ்ச் டயலாக் பேசினார் காயத்ரி. செளகரியமாக சாய்ந்து கொண்டே அவர் இதைச் சொன்னதுதான் பயங்கர நகைச்சுவை. வையாபுரி கஷ்டப்படுவதை பார்க்க சகிக்கவில்லையாம். எனவே சக்தி அணி, லக்ஸரி பட்ஜெட்டை விட்டுத்தர முன்வந்து விட்டார்கள். 


உடல் உழைப்பை சார்ந்த இந்த task  எல்லோருக்குமே அதிக சிரமம் என்பதால் சொல்கிறார்களா, அல்லது வையாபுரியின் மீதான மட்டுமான அக்கறையில் உண்மையிலேயே விட்டுத்தருகிறார்களா என்று தெரியவில்லை. பின்னதுதான் காரணம் என்றால் மகிழ்ச்சி. விட்டுத்தருதல்தான் குடும்ப சுமூகமான இயங்குமுறைக்கு அடிப்படை காரணிகளில் ஒன்று. 

**

சக்தி தங்களின் கடுமையான உழைப்பை வேண்டுமென்றே நிராகரித்து விடுவாரோ என்று சிநேகன், ரைசா போன்றோர் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சக்தியும் அதற்கு ஏற்பவே துணிகளின் தரத்தை கறாராக ஆய்வு செய்து கொண்டிருந்தார். ‘நீங்க பாம் ஸ்குவாட்ல இருந்திருக்கணும் சக்தி. சரி.. நீங்க முடிச்சிட்டு நாளைக்கு சொல்லுங்க. நான் அதுவரைக்கும் தூங்கறேன்’ என்று அவருடைய நிதானத்தை கிண்டலடித்தார், வீட்டு விருந்தினர் பிந்துமாதவி.

ஆனால் சக்தி அப்படியெல்லாம் பழிவாங்கவில்லை போலிருக்கிறது. சிநேகனின் அணியே இன்றும் வென்று வெண்கல கோப்பையை கைப்பற்றியது. ‘பிக் பாஸ்.. எங்களாலும் முடியலை. அவங்களாலும்.. முடியல..இந்த துணி துவைக்கற task வேண்டாமே’ என்று சக்தி உருக்கமுடன் வேண்டிக் கொண்டார். ‘எங்களாலும் முடியல ப்ரோ.. நிகழ்ச்சி ரொம்ப மொக்கையா போகுது’ என்று நாமும் அவரிடம் சொல்லத் தோன்றியது. 

போட்டியாளர்களின் கண்ணீரைப் பார்த்த பிக் பாஸ் பெரிய மனதுடன் இந்தப் போட்டியை முடித்துக் கொண்டார். எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். நாமும். **

இந்தக் கொடுமை முடிந்து சற்று நிம்மதியாக இருக்கலாம் பார்த்தால் அடுத்து ‘பேய்க்கதைகள்’ சொல்லும் task-ஆம்…  .. முடியல.. வேணாம்.. வலிக்குது…. அழுதுடுவேன்’’…

பாலைய்யாவிடம் பேயக்கதை சொல்லும் ‘காதலிக்க நேரமில்லை’ ‘செல்லப்பா’ நாகேஷாக தங்களை நினைத்துக் கொண்டு மொக்கை போட ஆரம்பித்தார்கள் வையாபுரியும், ஆரவ்வும். வழக்கம் போல் ரைசா பயப்படுவது போல அதிக சீன் போட்டார். இதற்குத் தோதாக விளக்கையணைத்தார்கள். ‘அட்மாஸ்பியர்’ உருவாக்குகிறார்களாம். 

loading...இருவர் சொன்ன கதைகளிலுமே விடாப்பிடியாக நாய் வந்தது. பிக்-பாஸ் வீட்டில் அவர்கள் தூங்கும் போதெல்லாம் வந்து குரைத்து எழுப்பும் நாய் சார்ந்த ஆழ்மன பாதிப்பு அவர்களிடம் அதிகம் ஏற்பட்டு விட்டதோ. 

நள்ளிரவில் ஆண்கள் டீம் எழுந்து பெண்கள் அறைக்குள் சென்று பயமுறுத்தியதெல்லாம் மொக்கையான டிராமா. 

போதும் நிறுத்திக்குவோம். 

**

நாளைய பகுதியில் தான் கெட்ட வார்த்தைகள் பேசுவதைப் பற்றி காயத்ரி ஏதோ வாக்குமூலம் தருகிறார் போலிருக்கிறது. கோபமில்லாமல் கெட்டவார்த்தை கலக்காமல் அந்த வாக்குமூலம் அமைந்தால் நல்லது.  

நடைமுறையில் கூட கவனிக்கலாம். ‘அப்படி என்னடா நான் கெட்ட வார்த்தை பேசிட்டேன்..’என்று ஆரம்பிப்பவர்கள், தங்களையும் அறியாமல் வரிசையாக ஆபாச வசைகளை  இறைப்பார்கள். முரண்நகைக்கான உதாரணம் இது.
 

loading...


ஆணாதிக்கம்  அதிகமுள்ள துறையில் தான் பணிபுரிவதால் ‘கோபம்’ என்கிற குணாதிசயத்தை ஒரு முகமூடி போல உபயோகப்படுத்தி அதுவே பழகி விட்டது. அந்த வார்த்தைகளின் பொருள் அறிந்து மனதார உபயோகப்படுத்துவதில்லை’ என்று காயத்ரி சொல்வது சமாதானமா, டேமேஜ் கண்ட்ரோல் முயற்சியா, நடைமுறை சார்ந்த உண்மையா என்று தெரியவில்லை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு