Published:Updated:

சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்கள்! #BiggBossTamil

சிவராஜ்
சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்கள்! #BiggBossTamil
சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்கள்! #BiggBossTamil

இப்போது எங்கு பார்த்தாலும் 'பிக் பாஸ்' பற்றிதான் பேச்சாக இருக்கிறது. அதிலும் காலை பாடல் ஒலிக்கும்போதெல்லாம் ஓவியா ஆட்டம் போட்டு இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தார். சனி ஞாயிறுகளில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பதைச் சுட்டிக்காட்டி நிகழ்ச்சியைச் சீர்தூக்கி நிறுத்தி அனைவரையும் ஈர்க்கிறார். பிக் பாஸில் இருக்கும் வாழ்வு பற்றி சினேகன் பாடல் ஒன்றை உருக்கமாகப் பாடினார்...

'இந்த வாழ்க்கையும் ஒரு பாடம்தான்
இங்கு வாழ்வதும் ஒரு வேடம்தான்
அவனவன் முகத்திரை அவனவன் கிழித்திடும்
அழகிய போர்க்களம்தான்

பொய்களும் மெய்களும் பொசுக்கென வெளிப்படும்
அதிசய குருகுலம்தான்
இந்த பூமி மேடை சுழலும் வரை
இந்த நாடகம் முடியாது’

எந்த டாஸ்க் கொடுத்தாலும் அசராமல் அசத்துகிற சினேகனைப் பார்த்தால் அடுத்த பிக் பாஸ் வரை போவார் என்கிறார்கள் பார்க்கும் பலரும். பந்தாவா முடி வளர்த்துக்கொண்டு பரபரப்பாக போன் பேசிக்கொண்டு இருந்த சினேகனா இது என்கிறார்கள். கரிக்கட்டையைப் பற்றவைத்து அயர்ன் செய்வது, தோசைச் சுட்டுக்கொண்டே திருப்பியைப் பிடித்தபடி ‘என்ன போதும்’ என்று அக்கறையாகக் கேட்பது என்று புகுந்து விளையாடும் சினேகனைப் பற்றித் தெரியாத 10 விஷயங்களை நாம் இந்த மானிட்டர் வழியே படிப்போம்.    

1. சினேகன் வாழ்க்கையில் நிறைய அடிபட்டவர். கல்லூரி சென்று படிக்கவில்லையென்றாலும், பட்ட அறிவைவிட அவர் பட்டறிவுதான் அதிகம். 

2. பிக் பாஸ் வீட்டுக்குள் கவிஞர் சினேகனைப் பார்த்தவுடனே இவர்தான் தலைவர் ஆவார் என்று நினைத்தேன். அதேபோல் முதல் வாரமே தலைவரானார். அதற்குக் காரணம், அவரிடம் உள்ள ஈடுபாடுதான். எதையும் முன்னின்று செய்யக்கூடியவர். தெரிந்தது தெரியாதது என்று தயக்கமோ கூச்சமோ இன்றி துணிச்சலாகச் செயல்படுவார். திரையுலகில் பிரபலமாகாத அறிமுகக் காலத்திலேயே படப் பாடல்களின் சி.டி வெளியிடும் நிகழ்ச்சி, வெற்றி விழாக்கள் போன்ற மேடைகளில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். அந்த ஆளுமை அவரிடம் இருக்கிறது.

3. சினேகன் இந்த உயரத்துக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் அவமானங்களையும் கடந்துதான் செல்வமாக இருந்தவர் இன்று சினேகனாக வளர்ந்திருக்கிறார். ஒருமுறை சந்திக்கும்போது, ’ஊரில் அண்ணன்களுக்காக வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன்’ என்றார். 

4. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகில் புதுக்கரியப்பட்டி எனும் செம்மண் கிராமத்திலிருந்து தஞ்சாவூருக்கு தினமும் வேலைக்கு வந்து செல்வார். அவர் வேலை பார்க்கும் ரேடியோ மெக்கானிக் கடைக்குப் பக்கத்தில் அலுவலகம் வைத்திருந்த தஞ்சை இரா.செழியன் மூலமாக கவிஞர் வைரமுத்துவிடம் வந்து சேர்ந்தார். 

5. 'பூவுக்குள் யாரோ கிச்சுக்கிச்சு மூட்டியது' என்ற பாடலில் மலர்ந்து சிரிக்கும் பூக்கள் பற்றி சொல்லியிருப்பார். இசையமைப்பாளர் பரத்வாஜ் மெட்டமைக்கும்போது உடன் இருந்து டம்மி வார்த்தைகளை நிரப்பிக்கொண்டிருந்த நேரமது. அப்போது இயக்குநர் சேரன் ‘பாண்டவர் பூமி’ படத்துக்காக பரத்வாஜ்ஜிடம் வரும்போது அறிமுகமாகிறார் சினேகன். அப்போதைய நிலைபடி மெட்டமைக்க நீங்க எழுதுங்க. பாடல் வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள்கிறோம் என்கிறார் சேரன். இவரும் உற்சாகமாக எழுதுகிறார். நமக்கு பாடல் எழுத வாய்ப்புத் தரமாட்டார் என்று எண்ணாமல், நிறைய எளிய வார்த்தைகளில் உத்வேகத்துடன் எழுதி எழுதிக் காட்டுகிறார். சினேகனின் ஈடுபாட்டைப் பார்த்த சேரன் 'உன்னைப் பாடலாசிரியர் ஆக்கிக்காட்டுகிறேன்' என்று அவரையே பாடல் எழுதச் சொல்கிறார். அப்படி உருவானதுதான், 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்... 
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்’ என்று சினேகனை அடையாளப்படுத்தியது. இதே படத்தில் ‘தோழா தோழா’ பாடலும் பெண்களிடத்தில் மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து சேரனின் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து படங்களிலும் பாடல் எழுதினார் சினேகன்.

6. ’பலனை எதிர்பார்க்காமல் உழைக்கும் எந்த உழைப்பும் பழுதடைந்து போவதில்லை' என்பது சினேகனின் வாழ்க்கையில் மிகப் பெரியதாக இருந்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். ’ஐந்தெழுத்து மந்திரத்தை அறிய வைத்த என் தாயே’ என்ற வரியைக் கேட்ட விஜயகாந்த் ‘என்னய்யா அந்த ஐந்தெழுத்து மந்திரம்’ என்று அவருக்கும் பிடித்துப்போனது. அவர் நடித்த ‘ராஜ்ஜியம்’ படத்தில் போராடி இடம் பெற்றதுதான் 'தமிழன் தமிழன் இவன்தான் தமிழன் தலைவன் தலைவன் இவன்தான் தலைவன்...' பாடல். பிறகு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் கட்சி பொதுக்கூட்டங்களில் இந்தப் பாடல் ஒலித்தது.

7. சில சமயம் சினேகன் வித்தியாசமாகச் செய்து சர்ச்சைகளிலும் சிக்குவார். இயக்குநர் ஹரி இயக்கிய ‘சாமி’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் எழுதிய 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா?' பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதோடு சர்ச்சையையும் கிளப்பியது. தனது பாடல்களை கவிதையாக எழுதி அந்தப் புத்தகத்துக்கு ‘புத்தகம்’ என்று  வித்தியாசமாகத் தலைப்பு வைத்தார்.

8. மலேசியாவில் வெளிவரும் ‘நயனம்’ வார இதழில் ’அவரவர் வாழ்க்கையில்...’ தொடர் எழுதினார். அது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. அப்படிதான் மலேசிய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அங்கிருந்த டைனமிக் பவுண்டேஷன் மூலம் நிறைய விளக்க வகுப்புகள் நடத்தியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் ’கட்டிப்பிடி வைத்திய’த்தில் பங்குபெற்றபோதும், உயர்திரு 420 படத்தில் கதாநாயகனாக நடித்தபோதும் விமர்சனங்களுக்கு ஆளானார். 

9. பாடல் எழுத இவர் வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தபோது இயக்குநர் பாலா `சேது’ பட வேலைகளில் இருக்கிறார். அவரிடம் வந்து வந்து பாடல் வாய்ப்புக் கேட்கிறார். அப்போது பாலாவிடம் இணை இயக்குநராக இருந்த அமீர் அதற்கான சூழல் அங்கு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு சினேகனைத் தனியாக அழைத்துச் சென்று, ’இங்கே வாய்ப்புக் கிடைக்கிறதோ இல்லையோ நான் எடுக்குற படத்துல வாய்ப்புத் தருகிறேன்’ என்று சொல்லி அனுப்புகிறார். அதேபோல் அமீர் இயக்கிய 'மௌனம் பேசியதே' படத்தில்  'ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள’ பாடலை எழுத வைக்கிறார். தொடர்ந்து ராம், பருத்திவீரன்,யோகி என்று தொடர்கிறது. யோகியில் நடிக்கவும் பாடவும் வாய்ப்பளித்தார் அமீர். சடையனாக சென்னை மொழியில் நன்றாக நடித்திருந்தார். அதுதான் சினேகனை கதாநாயகனாக நடிக்க வைத்தது.

10. ஆடுகளம் படத்துக்காக பாடல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது சினேகன் எழுதிய  ’அடிவெள்ளாவி வச்சுதான் வெளுத்தாங்களா, உன்ன வெயிலுக்குக் காட்டாம வளத்தாங்களா...’ என்கிற பல்லவியைப் படித்தவுடன் துள்ளிக் குதித்து பாராட்டினாராம் இயக்குநர் வெற்றிமாறன். கழுகு படத்தில் ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அதைக் காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்’ என்று எழுதி இருப்பார். பரபரன்னு இயங்கும் சினேகன் வீட்டுக்குள் அடங்கிக் கிடக்கிறார் என்றால், பிக் பாஸுக்குப் பிறகு அவர் தன் வாழ்க்கையில் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார்!