Published:Updated:

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (46-ம் நாள்) #BiggBossTamilUpdate

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (46-ம் நாள்) #BiggBossTamilUpdate
எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (46-ம் நாள்) #BiggBossTamilUpdate

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (46-ம் நாள்) #BiggBossTamilUpdate

கடந்த இரண்டு நாட்களாக துணி துவைக்கும் சலிப்பான task ஒளிபரப்பானதால் வெறுப்படைந்த பார்வையாளர்கள், பிக் –பாஸைப் போட்டு நன்றாக துவைத்துக் கொண்டிருந்தனர். இதனால் உக்கிரம் அடைந்த  பிக் பாஸ், இன்றாவது எப்படியாவது அடுப்பைப் பற்ற வைத்து தொழிலைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போல. காயத்ரியின் மூலம் அதைச் செயல்படுத்த தீர்மானித்தார். நல்ல தேர்வு.  வீட்டைப் பற்ற வைக்கச் சொன்னால் காட்டையும் இணைத்து பற்ற வைக்கும் திறமை கொண்டவரான காயத்ரி இந்த task-ஐ திறமையாக கையாண்டார். அவருக்குள் இருந்த பல ரூபங்கள் மறுபடியும் விழித்துக் கொண்டன. 

‘இனி நல்ல பிள்ளையாய் இருப்பேன்’ என்று காலையில் தந்த வாக்குறுதி காற்றில் பறந்து மாணிக் பாட்சா மறுபடியும் வெளிப்பட்டார். ‘’அது வேற வாய், இது நாற வாய்’ என்கிற வடிவேலுவின் காமெடியைப் போல் ஆகிவிட்டது காயத்ரியின் நிலைமை.


எது எப்படியோ, நிகழ்ச்சி மறுபடியும் சூடுபிடித்த சந்தோஷத்தில் பார்வையாளர்கள் இருந்திருப்பார்கள். 

**
பிக்பாஸ் வீட்டில் பொதுவாக வேகமான துள்ளலிசைப் பாடல்களே காலையில் ஒலிபரப்புவார்கள். அப்போதுதான் தூங்குமூஞ்சிகள் சற்றாவது அசைந்து எழுந்திருக்கும் என்று. வீட்டில் குழந்தைகளை எழுப்புவதற்கு கூட இந்த டெக்னிக்கை பலர் பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இன்று காலை ‘ஒன்றா. ரெண்டா.. ஆசைகள்’’ எனும் அட்டகாசமான மெலடி, ரொமாண்டிக் பாடல்’ ஒலிபரப்பானது. ‘அவர்’ இருந்திருந்தால் காற்றில் மிதந்து நகரும் இறகு போல எத்தனை அற்பதமாக ஓவியம் அசைவது போல ஆடியிருப்பார்? நேற்றைய கட்டுரையிலும், அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? என கேள்வி எழுப்பி இருந்தோம். ரசிகர்களின் வாக்கும், நமது கட்டுரையை பிரதிபலித்திருப்பது மகிழ்ச்சிசிநேகன் அணி 450 மதிப்பெண்கள் பெற்றதால் கட்ஆஃப் மார்க்கில் லக்ஸரி பட்ஜெட்டை வென்றது. காப்பி பவுடரா, ஐஸ்கீரிமா எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நிலவியது. 

நடைமுறையில் கூட இது மாதிரியான தேர்வுச்சிக்கலை நாம் பலமுறை சந்தித்திருப்போம். சிலர் சுயநலத்துடன் தான் விரும்பியதை கறாராக சொல்வார்கள்.. சிலர் அந்த பிடிவாதத்தைக் கண்டு உள்ளுக்குள் மனம் சுருங்கி வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொள்வார்கள். சிலர் எல்லோருக்கும் இணக்கமான தீர்வு இருந்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள். அவரவர்களின் குணாதிசயங்களை இது பிரதிபலிக்கும். இது போன்ற சமயங்களில் மனம் சுருங்காமல் தங்களின் தேவைகளை, எதிர் தரப்பு புண்படாமல் அழுத்திக் கேட்பது ஒருவகையில் புத்திசாலித்தனம். அது கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலையும்  கூடவே வேண்டும்.


பிந்து மாதவி காஃபி பவுடர் பக்கம் நிற்க, ஆரவ்வும் ரைசாவும் ஐஸ்கிரீம் பக்கம் நின்றார்கள். காஃபி என்பது ஒருவகையில் அத்தியாவசிய தேவை. அத்தோடு ஒப்பிட்டால் ஐஸ்கிரீம் என்பது ஆடம்பரம். சிநேகன் நடுநிலைமையை வகிக்க, ஜனநாயக முறைப்படி ஐஸ்கிரீம் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த முடிவிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாக பிந்து மாதவி பின்பு வருந்தினார். இதை வெளிப்படையாக அவர் சொன்னது சிறப்பு. 
‘ஆனால் இதை உள்ளேயே தெளிவாக சொல்லியிருக்கலாமே’ என்றார் ரைசா. தாங்கள் நீண்ட நாட்களாக இங்கிருந்து தினமும் காஃபி அருந்துவதால் ஒரு மாற்றத்திற்காக ஐஸ்கிரீம் தேர்ந்தெடுத்தோம் என்று அவர் சொன்ன தர்க்கமும்  ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. முதலில் நடுநிலையாக இருந்த சிநேகனும் பின்பு காஃபி பவுடர் பக்கம் சாய்ந்தார். ஏனெனில் அது அத்தியாவசியமானது என்பது பிறகுதான் அவருக்கு உறைக்கிறது. 

இந்த விஷயத்தை ஏன் விலாவாரியாக எழுதுகிறேன் என்றால் நீங்கள் ஒரு விருந்திற்கு Host ஆக இருக்கிறீர்கள் என்றால் வந்திருக்கும் விருந்தினர்களின் எவருடைய மனமும் கோணாமல் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதென்பது மிகப் பெரிய சவால். அவரவர்களின் தனிப்பட்ட ருசியை அறிந்திருத்தல்,  அதில் ஏற்படும் ரகசியமான அகங்கார மோதல், உயர்வு –தாழ்வு மனப்பான்மை என்று எல்லா குணாதிசயங்களும் மோதும் இடம் அது. எனவே குறுகிய நேரத்திற்குள் சமயோசிதமாக அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க தருணங்களை கவனித்து வைத்துக் கொள்வது நல்லது. 

**

நாமினேஷன் பட்டியலில் இருக்கிற பயமா அல்லது உண்மையிலேயே மனம் மாற முடிவு செய்தாரா என்று தெரியவில்லை. காயத்ரி, பார்வையாளர்களை நோக்கி வாக்குமூலம் தர ஆரம்பித்தார். ‘டங் ஸ்லிப் ஆகும் போது கெட்ட வார்த்தை வருது. ..என்ன பண்றது.. ஆனா நான் மனதார சொல்வதில்லை.. இங்க நாங்க ரொம்ப நாளா எந்தவித வசதியும் இல்லாம தனிமையில் இருக்கோம்.. என்றலெ்லாம் ஒரே பினாத்தல். 

பார்வையாளர்களுக்கு பறக்கும் முத்தமெல்லாம் தந்து கவர முயன்றார். எத்தனை பேர் தொலைக்காட்சி முன் மயங்கி விழுந்தார்களோ என்று தெரியவில்லை. காயத்ரியை வெளியேற்றுவதற்காக கொலைவெறி திட்டத்தின் வாக்கு கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர்களும் மனம் மாறினார்களா என்பதும் தெரியவில்லை. 

‘எங்க மூஞ்சிங்களையே தொடர்ந்து பார்க்கறீங்களே.. உங்களுக்குப் போரடிக்கலையா?’ என்று அவர் கேட்டது மட்டுமே ஒரே  நியாயமான கேள்வி. ஓவியாவின் பிம்பத்தை நகலெடுக்கிறேன் பேர்வழி என்று குழந்தைத்தனமாக அவர் பேசிக்காட்டியது.. பேபி ஷாலினி பாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்தது போலவே கர்ணகடூரமாக இருந்தது. 

மேல்தட்டு வர்க்க விநோத உணவுகளையே சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்த வையாபுரி, ‘பரோட்டாவும் நாட்டுக்கோழி குழம்பும்” கேட்டு தானொரு அசல் தமிழன் என்பதை நிரூபித்தார். ஆனால் பரோட்டா தமிழ் மரபு சார்ந்த உணவா? சரி, விடுங்கள், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதைப் போல பரோட்டா தேசிய உணவாகி பல வருடங்கள் ஆகி விட்டன. சொந்த பிரதேசத்தை விட்டு விலகியிருக்கிறவர்களுக்கு இது போன்ற உணவு சார்நத ஏக்கம் அதிகமாக இருக்கும். 

தலைவி ரைசாவை அழைத்த பிக் பாஸ ‘வீட்டில் எவரும் தூாங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு’ என்றார். ரைசாவின் நிலைமை பாவம், இயந்திர நாய்க்கு மாற்றாக ஆக வேண்டிய பரிதாபம். பிக் பாஸின் கடுப்பு மிக குறிப்பாக கணேஷின் மேல்தான் இருக்கும் என நினைக்கிறேன். நேற்றே எச்சரித்தும் எவ்விதமான சென்ஷெனல் ஃபுட்டேஜூம் தராமல் யோகா பாவனையில் விதம் விதமாக தூங்கிக் கொண்டிருக்கிறாரே என்று. ரைசா எச்சரித்ததும் வேறு மாதிரியான அஷ்டகோணல் நிலையில் மாற்றிக் கொண்டு உறக்கத்தை தொடர முயற்சித்தார் கணேஷ். ரைசாவும் ஆரவ்வும் நெருக்கமாகிக் கொண்டு வருகிறார்களோ என்கிற ஐயத்தை அவர்களின் உரையாடல்களும் செல்லமான சீண்டல்களும் காண்பிக்கின்றன. ஐயா.. ஆரவ்.. அவர்களே.. ரைசாவிடம் எந்த மருத்துவ முயற்சியும் செய்ய வேண்டாம் என்று ரைசா பேரவை உங்களை அன்புடன் எச்சரிக்கை செய்கிறது. 

‘போட்டிருக்கிறது பிந்துவோட டிரஸ்ஸா’ என்று ஆரவ் கலாய்க்க முயல ‘அப்ப டிரஸ்தான் நல்லாயிருக்கா?” என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். ரைசா. பெண்களை முதலில் பாராட்டிவிட்டு பின்பு மெல்லிய விமர்சனங்களை வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர் தந்த டிப்ஸ் உபயோகமானது. நான் குறித்து வைத்துக் கொண்டேன். 

‘பிக்பாஸ் தன்னைப் பாராட்டி இனிமையாக பேசிக் கொண்டிருந்தார்’ என்று ரைசா ஜாலியாக  ரீல் ஓட்டிக் கொண்டிருக்க.. அதைப் பொறுக்க முடியாத சக்தி தனது வழக்கமான குணத்தோடு ‘மேக்கப் இல்லாம வந்துராத –ன்னு சொல்லியிருப்பார்.. ‘போ.. எல்லோரையும் எழுப்பு’. என்று கட்டளையிட்டிருப்பார்’

ரைசா பேரவையின் அடுத்த டார்க்கெட்டாக சக்தியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே.

**
பிந்துவின் விநோதமான உடையை எல்லோரும் கிண்டலடித்து தீர்த்தார்கள். ‘துவைக்கும் task-ல் நிராகரிக்கப்பட்ட உடையை எடுத்து போட்டு வந்து விட்டாயா’ என்றார் ஆரவ். இரண்டு ஆள் நுழையும் அளவிற்கான பேண்ட். ‘நமீதா மற்றும் பொன்னம்பலம் ஆடை’ என்று தன் பங்கிற்கு பற்ற வைத்தார் வையாபுரி. 


சிநேகனின் உடல்மொழியை கிண்டலடித்தார் சக்தி. மற்றவர்களின் நடவடிக்கைகளை கவனித்து அபாரமாக பகடி செய்யும் திறமை சக்திக்கு இருக்கிறது. மட்டுமல்லாமல் தமிழ் சினிமா காட்சிகளையும் கரைத்து குடித்து வைத்திருக்கிறார். 

மேலே விவரித்த காஃபி பவுடர் – ஐஸ்கிரீம் பஞ்சாயத்து மறுபடியும் ஓடியது. எது அவசியம், அநாவசியம் என்கிற தேர்வு என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். ‘தன் முடிவுகளை அங்கேயே தெளிவாக சொல்ல வேண்டும். முதலில் தயங்கி பிறகு குழப்பக்கூடாது’ என்று தலைவி ரைசா தன் தரப்பு தர்க்கத்தை தெளிவாக முன்வைத்தார்.

ஸ்மோக்கிங் ரூமில் ஆரவ்வும் ரைசாவும் எதையோ தீவிரமாக விவாதித்தனர். ரைசா ‘இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார்’  போலிருக்கிறது. ஆனால் என்னவென்று தெளிவாக இல்லை. அவர் சொன்னதை ஒரு மாதிரியாக சிரமப்பட்டு புரிந்து கொள்ள முயற்சித்தால் ‘பெரும்பான்மையில் ஒளிந்து கொள்ளும் பாதுகாப்பு உணர்ச்சிக்காக நம் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இந்த எட்டு பேர் மட்டும் உலகம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நாமாக இருப்போம்” 

‘ட்ரூ.. ட்ரூ..’ என்று இதை ரைசாவின் பாணியிலேயே ஆமோதித்தார் ஆரவ். ரைசாவை கவர்ந்து விடும் ஐடியாவில் தீவிரமாக இருக்கிறார் போலிருக்கிறது. 

தெலுங்கு பிக் –பாஸ் நிகழ்ச்சியில் புகை பிடிக்கும் காட்சிகளையெல்லாம் தைரியமாக காட்டுகிறார்களாம். தமிழில் அப்படியொரு காட்சி இதுவரை வந்ததேயில்லை. நல்ல விஷயம்தான். கமல், கலாசாரம் குறித்து எச்சரித்ததும் நினைவிற்கு வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான தமிழிற்கும் தெலுங்கிற்கும் வேறு வேறு கலாசாரமா என்ன? 
நள்ளிரவு 12 மணிக்கு சிகரெட் குடித்தால் உடல் நலத்திற்கு போஷாக்கானது என்கிற பொய் ஐடியாவை சொல்லி கணேஷை நம்ப வைக்கிறார்களாம். ‘ஐயா.. பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டரே… இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக யோசியுங்களேன்.. கொடுமையான நகைச்சுவை.’ கணேஷ் அந்த அளவிற்கு முட்டாளா என்ன? ஒருத்தன் சும்மா இருந்தா மேலே குதிரை ஏறி விடுவீர்களே.. பிற்பகுதிகளில் கணேஷின் ஆக்ஷன் காட்சிகள் ஏதாவது வரும் போலிருக்கிறது. 

**

‘நான் ஏன் இந்த வீட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என்கிற தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும்’ இப்படியொரு task.

 ‘போக வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் முதலில் ஒரு டிராமா. பிறகு பரிந்துரையோ அல்லது வெளியேற்றமோ நிகழ்ந்தால் அதற்கு நேர் எதிராக ஒரு டிராமா’ - இதுதான் பிக் பாஸ் போட்டியாளர்கள் வழக்கமாக செய்வது. கூடுதலாக இந்த டிராமா வேறு.

முதலில் காயத்ரி ஆரம்பித்தார் அவருடைய பேச்சில் நிறைய தற்காப்புணர்ச்சியும் பொடி வைத்து பேசுதலும் இருந்தது. 

‘பிக் பாஸின் 50வது நாள் நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கெட்ட வார்த்தையை இறைப்பவள் என்கிற பிம்பம் என்மீது விழுந்து விட்டது. அதற்கு மற்றவர்கள் தூண்டி விட்டதுதான் காரணம்.. இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் task-களையும் பின்வாங்காமல் செய்திருக்கிறேன். (அதாவது, ஓவியா அப்படிச் செய்யவில்லை). கெட்டவார்த்தைகள் தவறி விழுந்தாலும் மனமார சொன்னதில்லை. (நல்ல லாஜிக் யுவர் ஆனர்) ஓவியாவையும் இது போல்தான் திட்டியிருக்கிறேன். அவளுடைய நல்லதிற்காக. ஓவியா புண்பட்டிருந்தால் இதன் மூலம் அவளிடம் மன்னிப்பு கேட்கிறேன். (யப்பா.. ஓவியப் பரிவாரங்களே.. பழிவாங்கி விடாதீர்கள். அதற்குத்தான் இது) என்னோட அன்பான version-ஐ நீங்கள் பார்க்கணும். (அதான் மாலை பார்த்தோமே). நிஜமான அன்போட நான் பழகறதை நீங்க பார்க்கணும். (சக்தி கிட்ட மட்டும்தான் அன்பா இருப்பேன்)’

‘வையாபுரி சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. ‘இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் குடும்பத்தாரின் அபிப்ராயம் என்னை மாற்றி விட்டது. (அப்ப.. தனியா ஓரு டீலிங் நடக்குதா, பிக் பாஸ்). வாய்ப்பு குறைவு காரணமாக இப்போது திரையரங்கில் என்னைப் பார்க்க முடியாத மனைவியும் பிள்ளைகளும் தினமும் தொலைக்காட்சியில் என்னை பார்க்க முடிவதற்காக மகிழ்கிறார்கள். வீட்டில் இருப்பதை விடவும் இங்கு இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள். (என்னா வில்லத்தனம் பசங்களா), குடும்பத்திற்காக இங்கு இருப்பேன் என்றவர், ‘வீட்டில் கோபத்தில் கெட்ட வார்த்தைகளை இறைப்பேன், ஆனால் இங்கு வந்தவுடன் ஒரு வார்த்தை கூட அப்படி பேசியதில்லை’ என்றார். (காயத்திரி மேடத்தின் கவனத்திற்கு).

‘கடந்த வாரங்களில் நிகழ்ந்த மனப்போராட்டங்களைக் கடந்து இப்போது தளர்வாக உணர்கிறேன். இந்த விளையாட்டில் நானாக இருக்க விரும்புகிறேன். 50வது நாளை பார்க்க விரும்புகிறேன். தொடர்ந்து விளையாடுவேன்.’ என்றார் ஆரவ். (ரைசாதான் மனமாற்றத்திற்கு காரணமோ, தலைவா!)

கணேஷ் சொன்ன காரணம் முக்கியமானது. ‘இதுவரை கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பில் இருக்க எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இங்குதான் இதைப் பார்க்கிறேன். என்னுடைய குறைகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன்.’ அபாரம் கணேஷ். 

‘என் தந்தையின் நிழலில் இருந்து விலகி நிற்பதற்கான புகழை இந்த நிகழ்ச்சி தரும் என நம்புகிறேன்’ என்று சொன்ன சக்தியின் அந்த பாயிண்ட் முக்கியமானது. . ‘என் அம்மாவை, மனைவியை திட்டியிருக்கிறேன். அவற்றை உணர்கிறேன். இந்த வீட்டில் நானாகவே இருக்கிறேன்’ என்றார். ‘மக்கள் வெளியேற்றினால் போவேன். நானாக சீன் செய்து போக மாட்டேன்’ என்று மனதில் ஒவியாவை வைத்துக் கொண்டு சொன்னாரோ, என்னமோ. காயத்ரியின் நண்பராயிற்றே.. அந்த வாசனை இல்லாமல் இருக்குமா?

‘எந்த எதிரியுடனும் போட்டியிட்டு நான் தோற்றதில்லை. முதன்முறையாக நண்பர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் வாய்ப்பை பிக் பாஸ் தந்திருக்கிறது என்றார் சிநேகன். (கவித்துவமாக பேசறாராராம்). இதுவரை தேடிய அன்பு இங்கு கிடைக்கிறது என்றார். (அடுத்த டார்கெட் முயற்சி ரைசாவா, கவிஞரே).பிந்து சொன்னது மிக சம்பிரதாயமானது. 

**
‘நாமினேஷன் பட்டியிலில் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எவரை தேர்வு செய்வீர்கள்?’ என்றொரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பின்னே என்ன, சண்டையே நடக்காமல் இருந்தால் பிக்பாஸிற்கும் மட்டுமல்ல நமக்குமே எத்தனை எரிச்சலாக இருக்கும்? எனவே பிக் பாஸ் தன் திருவிளையாடலை துவக்கினார். 

வையாபுரிக்கும் சிநேகனும் சமமான எண்ணிக்கையைப் பெற்று மேட்ச் டிரா ஆகும் விபரீதமான சூழல் ஏற்பட்டது. இருவரின் சார்பாக அவரவர்களின் காரணங்களைச் சொன்னார்கள். ‘வையாபுரி இருந்தால் ஜாலியாக இருக்கும், வயதில் பெரியவர்’ என்று ஒருபுறமும் ‘சிநேகனுக்கு சமைக்கத் தெரியும், எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் வந்து உதவுபவர்’ என்றும் விதம் விதமான காரணங்கள். 

‘இப்படில்லாம் மங்குனிகளாக இருந்தால் எப்படிய்யா சண்டை வரும்?’ என்று எரிச்சல் பட்ட பிக் பாஸ், ‘செல்லாது.. செல்லாது..யாராவது ஒருத்தர் பேரைத்தான் சொல்லோணும்’ என்று வெற்றிலை எச்சில் தெறிக்க தீர்ப்பைச் சொல்லி விட்டார். எனவே சபை கூடியது. அங்கு விழுந்தது பிரச்னைக்கான விதை. அதை மரமாக வளர்த்து எரித்து தீயை ஜொலிக்க விட்டவர் காயத்ரி அவர்கள்.

**

பாட்சா படத்தின் வசனத்தை அற்புதமாக நகலெடுத்தார் சக்தி. ‘நாங்கள்ளாலாம் மொதல்ல ரவுடிடா.. அப்புறம்தாண்டா இதெல்லாம்’. நடிகர் சேது விநாயகம் அபாரமாக சொன்ன, புகழ்பெற்ற வசனம் அது. இதை பிக் பாஸிடம் சிநேகன் பேசினால் எப்படியிருக்கும் என்று அவர் கிண்டலடித்தது ஜாலி.


அந்தக் கிண்டலை இன்னமும் அற்புதமாக மேம்படுத்தினார் சிநேகன். ‘ஐயா.. என் பேரு சிநேகன்..’ என்றவர் பிறகு மைக்கை கழற்றி வைத்து விட்டு ‘எனக்கொரு இன்னொரு பேர் இருக்கு’ என்றது அபாரம்.  பிக் பாஸே ஒரு நிமிடம் வியந்திருப்பார். ‘இந்தப் பய கிட்டயும் ஒரு திறமை ஒளிஞ்சுதான் இருக்கு’

வில்லங்க சபை கூடி விவாதித்தது. உள்ளே சிநேகனுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இந்த உரையாடலுக்குப் பிறகு வையாபுரியின் பக்கம் மனம் மாறினார்கள். ‘பலமான போட்டியாளரான சிநேகனை வெளியேற்றினால் தங்களின் வாய்ப்பு பிரகாசமாகலாம். வையாபுரி எளிதாக அடிக்கக்கூடிய டார்கெட்’ என்கிற ஞானோதயம் அவர்களுக்கு அப்புறம்தான் வந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலிலேயே ஒற்றுமையாக சிந்தித்தவர்கள் சக்தியும் காயத்ரியும். அபாரமான வில்லங்க அலைவரிசை இருவருக்குள்ளும் இருக்கிறது. 

ஆனால் சிநேகனின் சார்பில் மிக வலுவாக நின்றவர் ரைசா. (அந்தாளுக்கு எங்கேயோ நிறைய மச்சம் இருக்கு). ‘ஏதாவது பிரச்னைன்னா முதலில் ஓடி வருபவர் சிநேகன்தான்’. இதை அவர் காயத்ரி பக்கம் திரும்பி சொல்லிய அந்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருக்க வேண்டும். அப்போது துவங்கியது ஏழரை.

‘இத்தனை பேரு இருக்கும் போது அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்ட?’ என்கிற கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி பொங்கி விட்டார் காயத்ரி. 

“என் பிரச்னைகளை எதிர்கொள்ள எனக்குத் தெரியும்’ என்பது காயத்ரியின் திமிரான பதில். “அம்மா.. தாயே.. உனக்கு வர்ற பிரச்னை இல்ல.. உன்னால எங்களுக்கு வருகிற பிரச்னையைத்தான் சொன்னேன்’ என்று ரைசா தெளிவாக சொல்லியிருக்கலாம். ஏழரை கூடி பதிநான்காக உயர்ந்திருக்கும். 

‘அன்றே சொன்னார் அண்ணா’ மாதிரி. நான் நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். காயத்ரிக்கும், ரைசாவிற்கும் நிச்சயம் சண்டை வரும், காத்திருப்போம் என்று. காயத்ரியின் பதிலைக் கேட்டு ரைசா சிரித்து விட்டது வேறு, எரியும் நெருப்பில் விமானத்திற்கு போடும் பெட்ரோலை ஊற்றியது போல கப்பென்று பிடித்துக் கொண்டது. 

**
வெளியேற்றப்படாதவராக வையாபுரி ‘ஏகமனதாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார். வையாபுரிக்கு மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்திருப்பார். நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்கிற ‘வீட்டம்மாவின்’ கட்டளையையும் மீறி  வீட்டிற்கு சென்றிருந்தால் என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்திருக்குமோ?. நிச்சயம் நாட்டுக்கோழி குழம்பு கிடைத்திருக்காது. 

தாங்கள் கூடி எடுத்த முடிவு பற்றி ரைசா நேரடியாக அறிவிக்கத் துவங்கினார். ஆனால் இதைப் பொறுக்க முடியாத சக்தி, அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். 

இந்த விவாதம் நடந்த போது ஒளிபரப்பான காட்சிகளை நாமும் பார்த்தோம், பிக்பாஸூம் பார்த்தார். எனில் தமிழ் சினிமாவில் ஒரு பாத்திரத்தைப் பற்றி இன்னொருவர் விளக்குவது போன்று  முடிவு சொல்லும் போதும் விளக்கங்கள் தேவையில்லை. எனவே ரைசாவின் முடிவு சரியானது. 

என்றாலும் அதிகாரபூர்வமான காரணங்களுடன் இதை தொகுத்து வழங்க சக்தியை அழைத்தார் பிக் பாஸ். 

**

‘ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட’ விவகாரத்திற்காக காயத்ரி பொங்கிக் கொண்டேயிருந்தார். மனக்கொதிப்பை அவரால் அடக்க முடியவில்லை. ஆரவ்விடம் இது பற்றி பேசும் போது ஒரு பீப் ஒலி கேட்டது. (எடிட் பண்ணிட்டாங்க, ஆண்டவரே). காலையில் காமிரா தந்த வாக்குறுதியெல்லாம் காற்றில் போனது. 

ஆரவ் சமாதானப்படுத்தியும் தன் கோபம் அடங்காத காயத்ரி, ஸ்மோக்கிங் ரூமில் நிம்மதியாக இருந்த ரைசாவிற்கு ஏழரை தருவதற்காக சென்றார். 

ஓவியாவிற்காகவாது காதல் பிரச்னைக்குப் பிறகுதான் மனச்சிக்கல் உருவானது. ஆனால் காயத்ரிக்கு இருப்பது நிரந்தரமான பிரச்னை என்று தோன்றுகிறது. உயர்வுமனப்பான்மை, அகங்காரம், பிடிவாதம் உள்ளிட்ட பல எதிர்மறையான குணங்கள்.

புகைக்கும் அறையில் பலமான விவாதம். ‘இதை ஏன் பெரிசு பண்றீங்க காயத்ரி’ என ரைசா சொல்ல.. என்னை அப்படிக் கூப்பிடாதே என்று முன்பு ஜூலியுடன் வைத்த அதே வகையான கோபத்தைக் கொண்டார். காயத்ரி. 

காயத்ரியைக் காணோமே என்று தேடி வந்த சக்தி, இந்த சூடான உரையாடலை சிறிது கேட்டவுடன் பீதியுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார். 

அங்கு காயத்ரியைக் கட்டுப்படுத்தும் ஓரே ஆயுதம் சக்தி மட்டுமே. ரைசா அவரிடம் தன் ஆதங்கத்தை சொல்லிய போது ‘அவ குழந்தை மாதிரி’ என்றார். அவரை அப்படியே நீச்சல் குளத்தில் போட்டு அமுக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குப் பெயர் குழந்தை்தனம் அல்ல, சிறுபிள்ளைத்தனம், சக்தி அவர்களே. 

பிந்துமாதவியிடமும் தன் கோபத்திற்கான காரணத்தை விளக்கினார் காயத்ரி. ‘சொல்லிட்டப்பறம் ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு”

இந்தப் பிரச்னை பற்றி மீண்டும் சக்தியிடம் காயத்ரி பேசிக் கொண்டிருந்த உள்ளுக்குள் இருந்த அவரது ‘பல ரூபங்கள்’ வெளிப்பட்டன. ‘இவ யாரு எனக்கு சொல்றது.. என் பிரச்னையைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா, சிநேகன் கிட்ட போய் எப்பவாவது பிரச்னைன்னு நான் நின்னிருக்கேனோ.. அவராதான் தானா முன்வந்து உதவி செஞ்சிருக்கார் (கவிஞரே.. உமக்கு இது தேவைதானா). இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று பொங்கினார். 

முந்தைய பகுதிகளை படிக்க...
 

‘சிநேகன் தாமாக முன் வந்து உதவியது நல்ல விஷயம்தானே?’ என்று சக்தி நியாயமான விஷயத்தை முன்வைத்தாலும் அகங்காரமும் தன்முனைப்பும் நிரம்பி வழிகிற காயத்ரியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’34 வருஷமா என் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூட நானேதான் பார்த்திட்டு இருக்கேன். என் ஃபேமிலி கூட எனக்கு ஹெல்ப் பண்ணதில்ல’ என்றெல்லாம் பெரிய குண்டுகளாக அவர் வீசிக் கொண்டிருந்ததை அவரின் குடும்பத்தார் பார்க்காமலிருந்தால் நல்லது. 

பிறந்த கணத்தில் இருந்தே தன் பிரச்னைகளை தானே தீர்த்துக் கொண்ட காயத்ரி நிச்சயம் ஒரு ‘child prodigy’யாகத்தான் இருக்க வேண்டும். 

‘கமல் வைக்கப்போகும் பஞ்சாயத்தை முன்கூட்டியே உணர்ந்த காயத்ரி அது பற்றியும் சக்தியிடம் கூறினார். (பயப்படறியா குமாரு). ‘என் தன்மானம் தூண்டப்படும் போது சும்மாவா இருக்க முடியும்? ‘நான் அப்படித்தான்’ என்கிற அவரின் மனக்கொதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. ‘எது சரி, எது தப்பு என்று சொல்கிற தகுதி எவருக்கு இங்கு வீட்டில் இருக்கிறது. கணேஷையும் என்னையும் தவிர இந்த வீட்டில் உன்னைப் புரிந்தவர்கள் எவருமில்லை’ என்றலெ்லாம் சக்தி சமாதானம் சொன்னபிறகுதான் புயலின் வேகம் சற்றாவது தணிந்தது. 

சமூகத்தின் முன்பான தன்னுடைய பிம்பம் சேதம் அடையக்கூடாது என்கிற பிரக்ஞை முதலில் இருந்தே காயத்ரிக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான எதிர்திசையிலேயே அவருடைய பயணம் இருப்பது துரதிர்ஷ்டமானது. ‘இனிமே எடிட் பண்ண மாட்டோம். அப்படியே போட்டுடுவோம்’ என்கிற கமலின் எச்சரிக்கையை நினைவில் கொண்டிருக்கலாம். ஆத்திரம் கண்ணை மறைக்க, தன்னையும் அறியாமல் அவர் வெளிப்படுத்துகிற அந்தரங்க விவரங்கள், அவரோடு இணைந்து அவருடைய குடும்பத்தை சங்கடப்படுத்துகிற சூழலை தவிர்த்திருக்கலாம். ‘Attitude’ பிரச்னை ரைசாவிடம் இருப்பதாக கண்டுபிடிக்கும் காயத்ரி சற்று தன்னையே திரும்பிப் பார்க்க வேண்டும்.  

**

‘பிரச்னைகளை எதிர்கொள்ள நான் இப்போதெல்லாம் பயப்படுவதில்லை’ என்று ஆரவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரைசா. காயத்ரியின் சிறுபிள்ளைத்தனங்களைப் பற்றிய அவர் விமர்சனங்கள் அற்புதம். 

‘இந்த வீட்டில் நான்தான் வயதில் குறைவானவள். ஆனால் வயதானவர்கள்தான் முதிர்ச்சியின்றி நடந்து கொள்கிறார்கள். இதையே என்னிடம் எவராவது சொல்லியிருந்தால் எளிதாக கடந்திருப்பேன். ஓவியா எப்படி உணர்ந்திருப்பார் என்பது இப்போதுதான் புரிகிறது. (மகிழ்ச்சி, மகராசி. இப்பவாவது புரிஞ்சுதே). நானே ஒரு லூசு.. எதையாவது சொல்வேன். என்னையே சீரியஸா எடுத்துக்கறவங்க எத்தனை பெரிய லூசா இருப்பாங்க’ என்றெல்லாம் பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருந்தார் ரைசா. (நாயக்கரே.. வெத்தலை எடுத்துக்கோங்க). 

**

விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டதில் சக்தியும் காயத்ரியும் ஒரே அணியில் வந்தது மறுபடியும் தற்செயலா?

ஆரவ்வும் கணேஷூம் தங்களின் வலுவைச் சோதித்தனர். கடுமையான போரட்டத்திற்குப் பிறகு ‘முட்டை’ வென்றது. கணேஷ் மட்டும் ஜெயிக்காமல் போயிருந்தால் தன் மைண்ட் வாய்ஸால் வையாபுரி பலமாக திட்டியிருப்பார். 

முயல் –ஆமை கதையாக காயத்ரி திடீர் வேகத்தில் வந்து வென்றார். பின்பு இந்த வெற்றிக்காக ‘காயூ’ பேபியை சக்தியும் கணேஷூம் விதம்விதமாக பாராட்டினர். குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சி ஒளிர்ந்தது. 

பரபரப்பான போட்டியின் இறுதியில் சிறந்த ‘முடிச்சவிக்கி’யாக வையாபுரி தேர்வானார். 

ரைசா தோற்றதின் தண்டனையாக அவர் தலையில் முட்டை உடைத்து ஊற்றப்பட்டதற்காக நிச்சயம் இதற்காக கணேஷ் வருத்தப்பட்டிருப்பார். ‘அடப்பாவிகளா.. எவ்ள புரோட்டீனை வேஸ்ட் பண்றீங்க”. இந்த தண்டனையை ரைசா இயல்பாக எடுத்துக் கொண்டார். ‘இன்னும் கூட ஊத்திக்கோங்க.’ ப்பா.. எத்தனை பக்குவம். இந்த தண்டனை அந்த ‘ஜூராசிக் பேபிக்கு’ நடந்திருந்தால் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்கும்?

“இவிய்ங்க.. ஏதோ குரூப் பார்ம் செஞ்சிருக்காங்க போலிருக்குது’ என்று சக்தி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். ‘முதல்ல இருந்தே இருக்கு.’ என்று ராஜதந்திர முகபாவத்துடன் காயத்ரி சொன்னது நகைச்சுவை. ‘’சில விஷயங்களை வெளிய போய் சொல்றேன்’ என்று அவர் சொன்னவுடன் உஷாரான சக்தி ‘வேண்டாம். சொல்லாதே’ என்று அவரைக் காப்பாற்ற முயன்றார். 

விளக்குகள் அணைக்கப்பட்ட போது, வம்புகளைக் கவனித்த திருப்தியில் நாமும் உறங்கச் செல்லலாம் என்று பார்த்தால், தங்களின் ரகசிய உரையாடலை  

சிநேகனும் ரைசாவும் இன்னமும் நிறுத்தவில்லை. சிநேகன் பரிந்துரைக்கப்பட்டதின் பின்னால் உள்ள அரசியலை ரைசா விளக்கினார். (அரசியலுக்கு வா.. தலைவி) 

ஓவியாவிற்கு நிகழ்ந்த அத்தனை பிரச்சினைகள் குறித்து ஆரவ்விற்கு 
ஏன் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லை. எதுவுமே நிகழாதது போல இத்தனை ஜாலியாக இருக்கிறாரே’ என்கிற சிநேகனின் ஆதங்கமும் நெருடலும் பார்வையாளர்களுக்கும் இருக்கிறது. ஆரவ்வின் தரப்பில் சில நியாயங்கள் இருந்தாலும் கூட ஓவியாவின் விலகல் குறித்து அவரிடம் எவ்வித சலனமும் இல்லை. ஒருவேளை அதைக் கடப்பதற்காகத்தான் ரைசாவுடன் மகிழ்ச்சியாக பேசுவது போல் நடிக்கிறாரோ என்னமோ.

‘சக்தி குறிப்பிட்டது போல போட்டியளர்களிடையே பிளவு ஏற்பட்டிருக்குமோ’ என்று போலியாக கவலைப்பட்டார் பிக் –பாஸ். (இதற்குத்தானே ஆசைப்பட்டாய், பாலகுமாரா).

‘விளையாட்டில் தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு’ என்று சொன்ன ரைசா, ‘போட்டியாளர்களில் மிகுந்த ஆபத்தானவர் சக்தி. காயத்ரியைக் கூட சமயங்களில் டீலில் விட்டு விடுகிறார்’ என்றார். 

‘எதுக்குடா இத்தனை செருப்பு’ என்று சரளமாக பேசிக் கொண்டிருந்த ஒருவருடன் நிகழ்ச்சி முடிந்தது. ‘புது போட்டியாளராக’ இருக்குமோ? யார் அவர்? இன்னிக்கு குத்த வைத்து பார்த்து விட வேண்டியதுதான். பிக் பாஸூ.. இந்த ரவுண்டுல நீ ஜெயிச்சிட்டே. ஒத்துக்கறேன்.

அடுத்த கட்டுரைக்கு