Published:Updated:

கமல்ஹாசனா... உள்ளே கேட்கும் அந்த குரலா... யார்தான் பாஸ் அந்த பிக் பாஸ்?

தார்மிக் லீ
கமல்ஹாசனா... உள்ளே கேட்கும் அந்த குரலா... யார்தான் பாஸ் அந்த பிக் பாஸ்?
கமல்ஹாசனா... உள்ளே கேட்கும் அந்த குரலா... யார்தான் பாஸ் அந்த பிக் பாஸ்?

ஐஸ்க்ரீம் கடையில் ஆரம்பித்து ஐடி கம்பெனி வரை 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றித்தான் வாய் ஓயாமல் பேசுகிறார்கள் மக்கள். ஆனால் அதிலே ஒரு பெரிய குழப்படி இருக்கிறது. பிக் பாஸ், பிக் பாஸ்னு சொல்றாங்களே... கீழே கூறப்பட்டவர்களில் யார்தான் அந்த உண்மையான பிக் பாஸ்?

கமல்ஹாசன் :

இவர் பிக் பாஸாக இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவரையும் இவர் கையாளும் முறையே வேற லெவலில் இருக்கும். அரசியல் சர்ச்சைகளில் ஆரம்பித்து, தமிழ்நாட்டில் நடக்கும் பலவிதமான பஞ்சாயத்துகளை மையமாக வைத்து கிண்டல் செய்வது வரை கில்லியாக சொல்லியடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரையும் பாரபட்சமே பார்க்காமல் கலாய்த்து எடுப்பார். அது போக ஆரம்ப எபிசோடுகளில் போட்டியாளர்கள் அனைவருமே அகம் டி.வி வழியே கமலைக் கண்டதும் 'வணக்கம் பிக் பாஸ்' என்று சொல்லித்தான் உரையாடலையே தொடங்குவர். காலப்போக்கில் பிக் பாஸ் சாராக மாறிவிட்டது, உட்கார்ந்து வணக்கம் வைத்த போட்டியாளர்கள், எழுந்து நின்று வணக்கம் சொல்லும் பழக்கம், வழக்கமாக மாறிவிட்டது.

போட்டியாளர்கள் :

உள்ளே ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு ரகம். ஜூலி அங்கு இருப்பவர்களுக்குள் சண்டை மூட்டிவிடுவதாகட்டும், வையாபுரியின் திடீர் தைரியமாகட்டும், சக்தியின் டிரிகர் செய்யும் யுக்தியாகட்டும், ஓவியாவின் டேக் இட் ஈஸி தன்மையாகட்டும், காயத்ரியின் கெட்ட வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகட்டும், என்ன ஆனாலும் சரி நான் என் உடல்நலம்தான் முக்கியம் என்று நினைக்கும் கணேஷ் வெங்கட்ராம் ஆகட்டும், ரைஸா மேக்அப் போட்டும் தன் அழகை நிலைநாட்டிக் கொள்வதாகட்டும்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்டைலில் வாழ்கிறார்கள். எலிமினேட் ஆகி வெளியே வந்தாலும் பேச்சு குறைவேனா என்கிறது. ஆக எல்லோரிடமும் சில சொல்லிக்கொள்ளும்படியான திறமைகள் இருப்பதால் அவர்கள் தன்னைத் தானே பிக் பாஸ் என்று நினைத்துக் கொள்ளலாம். 

பார்வையாளர்கள் :

மறுபக்கம் பார்வையாளர்கள் மெர்சல் காட்டுகிறார்கள். தல அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்தின் பாடல்கள் வந்தாலும் சரி, விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் செகண்ட் லுக் வந்தாலும் சரி, அவர்களை பாராட்டியும், கலாய்த்தும் ஓய்ந்துவிட்டு பிக் பாஸ் பக்கம் திரும்பும் ரசிகர்களை நம்மால் காண முடியும். பிக் பாஸின் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் வெறியர்களாக மாறுவதையும் நம்மால் உணர முடிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முதல் நாள் இருந்த வரவேற்பு, தற்பொழுது பல மடங்கு உயர்ந்துள்ளது. கமலின் அதிரிபுதிரி கலாய் கவுன்டர்களும், உள்ளே நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும்தான் அதற்குக் காரணம். மீம் கிரியேட்டர்ஸ் கத்துகிட்ட மொத்த வித்தையையும் அவர்களின் போட்டோ மீம்களின் வாயிலாகவும், வீடியோ மீம்களின் வாயிலாகவும் காட்டி தெறிக்கவிடுகின்றனர். அதுவும் போக பிக் பாஸ் வீட்டில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து ஓட்டுகளை தட்டியெறிகின்றனர். ஆகவே அவர்களையும் பிக் பாஸாக கருத்தில் கொள்ளலாம். 

உள்ளே பேசுபவரின் குரல் :

டாஸ்க் கொடுப்பதில் ஆரம்பித்து, டண்டணக்கா டான்ஸ் ஆடச் சொல்வது வரை உள்ளே பேசுபவரின் குரல் வாயிலாகதான் போட்டியாளர்களுக்கு எந்த விஷயமும் கொண்டு செல்லப்படுகிறது. போட்டியாளர்களுடன் நிகழும் முக்கியமான கலந்துரையாடலின் போது கமலே அந்த குரலிடம் பெர்மிஷன் கேட்டுதான் பேசுவார். அந்த அளவுக்கு அவர் கெத்து. ஒரு பக்கம் காலரைத் தூக்கிவிட்டு கெத்தாக சுற்றினாலும் மறுபக்கம் அவரைப்பார்த்தால் பாவமாக இருக்கும். போட்டியாளர்களுக்கு அலெர்ட் கொடுக்கும் சில டெம்ப்ளேட்டான ஆணைகளை பதிய வைத்து உள்ளே சொல்லினாலும், போட்டியாளர்களுக்கு நடுராத்திரியில் ஏற்படும் சில தத்துவார்த்தமான(?) கேள்விகளுக்கு கொட்ட கொட்ட முழித்து விழி பிதுங்குகிறார். ஆனாலும் கடைசியில் எப்படியோ பதிலும் சொல்லிவிடுகிறார். இப்படி 24 மணிநேரமும் அலர்ட் ஆறுமுகமாக விழிப்புடன் இருப்பதால் கொஞ்சம் கரிசனம் காட்டி இவரையும் பிக் பாஸ் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். 

ஆக மேற்கூறப்பட்ட ஆட்கள் அனைவரும் ஒரு அவையைக் கூட்டி, 'உங்களில் யார்தான் அந்த பிக் பாஸ்?' என்று ஒரு கான்டெஸ்ட் நடத்தி ஒரு முடிவுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும்.