Published:Updated:

பிக் பாஸில் நடப்பவை ஸ்கிரிப்ட் தானா? மற்ற மொழி பிக் பாஸ்களில் என்ன நடக்குது? #BiggBoss

பிக் பாஸில் நடப்பவை ஸ்கிரிப்ட் தானா? மற்ற மொழி பிக் பாஸ்களில் என்ன நடக்குது? #BiggBoss
பிக் பாஸில் நடப்பவை ஸ்கிரிப்ட் தானா? மற்ற மொழி பிக் பாஸ்களில் என்ன நடக்குது? #BiggBoss

பிக் பாஸில் நடப்பவை ஸ்கிரிப்ட் தானா? மற்ற மொழி பிக் பாஸ்களில் என்ன நடக்குது? #BiggBoss

பிக் பாஸ் பற்றிய உரையாடல் நிகழாத இடமே இல்லை என்பதுபோன்ற நிலை வந்துவிட்டது. கலாசார சீரழிவு என்று ஒரு பக்கம், பொழுது போக்குவதற்கான ஒரு நல்ல நிகழ்ச்சி என்று பக்கமும் விவாதிக்கின்றனர். இன்னும் சிலர் பிக் பாஸில் நடப்பவை எல்லாம் நிகழ்ச்சி நடத்துபவர்களின் ஸ்கிரிப்டில் உள்ளபடிதான் என உறுதியாக நம்புகின்றனர். உண்மையில் அப்படித்தானா... மற்ற மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் எப்படி நடக்கிறது எனப் பார்ப்போம். 

ஆங்கிலம் பேசிய பிக் பாஸ் பல வருடங்கள் முன்பே ஹிந்திக்கு வந்தாயிற்று. வெற்றிக்கரமாகப் பத்து சீசன்களைக் கடந்தும் விட்டது. சாதாரணமாக டாக் ஷோவில் கூட யார் பேச வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே மைக் கொடுக்கப்படுவதைக் கேள்வி படுகிறோம். அதிலும் வெட்டி, ஒட்டி எடிட் மாயாஜாலங்கள் முடிந்துதான் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது. ஒரு மணிநேரம் நிகழ்ச்சிகளுக்கே அப்படியெனில் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி என்றால் அல்வா சாப்பிடுவதைப் போல அல்லவா! 30 காமிராக்கள்.. 24 மணி நேரம்... ஆனால் காட்டப்போவது ஒரு மணி நேரம் மட்டுமே.

ஹிந்தியில் பத்து சீசன்கள் ஆகிவிட்ட நிலையிலும் சீரியல்போல இன்னமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கன்னட மொழியில் ஆறு பிக் பாஸ்கள் ஆகிவிட்டன. நான்காம் சீசன் பட்டையைக் கிளப்பியது. இங்கு ஆரவ், ஓவியா போல அங்கு புவன், சஞ்சனா ஜோடி. இன்றும் அவர்களுக்குள் உள்ள பிரச்னை ஓயவில்லை. அதைத் தவிர அந்த சீசன் டைட்டில் வின்னர் பிரீதமும் இதில் சிக்கிக்கொள்ள, முக்கோண காதல், நட்பு கதைகள் தொடர்கின்றன. அதிலும் சஞ்சனா சிறிய உடைகள் அணிந்தபோது, வம்புகள், பேச்சுகள் என்று பிரச்னை வளர்ந்தது. நிகழ்ச்சியில் நெறியாளர் சுதீப் (நான் ஈ வில்லன்) சஞ்சனாவைக் கண்டித்த சம்பவமும் உண்டு. மற்ற பிக் பாஸ் நெறியாளர்களை விட சுதீப் எதற்கும் தயங்குவதே இல்லை. முகத்திற்கு நேராகவே இது தவறு, சரி என்று சொல்லும் குணம் உள்ளதால் அவரைத் தவிர கர்நாடக மக்கள் வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. 

ஹிந்தி பிக் பாஸைப் பொறுத்தவரை அமிதாப் பச்சன், சஞ்சய் தத், ஃபாரா கான் என்று பலர் நடத்தினாலும் சல்மான்கான் சிக்ஸர் அடிக்கிறார். அங்கு அவருக்கே அதிக வரவேற்பு. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் இப்போது அதிக ஸ்கோர் அவருக்கே. தமிழில் கமலுக்கும் ஆரம்பத்தில் அந்தத் தடுமாற்றம் இருந்தது. இப்போது தேர்ந்த நெறியாளராக மாறிவிட்டார். 

பிக் பாஸில் நடப்பவை ஸ்க்ரிப்ட்தான் என்று சொல்லப்படும் விஷயத்துக்கு வருவோம். நமக்குத் தமிழ் பிக் பாஸில் சாக்லேட் மில்க் பிரச்னை வந்ததைப் போல ஹிந்தியில் நட்டெல்லா எடுத்து வைத்துக்கொண்டது நடந்தது. கன்னடத்தில் ஹுச்சா வெங்கட் ஒருமுறை பிரீதமை அடிக்கச் செல்ல, மற்றவர்கள் அதற்கு ஏதேதோ சொல்லி மழுப்ப நெறியாளர் சுதீப் கட் அண்ட் ரைட்டாக ஹூச்சா வெங்கட் மீது நடவடிக்கை இல்லாவிடில் பிக் பாஸ் விட்டு செல்வேன் என்று அவர் சொல்லும் அளவுக்குச் சென்றது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி, மன நிலையை மாற்றியமைக்கும் கேம் ஷோ. இதைப் பற்றி சரியாகப் புரிந்து கொண்டாலும் பிரச்னை. புரியாவிடிலும் பிரச்னை. நம் மனதைக் கையாள்வது பிக் பாஸா, கூட இருப்பவர்களா, நாமா என்று எதுவும் அதில் பங்கேற்பவர்களுக்குப் புரியாது. 

இங்கு மூன்றுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் டாஸ்க்குகள் எல்லாம் ஒன்றே. சைக்கிள் டாஸ்க் மூன்றிலும் உண்டு. அதுபோல, டாஸ்க் என்று பல விதங்களில் டிசைன் செய்து வைத்து உள்ளார்கள். அதை என்றைக்குச் செய்யவைப்பது எனத் தேர்ந்தெடுப்பது பிக் பாஸ் ஸ்க்ரிப்ட் டீம். அவர்களும் தவறான நேரத்தில் டாஸ்க்களைத் தேர்ந்தெடுப்பதும் நடப்பதுண்டு. ஜுலிக்கு கார்பெட் டாஸ்க் கொடுத்து ஓவியாவைச் சீண்டியதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஓவராய் செய்தால் ஊத்திக்கும் என்பது ஒரு சாம்பிள். ஏனென்றால் மனித மனதுடன் அளவாய் விளையாட வேண்டும். அதில் கவனமாக இருக்க வேண்டும். காயத்ரி, ஜூலி போன்ற கேரக்டர்கள் அனைத்து மொழி பிக் பாஸ்களிலும் எல்லா சீசனிலும் உண்டு. சொல்லிக் கொடுத்து கூட்டிவருகிறார்களா. இல்லை மனித மனதுக்குள் உள்ள இயல்பான புறம் பேசும் குணமா... என்று கண்டுப் பிடிப்பதில்தான் சிக்கல் நிலவுகிறது. ஸ்கிர்ப்ட் என்று சொல்பவர்களின் சந்தேகமும் இதுதான். அதெப்படி மூன்று மொழி மனிதர்களும் ஒரே போல் உள்ளார்கள் என்று நினைப்பதற்குக் காரணமும் இதுதான்.

அடுத்த ஒற்றுமை மூன்றிலும் தேர்ந்தெடுக்கும் முறை. ஏழு அல்லது எட்டு இள வயது நபர்கள். மெச்சூர்ட்டி அதிகம் இருக்காது. எளிதாக உணர்ச்சி வயப்படக்கூடிய பெண்கள் ஓரிருவர். வயதில் சற்று மூத்தவர்கள், பொருளாதாரத்திலும் மார்கெட் அளவிலும் இறக்கம் கண்ட பிரபலங்கள். திரையில் அறிமுகமாகியும் கவனிக்கப் படாதவர்கள். வயதானவர் ஒருவர் என ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் இந்த ஃபார்மலாதான். இவர்கள் ஒன்றாய் வசிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள்தாம் பிக் பாஸின் திரைக்கதை. 

அடுத்து, பரணி தப்பித்துச் சென்றதுப்போலவே ஹிந்தியில் நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே இருக்கும்போது மன அழுத்தம் தாங்காமல் வெளியேறி விட்டார்கள். ஹிந்தி பிக் பாஸின் போட்டியாளர் ஒருவரை மார்கெட்டில் சந்தித்த கதைகளும் உலவின. தமிழில், ஓவியா மருத்துவமனையில் இருப்பதாக வாட்ஸ் அப் பில் மார்பிங் புகைபடங்கள் பரவியதைப் போல. 
 
எல்லா மொழிகளிலும் அடிப்படையான ஒன்றைக் கவனிக்க முடிகிறது. அதுதான் ஹீரோ - வில்லன் கான்செப்ட். போட்டியாளர்களுக்குப் பார்வையாளர்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை நிகழ்ச்சி தரப்பால் சொல்லப்படுவதுதான். அடுத்து, மேக் அப் விஷயம். தனக்குத் தானே இந்தளவுக்கு மேக் அப் போட்டுக்கொள்ள முடியுமா என்று எல்லா பிக் பாஸிலும் சந்தேகம் எழுப்பப் பட்டிருக்கிறது. முக்கியமாய் வார இறுதி மேக் அப். 

எல்லா நிகழ்வுகளிலும் நெறியாளர்கள் ஒரு சிலரிடம் அன்புடன் உள்ளனர். தமிழில் ஜூலியிடம் இருந்த கறார் எல்லாரிடமும் இருந்ததா என்று கேள்வி எழுந்தது அல்லவா... அதில் சுதிப் மிகக் கறாராக இருந்ததாகப் பார்வையாளர்கள் கருதினர். மேலும், நெகட்டிவாகவோ, பாஸிட்டிவாகவோ பேசும் நபர்களே உள்ளே இருப்பர். தமிழில், ஜுலி அல்லது ஓவியா மீண்டும் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு வரலாம். ஹிந்தியில் அப்படிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம் ஹிந்தி, கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் ஆரம்ப எபிசோட்களில் இல்லாத ஒன்று தமிழ், தெலுங்கு நிகழ்வுகளின் தொடக்கத்தில் உள்ளது. அதுதான் சோஷியல் மீடியா. ஹிந்தி, கன்னடத்தில் தொடங்குபோது டிவி மட்டுமே முக்கியமான மீடியமாக இருந்தது. எனவே, இந்த அளவுக்கு வரவேற்போ, விமர்சனமோ வெளியே தெரியவில்லை. ஓவியா ஆர்மிகளும் போன்ற ஆர்மிகள் உருவாகவில்லை. 

இவ்வளவு பேசியும் நிகழ்ச்சியின் போக்கு ஸ்க்ரிப்ட்டா... இல்லையா எனும் விவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியாது. இதுவே பத்து வருடங்களாகத் தொடர்ந்து பிக் பாஸ் வெற்றியடைவதற்கான ரகசியம். ஹிந்தியில் சில சீசன்களில் பொது மக்களைத் தேர்ந்து எடுத்தார்கள். இப்போது கன்னடத்தில் ஏழு பேர் தேர்ந்து எடுக்கப் போகிறார்கள். அதற்காகப் பலர் விண்ணப்பித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் என் நண்பர்கள் சிலரும் அடக்கம்.

நிகழ்ச்சியில் ஸ்க்ரிப்ட் இல்லை என்று சொல்பவர்களின் முக்கிய வாதம். அதற்குத் தேவையான ரிகர்சல். அப்படி முடியும் என்றால் தினம் ஒரு சினிமாவே எடுத்துவிடலாம் அல்லவா. அது மட்டும் இல்லாமல் யாரும் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒரு திருடனுக்குக் கூட தன் இமேஜ் முக்கியம். எனவேதான் கமல், சல்மான், சுதீப் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள். இது எடிட் நிகழ்வு. ஸ்க்ரிப்டட் நிகழ்வு அல்ல என்று. ஆனால், இதுக்கும் மேல் என்ன ஸ்க்ரிப்ட் தேவை என்று புரியவில்லை. ஆட்டம் உணராமல் ஆட வைப்பதும்கூட ஸ்க்ரிப்ட்தான் இல்லையா?

நீ அவனோடு க்ளோஸாக இருந்தால் நல்லது. அவனை நம்பு / நம்பாதே. உன்னைச் சின்ன விஷயத்தில் கூட விட்டுக் கொடுக்காதே எனச் சொல்வதை வெட்டி, ஒட்டி புதுக் கதையை உருவாக்க முடியுமல்லவா? இந்த ஷோ வை மூன்று மொழிகளிலும் பார்த்த அனுபவம் உள்ள என் தோழி செளமியா சந்திரமெளலி சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். காயத்திரி, ஜுலி போன்ற கேரக்டர்களை மக்கள் மறந்து விட்டது மட்டுமேல்லாமல் முதல் ஷோவின் நிகழ்வுகளை, அடுத்த ஷோ ஆரம்பித்ததும் மறந்து விடுகின்றனராம். அதனால், ஒருவருக்குப் புகழ் வந்தாலும் எதிர்மறையான பேச்சு வந்தாலும் கவலைப் படுவதில்லை. மேலும், எந்த வகைப் பேச்சு வந்தாலும் அவை தன் மீது கவனம் விழுந்ததாகவே கருதுகிறார்களாம்.

பிக் பாஸில் பங்கு பெறுபவர்களுக்குத் தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. கடைதிறப்பு விழாக்கள், ஃபேஷன் ஷோக்கள் எனப் பல நிகழ்ச்சிகளில் பிஸியாகி விடுகின்றனர். இப்போது பரணி பல நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படுவதைப் பொருத்திப் பார்க்கலாம். 

இந்த விஷயங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போது,  ஒரு முடிவுக்கு வரலாம். தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்கள், சாமானியர்கள், சொல் பேச்சு கேட்க உத்தரவிடும் அக்ரிமெண்ட்கள், மனதை ஆட்டுவித்து, தூண்டி விடும் டாஸ்க்கள்.. என எல்லாமே பார்த்துப்பார்த்து வடிவமைக்கப்பட்டது. சிலருக்கு மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்ட செயல்களாக இருக்கலாம். 24 மணி நேரம் பதிவான காட்சிகளை ஒரு மணி நேரமாக மாற்றும் எடிட்டிங் வல்லமை, நெறியாளரின் அதிகாரமும், சுட்டிக் காட்டலும் இதில் முக்கியமானவை. அதனால் எதுவும் திட்டமிட்டப்படியும் நடப்பதில்லை. அதே சமயம் எந்தத் திட்டம் இல்லாமலும் நடைபெறுவதில்லை. சில திட்ட வட்டங்களுடன் கபடி விளையாடுவதைப் போலச் சிறு எல்லைக்குள் விளையாட விட்டு உள்ளனர். ஆனால் மஞ்சள் கார்ட், ரெட் கார்ட் எல்லாம் ரெப்ரி கையில். அவர் மர்மமானவர். அவர் மனதில் என்ன இருக்கும் என்பது யாரும் அறிய முடியாது.

அடுத்த கட்டுரைக்கு