Published:Updated:

கமல்.. பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ்! ஏன்?  #BiggBossTamil

கமல்.. பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ்! ஏன்?  #BiggBossTamil
கமல்.. பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ்! ஏன்?  #BiggBossTamil

'ஆண்டவரே.. காயத்ரிய கேள்வி கேட்கறப்ப லைட்டா சாஃப்டா நடந்துக்கறீங்களே’ என்று கமல்ஹாசன்மீது விமர்சனம் விழுகிறது. அவரும் ‘வேண்டியோர் வேண்டாதோர் இல்லை’ அப்டின்றதை பல பாணில சொல்லிட்டார். சரி, அந்த விஷயத்தை ஒதுக்கி வைப்போம். பிக் பாஸ் ஷோ நடத்தற கமல்ஹாசன் என்கிற ஆளுமை நமக்குக் கற்றுத் தருவது என்னென்ன?

நான்... ராஜா!

கமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கப் போகிறார் என்று தெரிந்ததும் பலரது மனதில் எழுந்த கேள்வி: ‘அம்மி கொத்த சிற்பி எதற்கு’ என்பதுதான். ஆனால், போகப்போக, பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை கமல் கையாளும் விதமும், கமல் வந்தாலே அவர்கள் பம்முவதும் பார்த்ததும் ‘கமல் இல்லைன்னா ஏச்சுப்புடுவாங்கப்பா’ என்று தோன்ற வைத்தார். ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியை நடத்தும் உலகெங்கும் பல மொழிகளில் கிளைகள் பரப்பி இருக்கும் சேனலுக்கு, அந்த சேனலின் மேடையிலேயே ‘நாங்க வேற. இங்க சிலதைப் பார்த்துப் பண்ணுங்கப்பா’ என்று எச்சரித்தார்.  

ஈடுபாடு

‘வெறும் தொகுப்பாளர் மட்டும்தானே, இயக்குநர்  சொல்றத செய்வோம்’ என்பது கமலிடம் இல்லை. எல்லாவற்றிலும் முழு ஈடுபாடு இருக்கும். அந்தந்த வாரம் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அவர் கேட்கும் கேள்விகளிலிருந்தும், சிலர் சொல்லும்போது ‘அப்படியா நடந்தது?’ என்பது போல பார்வையாளர்களைப் பார்த்து காட்டும் எக்ஸ்ப்ரஷனலிலும் இதைப் பார்க்கலாம். அதே போல, சமூக ஊடகங்களில் இந்நிகழ்ச்சி பற்றி என்ன கருத்தோட்டம் என்பதையும் அறிந்து அவற்றில் சிலவற்றிற்கு பதிலுரைப்பதும், சிலவற்றிற்கு விளக்கம் கேட்பதுபோல இன் - மேட்ஸிடம் கேள்விகள் கேட்பதுமாய் கலக்குகிறார்.

நாஸ்டால்ஜியா நாயகன்

நிகழ்வின் போக்குக்கு ஏற்ப, தன் வாழ்வில் நடந்த சிலவற்றை விளக்குவது ஆஸம். பாடல்காட்சிகளின்போது நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டது, களத்தூர் கண்ணம்மா நாட்கள், சின்ன வயதில் தன் வீட்டில் அயர்ன் செய்கிறவரிடம் கடன் வாங்கியது என்று அவ்வப்போது இவர் பகிரும் எவர்கிரீன் மொமண்ட்ஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியைவிடவும் சுவாரஸ்யத் தொகுப்பாக இருக்கிறது. ‘நான் யாரு தெரியுமா’ என்பதுபோல பர்சனல் பக்கங்களைப் பகிரத் தயங்காமல், நேயர்களோடு நட்பாய் எதையும் பகிர்ந்து கொள்ளும் தன்மை கமல் ஸ்பெஷல்!

குறைகளை ஒப்புக் கொள்வது:

“என் சின்னவயசுல அம்மாக்கு சமையல்ல உதவி பண்ணிருந்தா, எனக்கு இன்னொரு டேலண்ட் இருந்திருக்கும்” - தனக்கு சமையல் செய்யத்தெரியாது; வீட்டில் உதவியாகக் கூட இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் தன்மை. சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது ‘நானே இந்த மாதிரி தப்பு பண்ணிருக்கேன்’ என்று கூறுவது என்று அண்டர்ப்ளே ஆண்டவராக மிளிர்கிறார்.

தட்டிக் கொடுத்து சுட்டிக் காட்டு

பலரின் குறைகளை கமல் சொல்லும் விதம் அழகு. ஆரவ்விடம் மருத்துவ முத்தம் பற்றி ‘போட்டு’ வாங்கியபோது ‘நீங்களே இதை இன் - மேட்ஸ்கிட்ட சொல்லிடறீங்களா? அவங்க ஓவியா மேல மட்டும்தான் தப்புனு நெனைச்சுட்டிருக்காங்க’ என்று பாந்தமாக அவரை வேலை வாங்கியது, சினேகன் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று சொன்னதைத் திருத்தும்போது  அது ‘மனோன்மணியம் சுந்தரனார்’ என்று சொல்லி, ’குறை சொல்லல.  இதை உங்களுக்கு தெரியறதுக்காகத்தான் சொல்றேன். குற்றம் சுமத்த அல்ல’ என்று தன்மையாக, வலிக்காம குறையை நிறைவாக்கும் விதம் என்று..  சிறப்பு!

பொறுப்பே சிறப்பு

‘சில விஷயங்கள் என் கையில் இல்லை... ஸாரி’ என்று கைகழுவி சொல்வதில்லை. ’சரிதான். என்னை மீறி நடக்கிறதுதான். ஆனால் அதற்கும் நான் பொறுப்பு’ என்று அவற்றை மேடையிலேயே போட்டு உடைக்கிறார். திரும்பத் திரும்ப பரணியை இன் - மேட்ஸ் நடத்தியது தவறு என்பதை ஒவ்வொருவர் வெளியில் வரும்போதும் கேட்டு உணரவைக்கிறார். பரணி, ஓவியா அவர்களாக வெளியில் வந்தாலும், அவர்களை அழைத்துப் பேசும்போது அதை குற்றமாகச் சுட்டிக் காட்டாமல், அவர்களை மனரீதியாக தயார்படுத்தி அனுப்புகிறார். அதைப்போலவே, சக்தி, ஜூலி வெளியில் போகும்போது, உள்ளே இருந்த நாட்களில் மக்களிடம் அவர்கள் பற்றி என்ன மதிப்பு இருந்திருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டி அவர்களைத் தயார்ப்படுத்துகிறார். மக்களிடமும் ‘இது ஷோ. ஷோவுக்குள்ள நடந்ததுக்காக வெளில அவங்களைக் காயப்படுத்தாதீஙக்’ என்று அவர்கள் வாழ்விலும் தனக்கு பொறுப்பு உண்டு என்பதாக நடந்து கொள்கிறார். 

சமநிலை ஸ்டார்!

பிக் பாஸ் என்கிற முகம் தெரியாத ஒரு கேரக்டருக்கும், இன் மேட்ஸுக்கும், பொதுமக்களுக்கும் என்று மூவருக்குமே பிடித்த மாதிரி நடந்து கொள்வது என்பது எல்லாராலும் முடியாது. பிக் பாஸ் என்பது கேரக்டர் என்று ஒதுக்கித் தள்ள முடியாது. அது எண்டமோல் எனும் நிறுவனத்தில் விதிகளின் உருவம்தான் பிக் பாஸ் என்று கொள்ளலாம். அதற்கும் பாதிப்பு வரக்கூடாது.  இன் மேட்ஸ், ரசிகர்கள் என்று எல்லாரையும் திருப்திப்படுத்தவேண்டும். ஆக யார் சார்பாகவும் இல்லாமல், சமநிலை வகிக்க என்ன வேண்டுமோ அதைச் செய்கிறார். 

அடக்கம் ஆண்டவருக்கும் அழகு!

காலில் விழ வந்தால் நகர்வது, ‘ஏன்யா ஒவ்வொருக்காவும் எந்திரிக்கறீங்க’ என்கிற தொனியில் ‘உட்காருங்க’  என்று சொல்வது, கட்டிப்பிடிப்பது பற்றி சதீஷ் சொல்லி ‘யாராவது இருந்தா நல்லாருக்கும்’ என்றபோது சடாரென்று சதீஷ் முன் நின்றது என பந்தா துளியும் இல்லாமல் நடந்து கொள்கிறார். அது பார்ப்பதற்கே அழகு!   

டைமிங்கில் டாப்!

கமலைத் தவிர யாராலும் செய்ய முடியாத அட்டகாசமான டைமிங் சென்ஸ். "வெளிய வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில் கூட இருக்கு, உங்களுக்கு தெரியாது", "ஏன் தூங்கவே முடியல‌, யாராவது அந்தாக்ஷரி பாடிட்டு இருந்தாங்களா?", "இதுக்கு பேர் ட்ரிக்கர் இல்ல, ஏரோ", ‘நீங்க அரசியலுக்கு வரணும்’, ‘எனக்கு பல முத்த அனுபவம் உண்டு. நீங்க சொல்ற மருத்துவ முத்தம் எனக்கே புதுசா இருக்கு’ -  இப்படிப் போகிற போக்கில் அவர் அடிக்கற டைமிங் சிக்ஸர்கள் வேற லெவல்!  என்ன, சில இன் - மேட்ஸுக்கே புரியாமல் முழிப்பதுதான் பரிதாபம்!

‘ஷோவோட ஹோஸ்ட்' என்பதைத் தாண்டி பெஸ்டாகவும் இருக்க வேண்டும் என்ற மெனக்கெடல் கமலின் ரத்தத்தில் ஊறியது. ‘செய்யற வேலை எதுவா இருந்தாலும், அந்த வேலைலயும் நான் நம்பர் ஓன்னா இருப்பேன்’ என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.  இந்த விஷயங்களினாலேயே கமல், பிக் பாஸுக்கெலாம் பிக் பாஸாக இருக்கிறார்!