Published:Updated:

ஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 53) #BiggBossTamilUpdate

ஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 53) #BiggBossTamilUpdate
ஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 53) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

‘பிக் பாஸினால் ஓவியாவிற்கு புகழ் கிடைக்கவில்லை, ஓவியாவால்தான் பிக்பாஸிற்கு புகழ்’ என்கிற பொருளில் ஒரு மீம் பார்த்தேன். உண்மைதான் போல. அந்தளவிற்கு ஓவியாவின் விலகலுக்குப் பிறகு நிகழ்ச்சி களையிழந்து போயிருக்கிறது. கமலின் பஞ்சாயத்தும் காயத்ரியின் ராவடியும் இருப்பதால்தான் ஓரளவிற்காவது சமாளிக்க முடிகிறது. 

இந்த வாரம் நாமினேஷனில் காயத்ரி இருப்பதால் செத்த பாம்பு போல சாமர்த்தியமாக இருக்கிறார். ஆனால் எவரையாவது ஏமாற்றும் task என்றால் மட்டும் உற்சாகமாக ஒத்து ஊதுகிறார்: ஐடியாக்கள் தருகிறார். 

கமலுக்கே கூட இந்த வார பஞ்சாயத்தில் அதிக வேலை இருக்குமா என தெரியவில்லை. அந்தளவிற்கான முக்கிய சர்ச்சைகள் ஏதும் நிகழவில்லை. 

‘நூறு நாள் வேலைத்திட்டத்தில்’ உறுதியாக பங்கு பெறுவதாக வீட்டம்மணியிடம் வாக்கு தந்த விட்ட வையாபுரி, அதற்காக ஒருபக்கம் புலம்பினாலும், இன்னொரு பக்கம் தன் இடத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ‘ஓவராக’ நடிக்க ஆரம்பித்து விட்டார். அவரின் நகைச்சுவையுணர்வுதான் ஓரளவிற்காவது ஆறுதல். ஆனால் ஓவர் ஆக்டிங்கின் காரணத்தால் அதையும் மனதார ரசிக்க முடியவில்லை. 

**

‘இந்த வாரம் prank வாரம் போல’ என்ற புதுவரான ஹரீஷ் சொல்லியது போல இந்த வாரம் முழுக்க அபத்தமான taskகளால் பார்வையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். துணிதுவைக்கும் task, பேய் task என்று எரிச்சல் மயம். 

இந்த வரிசையில் இன்னொரு அபத்த ஐடியாவை இப்போது கையில் எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். ‘ராகிங்’ task. இது பிக் பாஸ் தந்ததா, போட்டியாளர்கள் தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்டதா என தெரியவில்லை. 

பிந்துவை மட்டும் தனிமைப்படுத்தி செய்த பேய் task-ஐ தொடர்ந்து புது உறுப்பினர்களை பயமுறுத்துகிறேன் பேர்வழி என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது மாதிரி நடிக்கிறார்களாம். ‘Promo’க்களில் வெளிப்படும் ஆவேசமான வார்த்தைகளைக் கேட்டு ‘இன்னிக்கு சண்டை நிச்சயம் உண்டு’ என்று ஆர்வமாக குத்த வைத்து உட்கார்ந்தால் அது நடிப்பாம். 

பார்வையாளர்களின் கவன ஈர்ப்பிற்காக சில உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. ஆனால் மொத்தமாக ஏமாற்றினால் பார்வையாளர்களும் நிகழ்ச்சியை மொத்தமாக கைவிட்டு விடுவார்கள். 

முன்பெல்லாம் சண்டை என்றால் அதில் ஓரளவிற்காவது நம்பகத்தன்மை காப்பாற்றப்படும். இப்போது ‘போட்டியாளர்களே’ திங்கட்கிழமை, பில்டப் தரணும், புதன்கிழமை சண்டை போடணும், சனிக்கிழமை அமைதியாக இருக்கணும்’, இது பிக்பாஸ் ரூல்’ என்றெல்லாம் சொல்லி புதுவரவான சுஜாவை கலாய்க்கிறார். பிக்பாஸ் ஒரு scripted programme என்கிற பேச்சு பலமாக இருக்கும் போது இப்படி ஓவராக நடிப்பதின் மூலம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது சரியா?

பேய் task-ன் போது சிநேகன் கத்தியதை, விளம்பர இடைவேளைக்கு முன்பு பார்த்த போது நமக்கு தூக்கிப் போட்டது நிஜம். ஆனால் அது ஓவரான நடிப்பு என்று பிறகு தெரிந்த போது ஏமாற்றமாக இருந்தது. இதுவே தொடர்ந்தால், என்னதான் promo-ல் முதலில் ஏமாற்ற முயன்றாலும் ‘இவிய்ங்க… இப்படித்தான் பாஸூ. அப்புறம் ஒண்ணுமிருக்காது’ என்று பார்வையாளர்களுக்கு ஆர்வம் அணைந்து விடும். 

பார்வையாளர்களை மாக்கான்களாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஏமாற்றக்கூடாது என்பது திரைக்கதையின் பாலபாடம். 

**

சுஜாவை ராகிங் செய்கிறோம் என்று கத்திக் கூப்பாடு போட்டு நடித்து இன்றைய பொழுது பூராவும் கழித்து விட்டார்கள். நாளை ஹரீஷிற்கும் அதே ட்ரீட்மெண்ட் போல. அப்படித்தான் Promo-வில் தெரிகிறது. ஆனால் ஹரீஷ் பனங்காட்டு நரி போல தெரிகிறார்.  பார்ப்போம்.

ஒருபக்கம் இவர்கள் செய்யும் மிகையான விளையாட்டுக்கள் மிக நீளமாக அமைந்து நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும், ஒரே மாதிரியான சூழலில் அதே மனிதர்களை திரும்பத்திரும்ப பார்ப்பதால் உருவாகும் மனஅழுத்தம் காரணமாக, சிரிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடாமல் பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே ஒருவர் புதிதாக மாட்டினால் அது கொலைவெறியுடன் அவரை கலாய்ப்பதற்கான ஆர்வத்தை தருகிறதோ என்னமோ. சந்தடிசாக்கில் அவர்களின் மனக்கொதிப்புகளும் சேர்ந்து வெளியே வந்து கொட்டுகின்றன. குறிப்பாக வையாபுரி இதில் விற்பன்னராக இருக்கிறார். 

**

பிக்பாஸ் வீட்டின் புதிய வரவான ‘சுஜா வருணி’யின் முதல் நாள் இன்று துவங்குகிறது. நேற்று ட்ரெய்லர் மட்டும்தான். ஆனால் இதர உறுப்பினர்கள் முதல் நாளிலேயே தங்களின் கோரமான முகங்களைக் காட்டியது துரதிர்ஷ்டம். அடுத்தடுத்த நாட்களிலும் சுஜாவின் மீது தங்களின் வெறுப்புகளைக் கொட்ட வாய்ப்புண்டு.

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் ஒலித்தது. இத்தனை நாள் நிகழ்ச்சிகளை வெளியில் பார்த்து வந்ததாலோ என்னமோ, சுஜா தன்னை ஓவியாவின் நகலாக முன்வைக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  விடிந்ததும் காமிராவைப் பார்த்து முத்தம் தருகிறார். பேசுகிறார். ‘இந்த வீட்டில் நீதான் என் ஃப்ரெண்ட். பிக் பாஸ் முடியற வரைக்கும் என் கூட இருக்கணும். ஏதாவது bad vibration வந்தால் (யார் அது?) சொல்லணும். ஓடிப் போயிடுவேன்’ என்றெல்லாம் காமிராவை செல்லம் கொஞ்சுகிறார். 

ஆனால் ஓவியாவை வேறு எவருமே சமன் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது. சுஜா, ஓவியாவைப் போல நடனமாட முயலவில்லை என்பது மட்டுமே ஆறுதல். மாறாக வழக்கம் போல் பிந்து மாதவி நடனம் ஆடி நம் ஏக்கத்தைப் போக்கினார். 

‘புது துடைப்பம் நன்றாகப் பெருக்கும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. இதை இழிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிதாக இணைந்த பணியாளர்கள் துவக்க உற்சாகத்தில் முனைப்புடன் வேலை செய்து போல காட்டிக் கொள்வார்கள். எல்லோரிடமும் இணக்கமாக பழக முயல்வார்கள். இது இயல்புதான். எல்லோரையும் கவர்வதற்கான முயற்சி. சுஜா வருணி இப்படித்தான் இருக்கிறார். 

இதன் எதிர்முனையில் என்ன நிகழும் என்றால் அங்கு பல வருடங்களாக பணியில் உள்ள அனுபவஸ்தர்கள், புதியவர்களை வெறுப்புடன் பார்ப்பார்கள். கிண்டலடிப்பார்கள். வீம்பிற்கென்றே பல வேலைகளைச் செய்யச் சொல்வார்கள். 

இதற்கு மாறாக அவர்களை வரவேற்கும் உற்சாகத்துடன் ஆதரவாக இருப்பவர்கள் அரிதானவர்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் கணேஷை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் அவருமே தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெரும்பான்மை ஜோதியில் அவ்வப்போது கலந்து கொள்கிறார். ‘சரத்பாபு’ கேரக்டர் போல இருக்கிறார்.  குறிப்பாக கமலின் அறிவுரைக்குப் பிறகுதான் வெளியே வரத் துவங்கியிருக்கிறார். அதற்காக வையாபுரியின் அதீதமான கிண்டல்களைத் தாங்கிக் கொள்கிறார். அவ்வாறும்  அவர் இருக்கத் தேவையில்லை. 

**

இதுவரை எவரும் செய்யாத வழக்கமாக கேமிராக்களை சுத்தம் செய்யத் துவங்கினார் சுஜா. ‘அது நல்லா இருந்தாத்தானே, நம்மளை நல்லா காட்டும்’ என்று பொருத்தமான தர்க்கத்தை முன்வைத்தார். ஆனால் அந்த வீட்டின் மாமியாரான காயத்ரி ‘காமிராவையெல்லாம் துடைக்கக்கூடாது’ என்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றார். இதற்கு அசராத சுஜா, காமிராவையே கேட்க அதன் ஒப்புதலோடு துடைக்கத் துவங்கினார். காயத்ரிக்கு ஒரு பல்பு. 

இந்த செயலை கணேஷ் ஒருபுறம் பாராட்டினாலும், ‘புதுப்படம்ல பிரிண்ட் அப்படித்தான் இருக்கும். போகப் போக டல் அடிச்சுடும்’ என்றார் வையாபுரி. 

காயத்ரியின் குணாதிசயத்தைப் பற்றி  சினிமாவுலகில் ஏற்கெனவே சுஜா அறிந்திருந்தாலும், பிக்பாஸின் அதுவரையான காட்சிகளைப் பார்த்திருந்தாலும் கூட ‘போட்டு வாங்குவதற்காக’ காயத்ரியிடம் பேச்சுக் கொடுத்தது சுவாரசியமான காட்சி. ‘உங்களுக்கு கோபம் வருமா?’ என்று மெல்ல கேட்க, முதலில் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாக பதில் சொன்ன காயத்ரி, பாம்பு போல சட்டென்று ஒரு சீறு சிற, பயந்து பின்வாங்கினார் சுஜா. 

**

ரைசா மீதுள்ள ஆதங்கத்தைப் பற்றி ஆரவ், வையாபுரி, பிந்து என்று எல்லோரிடமும் மாறி மாறி புறம் பேசிக் கொண்டிருந்தார் சிநேகன். ‘இங்க இருக்கறவங்க எல்லோருமே புறம் பேசறாங்க. என்னால தாங்க முடியலே’ என்று அவரேவும் சொல்லிக் கொள்கிறார். ‘இனிமே இந்த வீட்ல எவருக்கும் ’no sympathy, no affection’ என்று தத்துவம் பேசினார் ஆரவ். ‘காயத்ரி பேரவையின்’ தளபதியாக அவர் இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

புதுவரவான சுஜா, வீட்டை சுத்தம் செய்வதைக் கண்டு வையாபுரி உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் கிண்டலடித்தனர். இந்த ராகிங் ஜோதியில் பிந்துவும் ரைசாவும் இணைந்து கொண்டது சற்று ஆச்சரியம். பேய் task-ல் எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை பிந்து அத்தனை சீக்கிரம் மறந்து விட்டாரா, அல்லது புது அடிமை கிடைத்தவுடன் பெரும்பான்மை தரப்பில் இணைந்து விட்டாரா என்று தெரியவில்லை. 

சிநேகனும் பிந்துவும் பலமாக கத்திக் கொண்டு சண்டை போடுவார்களாம்.. அதைக் கண்டு சுஜா பயப்பட வேண்டுமாம். ‘நீ இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்பது போல கோபப்படும் விஷயத்திற்கு பிந்து சரிப்பட்டு வரவில்லை. சுந்தரத் தெலுங்கு வாசனையுடன் அவர் தட்டுத்தடுமாறி தமிழை உச்சரிப்பதற்குள் சண்டையின் மூடே போய் விடும் போல. 

இதையெல்லாம் பார்த்து சுஜா சற்று பயந்தது போல்தான் தெரிந்தது. அல்லது இதுவரையான எபிஸோட்களையெல்லாம் பார்த்த யூகத்தில் ‘பயபுள்ளக ஏதோ பண்ணுதுங்க.. என்ன பண்றது.. பயப்படற மாதிரி நடிச்சு வெப்போம்’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாரோ, என்னமோ.

**

‘எல்லா அப்பாக்களுக்கும் பொண்ணுங்களைப் பிடிக்கும். ஆனா என் அப்பாவிற்கு மட்டும் ஏன் என்னை பிடிக்காமல் போனது?’ என்று சுஜா வையாபுரியிடம் அன்னியோன்யமாக பேசத் துவங்கி விட்டார். அவர் தனது சுயசரிதையை சொன்ன போது பரிதாபமாக இருந்தது. 
தந்தையின் ஆதரவு இல்லாமல் குடும்பப் பொறுப்பை இளமையிலேயே ஏற்க வேண்டிய பரிதாபம், தாயின் மருத்துவச் செலவை சமாளிக்க, ஒரு பாடலுக்கு ஆட வேண்டிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, பின்பு அதுவே நிலைத்துப் போன சோகம். என்று பல ஐட்டம் டான்ஸர்களின் துயரத்தின் பிரதிநிதியாக இருந்தார். அடுத்த முறை திரையில் இது போன்ற நடனங்களைப் பார்க்கும் போது, அவர்களைப் பற்றி மோசமாக கமெண்ட்டுகள் அடிப்பதற்கு முன்பு, இது போன்ற துயரங்களையும் கூடவே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. 

என்னவொன்று, சுஜாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு கேமிராமேன் எழுந்து போய் லஞ்ச்சைக் கூட முடித்து விட்டு வந்து விடலாம் போல. அத்தனை நீளத்திற்கு பேசிக் கொண்டே போகிறார். 

**

அடுத்து ஒரு கண்ணாமூச்சி task. அது முக்கியமில்லை. அதன் மூலம் கிடைத்த பரிசாக ‘ஆரவ்விற்கு’ eviction-ல் இருந்து தப்பித்த வாய்ப்பு கிடைத்ததுதான் சற்று அதிர்ச்சி. மேலும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. 

‘எவரையாவது eviction’-ல் இருந்து காப்பாற்றலாம் என்கிற பரிசு, கணேஷிற்கு கிடைத்து தொலைத்தது.. மனிதர், ‘காயூ பேபியை’வை தேர்வு செய்து வாக்காளர்களின் முகத்தில் கரியைப் பூசி விடுவாரோ? மீண்டும் ஒரு பயங்கர ஏமாற்றத்தை வாக்காளர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

கணேஷ் புத்திசாலித்தனமான தேர்வை செய்வார் என்று நம்புவோம். 

**

ஆரவ்வும் காயத்ரியும் சதியாலோசனையில் அமர்ந்தனர். ரகசியமான பேச்சு. சிநேகனைப் பற்றிய புறம். ‘வாயைத் திறந்தா அத்தனையும் பொய்’ என்றார் காயத்ரி. வழக்கம் போல் ஏற்ற இறக்கங்களுடன் அவர் புறணி பேசிய விதம் ஜூலியை நினைவுப்படுத்தியது. ‘வெளியே வந்து எல்லாரையும் செஞ்சுடுவேன்’ என்கிறார் காயத்ரி. வெளியில் உள்ள நிலைமை அவருக்குத் தெரியவில்லை. 

**
புது வரவாக ஹரீஷ் கல்யாண். மருத்துவமனையில் எந்த குழந்தை பிறந்தது என்கிற நர்ஸின் அறிவிப்பு போல ‘It’s a boy’ என்று உற்சாகமாக அறிவித்தார் கணேஷ். “உனக்கு காம்படிஷனுக்கு அனுப்பியிருக்காங்க’ என்று சரியான பாயிண்டை ஆரவ்விடம் முன்வைத்தார் காயத்ரி. ஆரவ்வின் முகத்தில் சுருதி இறங்கித்தான் போயிருந்தது. 

பரணியை நினைவுப்படுத்துவது போல சுவரேறி குதித்து எண்ட்ரி தந்தார் ஹரீஷ். வெளியே குதிப்பதற்குத்தான் தடை போல. 

ஏணி வரத் தாமதமாகியதால் ‘அப்படியே கீழே குதிச்சடட்டுமா’ என்று ஹரீஷ் கேட்டதற்கு ‘வேண்டாம்’ என்பது போல் கையசைத்தார் காயத்ரி. ‘கீழே விழுந்தா கால் உடையப் போகுது. அவ்ளதானே’ என்று பரணிக்கு நியாயம் பேசியவரும் இவர்தான். 

வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அதிரடியைத் துவக்கினார் ஹரீஷ். ‘எவர் உடனடியாக ஒரு உணவைத் தயார் செய்து தருகிறாரோ, அவர்களுக்கு பிக்பாஸ் பரிசு காத்திருக்கிறது’ என்றதும் சுஜாவும் ரைசாவும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். 

தங்களின் வீடுகளில் கூட இத்தனை சுறுசுறுப்பாக செய்திருப்பார்களோ என்று தெரியவில்லை. பரிசு என்றதும் மளமளவென்று வேலை நடந்தது. பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்ட விநாயகரைப் போல வெள்ளரிக்காயை நறுக்கி கொண்டு வந்தது காயத்ரி அணி. ரைசா அவசரம் அவசரமாக சப்பாத்தி செய்து கொண்டிருந்தார், பாவம். 

‘Task-லாம் இல்ல. பசிச்சது. அதான் அப்படிச் சொன்னேன்’ என்று ஹரீஷ் அம்பலப்படுத்தியதும் ரைசா மிகப் பெரிய பல்பை வாங்கியது போல முழித்தார். விளையாட்டாக ஹரீஷைத் திட்டினாலும் பலருக்கும் உள்ளுக்குள் எரிச்சல் ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. .

‘தண்டனையாக நீச்சல் குளத்தில் விழ வேண்டியிருக்குமோ என்று பயந்துதான் அவசரம் அவசரமாக சமையல் செய்தேன்’ என்று ரைசா சமாளித்தாலும் ஆரவ் அவரை கிண்டல் செய்யத் தவறவில்லை. புது போட்டியாளரான ஹரீஷிடமிருந்து ரைசாவை பாதுகாப்பதுதான் இனி ஆரவ்வின் முழு நேர பணியாக இருக்கும் போல. கூடவே காயத்ரி பேரவை தளபதியாகவும் இருக்க வேண்டும். கஷ்டம்தான். 

**

பிந்துவைப் போலவே உள்ளே நுழைந்ததும் ‘நமது நிருபர்’ பணியைத் துவக்கினார் ஹரீஷ். மருத்துவ முத்தம் மாதிரி நீங்கள் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்வதால் உங்களுக்கு ‘டாக்டர்’ என பெயர் வைத்திருக்கிறேன் என்று ஹரீஷ் சொன்னதும், வெட்கமேயில்லாமல் சிரித்தார் சிநேகன். உள்ளுக்குள் மனம் சுருங்கினாரோ என்னமோ. 

ஓவியாவின் வெளியேற்றத்தில், துயரத்தில் ஆரவ்விற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும் எல்லோருக்குமே அதில் பங்கு இருக்கிறது அல்லவா என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஹரீஷ். வேறு வழியில்லாத சிநேகன் அதை ஒப்புக் கொண்டார். 

**
புதுவரவுகளை இணைப்பது மட்டுமில்லை. இந்த நாடகத்தை சுவாரசியமான ஐடியாக்களுடன் தொடர்வதில்தான் பிக்பாஸின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இல்லையெனில் ரிமோட் என்கிற பிரம்மாஸ்திரத்தை பிக்பாஸின் மீது பார்வையாளர்கள் ஏவத் தயங்க மாட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு