Published:Updated:

உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (48-ம் நாள்)

உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (48-ம் நாள்)
உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (48-ம் நாள்)

உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (48-ம் நாள்)

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

சனி, ஞாயிறு ‘ஆண்டவர்’ வரும் நாள். எனவே ‘தீர்ப்பு நாள்’. எனவே இந்த வாரமும் கமலின் வருகையை, அவரது குறுக்கு விசாரணையை பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமன்றி, பார்வையாளர்களும் மிக ஆவலாகவும் பதட்டமாகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இதுதான் ‘SATURDAY FEVER’ போல.

எவர் வெளியேறப் போகிறார்கள் என்பதை விடவும், ‘காயத்ரி தன்னைக் காத்துக் கொண்டாரா, அல்லது பிக் பாஸால் காப்பாற்றப்பட்டாரா, இது தற்செயலா, முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? 

இது போன்ற மாற்றம் ஏற்படுமெனில் நாங்கள் மெனக்கிட்டு அளித்த வாக்குகளின் நிலை என்ன? ஏன் அவை வீணடிக்கப்பட்டன? ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக ஆதாரமாக உள்ள பார்வையாளர்களை பிக் பாஸ் அவமானப்படுத்துகிறாரா, உதாசீனப்படுத்துகிறாரா என்பது போன்று பல கேள்விகள், புகார்கள், கோப தாபங்கள் கமலின் முன்னால் காத்துக் கொண்டிருந்தன. அவர்தானே மக்களின் பிரதிநிதி?பிக் பாஸூம் கமலும் மக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டதால் அதற்கான ஜாக்கிரதையுடன் தற்காப்பு ஆட்டத்தை இன்று மிக கவனமாக ஆடினார்கள். ஆனால் மக்களிடமிருந்து வரும் அழுத்தங்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடகமா இது என்று தெரியவில்லை. 

அது பற்றி பிறகு. இப்போது வெள்ளியன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். 

‘புதுப்பேட்டை’ திரைப்படத்தில் இருந்து ஒலித்த ‘வர்றியா’ பாடலுக்கு வழக்கம் போல் பிந்துமாதவி சிறப்பாக நடனம் ஆடினார். காயத்ரியும் வழக்கம் போல் சோம்பல் முறித்தார். அது ஏன் ஆணகள் பெரும்பாலும் நடனம் ஆடாமல் சோம்பேறிகளாக சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்? கமலின் பஞ்சாயத்து குறித்து பிக் –பாஸ் போட்டியாளர்கள் விதம் விதமாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். “யார் மற்றவர்களுக்கு அதிகமாக டேமேஜ் செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அதிக டேமேஜ் ஆகும்’ என்கிற தத்துவத்தை காலையிலேயே உதிர்த்தார் ரைசா ‘அவர் என்ன சொல்ல வர்றார்னா..’ என்று மொழிபெயர்க்கும் பாணியில் . ‘தன்வினை தன்னைச்சுடும்’ என்று பழமொழியின் வழியாக சுருக்கமாக மொழிபெயர்த்தார் சிநேகன். 

‘இந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அற்ப விவகாரங்களுக்காகவா அத்தனை சண்டை போட்டோம், வருத்தப்பட்டோம்’ என்று நமக்கே காமெடியாகத் தெரியும்’ என்றார் சிநேகன். உண்மைதான். நம்முடைய வாழ்க்கையில் கூட கடந்த நாட்களை rewind செய்து பார்த்தால் எத்தனை அற்பமான விவகாரங்களுக்கு கூட ஓவர் ரியாக்ட் செய்திருக்கிறோம் என்கிற நோக்கில் பார்த்தால் சிரிப்புதான் வரும். பிக் பாஸ் முடிந்த பிறகு, இதையா இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்கிற உணர்வு வருவதைப் போலவே.

**

சிநேகனும் ரைசாவும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று உளவு பார்ப்பதற்காக சக்தியும் பக்கத்தில் அமர்ந்திருந்தாரோ, என்னவோ. பிறகு அங்கிருந்து விலகி, வரப்போகிற கமலின் பஞ்சாயத்தை எண்ணி திகிலுடன் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்த காயத்ரியிடம் சென்று ஆறுதல் சொன்னார்.சுற்றிலும் காமிராக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி சில போட்டியாளர்களால் ரகசியம் காக்க முடியும் என்பதை வேடிக்கையாக சொல்லிக் காட்டினார் வையாபுரி. ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’.

மறுபடியும் சப்டைட்டில் சேவையை பிக்பாஸ் துவங்கியது மகிழ்ச்சி. ரைசாவிடம் வையாபுரி முணுமுணுப்பான குரலில் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு புரியாமல் போய் விடக்கூடாது என்கிற கவலையுடன் அதைப் ‘போட்டுக்’ கொடுத்தார். ‘இவர்கள் ‘சக்தி – காயத்ரி’யைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்’
‘ரெண்டுல ஒண்ணு போயிடுச்சுன்னா.. இன்னொன்னுக்கு பைத்தியம் பிடிச்சிடும். தன்னால அதுவும் போயிடும் இங்க நடக்கறத அங்க சொல்றது.. அங்க நடக்கறத இங்க சொல்றது.. இதையெல்லாம் பண்ணமா இருந்தா அதுங்களுக்கு தலைவலி வந்திடும்’ என்று சக்தி –காயத்ரி கூட்டணி உடைவதால் ஏற்படும் நன்மையான எதிர்விளைவுகளை பற்றிப உற்சாகமாக முணுமுணுத்தார் வையாபுரி. 


காயத்ரி தனிமையடைவதால் உருவாகும் சூழல் பற்றி வாக்களித்த பார்வையாளர்களுக்கும் உற்சாகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. 

**

லக்ஸரி பட்ஜெட்டிற்கான தேர்வின் போது, ‘வீட்ல நான் –வெஜ்ஜே இல்லை’ என்ற சக்தி, தேர்வுப்பட்டியலின் போது ‘சிக்கனை’ தன்னிச்சையாக நுழைக்க முயன்றார். ஆனால் அதைவிடவும் அத்தியாவசியமான பொருட்கள் தேவைப்பட்டதால் அந்த தேர்வை அவர் அழிக்க வேண்டியிருந்தது. ‘ஐந்து நிமிடங்கள் தரப்படும், இந்த வீ்ட்டிலிருந்து எவர் வேண்டுமானாலும் வெளியேறலாம்’ என்று பிக் பாஸின் அறிவிப்பு வந்தால் ‘எவருமே வெளியேற மாட்டார்கள்’ என்கிற யூகத்தை சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ஆம், அப்படித்தான் நமக்கும் தோன்றுகிறது. சில காட்சிகளில் வெளியேற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், வேறு காட்சிகளில் அந்த உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். இடையில் என்னதான் நிகழ்கிறது? அவர்கள் அடையப் போகும் தொகைக்கான செக் எதையாவது திரையில் பிக் –பாஸ் காட்டுவாரா?

**

சக்தி இந்தப் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டால் ‘துணையின்றி தான் தனிமைப்பட்டு விடுவோம்’ என்கிற பதட்டமும் உளைச்சலும் காயத்ரிக்கு நிறைய இருக்கிறது. எனவே அது குறித்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார். மட்டுமல்லாமல், தான் கெட்ட வார்த்தைகள் பேசுவதை நிறுத்தாதது குறித்து கமல் கேள்வி கேட்பாரோ என்கிற பயமும் இருக்கிறது. 

பலமானவர்கள், ரவுடிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களில் பலர், மறுமுனையில் எத்தனை பலவீனமானவர்கள் என்பதையே காயத்ரியின் நிலைமை காட்டுகிறது.  ஏதோவோரு சிறிய ஆயுதத்தை வைத்துக் கொண்டு தங்களை பிரம்மாண்டமாக காட்டிக் கொள்கிறவர்கள், அந்த ஆயுதத்தை பிடுங்கி விட்டால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறார்கள். ‘எரியறதை பிடுங்கினால் கொதிக்கறது அடங்கும்’ என்பது பழம்மொழி.

எனவே சக்தியிடம் ‘தள்ளிப் போகாதே’ பாடலை மறுபடியும் மறுபடியும் பாடிக் கொண்டேயிருக்கிறார் காயத்ரி. இந்தப் பதட்டமே உளறலாகவும் மாறுகிறது. ‘அது எப்படி உன்னை அனுப்புவாங்க.. அப்படி அனுப்பினா நான் ரவுடியா மாறிடுவேன்’ என்கிறார். (ஏற்கெனவே அப்படித்தானே இருக்கீங்க). சில நாட்கள் முன்பு தான் ஜூலி, ஸ்ரீயிடம் , " என்னை தனியா விட்டுட்டு போயிடாத " என்று சொன்னது போல் இருந்தது. நேற்றைய நிகழ்வில், காயத்ரி சக்தியைப் பார்த்து, " என்னை தனியா விட்டுட்டு போயிடாத " என்கிறார்

‘உனக்கு முன்னாடி நான் போயிடணும் சக்தி’ என்று காயத்ரி சொல்வதையெல்லாம் நாம் பழைய திரைப்படங்களில் நிறையப் பார்த்திருக்கிறோம். 

‘நான் போகணும். என் மகனைப் பார்க்கணும்’ என்று தான் வெளியேறப் போவது குறித்தான பயத்தை பாசக்காட்சியாக சக்தி மாற்றும் போது ‘அனுப்பிடாதீங்க.. நான் தனியா மாட்டிப்பேன்’ என்று ரகசியக் குரலில் காமிராவிடம் சொல்கிறார் காயத்ரி. இது போன்ற சமயங்களில்தான் அவரது குழந்தைத்தனம் வெளிப்படுகிறது. ஆனால் இதற்காக, கமலின் முன்னால் ‘எல்கேஜி’ மாணவி போல முகத்தை மாற்றி வைத்துக் கொள்வதெல்லாம் ஓவர். **

‘என் வாழ்க்கையில் நிகழும் அனைத்துப் பிரச்னைகளையும் நானேதான் எதிர்கொள்வேன்’ என்று ரைசாவிடம் சவடால் விட்ட காயத்ரி, இப்போதைய பதட்டத்தில் ஆரவ் மற்றும் கணேஷிடம் சென்று ‘சக்தி போயிட்டா… எனக்கும் ‘சக்தி’ போயிடுமே.. தனியா மாட்டிப்பனே.. யார் எனக்கு ஆதரவு தருவா? என்றெல்லாம் புலம்புவது ஒருபக்கம் நகைச்சுவையாகவும் ஒருபக்கம் பாவமாகவும் இருக்கிறது. 

இது நாள் வரை தாம் மற்றவர்களை வதைத்துக் கொண்டிருந்ததெல்லாம் இப்போது தனக்கு எதிராக திரும்பி விடுமோ என்று அஞ்சுகிறார். அது சார்ந்த பயமும் குற்றவுணர்வும் அவரைத் துரத்துகிறது. குறிப்பாக அவர் அஞ்சுவது புதிய எதிரியான ரைசாவிற்கு. சிநேகனை கூட மறுபடியும் சோப்பு போட்டு வசப்படுத்தி விடலாம். 

‘ஒருவேளை ஆரவ் வெளியே சென்றால், ஓவியாவின் நிலையை நேரில் சென்று பார்க்க வேண்டும். ஆனால் அதைச் செய்வாரா என்று சந்தேகம்’ என்கிறார் சிநேகன். **

ஆண்களும் ஆணாதிக்கமும் நிறைந்திருக்கும் சினிமாத் துறையில் கோபமாக இருந்தால்தான் வேலை வாங்க முடியும், நிலைமையை சமாளிக்க முடியும்’ என்று தன் நிலையை நியாயப்படுத்த முயல்கிறார் காயத்ரி. கோபமாக உத்தரவுகள் போட்டால் பணிகள் நடக்கும் என்பது அதிகாரிகளின் அபத்தமான கற்பனை. இதனால் பணியாளர்களின் தன்னிச்சையான ஒத்துழைப்பு அதிகம் கிடைக்காது. மாறாக அந்த இடத்தில் கோபமும் வன்மமும் நோய் போல பரவிக் கிடக்கும்.

சரி, பணியிடத்தில் கோபமின்றி பணிகள் நடக்காது என்கிற நடைமுறையை ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும், பிக் பாஸ் என்பது ஒரு வீடு, கூடிவாழும் தன்மையை சோதிப்பது என்கிற அடிப்படையை காயத்ரி செளகரியமாக மறந்து விடுகிறார். பணியிடங்களில் காட்டும் அதே கோபத்தை வீட்டிலும் அவர் காட்டுவாரா? 
அலுவலகத்தில் ஏற்படும் கோபங்களை வீட்டிலும், வீட்டில் ஏற்படும் கோபத்தை பணியிடத்திலும் காட்டும் நபர்களைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?

சனியன்று நிகழப் போகிற பஞ்சாயத்து தொடர்பான தற்காப்பு ஆட்டமாக, சிநேகனிடம் ரைசாவிடமும் காயத்ரி வலிந்து வந்து பேசியதை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த இணக்கத்தை துவக்கத்தில் இருந்தே காயத்ரி கடைப்பிடித்திருந்தால் பிரச்னைகளே உருவாகியிருக்காது. உருவான பின் அதைப் பற்றி அஞ்சுவது, அதை மறைக்க நினைப்பது வீண். தான் கெட்ட வார்த்தைகள் பேசுவது பற்றி கமல் கேட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஒத்திகையை காயத்ரி செய்து காட்டிக் கொண்டிருந்தார். ரஜினிக்கான உடல்மொழியுடன் (கமல் என்பதால் ரஜினியா?) பஞ்ச் டயலாக்குடன் அதை பேசிக் காட்டியது நகைச்சுவை. ‘ரஜினி மாதிரி செய்யச் சொன்னா, ஜனகராஜ், செந்தில் மாதிரி உட்கார்ந்துக்கிட்டே பண்றே” என்று சரியாக சுட்டிக் காட்டினார் சக்தி. சமயத்தில் சேம் சைட் கோல் அடிப்பதில் சக்தி மன்னராக இருக்கிறார். 

**

‘வீட்டு உறுப்பினர்கள் என் முன்னால் வெளிப்படையாக உண்மைகளைச் சொல்வதில்லை. அகத்தில் நிறைய புறம் பேசுகிறார்கள்’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பித்தார் கமல்.

கடந்த வாரத்தில் பரபரப்பாக அமைந்த கமலின் குறுக்கு விசாரணைக் காட்சிகள் இந்த வாரம் பெரும்பாலும் சுவாரசியம் இழந்து போனது. அதற்கான காரணம், ஆச்சரிய விருந்தினர்களாக வந்த ஸ்ரீபிரியா மற்றும் சதீஷ் உடன் நிகழ்ந்த உரையாடல். இதைக் குறைத்துக் கொண்டு நேரடியாக அகம் தொலைக்காட்சிக்குள் சென்றிருக்கலாம். 

‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் 58 வருடங்களைக் கடந்ததற்காக வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக ஸ்ரீபிரியா சொன்னாலும், காயத்ரி காப்பாற்றப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளைக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் பிரதிநிதியாக அவர் வந்திருக்கிறார் என்பது வெளிப்படை. இந்த உரையாடலின் மூலம் பார்வையாளர்களின் ஐயங்களுக்கு விடை சொல்வது என்பதை விடவும் அவர்களின் கோப, தாபங்களைக் குறைப்பதற்கான ஒருவழியாக இது திட்டமிடப்பட்டதோ என்று தோன்றுகிறது. நல்ல திருவிளையாடல், பிக் பாஸ்.

கமலின் நகைச்சுவையுணர்வும் சமயோசிதமும் வழக்கம் போல் இந்த உரையாடலில் வெளிப்பட்டது. ' என்ன மேல பாக்கறீங்க லைட்மேனையா என ' ஆண்டவர்' பற்றி ஆண்டவர் அடித்த கமென்டிற்கு, அவரும் முக்கியம் தானே என ஸ்ரீப்ரியா கொடுத்த பதில் கமென்ட்.செம.

 ‘நீங்க குழந்தைல நடிச்சதைக் கூட நாங்க நடிக்கலை’ என்று சதீஷ் சொன்னது மிகையான ஐஸ் என்றாலும் நகைச்சுவையாக கருதி சிரித்து வைக்கலாம். 

இந்த நிகழ்ச்சிக்கு தாம் நெறியாளராக இருப்பதன் கடமை பற்றியும் அது சார்ந்த பொறுப்பு, சங்கடங்கள் ஆகியவை பற்றியும் கமல் விளக்கம் அளித்தார். ‘மக்களின் கோப தாபங்களை, நடுவரான தாம் அப்படியே எதிரொலிக்க முடியாது’ என்று அவர் சொன்னது சரி. 

இதர மொழிகளில் நடக்கும் பிக் பாஸ் போட்டிகளில், அதன் நெறியாளர்கள் பார்வையாளர்களின் கோபங்களை உள்வாங்கி அப்படியே தானும் போட்டியாளர்கள் மீது காட்டுவதைக் குறித்து பாராட்டும், மகிழும் குறிப்புகளை இணையத்தில் காண்கிறேன். ஒரு நெறியாளரின் பணி நிச்சயம் அதுவல்ல. சினிமாவில் எளிய மக்களின் சார்பில் அவதார நாயகராக பாவனை செய்யும் அதே அறச்சீற்றத்தை நிஜத்திலும் செய்ய முடியாது. அப்படிக் காட்டினால் அதுவும் நடிப்பே. 

பார்வையாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அதே சமயத்தில், போட்டியாளர்களையும் காயப்படுத்தாத நிதானம் ஒரு நெறியாளருக்கு நிச்சயம் வேண்டும். அது சார்ந்த பொறுமையும் கண்ணியமும் கமலுக்கு நிறைய இருக்கிறது. இதர மொழி நிகழ்ச்சிகளை நான் பார்க்கவில்லையென்றாலும் இதர நெறியாளர்களை விட கமல் சிறப்பாகவே செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது. ‘இரண்டு பேர் பங்குபெறுவதுதான் முத்தம்’ என்ற ஸ்ரீபிரியாவின் குறிப்பை ‘மூன்று பேர் கூட பங்கு கொள்ள முடியும்’ என்று இடைமறித்த கமலின் நகைச்சுவை நன்று. 
முத்த விவகாரத்தில் பெண் பக்கமே அதிக தவறிருப்பதாக நியாயத் தராசு சாய்ந்து கொண்டிருந்த போது, ஆரவ்வுடன் நிகழ்ந்த விசாரணையில் அவரை வலியுறுத்தி இந்த விவகாரத்தில் அவருடைய பங்கையும் அம்பலப்படுத்தி, பெண்ணின் நிலையை காப்பாற்றியதற்காக நன்றி’ என்று ஸ்ரீபிரியா தெரிவித்ததை நெகிழ்ச்சியுடன் கமலும் ஏற்றுக் கொண்டார். 

கமலை புகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஸ்ரீபிரியா இடையிடையே சதீஷை மட்டம் தட்டிக் கொண்டேயிருந்தார். ஸ்ரீபிரியா வெளிப்படையாக பேசுவது நல்ல விஷயம்தான் என்றாலும், அது அதிக நேரம் நீண்டது சலிப்பைத் தர ஆரம்பித்துவிட்டது.

‘இந்த நிகழ்ச்சியை தமிழ் பார்வையாளர்கள் அதிகம் கவனிக்கத் துவங்கியிருப்பதும் வெற்றியடைந்ததும் உங்களால்தான்’ என்று சதீஷ் குறிப்பிட்டது உண்மை. அந்தப் பொறுப்பை பல சமயங்களில் கமல் சரியாக உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. சில சமயங்களில் தவற விடுகிறார் என்கிற சந்தேகமும் உள்ளதுதான். 

‘எதிர் தரப்பிற்கு சரியான பதில்களை அளித்து விட்டால் அடுத்த கேள்விகள் வராது’ என்கிற கமலின் விளக்கம் சரிதான். ஆனால் பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கு இன்னமும் கூட பதில் வராதது போல்தான் இருக்கிறது ஆண்டவரே. 

இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்று பலர் நம்பிக் கொண்டிருப்பது தவறு என்பதற்கான தரவுகளை கமல் விளக்கினார்.  ‘நாம இப்ப அடுத்து என்ன பேசப் போறேன்னு தெரியாது, இல்லையா?’ என்றவர், ‘தோராயமா உள்ள ரெடி பண்ணது மட்டும்தானே’ என்று கூடவே சொன்னதை தவிர்த்திருக்கலாம். முரணாக தோன்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. 
‘போட்டியாளர்களின் சில தன்னிச்சையான எதிர்வினைகளை சிற்நத திரைக்கதையாளனால் கூட எழுத முடியாது’ என்கிற கமலின் கூற்று உண்மை. இதை ஏன் சிலர் நம்பவே மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இதற்கான உதாரணமாக ‘இயக்குநர் மணிவண்ணன் சொன்ன சம்பவத்தை’ கமல் மேற்கோள் காட்டியது சரியானது. பெண்களிடம் மட்டும் சிநேகன் நிகழ்த்தும் ‘கட்டிப்பிடி வைத்தியத்தை’ சதீஷ் மேடையில் நடித்துக் காட்டியது நகைச்சுவை. அந்த நடிப்பிற்காக கமலும் உடன்பட்டது சிறப்பு. இந்த விஷயத்தில் சிநேகனின் மீது எத்தனை பார்வையாளர்களுக்கு பொறாமை இருக்கிறது என்பது சபையின் ஆரவாரத்தில் தெரிந்தது. 

ஆரவ்வின் மருத்துவ முத்தத்தையும் சதீஷ் கிண்டலடித்தார். ஆனால் இது குறித்த காட்சிகள் ஏன் காட்டப்படவில்லை என விருந்தினர்கள் கேட்டது ரசனைக்குறைவானது மட்டுமல்ல, அபத்தமும் கூட. 

**

‘காயத்ரி ஏன் காப்பாற்றப்பட்டார்’ என்கிற ஸ்ரீபிரியாவின் கேள்வி முக்கியமானது. சபையின் கைத்தட்டல்களில் இது பிரதிபலித்தது. ‘இந்த கைத்தட்டல்களில் நானும் இணைகிறேன்’ என்று வேகமாக வந்த பந்தை மிக அநாயசமாக கடந்து சென்றார் கமல். 

‘இப்போதுதான் நல்லபடியாக வாக்களிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் பிக் பாஸிலாவது முறைகேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என்கிற கமலின் அரசியல் பஞ்ச் சூப்பர். 

‘நீங்க சொல்லி ஓட்டுப் போட நாங்க தயாராக இருக்கோம்’ என்று தன் பங்கிற்கு அரசியல் வெடிகுண்டை வீசினார் சதீஷ். இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் சிவாஜி என்கிற கலைஞனின் உடம்பும் மனதும் முன்பு ரணகளமானது என்கிற நிதர்சனத்தை அறிவாளியான கமல் புரிந்து கொள்வார் என்று நம்புவோம். 

‘இந்த நிகழ்ச்சியின் சட்டதிட்டங்கள் எனக்கே கூட முழுதாகப் புரியவில்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட கமல், இம்முறை பந்தை சாமர்த்தியமாக பிக் –பாஸின் பக்கம் தள்ளி விட்டார்.

பிக் –பாஸ் பொறுப்புடன் பதில் அளித்தாலும் ‘இந்த நிகழ்ச்சி குழந்தைகளும் பார்க்கும் நேரம்… என்பதால் என்று துவங்கிய பதிலில் இருந்து ‘இது குழந்தைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி என்பதை மறைமுகமாக அவர் அங்கீகரிக்கிறாரா என்ன”?

ஆரவ் முத்தம் தொடர்பான காட்சி காட்டப்படாததற்கு தமிழ் கலாசார மரபு ஒரு காரணம் என்றாலும் போட்டியாளர்களின் அந்தரங்கத்தை மதிப்பதுவும் ஒரு காரணம் என்றார் பிக் பாஸ். ஒருவகையில் சரி. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தரங்கம் பற்றியெல்லாம் பிக் பாஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல்தான்.

ஸ்மோக்கிங் அறையில் புகைப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படாதது குறித்து நானும் இந்தத் தொடரில் எழுதியிருந்தேன். இந்த உரையாடலில் அந்த விஷயத்தையும் கமல் தொட்டுச் சென்றது சிறப்பு.**

காயத்ரி காப்பாற்றப்பட்டாரா என்பது குறித்த ஸ்ரீபிரியாவின் கேள்வி பிடிவாதமாக தொடர்ந்தது. இது குறித்த பிக் பாஸின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படிதான் இருந்தது. குறைந்தபட்சம் எனக்கு. 

ஏனெனில் இந்த விளையாட்டில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று சொல்லி விட்ட பிறகு, ‘கேள்வி –பதில்’ பகுதி திணிக்கப்பட்டதா என்று ஆராய்வதில் நியாயமில்லை. மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு கேட்கப்பட்ட அதே வகை கேள்விகள்தான் காயத்ரியிடமும் கேட்கப்பட்டன. ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்’ வகை கேட்கப்படவில்லை. (எளிய தமிழில் கேளுங்கள் என்று தான் வலியுறுத்தியாக காயத்ரி பிறகு தெரிவிக்கிறார். எளிய கேள்விகள் அல்ல)

‘மக்களுக்குப் பிடித்தமான நபர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் வரக்கூடும்’ என்கிற பிக் பாஸின் அறிவிப்பை சபை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. எனில் ஓவியாவின் தரிசனம் மீண்டும் நிகழ அதிக வாய்ப்புண்டு. 

‘எனக்கான சார்புகளும் இருக்கலாம்’ என்று தனது சொற்பொழிவின் இடையே கமல் கூறியது கவனிக்கத்தக்க பாயிண்ட். பூனைக்குட்டி வெளியே வந்த சமயமா அது?

கணேஷிற்கு முன்பு கமல் சொன்ன அறிவுரையைப் போலவே ‘எதற்கு வம்பு’ என்று கமலும் சமயங்களில் ஒதுங்கிக் கொள்கிறாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான வெளிஅழுத்தங்கள் அவருக்குத் தரப்படுகிறதோ என்னவோ. 

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அவர்களின் குணாதிசயங்கள் மாறுவதில்லை. ஏற்கெனவே இருந்ததுதான் அது’ என்று கமல் குறிப்பிட்டது சரியான விஷயம். 
பார்வையாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவதற்காகவும் அந்த சாக்கில் அவர்களின் கோபங்களைத் தணிப்பதற்காகவும்தான் இந்த உரையாடல் என்றாலும் எழுதி வைத்துக் கொண்டு பேசிய நாடகம் போலவும் அமைந்தது நெருடல். இந்தப் பகுதியை சுருக்கமாக வைத்துக் கொண்டிருக்கலாம்.


இன்னொன்று, கமலின் தனிப்பட்ட சினிமா விஷயங்கள், அரசியல் நையாண்டிகள் போன்றவற்றை இதனோடு இணைப்பது ஒருவகையில் சுவாரசியம்தான் என்றாலும் இன்னொரு வகையில் இடையூறாகவே இருக்கிறது. 

சென்ற முறை நடந்த சர்வேயில், ஜூலி தான் குறைவான வாக்குகளைப் பெற்றார். மக்களின் தேர்வை பிரதிபலித்து ஜூலி வெளியேற்றப்பட்டது மகிழ்ச்சி. இந்த முறை 1% வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பது சக்தி. இரவு வரை காத்திருப்போம்**

பிந்து இந்த வீட்டிற்குள் நுழைந்த போது போட்டியாளர்களுக்கு அணிவித்த எண் பட்டியல் தொடர்பான ரகசியம் இன்று வெளியானது. தனக்குப் பிடித்தமான வரிசையை அவர் அணிவித்தார். ஒவியாவிற்கு முதல் எண் கிடைத்தது நினைவிருக்கலாம். 

‘போட்டியாளர்கள் தங்களின் குறைகளை வெளிப்படையாக இப்போது என்னிடம் தெரிவிக்கலாம்’ என்றொரு வாய்ப்பை கமல் தந்தார். 
காயத்ரியின் தரப்புதான் இப்போது முக்கியம் என்பதால் அது குறித்து பார்க்கலாம். மட்டுமல்லாமல் இதர போட்டியாளர்கள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. கணேஷ் மட்டும் பரணியிடம் மன்னிப்பு கேட்டார். 

சிநேகனும் சக்தியும் பேசிக் கொண்டது அவர்களுக்கே புரியமா என தெரியவில்லை. உப்புச்சப்பற்ற குறிப்புகள் அவை. எளிய விவகாரம். 

இனி காயத்ரி.

வீட்டின் உள்ளே மற்ற சமயங்களில் டெடராக இருக்கும் காயத்ரி கமலின் முன்னால் மட்டும் பள்ளிக்கூட மாணவி மாதிரி மாறி விடுகிறார். அந்நியனில் நடித்த விக்ரம் கூட காயத்ரியிடம் டியுஷன் படிக்க வேண்டும் போல.

சமீபமாக கமலைக்கூட கடுமையாக விமர்சிக்கத் துவங்கி காயத்ரி, இப்போது சபையில் அதை நேர்மையாக சொல்லாமல் குழைந்து கொண்டே வழிவது எரிச்சலானது. மட்டுமல்லாமல் விளையாட்டிற்கு வெளியே தாண்டி, கமல் உடனான குடும்பத் தொடர்புகளையும் நினைவூட்டுவது விளையாட்டின் அறம் அல்ல. அந்தக் குழைவை காயத்ரி ஒவ்வொரு முறையும் செய்கிறார். இம்முறை பதட்டம் அதிகம் என்பதால் குழைவும் அதிகமாக இருந்தது. 

இம்முறையும். கமலும் அது சார்ந்த சார்புகளினால் காயத்ரியின் குறைகளை இடதுகையால் தள்ளிச் செல்கிறாரோ என்று தோன்றுகிறது. கடந்த வாரம் இருந்த கடுமை கூட இந்த வாரம் இல்லை. கமலுடான குடும்ப நெருக்கத்தை சாமர்த்தியமாக அடையாளப்படுத்தும் காயத்ரி,  அதே சமயத்தில் அது சார்ந்த சலுகை தனக்கு ஏதும் தரப்படுவதில்லை என்பதையும் சபையின் முன்னால் உறுதிப்படுத்த முனைகிறார். மிக மிக சாமர்த்தியமான விளையாட்டு இது. 

இம்முறையும் அதே மாதிரியான மயிலிறகு தடவல்களை கமல் நிகழ்த்தினார்.  காயத்ரி தொடர்பான ஒரு குறும்படத்தை கறாராக உருவாக்கி சபையில் ஒளிபரப்பியிருந்தால் காயத்ரிக்கே தன்னைப் பற்றிய சரியான பிம்பலும் புரிதலும் கிடைத்திருக்கலாம். ஜூலிக்கு நிகழ்ந்த விஷயம் காயத்ரிக்கு ஏன் நிகழ்வதேயில்லை.?

‘எவ்ளோ கோபத்தைக் குறைத்திருக்கிறேன்’ என்ற காயத்ரி, சக்தியை சாட்சிக்கு அழைத்த போது சக்தி பதறி விலகினார். (வேலிக்கு ஓணான் சாட்சியா?)

ரைசா மட்டுமே காயத்ரியின் கோபத்தைப் பற்றி சுட்டிக் காட்டினார். மற்ற சமயங்களில் இது பற்றி பேசும் வையாபுரி கூட இப்போது மெளனம் காத்தார். (இவர் புறம் பேசுவதேயில்லையாமே?)

கணேஷூம் பிந்துவும் காப்பாற்றப்பட்டவர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். எனில் சக்தியின் நிலைமை என்ன? இன்றைக்குத் தெரியுமா?

‘எனக்காக ஒரு குட்டி டான்ஸ் ஆட முடியுமா” என்று வேண்டுகோள் வைத்தார் காயத்ரி. கமல் அதை ஏற்காவிட்டாலும், குட்டி நடனம் அல்ல, காயத்ரியின் இசைக்கு ஏற்ப கமல் பல ,நாட்களாகவே, நீண்ட நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாரோ?

அடுத்த கட்டுரைக்கு