Published:Updated:

ரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..!? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (51-ம் நாள்) #BiggBossTamilUpdate

ரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..!? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (51-ம் நாள்) #BiggBossTamilUpdate
ரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..!? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (51-ம் நாள்) #BiggBossTamilUpdate

ரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..!? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (51-ம் நாள்) #BiggBossTamilUpdate

‘பிக் பாஸ்’ - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

50 வது நாளின் நள்ளிரவு கலாட்டாக்கள் இன்னமும் முடியவில்லை. பேய் task-க்கிற்காக,  ‘இன்னாடா அவார்டா கொடுக்குறாங்க’ ரேஞ்சிற்கு சிநேகன் ஓவர் ஆக்ட் செய்தார். இருமும்போது ரத்தமெல்லாம் வருகிறதாம். இந்த task-ஐ பார்த்து நம் காதில்தான் ரத்தம் வருகிறது. 

**

நேற்று இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல ஓவியா இல்லாத வீட்டில் எதற்கு துள்ளலிசைப் பாடல் என்று பிக் –பாஸிற்கு தோன்றியதோ என்னமோ, ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்’ பாடல் ஒலிபரப்பினார்கள். சிநேகன் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். ஃபீல் பண்ணுகிறாராம். பக்கத்தில் கணேஷூம் கவலையாக உட்கார்ந்திருந்தார். பேய் பயத்தில் இருப்பவருக்கு இவர் ஆறுதலாக இருக்கிறாராம். முடியலை. (சிநேகன் எழுதிய பாடல் வரிகள்தான் அவை) வழக்கமாக நடனமாடும் பிந்துவும் அசையாமல் பீதியுடன் அமர்ந்திருந்தார். 

**

‘ஜீனோ’ கத்தியும் ரைசா இன்று எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. ‘என்னைத் தூங்க விடுங்கள். அதுவரை மைக் அணியப்போவதில்லை’ என்று போராட்டத்தைத் தொடங்கினார். நல்ல விஷயம். நமக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக அதிகார மையங்களிடம் எந்தளவிற்கு வேண்டுமானாலும் குனிய வேண்டும் என்றில்லை. தாக்குப் பிடிக்க முடியாத எல்லையில் நிச்சயம் எதிர்ப்புக்குரல் தர வேண்டும். 

இன்னொரு பக்கம் சிநேகன் தன் அபத்த நாடகத்தைத் தொடர்ந்து கொண்டேயிருந்தார். கணேஷ் திடீரென்று டாக்டர் ஆகி ‘இல்ல. ப்ரோ.. வயித்துக்குள்ளே acid இருக்கில்லையா?  அது மேல வந்துடுச்சு. அதான் ஸ்மெல் வருது’ என்று புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். (பிக் பாஸ் வீட்டில் மவுத் வாஷ் இல்லையோ?)

மருத்துவமனையில் நோயாளிகளை விசாரிக்க வரும் சில புத்திசாலிகள் இப்படித்தான் தன்னுடைய ‘மருத்துவ அறிவை’ பல்வேறு விதமாக வெளிப்படுத்தி நோயாளியையும் அவரது உறவினர்களையும் பீதிக்கு உள்ளாக்குவார்கள். சாத்துக்குடிக்கு ஆசைப்படாமல் இவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். 

கணேஷின் வைத்திய புத்திசாலித்தனத்தைக் கண்டு வையாபுரியும், ஆரவ்வும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டின் உள்ளேயும் பிந்து ஏன் குருதிப்புனல் கமல் மாதிரி கூலிங் கிளாஸ் அணிந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ‘பயத்தை மறைக்கத்தான்’ என்று ஆரவ் சொன்னதும்தான் எனக்கும் புரிந்தது. 

**
‘என்னை வாக்குமூல அறைக்குக் கூப்பிடுங்கள் என்று அடம்பிடித்த ரைசா, பிக் – பாஸிடம் தெளிவாகவே பேசினார். ‘இரவில் என்னால் தூங்க முடியவில்லை. தொந்தரவுகள் இருக்கின்றன. ஏதேதோ சத்தம் வருகிறது. பகலிலும் நீங்கள் தூங்கவிடவில்லையென்றால் எப்படி?’ இது சரியாக வராது.  நான் கிளம்புகிறேன்’ என்றார். 

அடுத்த ஓவியாவாக மாறிக் கொண்டிருக்கும் ரைசாவை இழக்க விரும்பாத பிக் பாஸ், உடனே தணிந்த குரலில் ‘இரவில் நிம்மதியாக உறங்க உத்தரவாதம்’ என்றார். (ஆனால் அந்த நாளின் இரவில் பேய் ‘task’-க்கிற்காக ஆரவ்வும் சிநேகனும் நிறைய சத்தம் எழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். ரைசா பேரவை உங்களை வன்மையாகக் கண்டிக்கிறது, பிக்பாஸ்).

ரைசாவின் இந்தப் புகாரும் உண்மையா அல்லது அவருக்குத் தனியாக ஏதும் task தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அண்டர்கவர் ஆப்பரேஷனில் பணிபுரியும் காவல்துறை ஆசாமிகள் ஒருவரையொருவர் பார்த்தே சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத்துறையின் இயல்பு அது. ஆனால் ஒரு விளையாட்டில் ஒருவரை மட்டும் தனிமைப்படுத்தி அவருக்குத் தெரியாமல் பேய் விளையாட்டு விளையாடுவது அபத்தமானது. 

நாளைக்கே எந்தப் போட்டியாளராவது மனஉளைச்சலில் விநோதமாக நடந்து கொண்டாலோ அல்லது ஏதேனும் ஆபத்திற்கு மற்றவர்களின் உதவியை நாடினாலோ, பிக் பாஸ் ஏதோ task கொடுத்திருக்கிறார் போல என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் பிரச்னையாகி விடும். ஓவியாவின் மனஉளைச்சலை ‘நாடகம்’ என்றே நம்பிக் கொண்டு அவரை இன்னமும் புண்படுத்தி வெளியே அனுப்பியதை இங்கு நினைவு கூரலாம். 

**
மற்றவர்கள் இந்த விளையாட்டில் அதிஉற்சாகமாகப் பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் போது மனச்சாட்சி உறுத்திய ரைசா மட்டும் தன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார். அதுதான் சரி. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் task என்றால் சரி. ஆனால், இது போன்று ஒருவரைக் குறிவைப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது. அந்த வீட்டில் ஒருவராவது சரியாக சிந்திக்கிறாரே என்று ரைசா குறித்து ஆறுதலாக இருக்கிறது. 

இது போன்ற ஆபத்தான task-களை ஜாக்கிரதையாக கையாள வேண்டிய பிக் –பாஸூம்.. இந்த task நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படியே தொடருங்கள் என்று  சிநேகனுக்கு அனுமதி தந்தது அநியாயம். 

‘பேய் நம்பிக்கை குறித்து பொதுவில் பல தவறான விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பொய் என்கிற விழிப்புஉணர்வை ஏற்படுத்த இந்த task உதவும்’ என்று ரைசாவின் ஆட்பேசபத்திற்கு சப்பைக்கட்டு கட்டினார் சிநேகன். விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த விளையாட்டு என்பதைக் கேட்டு பிக்-பாஸே ரகசியமாக சிரித்திருப்பார். 

மட்டுமல்லாமல் இன்னொரு உறுப்பினரான கணேஷிடம் இந்த task பற்றி  மறைத்ததும் கூடுதல் அநியாயம்.

**

என்னதான் விளையாட்டு என்றாலும் இப்படி ஒருவரைத் தனிமைப்படுத்தி பயப்படுத்துகிறோமே என்கிற குற்றவுணர்வோ தயக்கமோ காயத்ரியிடம் துளி கூட இல்லை. மிக உற்சாகமாக யோசனைகள் தந்து கொண்டிருந்தார். இதே task அவர் மீது நடத்தப்பட்டிருந்தால், அது முடிந்த பிறகு பத்ரகாளியாகியிருப்பார். எல்லோரையும் போட்டு வறுத்து எடுத்திருப்பார். இது சிநேகனுக்கும் தெரிந்திருப்பதால்தான் எளிய டார்க்கெட்டான பிந்துவைத் தேர்ந்தெடுத்தார். 

‘ரூ.10-க்கு நடிக்கச் சொன்னால் ரூ.50-க்கு நடிக்கிறாள்’ என்று ரைசாவை குற்றஞ்சாட்டிய காயத்ரி இந்த task-க்கிற்காக ரூ.1000-க்கு நடித்துக் கொண்டிருக்கிறார். ‘லைட்டை ஆஃப் பண்ணா எஃபெக்ட் நல்லா வரும்’ என்று பல முறை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

ஒருத்தரை பயமுறுத்தறதுன்னா என்னா உற்சாகம்?. துணியை ரகசியமாக எடுத்து விட்டு பின்பு ‘ஏற்கெனவே நம்ம மேலே 18 கேஸ் இருக்கே’ என்று அவருக்குத் தோன்றியதோ..என்னவோ.. ‘நான் திருடலை.. task-க்காகத்தான் பண்றேன்’ என்று ஒரு சாட்சியத்தை காமிரா முன்பு பதிவு செய்து விட்டுச் சென்றார். (என்னா.. வில்லத்தனம்!) மட்டுமல்லாமல் அந்த முட்டாள்தனமான விளையாட்டுக்கு உற்சாகத்துடன் கூடுதல் யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். சலங்கையை வைத்து பயமுறுத்தலாமாம். டான்ஸ் மாஸ்டர் அல்லவா? Professional ethics என்பது இதுதான் போல. 

தக்காளி சட்னி x ரத்தம் தத்துவத்தை சரியாகப் பின்பற்றுபவர் காயத்ரிதான்.

அந்த வீட்டில் ‘நெகட்டிவ் எனர்ஜி’ இருப்பதாக எல்லோரும் பாவனை செய்கிறார்கள். ஆனால், பார்வையாளர்களுக்கு எது உண்மையான நெகட்டிவ் எனர்ஜி என்று தெரியாதா? 

இவரை விடவும், மனச்சாட்சியின் படி இந்த விளையாட்டில் பங்குபெறப்போவதில்லை என்ற ரைசாவின் நேர்மை எத்தனையோ தேவலை. ‘task-ன்னு வந்துட்டா செஞ்சுதானே ஆகணும். அதற்குத்தானே அக்ரிமென்ட் போட்டிருக்கோம்’ என்று பிக்பாஸின் உண்மையான விசுவாசியாக இருந்தார் சிநேகன். அவரின் உடல்மொழியை வாக்குமூல அறையில் கவனித்தால், ஒரு விசுவாசமான தொழிலாளி, பெரிய முதலாளியிடம் பயபக்தியுடன் கும்பிட்டு வருவதைப் போலவே எப்போதும் வருவார். 

**

ரைசாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வையாபுரி சொல்கிறார். ‘கடந்த வாரம் இது தலைவியா இருந்தது இல்லையா.. இப்ப பிந்து தலைவின்னவுடனே இதுக்குப் பிடிக்கலை. அதற்குத்தான் இப்படியெல்லாம் பண்ணுது’

இவர்தான் கடந்தவாரத்தில் ‘நான் யாரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை’ என்று கமலிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னவர். 

பாதுகாப்புக் காரணத்திற்காக இரவு பெண்கள் ரூமில் படுத்துக் கொள்வதற்காக ஆண்கள் தரப்பிலிருந்து ஒரே போட்டா போட்டியாக இருந்தது. ஆரவ் வேறு குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தார். கணேஷ் வேறு ‘நான் நான்’ என்று முதலில் கை தூக்கினார். இதிலிருந்து தோன்றும் சந்தேகத்தைப் பார்த்தால் இந்தப் பேய் task பிக் பாஸ் உருவாக்கிய ஐடியாவா? அல்லது ஆரவ் மற்றும் சிநேகன் உருவாக்கியதா?

இது தனக்கான டார்கெட் என்பது புரிந்தோ அல்லது புரியாமலோ பிந்து மற்றவர்களிடம் தைரியமும் ஆறுதலும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் சிரிப்பைப் பார்த்தால் இதை யூகித்து விட்டது போல் தெரிகிறது. அப்படி நிகழ்ந்தது எனில் ஆயிரம் வாட்ஸ் பல்பு அளவில் பெரிய பல்பாக வாங்கப் போகிறவர், மந்திரவாதிகள் கூட்டத்தின் தலைவர் சிநேகன்தான். 

‘எனக்கென்னமோ பிந்துவிற்கு தெரிஞ்சுடுச்சு போல’ என ரைசா எச்சரித்த போது ‘இவ வேற.. task முடியட்டும். கழுத்தைப் பிடிச்சு அமுக்கறேன். மனுஷன் நைட்டும் பகலுமாக எவ்ளோ கஷ்டப்பட்டு இதைப் பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சி செய்வது போல அலுத்துக் கொண்டார் சிநேகன். அவருடைய இந்த பில்டப்பிற்காகவாவது இந்த task தோற்க வேண்டும். பிந்து எல்லோரையும் பார்த்து சிரிக்க வேண்டும். 

“தூள் படத்தில் ரீமா சென்னைப் பார்த்து  விவேக் சொல்வது போல ‘என் ஸ்வப்னா… புத்திசாலி.. அவளை யாராலும் ஏமாத்த முடியாது”.

**

இந்த மொக்கையான ஐடியாவிற்காக எல்லோரும் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்களாம். அவர்களின் ஐடியா படி விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. பிந்துவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கே கண்டுபிடித்து விடுவாரோ என்கிற அச்சத்தில் காயத்ரி ஓவர் ஆக்ட் செய்தார். தலையை அமைதியாக குனிந்து அமர்ந்து கொண்டு சிநேகன் அவரை மிஞ்சினார். வையாபுரி முதலில் சிரித்து சொதப்பினார். இவர்தான் ‘கணேஷ் ஓவர் ஆக்ட் செய்துவிடுவார் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டேயிருந்தது. 

அதுவரை ஒப்புக்கு சப்பாணியான இருந்த கணேஷிற்கும் இந்த task பற்றி பிறகு சொல்லப்பட, அதுவரை தாம் ஏமாந்தது பற்றிய உணர்வேயில்லாமல் ஓவர்ஆக்ட் செய்வதில் எல்லோரையும் மிஞ்சத் தொடங்கினார். அவர் முகத்தில் போட்டிருந்த ஏதோவொன்றைப் பார்த்தால் அவரைத்தான் பேயாக நடிக்க வைக்கவிருந்தார்களோ என்னமோ.

**

இதற்கிடையில் தேசபக்தி task வேறு. பேய் விளையாட்டை விடவும் நகைச்சுவையாக இருந்தது. சுதந்திரதினத்தையொட்டி ஒரு நிமிடம் பேச வேண்டுமாம். போட்டியாளர்கள் தாங்கள் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படித்ததையெல்லாம் அப்படியே ஒப்பித்தார்கள். ‘சுதந்திர இந்தியாவில் மின்விளக்கு இல்லாத இடமே இல்லை’ என்றார் வையாபுரி. 

தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம் என்றார் ஆரவ். அவர் சீரியஸாக சொல்கிறாரா, காமெடி செய்கிறாரா என்று புரியவில்லை. ‘மற்றவர்களை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதை விட தாம் முதலில் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்’ என்று அவர் சொன்னது மருத்துவ முத்தம் என்று விமர்சித்த ‘ஆண்டவரையோ?’

**
பிந்துவை பயமுறுத்துவதற்காக ஏதோ உலக சதி போல ஆரவ்வும் சிநேகனும் என்னென்னவோ முயன்று கொண்டிருந்தார்கள். ‘என்னமோ சத்தம் கேட்குது’ என்று காயத்ரி உசுப்பி விட, எழுந்து வந்து பார்த்த பிந்து மாதவி அப்படியொன்றும் பயப்பட்டது போல தெரியவில்லை. ‘எல்லாம் காலையில பார்த்துக்கலாம்’ என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார். 

இடையில் விளக்கு அணைந்தபோது… ‘காயூம்மா.. கம் டார்லிங்.. டோண்ட் வொர்ரி’ என்று கணேஷ் காயத்ரிக்கு மிகையாக ஆறுதல் சொன்னார். சைவப்பூனை மாதிரி இருந்துகொண்டு சிநேகன், ஆரவ்வை கூட மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
பிந்து பயப்படுகிறாரோ, இல்லையோ, மனநல நோயாளிகள், துணிதுவைத்தல் taskகளுக்கப் பிறகு பார்வையாளர்களை அதிகம் எரிச்சலூட்டிய task  இந்தப் பேயாகத்தான் இருக்க வேண்டும். அதிலும் ஒருவரை தனிமைப்படுத்தி பயமுறுத்தும் அநீதியை ரைசாவைத் தவிர மற்ற எவருமே உணரவில்லை என்பதும் கொடுமை. 


**
பிக் பாஸ் வீட்டில் உள்ள உண்மையான ‘பேயை’ வாக்காளர்கள் கண்டுகொள்வார்கள் என்று நம்பலாம். வாக்கு எனும் மந்திரக்கோலை வைத்து பேயை விரட்டுவார்களா என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு