Published:Updated:

காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (47-ம் நாள்) #BiggBossTamilUpdate

காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (47-ம் நாள்) #BiggBossTamilUpdate
காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (47-ம் நாள்) #BiggBossTamilUpdate

காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (47-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில் ‘பிரிக்கவே முடியாதது’ என்றால் அது பிக் பாஸ் ‘சக்தி – காயத்ரி என்று எளிதாக பதில் சொல்லி விடலாம் போல. அந்த இருவரும் நிகழ்த்தும் சதியாலோசனையோடு மங்கலகரமாக நிகழ்ச்சி துவங்கியது. 

பிக் பாஸ் எடிட்டிங் குழுவிற்கு ஒரு வேண்டுகோள். இப்படி விடியற்காலை காட்சிகளைக் காட்டும் போது போட்டியாளர்களின் முகங்களுக்கு க்ளோசப் கோணங்களை தயவு செய்து வைக்காதீர்கள். 

வழக்கம் போல் காயத்ரியின் வசனத்தின் இடையில் பீப் சத்தம். காயத்ரியின் உரையாடல்களை மட்டும் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோ தரத்தில்  நிதானமாக சில முறை கவனமாக கேட்டு தணிக்கை செய்துவிட்டுதான் இணைக்க வேண்டும் போல. பாவம், பிக் பாஸ் நுட்பக்குழுவிற்கு கூடுதல் சுமையைத் தருகிறார் காயத்ரி. 

பிக் – பாஸ் போட்டியாளர்களின் பொதுவான தன்மை இவர்களின் உரையாடல்களிலும் வெளிப்படுகிறது. ஒரு நேரத்தில் ‘இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று ஆவேசப்படுகிறார்கள். இன்னொரு நேரத்தில் தங்களின் Nomination, Eviction குறித்து அதிகமாக கவலைப்படுகிறார்கள். கூடி கூடி பதட்டத்துடன் விவாதிக்கிறார்கள். என்னதான்யா உங்க பிரச்னை?

சக்தி மற்றும் சிநேகன் உறவில் ஏற்பட்ட விரிசல், ரைசாவின் மீது காயத்ரிக்கு உருவாகியிருக்கும் பகைமை, வன்மம் ஆகியவை இந்த உரையாடலில் வெளிப்பட்டன. 

சக்தி பிரபலமானவர் என்று சிநேகன் நம்புவதும், சக்தியும் அதை ரகசிய தற்பெருமையுடன் தானே வழிமொழிந்து கொள்வதும்…. கொடூரமான நகைச்சுவை. 

**

ரைசா காமிராவுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தினார். ஆனால் இதையெல்லாம் ஓவியா செய்தால்தான் பார்க்க அதிக அழகாக இருக்கிறது. ‘அப்படிப் பார்க்காதே.. ஸ்பிரே அடிச்சுடுவேன்’ என்கிற காவிய வசனத்தை மறக்க மனம் கூடுதில்லையே..

‘இந்த வீட்ல எனக்கு பேசறதுக்கு யாருமில்ல. இனி உங்கூடதான் பேசப்போறேன், சரியா.. உனக்கு தமிழ் தெரியுமா? ஓயாம வேலை செய்யறியே, உனக்கு போரடிக்காதா?’ என்றெல்லாம்  ரைசா காமிராவை கொஞ்சிக் கொண்டிருந்தார். பதிலுக்கு காமிராவும் பேசியது.  ஒருகணம் காமிராவின் மீது பொறாமையாக வந்தது. காயத்ரியின் எதிரிகள் வரிசைப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதால் ரைசா அது சார்ந்த மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அஃறிணைப் பொருட்களுடன் உரையாடுவது அதிலொரு அடையாளம். 

இதை சரியாக மோப்பம் பிடித்துக் கொண்டு சிநேகன் வரும் போதெல்லாம் அவருக்கு சந்தர்ப்பம் தராமல், தன்னை மறைத்துக் கொண்டு அழுது தீர்க்கிறார். ரைசா, அடுத்த ஓவியாவாக ஆகிவிடக்கூடாது. 

**

சிநேகனின் மெளனம் நிச்சயம் சக்தியை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. ‘நாமாக சென்று மறுபடியும் கேட்கலாமா?’ என்கிறார். ‘அவராக வந்து கேட்கட்டும்’ என்கிறார் காயத்ரி. சகுனிகள் எல்லாக் காலத்திலும் நம் கூடவே இருக்கிறார்கள். 

காயத்ரிக்கும் ரைசாவிற்குமான இந்த பகைமையை ‘நமது நிருபர்’ பிந்து மாதவி தலையிட்டு போக்க முயன்றது சிறப்பு. ‘எல்லாமே சரியாயிடும்’ என்று இவர் சொல்வதைக் கேட்டு பிக் பாஸிற்கு உள்ளூர நிச்சயம் கோபம் வந்திருக்க வேண்டும். ‘ஏம்மா புதுப்பொண்ணு.. எல்லாம் சரியாவதற்கா.. இவ்ளோ பாடு படறோம்?”

காயத்ரியையும் ரைசாவையும் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக அறிமுகப்படுத்தி வைத்தார் நிருபர். ஆனால் வேதாளம் அத்தனை சீக்கிரம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கி விடுமா என்ன? 

‘என்னை உங்களுக்குப் பிடிக்காது, இல்லையா? என்று ரைசா நேரடியாக கேட்ட போது ‘யாரு சொன்னா?” என்று மழுப்பினார் காயத்ரி. ‘இது ஒரு விளையாட்டு. குடும்ப உணர்வு இங்கில்லை’ என்கிற ஞானோதயமெல்லாம் அம்மணிக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. 

மறுபடியும் அதேதான். ‘என் பிரச்னைகளை நானேதான் பார்த்துக் கொள்வேன்’ சுயமரியாதைக்கும் தன்னகங்காரத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ‘நான்’ ‘எனது’ போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துவர்களிடம் உள்ளது நிச்சயம் அகங்காரம்தான். 

‘ஸ்ரீ, ஜூலி, ஓவியாவிற்கெல்லாம் பிரச்னை வரும் போது நான் கூட நின்றிருக்கிறேன்’ என்றார் காயத்ரி. ஒருபக்கம் உண்மைதான். ஆனால் பிரச்னைகள் உருவாக எவர் அடிப்படையான காரணம் என்பதையும் ஆராயலாமே?

‘ஓவியா சண்டை போட வரும் போதெல்லாம் நான் avoid செய்திருக்கேன்’ என்பது போன்ற தடாலடியான பொய்களையெல்லாம், மேலேயிருந்து ‘ஆண்டவர்’ கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார் மேடம். இதற்கெல்லாம் விடை ‘தீர்ப்பு நாள்’ பஞ்சாயத்தில் இருக்கிறது

‘இங்குள்ளவர்கள் அனைவருக்குமே மனஅழுத்தமுள்ளது. அதுவே முக்கிய காரணம்’ என்று ரைசா சொன்னது சரி. ‘நான் எப்ப சண்டை போடப் போறேனோ’ என்று சந்தடி சாக்கில் பிந்து மாதவி திருவாய் மலர்ந்ததைக் கண்டு பிக் பாஸ் கேக் வெட்டி அந்த மகிழ்ச்சியை கொண்டாடியிருப்பார். 

**

காயத்ரியின் ஆட்சேபத்தையும் மீறி சக்தி சிநேகனிடம் சென்று உரையாடியது சிறப்பானது. ‘காப்பாற்றப்பட வேண்டியவராக’ சிநேகனை விட்டு விட்டு வையாபுரியை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை சக்தி மறுபடியும் விளக்கினார். போதும் விட்டுடுங்கய்யா… நீங்களும் உங்க.. strategy-ம்

வையாபுரி பாணியில் காமிராவின் முன்நின்று ‘எனக்காக வாக்களிக்காதீர்’ என்று வேண்டிக் கொண்டார் சிநேகன். ‘பத்து வருடத்திற்கு முன்பிருந்த சிநேகன் வந்து விடுவானோ என்று பயமாக இருக்கிறது’ என்று அவர் சொன்ன போது ‘அட பாட்ஷா பட பிளாஷ்பேக்’ எல்லாம் பிக் பாஸில் வரப்போகிறதா என்கிற ஆவல் ஏற்பட்டது. ‘எதிரிகளை விடவும் நண்பர்களுடன் போட்டி போடுவது’ அவருக்கு சங்கட்டடமாக இருக்கிறதாம். 

வையாபுரியின் போக்கு சரியில்லை. முன்பு டாக்டராக இருந்த போது ஓவியாவிடம் ‘நானொரு உம்மா தரட்டுமா?’ என்று விளையாட்டாக கேட்பது போல கேட்டு வைத்தார். இப்போது பிந்து மாதவியை நோக்கி ‘மாதவி பெண் மயிலாய் தோகை விரித்தாள்’ என்று பாடுகிறார். அதுவும் தப்புத்தப்பாக வேறு பாடுகிறார். அது ‘பொன் மயிலாள்’ அவருடைய ‘வீட்டம்மணி’ இதை கவனிக்க வேண்டும். 

இதை விடவும் நகைச்சுவை, ‘மயில்’ என்கிற வார்த்தையை பிந்து மாதவி தவறாக உச்சரித்தது. அது காயத்ரியின் காப்பிரைட் வார்த்தை என்பதை மறந்து விட்டார். காயத்ரியுடன் பழகிய சிறிது நாட்களிலேயே இந்த வார்த்தை பிந்துவிடம் ஒட்டிக் கொண்டது போல. 

**

பிக் பாஸிடம் வேண்டிக் கொண்டது போல வையாபுரிக்கு பரோட்டாவும் பாயாவும் வந்து சேர்ந்தது. மற்றவர்கள் வயிற்றெரிச்சலுடன் ‘ஹிஹி..நீங்க சாப்பிடுங்கண்ணே’ என்று வழிந்தனர். நாட்டுக்கோழி சாப்பிட்ட பிறகு வையாபுரியின் சேட்டைகள் கூடாமலிருக்க வேண்டுமே!

வையாபுரிக்கென வந்த உணவை மற்றவர்கள் பங்கிட்டுக் கொண்டது குறித்து ரைசாவிற்கு வருத்தம். ஆம், அது சரிதான். ஒருவரின் வேண்டுகோளின் பேரில் பிரத்யேகமாக வந்த உணவை அவர் முதன்மையாக உண்ண அனுமதிப்பதுதான் முறை. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ‘வேணாம்.. வேணாம்’ என்று மறுப்பது போன்ற பாவனையுடன் வாங்கிக் கொள்வது முறையல்லதான். ஆனால் வையாபுரியால் தனியாகவும் தின்ன முடியாது. அதற்கேற்ற உடம்பும் இல்லை. எனவே தாமாக முன்வந்து மற்றவர்களுக்கு தந்ததும் இன்னொரு வகை நாகரிகமே. 

பிக் –பாஸில் அற்பமான பிரச்னைகளுக்கெல்லாம் பஞ்சாயத்து கிளம்புவது ஒரு பக்கம் எரிச்சலாகத்தான் இருக்கிறது. ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’ ரூம் போட்டு யோசிக்க வேண்டும். 

ரகசியமாக அழுது கொண்டிருந்த ரைசாவை ஆற்றுப்படுத்த சரியாக வந்து சேர்ந்தார் சிநேகன். ‘நாயக்கரே.. நீங்க நல்லவரா.. கெட்டவரா?”

ரைசாவின் கண்ணீரை துடைக்க காமிராவிற்கு கைகள் துடித்திருக்க வேண்டும். ஹிஹி.. நமக்கும். 

**

‘சிறிய வயதிலிருந்தே உங்களுக்கு கோபம் வருமா?’ என்று ‘நமது நிருபர்’ பிந்துமாதவி தன் பணியை மறுபடியும் துவங்கி விட்டார். 
‘கோபமெல்லாம் இல்லை, யாரிடம், எப்படி, பேச வேண்டும் என்று ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். என்னுடைய experience என்னவென்று ரைசாவிற்கு தெரியுமா?’ என்றார் காயத்ரி. இவரின் நடனத்திறமை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் திருப்பள்ளியெழுச்சி பாடலுக்கு இவரை விடவும் அற்புதமாக ஓவியாவும், பிந்து மாதவியும் நடனமாடுவது போலத்தான் தெரிகிறது. அப்புறம் என்ன அனுபவம்?

‘அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்ட’ பிரச்னை காயத்ரியை துரத்திக் கொண்டேயிருக்கிறது. “ரைசா ஏன் என்னைப் பார்த்து சிரிச்சா?”

**

விஜய் டிவிக்காரர்கள் ஒரு கரண்டி மாவை வைத்துக் கொண்டு அதிலேயே தோசை, ஊத்தப்பம், அடை, பிரியாணி’ என்று எல்லா உணவு வகைகளையும் தயாரிப்பதில் விற்பன்னர்கள். தங்கள் நிலையத்திற்கென ஆஸ்தான வித்வான்களை உருவாக்குவதிலும் திறம் படைத்தவர்கள். 

‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ பகுதியை அப்படியே எடுத்து வந்து ‘பிக் பாஸில்’ நுழைத்தார்கள். 

வீட்டில் நிகழும் எந்தவொரு மாற்றத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்’ என்றொரு task. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு போன்றதொரு பாத்திரம் நுழைந்தது. இருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்து கோணியில் போட்டது. நுழைந்த முதல் கணமே கணேஷின் தட்டில் இருந்த உணவைப் பிடுங்கியது முக்கியமான டெக்னிக். ‘சாப்பாட்டு ராமன்’ கணேஷ் மிகவும் சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டார்.

திருடனைப் பார்த்து பிந்து மாதவி கரோத்தே ஸ்டைல் காட்டிய போது ‘ஜாக்கி சான்’ ஜூலியைப் பார்ப்பது போலவே இருந்தது. 

‘ஐயா.. அந்த டைமண்டு எங்க இருக்குன்னு சொல்லிடுங்கய்யா.. ஷேர் பண்ணிக்கலாம்’ என்று சக்தியிடம் திருடன் சொன்னது நல்ல முயற்சி. உலக நாயகனின் வாரிசான அவர் ‘விருது திரைப்படங்களில்’ வருவது போன்ற முகபாவத்துடன் அமர்ந்திருந்தார்.

பிந்து மாதவியை அருகில் சென்று பார்த்த திருடன் ‘டிவில பார்த்த போது நல்லாத்தானே இருந்தீங்க’ என்றது செம கலாய். ‘கணேஷ் ப்ரோ.. வானத்துல என்ன தேடறீங்க.. பகல்லயே நட்சத்திரம் எண்ணறீங்களா’ என்றதும் சிறப்பு. ‘அவர் அவாய்ட பண்றாராராம்’ என்று சரியான நேரத்தில் கிண்டலடித்தார் சக்தி. 

இந்தக் கொடுமைகளுக்கு இடையில் காயத்ரி காமிராவைப் பார்த்து ‘நான் ரியாக்ட் பண்ணலையே.. என்ற  வெவ்வெ. காட்டிய போது, நமக்கு எரிச்சலும் சிரிப்பும் கலந்ததொரு விசித்திரமான உணர்வு எழுந்தது. ‘நீங்க.. அப்படியே…ரியாக்ட் பண்ணிட்டாலும்”….

அடுத்த வந்த ஜோக்கர், சிநேகனை குறி வைத்து கலாய்த்தது சிரிப்பு. Task முடிந்ததற்கான மணியடித்ததும்தான் போட்டியாளர்களைப் போலவே நமக்கும் நிம்மதி வந்தது. 

வித்தியாசமான task-களை யோசியுங்க பிக் –பாஸ். 

திருடிய பொருட்களையெல்லாம் சிரிப்புத் திருடன் திருப்பித் தந்து விட்டார். நேர்மையான திருடன். 

‘நீங்க ஆர்ட்டிஸ்டுன்ணே.. நீங்க போக மாட்டீங்க..’ என்று சக்தியிடம் சிநேகன் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு திருடனின் காமெடியே பரவாயில்லை. 

**
இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் இதுவரை எத்தனை ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதை சோதிக்கும் task. இதுவரையான நிகழ்வுகளில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் சரியாக பதில் அளிப்பவர் வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவார். 

‘நமீதா வீட்டு செல்லப் பிராணிகளின் பெயர்கள் யாவை?’ என்பது போன்ற கடினமான நூறு மார்க்  கேள்விகள். 

ஆரவ்வின் முறை வந்த போது ‘ஓவியாவிற்கு தரப்பட்ட tongue twister’ என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது. புகழ்பெற்று வைரல் ஆன அந்த காவிய டியூனை மறந்த ஆரவ்வை ஓவியப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே. 

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்கிற கேள்விக்கு ஆரவ்விற்கு பதில் தெரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் சிநேகனும் தடுமாறியது வியப்புதான். ‘தாயுமானவர்’ என்றார். இந்த விஷயத்தில் கவிஞரின் தமிழ் ஆசான் ஜூலிதான் போலிருக்கிறது. 

இதற்கான சரியான விடையை பிக் –பாஸ் தெளிவுப்படுத்தி விடுவது நல்லது. இல்லையென்றால் இந்தப் பிழையான தகவல் இளம் மனங்களில் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வரலாறாக பதிந்து விடும். இவ்வாறுதான் பல வரலாறுகள் திட்டமிட்டு எழுதப்படுகின்றன. 

ஆரவ் தந்த முத்தத்தின் பெயர் என்ன என்ற கேள்வியெல்லாம் ஓவர். கமல் தற்செயலாக சொல்லியதை கல்வெட்டில் எல்லாம் பதித்துக் கொண்டிருக்க வேண்டாம். (நாளைய பகுதியில்) இது குறித்து ஆரவ் சங்கடப்படுவது நியாயமே. 

பிந்து மாதவி இந்தக் கேள்விக்கு தடுமாறினார். அம்மணி, பழைய எபிஸோட்களையெல்லாம் பார்க்கவில்லை போலிருக்கிறது. ‘ஓவியாவை விளையாட்டாக குளத்தில் தள்ளியது யார்’ என்கிற கேள்விக்கு ‘அவரேதான் விழுந்தார்’ என்றார். ஏதாவது வழக்கிற்கு சாட்சி சொல்ல இவரைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.. விளங்கிடும்.

ஆனால் ‘மருத்துவ முத்தம்’ என்ற பதிலை மிகத் தெளிவாகச் சொன்னது கணேஷ். ஆரவ்வை முன்பு நோண்டி நோண்டி விசாரித்து தெரிந்த கொண்டது இப்போது சரியான நேரத்தில் உபயோகமாகியிருக்கிறது. வெல்டன் கணேஷ். சிறந்த மாணவர் நீங்கள். 

**

ஐந்து கேள்விக்கும் சரியான விடையைச் சொல்லி சரோஜாதேவி உபயோகித்த சோப்பு டப்பாவை பரிசாக வென்றவர் காயத்ரி. இதன் மூலம் வெளியேற்றத்திலிருந்து அவர் காப்பாற்றப்படுகிறார். ‘தான் வெற்றி பெற்றதற்காக நினைத்து முந்திரிக் கொட்டைத்தனமாக முதலில் கையை உயர்த்தி சக்தி பல்பு வாங்கினாரோ.?

‘எனக்கு சுயமரியாதைதான் முக்கியம் சக்தி. இந்தப் போட்டியில்லை’ என்று பஞ்ச் டயலாக் பேசிய காயத்ரி, வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு வந்தவுடன் இடைத்தேர்தல் அரசியல்வாதி போல மகிழ்ச்சியுடன் கைகூப்பி நன்றி தெரிவித்தார். 

காயத்ரியை வெளியேற்றுவதற்காக விதம் விதமான கணக்குகளைப் போட்டு தலையைப் பிய்த்துக் கொண்டு வாக்களித்த கணிதவியல் வல்லுநர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பயங்கர அதிர்ச்சியை அளித்திருக்கும். ‘பிக் பாஸின்’ திட்டமிட்ட சதி என்று இப்போதே தீவிரமான எதிர்ப்புக் குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலிக்கத் துவங்கி விட்டன. 

காயத்ரியின் வெற்றி தற்செயலானதா, திட்டமிட்டதா? முன்னதாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையைச் சொல்லுபவர்கள் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை., பொய் சொல்லுபவர்களுக்குத்தான் அதிக நினைவாற்றல் தேவை என்கிற தர்க்கத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம். அந்த நினைவாற்றல் திறமை காயத்ரிக்கு இப்போது உதவியிருக்கிறது என்று நினைக்கிறேன். 

**

காயத்ரியின் வெற்றி சக்தியைத் தவிர இதர போட்டியாளர்களுக்கு நெருடலாக இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அது சார்ந்த முணுமுணுப்புகள் பலமாகவே ஒலிக்கின்றன. ‘தன்னை பலவீனமான போட்டியாளர்’ என்று சக்தி சொன்னது குறித்து ஆரவ்விற்கு கோபம். எனவே இந்த விளையாட்டை தொடர்வது எரிச்சலாக இருக்கிறது என்கிறார். மன்னார்குடி மாஃபியாவிற்கான நிகரான தலைமை அதிகாரத்தை சக்தி –காயத்ரி குழு அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எதிரணியினர் ரகசியமாகவே புழுங்க வேண்டியிருக்கிறது. 

ரைசா – சிநேகன் vs சக்தி – காயத்ரி உரையாடலை ஏதோ மாஃபியா கேங்கின் சதித்திட்டம் போல பிக் பாஸ் எடிட்டர் மாற்றி மாற்றி காட்டி பில்டப் தர முயன்றது ஒருபக்கம் நகைச்சுவையாக இருக்கிறது. 

காயத்ரியின் வெற்றி அவர்களின் அணிக்கே மகிழ்ச்சியைத் தரவில்லை என்று வியக்கிறார் சிநேகன். ‘நீ போயிட்டியின்னா நான் ரொம்ப கஷ்டப்படுவேண்டா’ என்கிறார் காயத்ரி. (இவருக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கு ஆறுதல் செய்தி இது). 

சக்தி – காயத்ரி குழு இந்த வீட்டில் நீடித்தால் நான் வெளியேறுவது குறித்து தீவிரமாக யோசிப்பேன்’ என்கிறார் ரைசா. உண்மைதான். அவர்களால்தான் நிறைய மனப்புழுக்கங்கள் உருவாகின்றன. ‘அவர்கள் இருவரும் குழுவாக இருப்பதுதான் பலம். ஒருவேளை. பிரிந்தால் ‘நாகரிகமாக’ நடந்து கொள்வார்கள் என்கிற ரைசாவின் கணிப்பு சரியாக இருக்கலாம். 
‘ரைசா.. இன்னிக்கு மூட்அவுட்ல இருக்காங்க.. மேக்கப் போடலை. குளிக்கலை’ என்கிற முக்கியமான தகவலை காயத்ரியிடம் பகிர்ந்து கொண்டார் சக்தி. 

**

காயத்ரி காப்பாற்றப்பட்டது குறித்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நிறைய எரிச்சலும் கோபமும் இருக்கலாம். தங்களின் வாக்குகள் வீணாகி விட்டதே என்கிற நியாயமான கவலையும் தோன்றலாம். 

ஆனால் கவனியுங்கள், ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் வெளியேறி விட்ட நிலையில், பிந்து மாதவி வீட்டிற்கு வெளியே இன்னமும் ‘விருந்தினராக’ நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் காயத்ரியின் வெளியேற்றமும் நிகழ்ந்தால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது. காயத்ரி இருந்தால்தான் கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் சண்டை நடக்கும். சண்டையை வேடிக்கை பார்ப்பதுதான் நமது நோக்கம் என்கிற முக்கியமான அடிப்படையை மறந்து விடக்கூடாது. விக்ரமன் படத்து பாடல்கள் மாதிரி பிக் –பாஸ் வீடு மாறினால் பார்க்க சகிக்காது. சமூகவலைத்தளங்கள் போலவே அதுவொரு ரத்தபூமியாக நீடிக்கும் வரைதான் அதன் மதிப்பு இருக்கிறது. 

loading...

பாட்சா படம் வெற்றிகரமாக ஓடியது, வெறும் மாணிக்கத்திற்காக மட்டும் இல்லை. அந்த திரைப்படத்திற்கு அதிக மார்க் கிடைத்ததில், ‘மார்க் ஆண்டனிக்கும்’ கணிசமான பங்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு நாடகம் அதிக சுவாரசியமாக அமைய திறமையான Antagonist தேவை. இப்போதைக்கு காயத்ரிதான் அந்த ‘ஆண்டனி. இந்த அடிப்படையை மறந்து விடாதீர்கள் மக்களே..

அடுத்த கட்டுரைக்கு