Published:Updated:

பரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (49-ம் நாள்) #BiggBossTamilUpdate

பரணி, ஓவியா போல இப்போது  தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (49-ம் நாள்) #BiggBossTamilUpdate
பரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (49-ம் நாள்) #BiggBossTamilUpdate

பரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (49-ம் நாள்) #BiggBossTamilUpdate

‘பிக் பாஸ்’ - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ காயத்ரி காப்பாற்றப்பட்ட நிலையில் பார்வையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பின் படி ‘சக்தி’யின் வெளியேற்றம் இன்று நிகழ்ந்தது. இதன் மூலம் காயத்ரி ‘சக்தி’யும் அகன்றது எனலாம். 

மந்திர தந்திரக்கதைகளில் ஒருவனின் உயிர், மலை, கடல் கடந்து ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இராமாயணத்தில் வாலியுடன் சண்டையிடும் எவரும் தங்களின் பாதி பலத்தை வாலியிடம் இழந்து விடுவார்கள் என்பது போன்ற கதையாடல் உண்டு. 

இதைப் போலவே பிக் பாஸ் வீட்டில் காயத்ரியின் பெரும்பலமாக இருந்தவர் சக்தி. அவருக்கு ஆதரவாகவும் வடிகாலாகவும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் சிரிக்க வைத்து ஆற்றுப்படுத்திய நண்பனாகவும் இருந்தவர் சக்தி. சுருங்கச் சொன்னால், சக்தியில்லையேல், சிவமில்லை என்பது போல சக்தியில்லையேல் காயத்ரி இல்லை.

இதை காயத்ரியும் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவேதான் சக்தியின் வெளியேற்றத்திற்கு முன்பே அது குறித்து பதட்டமும் உளைச்சலுமாக இருந்தார். தான் தனிமைப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினார். விதை விதைத்தவன் வினை அறுப்பான். ஒருவர் செய்த தீமைகள் பூமராங் போல திரும்பி வரும் தருணங்கள் நிச்சயம் அமையும். 

இந்த உலகத்தில் எந்தவொரு மனிதருமே முழுக்க முழுக்க நல்லவரும், தீயவரும் இல்லை. சதவீதத்தின் அளவு மட்டுமே மாறுபடும். இதுவேதான் காயத்ரிக்கும் பொருந்தும். மற்றவர்கள் சமயங்களில் குறிப்பிடுவது போல ஒருவகையில் அவர் ‘குழந்தை’தான். ஆனால் பிடிவாதமான குழந்தை. 

கோபம் ஒருவரின் பலவீனமாக இருக்கலாம். ‘கோபப்படுபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்’ என்கிற நம்பிக்கை கூட உண்டு. அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது போன்ற பழமொழிகளும் உண்டு. ஆனால் தம்மிடம் உள்ளது பலவீனம் என்பதை உணர்ந்து பிறகு திருத்திக் கொள்ள முனையாதவர் பாடு சிரமம்தான். அந்தவகையில்தான் காயத்ரி மீது வருத்தமாக இருக்கிறது.

தன்னைக் குறித்து எவராவது சிறிது சீண்டினால் கூட உடனே கோபப்பபட்டு பிறகு வருத்தத்துடன் அழும் காயத்ரி அதே மாதிரியான தண்டனையை இன்னொருவருக்கு தராமலிருப்பதுதானே முதிர்ச்சி?

**

‘சக்தி’ ஒருவேளை வெளியேறினால் காயத்ரி தனக்கு ஏற்படும் அத்தனை அழுத்தத்தையும் எங்கள் மீது போடுவார்’ என்கிற ரைசாவின் அபிப்ராயத்தை காயத்ரியால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் வழக்கமான தன்மையின் படி ரைசாவின் மீது கோபப்படுகிறார், வசைகிறார்.  மற்றவர்களிடம் சொல்லி புலம்புகிறார். 

‘அப்படியா, ரைசா.. சரி.. இனி என் மாற்றத்தின் மூலம், அன்பான நடவடிக்கைகளின் மூலம் உங்கள் நினைப்பை பொய்யாக்குகிறேன்.’ என்று மனப்பூர்வமாக உணர்ந்து, ஆக்கப்பூர்வமான சவால் விட்டு அதைப் பின்பற்றலாம். இதன் மூலம் அவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்த மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் பரவும். அவர் மீதுள்ள தவறான அபிப்பிராயங்களும் எதிர்மறை பிம்பமும் இனி மறையும்.

தன் பலவீனங்களை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான திசைக்கு அழைத்துச் செல்ல முடியாததால்தான் பல துன்பங்கள் விளைகின்றன, அவருக்கும் மற்றவர்களுக்கும். 

**

‘எல்லைக்கோடுகள், தொல்லைக்கோடுகள்’ என்கிற சொற்களுடன் உள்ளே நுழைந்தார் கமல். சுதந்திர தினம் வருவதையொட்டி அவர் பேச்சு இருந்தது. ‘தமிழ் தலைவா’ கபடிப் போட்டி பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது. 

கிரிக்கெட், கால்பந்து போன்ற மேற்கத்திய விளையாட்டுக்கள் மட்டுமே இங்கு பிரபலமாக இருக்கும் சூழலில் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தமிழ் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான ‘கபடி’க்கு புத்துணர்ச்சி தரும் வகையிலான நடவடிக்கைகள் அற்புதம்; அவசியம்.

‘இந்தக் கோடு போட்டதே நாம்தான்’ என்று கபடியின் எல்லைக்கோட்டை கமல் அழுத்திச் சொன்னது அபாரம். 

**

“யார் வெளியேறத் தயாராக இருக்கீங்க?” என்று கமல் கேட்டதற்கு சிநேகன், ஆரவ், சக்தி என்று மூன்று பேருமே கை தூக்கினார்கள். (ஜூலி உட்பட பலரும் இப்படித்தான் முதலில் உற்சாகமாக கைதூக்குகிறார்கள். ஆனால் பிறகு ‘அழுவாச்சி’ நாடகம்தான் நடக்கிறது) தாமதமாக கை தூக்கிய ஆரவ், ‘கூட துணைக்கு எவரையாது அனுப்பி வெச்சா நல்லாயிருக்கும்’ என்று சூழலை சிரிப்பாக்கினார். 

‘சாணக்கிய தந்திரம் இல்லாததால் இங்கு நீடிக்க முடியவில்லை’ என்று சிநேகன் குறிப்பிட்டது எவரை?

‘வீரம் –னா பயமில்லாத மாதிரி நடிக்கறது’ என்கிற குருதிப்புனல் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய சக்தி, ‘இங்க இருந்தா கோபத்தில் ஏதாவது தப்பு செஞ்சிடுவேன்னு தோணுது. அதனால் போகத் தோணுது’ என்றார். 

**

‘சிநேகன் இயற்றிய கவிதையொன்றுதான் பல நேரங்களில் எங்களுக்கு ஆறுதல்’ என்று வையாபுரி சொன்னதும், கமலின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கவிதையின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. நன்றாகவே இருந்தது. டியூன் போட்டு பாடியே காண்பித்து விட்டார் சிநேகன். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் இனி அவரே இசையமைப்பாளர் ஆவார் போல. (தயாராக இருங்கள்).

இந்தக் கட்டுரையில் கூட இதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பிக் பாஸ் டீம் அதைப் படித்தார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவராக ஜூலி மற்றும் சிநேகன் குறிப்பிட்ட பிழையான தகவல் அப்படியே பதிந்து விடக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அது இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே திருத்தப்பட வேண்டும் என்றும். சிநேகனின் மனம் புண்படாத வகையில் அதைக் கண்ணியமாக கமல் நிகழ்த்தியது சிறப்பு.

**

அதிகம் நேரம் கடத்தாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமல். சக்தியின் வெளியேற்றம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிச்சயம் அதை சக்தி எதிர்பார்த்திருந்தார் என்பது அவர் தோரணையில் தெரிந்தது. ‘உள்ளே பழகியது போதும், வெளியே ரெளத்ரம் பழகாதீர்கள்’ என்றார் கமல் சூசகமாக.

‘மற்றவர்கள் எல்லோரும் இதர போட்டியாளர்களின் நாமினெஷன் வழியாக  வெளியில் போயிருக்கிறார்கள். நான் மட்டும் பிக் –பாஸ் நாமினஷேனில் வெளியேறுகிறேன். அது பெருமை’ என்றார் சக்தி. இது பெருமையா என்ன? அவரின் வெளியேற்றத்தை தீர்மானித்தது மக்களின் வாக்கு அல்லவா?

மற்றவர்களின் வெளியேற்றத்தின் போது தனது சலனத்தை பெரிதும் காட்டாத கணேஷைக் கூட அழவைத்தது, சக்தியின் வெளியேற்றம். எதிர்பார்த்தபடியே கண்ணீரில் நனைந்தார் காயத்ரி. நிச்சயம் இந்தப் பிரிவு அவரைப் பாதிக்கும். இனி மற்றவர்களிம் காட்டும் இணக்கம், அன்பு போன்றவற்றின் மூலம் அவர் தன் உளைச்சலைக் கடந்து வர முடியும். ஆனால் அவரின் ஆதாரமான குணாதிசயம் அதற்கு அனுமதிக்குமா?

‘நீ வெளிய போனா என்னைப் பத்தி எல்லார் கிட்டயும் நல்லதா சொல்லு’ என்பது போல் முன்பே சக்தியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் காயத்ரி. எனவே அதை மறைமுகமாக சக்தியிடம் நினைவுப்படுத்தினாரோ? ‘என் அம்மாவை சென்று பார்’ என்றார். 

சக்தி வெளியேறிய மறுகணமே, ரைசாவின் குறிப்பு தொடர்பான தன் கோபத்தை மற்றவர்களிடம் உடனேயே வெளிப்படுத்தினார் காயத்ரி. சக்தியின் பிரிவு மீதான துயரத்தை வெளிப்படுத்திய அடுத்த கணமே, இந்தக் கோபத்தை அவர் காட்டியது முரண். எனில் எது நிஜம்? துயரமான சமயங்களில் மற்றவர்களின் மீதான கோபத்தை புறக்கணிக்கத்தான் பொதுவாகத் தோன்றும். 

தனது ஆதங்கத்தை காயத்ரி தெரிவித்த போது பிந்துவால் சிலையாக மட்டுமே நிற்க முடிந்தது. ‘அவள் மேலிருந்த மரியாதை போய் விட்டது’ என்று காயத்ரி கோப்பட்ட போது கணேஷ் ஆறுதல்படுத்தினார். 

‘மறுவருகையின் போது சக்தி மீண்டும் வரக்கூடும். அவரை நான் நாமிஷேன் செய்த விஷயம் தெரிந்தால் நான் செத்தேன்’ என்று பயந்தார் ரைசா. ஆனால் ‘தான் மறுபடியும் இங்கு வரப்போவதில்லை’ என்று கமலிடம் சக்தி தெரிவித்து விட்டதால் ரைசாவின் பயம் வீணே. ஆனால் சக்தி –காயத்ரி கூட்டணியைக் கண்டு இதர போட்டியாளர்கள் ஏன் இத்தனை அஞ்சுகிறார்கள் என்கிற மர்மம் இன்னமும் பிடிபடவில்லை. 

**
‘அடுத்த வாரம் நிச்சயமா நான் போயிடுவேன்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் காயத்ரி. ‘தன்னுடைய கருத்துக்களை மட்டுமே ரைசா சொல்லியிருக்க வேண்டும். எதற்காக என்னைப் பற்றிய யூகங்களை சொல்ல வேண்டும்’ என்பது காயத்ரியின் வருத்தம். ‘என்னை அவர் தூண்டுகிறார். என்னுடைய பலவீனம் ரைசாவிற்கு தெரிந்திருக்கிறது’ என்றும் சொன்னார். ஆக.. தன் பலவீனம் என்னவென்று காயத்ரிக்குத் தெரிந்திருந்தும் அதை பலமாக ஆக்க முயலாமல் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது குறித்தே கவலைப்படுகிறார். 
‘கோபமில்லாமல் என்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?’ என்று அவர் கேட்பது சிறுபிள்ளைத்தனம். 

‘இங்குள்ள நிகழ்வுகளை வெளியே சரியாக காட்டுகிறார்கள். அதனால் மக்கள் சரியாக வாக்களிக்கிறார்கள். எனவேதான் சக்தியின் நியாயமான வெளியேற்றம் நிகழ்ந்தது’ என்று சிநேகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரைசா. பொதுமக்களிடம் தாங்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறோமோ என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்தால் சரி. கண்ணாடியால் பிம்பத்தை அப்படியேதான் காட்ட முடியும்.

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு கூட ஆரவ் இத்தனை கலங்கவில்லையே, சக்திக்கு போய் இப்படி கலங்குகிறானே’ என்று ரைசாவிற்கு ஆச்சரியம். எவர் மனதை எவர் அறிவார்?

‘ஜூலி, சக்தி, நமீதா என்று தனக்குப் பிடித்தவர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள்’ என்று கலங்குகிறார் காயத்ரி. மீதம் இருப்பவர்களை பிடித்தவர்களாக மாற்றிக் கொள்ளாமல் சென்றவர்களை குறித்து கலங்குவது வீண். மட்டுமல்லாமல் ஜூலி மீது அவருக்கு இருந்தது அன்பா, அதிகாரமா என்பது விவாதத்திற்கு உரியது. பல நேரங்களில் ஜூலியை அவர் தோழி போல நடத்தியதாகத் தெரியவில்லை. தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரஜையைப் போல்தான் நடத்தினார். 
‘பொண்ணுங்க எல்லாம் பயங்கரமானவங்களா இருக்காங்க’ என்பது காயத்ரியின் புலம்பலில் இடையே வெளிப்பட்ட ஒரு தத்துவ முத்து. சேம் சைட் கோல். 

காயத்ரியின் கூடவே இயற்கையும் அழுதது. மழை பெய்தது. ‘அடுத்து என்ன நிகழுமோ’ என்று சிநேகன் கவலைப்பட்ட போது, ‘அது அப்புறம்”, இப்போது மழையை ரசிப்போம்’ என்றார் ரைசா. ஓவியாவின் வாரிசாக மாறிக் கொண்டு வருகிறார்

வெளியே வந்த சக்திக்கும் கமலுக்கும் உரையாடல். 

‘சக்தி’ நடித்த திரைப்படம் ஒன்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடியது என்றால் அது ‘பிக் பாஸாக’ மட்டும்தான் இருக்க முடியும் என்று இணையத்தில் எவரோ ஜாலியாக கலாய்த்திருந்தார்.

இதே போல ‘Trigger’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு சக்தியை பாடாய் படுத்தி விட்டார் கமல். ஒரே ரகளை. இனி ‘டிரிக்கர்’ பிராண்ட் ஜீன்ஸ் கூட சக்தி உபயோகப்படுத்த மாட்டார். அத்தனை கலாய்ப்பு.

‘ஐம்பது நாள் அனுபவம் எப்படி இருந்தது’ என்று கமல் கேட்டதற்கு ‘மற்றவர்கள் கவனிக்கிறார்கள் எனும் போது நாம் செய்யும் தவறுகளை நாமே உணர்கிறோம் என்று தெரிகிறது. உள்ளுக்குள் இருந்து திருத்தும் குரல் எழுந்து கொண்டே இருக்கிறது. எனவே ‘என்னை’ உணர்ந்தேன்’ என்றார் சக்தி. நல்ல விஷயம்.

இதற்கு எதிர்திசையிலும் ஒரு விஷயம் இருக்கிறது. 

‘எவராலும் கண்காணிக்கப்படாத போதும் சரியாக இயங்குவதற்குப் பெயர்தான் நேர்மை’ என்றொரு பொன்மொழியை சில அரசு அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். 

‘சமநிலைக்கு கொண்டு வந்த  நிலைக்கண்ணாடி என்று சொல்லலாமா?’ என்று கேட்ட கமல், ‘சக்தி’ தரிசனம் கிடைத்ததா?’ என்று கேட்டதும் நுட்பமானதொன்று. 

**

‘இந்த வீட்டில் துவக்கத்திலிருந்தே உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தவர் எவரென்று சொல்ல முடியுமா?’ என்றொரு தூண்டிலைப் போட்டார் கமல். வகையாக வந்து மாட்டிக் கொண்ட சக்தி ‘ஓவியாவைச் சொல்வேன். அவர் செய்த சில விஷயங்கள் பிடிக்கவில்லை. ‘அடிச்சிடுவியா’ என்பது மாதிரியே பக்கத்தில் வந்து நின்னாங்க’ என்றார். 

ஓர் ஆண் என்கிற அகம்பாவத்துடன் ஒரு பெண்ணை நோக்கி அறைவதற்காக கை ஓங்கிய சக்தி, தன் தவறை இன்னமும் கூட உணரவில்லை என்பது வருத்தம். அவருக்கு காட்டப்பட்ட குறும்படத்தை பார்த்த போதாவது அவருக்கு உறைத்ததா என்று தெரியவில்லை. பொதுவெளில் ஓர் ஆண் தன்னை அடிக்க வருவதாகச் சொன்னால் சுயமரியாதையும் துணிச்சலும் உள்ள பெண், ஓவியா போலத்தான் எதிர்வினை செய்ய முடியும்; செய்ய வேண்டும். 

மொத்த வீடியோக்களையும் பார்த்த பிறகு சக்தி இதை உணர்வார் என நம்புவோம். அல்லது அவருடைய சுற்றத்தாராவது அவருக்கு இதை உணர்த்த வேண்டும். காயத்ரியைப் போலவே சில விஷயங்களில் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் குணம் சக்திக்கு இருக்கிறது. 

‘அவங்க என்னை trigger பண்ணிட்டே இருந்தாங்க’ என்று சொல்லி சக்தி மாட்டிக் கொண்டார். சபையினரிடமிருந்து ஆரவாரம் எழுந்தது. அவர்கள் தன்னைப் பாராட்டுகிறார்கள் போல என தவறாக நினைத்துக் கொண்ட சக்தி மேலும் உற்சாகமாகப் பேச முயல, இடைமறித்த கமல் ‘நீங்க வெளியே போனவுடன் இதைப் புரிந்து கொள்வீர்கள்’ என்றார். பிறகுதான் சக்திக்கு புரிந்தது, இந்த வார்த்தையுடன் இணைத்து தன்னைக் கலாய்த்திருக்கிறார்கள் என்பது. 

நம்முடைய தோரணையில், உடல்மொழியில் தான் அறியாமலேயே சில விஷயங்களை, சில வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். மற்றவர்கள் சுட்டிக்காட்டாமல் இதை நம்மால் உணரவே முடியாது. இதிலுள்ள தவறான விஷயங்களை சுற்றி இருக்கிறவர்கள் நிச்சயம் சுட்டிக் காட்டுவது நல்லது. 

**

‘வீட்டினுள் இருப்பவர்களில் உங்கள் நெருங்கிய நண்பர் யார்?’ என்பதற்கு சக்தி வேறு பதிலை சொல்லியிருக்கவே முடியாது. எனவே நேர்மையாக ‘காயத்ரி’ என்று ஒப்புக் கொண்டார். ‘பத்து வருடங்களுக்கும் மேலாக என் நெருங்கிய நண்பர். அவருடைய முக்கியமான பலவீனம் கோபம். என்னைப் போலவே உடனே கோபப்பட்டு விடுவார். அது தவறு என்று உணரும் போது அழத் துவங்கி விடுவார்’ என்றார். (முந்தைய காட்சிகளில் காயத்ரி அழுதது, தன் தவறை உணர்ந்து என்பது போல் தெரியவில்லை. உணர்ந்திருந்தால் மகிழ்ச்சி).

‘அழுவதற்குப் பதிலாக தன்னை திருத்திக் கொள்ளலாம் அல்லது மன்னிப்பு கேட்டு விடலாமே’ என்று கமல் சொன்னது அபாரம். கமலின் அனுபவம் இது போன்ற இடங்களில் பளிச்சிடுகிறது. ‘அறுபது வயதைக் கடந்த பிறகுதான் இது போன்ற ஞானங்கள் எல்லாம் ஏற்படும். பிக் பாஸ் ஒரு நல்ல வாய்ப்பு. இது போன்றவைகள் எல்லாம் எனக்கு இளமையில் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது என்றார் கமல். உண்மை. 

‘உங்கள் தந்தையின் அந்தஸ்து உங்களுக்கு உள்ளே உதவியாக இருந்ததா?’’ என்றொரு சூசகமான கேள்வியை கமல் எழுப்பினார். சக்தியையும் காயத்ரியையும் திரைப்பிரபலங்கள், செல்வாக்கானவர்கள் என்று நினைத்துக் கொண்டுதான் பெரும்பாலோனோர் உள்ளே அமைதியாக இருந்ததாகத் தோன்றியது. 

தொடரின் முந்தைய அத்தியாயங்கள்


Day : 48  | 47  | 46  | 45  | 44  | 43   | 42 | 41 | 40  | 39 | 38 | 37 | 36 | 35  | 34  | 33 |
 

உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி!(Day 48)

காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?!(Day 47)

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்!(Day 46)

அதை ஒருமாதிரியாக ஒப்புக் கொண்டார் சக்தி. ‘இதுவரை என் தந்தையின் நிழலில் இருந்தேன். அதிலிருந்து விடுபட்டு எனக்கான சுயஅடையாளத்தை இந்த நிகழ்ச்சி உருவாக்கித் தந்தது என்று நம்புகிறேன். இனி மக்களில் ஒருவனாக இருப்பேன்’ என்பது அவர் தன்னை உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்ற வைக்கிறது. 

‘அங்கீகாரம் என்பது உடனே கிடைக்காது. அதற்கு பல வருடங்கள் ஆகும். அதற்கான உழைப்பு தேவை. ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் அறியவே எத்தனையோ வருடங்கள் ஆகிறது’ என்பதை உதாரணத்துடன் கமல் சுட்டிக் காட்டியது அருமை.
‘இந்த வழக்கத்திற்கு எதிர்திசையில், புகழ் வரப்போவதற்கு முன்னால் உங்களைப் பற்றிய ஆய்வுகள் பிக் பாஸ் மூலமாக முடிந்து விட்டன’ பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வாழ்த்தினார் கமல். 

**

‘உங்களை டிரிக்கர் பண்றேன்னு நெனச்சுக்காதீங்க’ என்று பரணி குறித்த பஞ்சாயத்தை ஆரம்பித்தார் கமல். இந்த விஷயம் குறித்து முன்பு அதிகம் கேட்கப்படாததிற்கு வட்டியும் முதலுமாக, தனித்தனியாக அவர் இதை அணுகுவது ஒருவகையில் மகிழ்ச்சி. சபையோரின் கைத்தட்டலும் இதை எதிரொலித்தது. 

‘இதற்கு சக்தி சொன்ன விளக்கம் இதுவரை எவரும் சொல்லவில்லை. இது ஏற்புடையதாக இருக்கிறது’ என்றார் கமல். ஆனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதை பிற்பாடு கமலே உணர்ந்தது போல்தான் தோன்றியது. 

‘பிக்பாஸின் உத்தரவுபடிதான் பரணி சுவரேறிக் குதித்தார் போல என்று நாங்கள் நினைத்தோம்’ என்று சக்தி கூறுவது உண்மையா என தெரியவில்லை. பிக் பாஸ் சுவர் ஏறியெல்லாம் குதிக்கச் சொல்ல மாட்டார் என்பதை யூகிப்பது எளிய விஷயம்.

மற்றவர்களின் கூற்றுப்படி பரணி சில தவறுகளை உள்ளே செய்திருந்தாலும் கூட, ஒருவர் மனஉளைச்சலில் ஆபத்தான விஷயத்தில் இறங்கும் போது, எல்லா கோப தாபங்களையும் விட்டு விட்டு உடனே சென்று உதவி செய்வதோ, ஆதரவாக பேசுவதோதான் முறை. அன்றாட வாழ்க்கையில் கூட நாம் இதைப் பார்க்கலாம். பரம்பரைப் பகை என்றாலும் கூட ஒருவருக்கு எதிர்பாராத விபத்து என்றால் உதவி செய்ய ஓடுவதே அடிப்படையான மனித நேயம். 

‘பொய்யர், நடிக்கிறாள்’ என்றெல்லாம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜூலிக்கு காட்டப்பட்ட அதே மனிதநேயம், நிச்சயம் பரணிக்கும் காட்டப்பட்டிருக்க வேண்டும். 

**

‘தரப்பட்ட task-களில் முதலில் ஆர்வமாக இருந்த நீங்கள் பின்பு ஏன் ஆர்வமிழந்து விட்டீர்கள்’ என்று கேட்டார். ‘உடலுழைப்பு சம்பந்தமான விளையாட்டுக்கள் சோர்வடைய வைக்கின்றன. உளைச்சலைத் தருகின்றன’ என்றார் சக்தி. ‘அதையொரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே, கூடுதலான விஷயத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே’ என்று கமல் சொல்வது சரி. 

மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள் ஒருவருடம் கட்டாயம் ராணுவப் பணியில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. அது செல்வந்தரின் மகனோ, அல்லது ஏழையின் மகனோ.. நிச்சயம் இதில் கலந்து கொள்ள வேண்டும். உடல் சார்ந்த சிரமங்களை அங்கு எதிர்கொள்ளும் போது வாழ்வின் பல அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. நெருக்கடியான சூழல்களில் அவை உதவும். நம் நாட்டிலும் அது போன்றதொரு ஏற்பாட்டைச் செய்யலாம். 

இதற்கான உதாரணத்தை தன் சுயவாழ்க்கையில் இருந்தே சொன்னார் கமல். அந்த தகவலை நானும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். 

**

போட்டியாளர்களின் புகைப்படங்களை வட்டத்தட்டில் ஒட்டி, அதைச் சுற்றும் போது எவருடைய புகைப்படத்தின் மீதான அம்புக்குறி வந்து நிற்கிறதோ, அவரைப் பற்றி ஒரு வரியில் திரைப்படத் தலைப்பாக சொல்லி, சுருக்கமான விமர்சனத்தையும் சொல்ல வேண்டும் என்கிற விளையாட்டு.

வையாபுரிக்கு ‘சாப்ளின் செல்லப்பா’ என்றார் சக்தி. வையாபுரியின் சில குறைகளை அவருடைய வயதும் நகைச்சுவையுணர்வும்தான் காப்பாற்றுகிறது போல. 

பிறகு சுற்றியதில் வந்து நின்றது காயத்ரியின் படம். விதி வலியது. சபையும் சக்தியின் அபிப்ராயத்தைப் பற்றிக் கேட்க ஆவலாக இருந்தது.

படத்தின் பெயர் ‘குழந்தை உள்ளம்’ என்றார் சக்தி. ஆனால் சபை இதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏமாற்றமான கூக்குரல்கள் ஒலித்தன. ‘தாலாட்டு பார்த்தீங்களா’ என்று குழந்தை என்கிற வார்த்தையுடன் இணைத்து அற்புதமாக கிண்டலடித்தார் கமல். 

‘காயத்ரி ஒரு குழந்தை போல. கோபம்தான் அவரது பலவீனம். அதைத்தவிர உள்ளே வேறு ஒன்றுமில்லை. அவருக்கு சிறந்த நண்பனாக இருப்பேன்’ என்றார் சக்தி. மகிழ்ச்சியான விஷயம். இக்கட்டான சூழலிலும் நண்பரை விட்டுக்கொடுக்காமல் பேசுபவரே உண்மையான நண்பன். 

‘காயத்ரியை அவரது தந்தையின் இழப்பிற்கு முன்னரும் பின்னரும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றொரு தனிப்பட்ட காரணத்தைக் கூறினார் சக்தி. இருக்கலாம். அது சார்ந்த உளைச்சல் கூட காயத்ரியின் சமநிலையின்மைக்கு காரணமாக இருக்கலாம். (இதே காரணத்தை ஓவியாவிற்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். அவருடைய தாயும் சமீபத்தில்தான் புற்றுநோய் காரணமாக மறைந்து போனார். இந்த விஷயம் சக்திக்கு தெரியுமா என தெரியவில்லை).

மற்றவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பது, அதை சரியாக உபயோகித்து கிண்டலடிப்பது போன்ற சில ஆதாரமான திறமைகள் சக்தியிடம் இருக்கின்றன. ஒரு நடிகருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய விஷயம் இது. 

ஆயிரம் பலங்கள் இருந்தாலும் ஒரேயொரு பலவீனம் ஒரு நபர் பற்றிய எதிர்மறைச் சித்திரத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி விடுகிறது. தன்னுடைய திறமைகளை சக்தி வளர்த்தெடுத்து நடிப்புத்துறையில் பிரகாசிப்பார் என நம்புவோம். 

சக்தியைப் பற்றிய குறும்படம் ஒன்று காட்டப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் அவர் கழித்த தருணங்கள். ஒவியா பற்றிய பகுதி வந்த போது ‘அடடா.. நாமும் ஸாரி சொல்லியிருக்கலாமோ’ என்று அவருக்குத் தோன்றியதா என தெரியவில்லை. 

‘கோபத்திற்கான பயிற்சி முகாம்’ என்கிற குறிப்புடன் சக்திக்கு விடை தந்தார் கமல்.

**

50 நாட்கள் காட்சிகளின் தொகுப்பு ஒன்று பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுக்கு காட்டப்பட்டது. பாப்கார்ன், சோபா சகிதமாக உட்கார்ந்து ரசித்தனர். பல்வேறு வகையான உணர்ச்சி பாவங்கள் அவர்களின் முகங்களில் வெளிப்பட்டன. ஓவியா பற்றிய காட்சிகளின் பிரதிபலிப்பாக ஆரவ்வின் முகபாவம் கவனிக்கத் தகுந்ததாக இருந்தது. போலவே காயத்ரியின் முகபாவங்களும். 

ஓவியாவின் உற்சாக தருணங்களைப் பார்க்க நமக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 

பிறகு அறுசுவை விருந்து. ஆட்டுக்கு ஏன் இலையும் தழையும் அதிகமாகப் போடுகிறார்கள் என்று தெரியாமல் உற்சாகமாக உணவருந்தினார்கள் போட்டியாளர்கள். ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் டெல்லி கணேஷ் புலம்புவது போல ‘தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் உத்தி இது போல. 

‘அய்.. சைட்டிஷ் வந்துடுச்சு.. சரக்கு இனிதான் வரும் போல’ என்று இளைஞர்களுக்கே உள்ள குறும்பை வெளிப்படுத்தினார் ஆரவ். (அடப்பாவி. அப்ப உள்ள கண்கலங்குனது மாதிரி இருந்ததெல்லாம் நடிப்பா).

பிக்பாஸ் மற்றும் கமல் தந்த பரிசுகளுக்காக போட்டியாளர்கள் நன்றி சொன்னார்கள். 

**

‘சில நேரங்களில்…. சில மனிதர்கள். சில தவறுகள் செய்யத்தான் செய்கிறார்கள். மனிதர்கள்தானே…. தவறுகள் குற்றங்கள் அல்ல…  என்பதை பொருத்தமான நேரத்தில் சரியான தோரணையில் சொன்னார் கமல்.

 ‘கைத்தட்டுங்கப்பா…’ என்பது போல் பின்பு இடைவெளி விட்டார். ‘கோர்வையா சொல்லிட்டேன்ல’

எழுத்தாளர் ஜெயகாந்தனின் கூற்று அது என்று பிறகு வெளிப்படுத்தியது சிறப்பு. 

சில வரவுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கின்றன என்றொரு அறிவிப்பை கமல் வெளியிட்டார். ‘உங்களுக்கு சந்தோஷம். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு எப்படியோ’ என்று சிண்டு முடியவும் தவறவில்லை.

ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ‘சில வரவுகள்’ என்பதைக் கேட்ட போது அங்கிருந்த சபையும் ‘ஓவியா.. ஓவியா..’ என்று கூவியது. ‘எனக்குத் தெரியாது. வரவிரும்புபவர்கள் வருவார்கள்’ என்றார் கமல்.

என்னளவில் ஒவியா மீண்டும் வீட்டுக்குள் வருவது பொருத்தமான முடிவாக இருக்காது. டெண்டுல்கர் கிரிக்கெட் மேதைதான். ஓய்வு பெற்ற பிறகு ‘சரி.. நான் மீண்டும் வந்து ஆடுகிறேன்’ என்றால் அது நன்றாகவா இருக்கும்? 

சில பிரிவுகள் நியாயமானவை; தேவையானவை. அவை அப்படியே இருக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு