மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ரிமோட் ரீட்டா, படங்கள்: ரா.வருண் பிரசாத்

கேபிள் கலாட்டா!

'இது, தீபாவளி ஸ்பெஷல். ஏதாச்சும் ஸ்பெஷல் வெடியா இல்லாட்டி, ஆபீஸ்ல நமக்கு அணுகுண்டுதான்'னு மூளையைக் கசக்கின நான், சட்டுனு 'தெய்வ மகள்' ஷூட்டிங் ஸ்பாட்ல ஆஜராகிட்டேன்.

''வாம்மா ரீட்டாக்கண்ணு. ரிமோட்டை எங்க பக்கமும் அப்பப்ப அழுத்தினா நல்லா இருக் கும்!''னு குத்தலா ஆரம்பிச்சார் டைரக்டர் குமரன்!

''அட என்ன சார்... தீபாவளி ஸ்பெஷலுக்காக, உங்க ஏரியாவையே ஸ்பெஷலா கவர் பண்ணிட்டு போலாம்னு வந்திருக்கேன். நீங்க என்னடான்னா...?''

கேபிள் கலாட்டா!

''கூல் ரீட்டா... கூல். சும்மா வெளயாட்டுக்கு சொன்னேன். சரி, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, ஷாட் ரெடியாகிடுச்சு''னு சொல்லி, வழக்கம்போல பொறுப்பா தன்னோட வேலை யில மூழ்கிட்டாரு.

வெட்டியா கிடந்த சேர்ல செட்டிலாகி, வேடிக்கை பாக்க ஆரம்பிச்சா, டயலாக்கை, ஒரே டேக்ல எறங்கி அடிச்சுட்டிருந்தாங்க நம்ம கிரேஸி மேடம் (விஜயா).

''என்ன ரீட்டாக்கா, தீபாவளி வேலையெல்லாம் எப்பூடி?''னு குரல் கேட்டுத் திரும்பினா... அட, சித்தாந்த் தம்பி (சுரேஷ்).

''என்னப்பா உனக்கு இதுதானே முதல் சீரியல்? நடிப்பு அனுபவம்லாம் எப்படி போகுது?''னு விசாரிச்சேன்.

சரவெடி கிரேஸி!

''கிரேஸி மேடம் நடிப்பைப் பாத்தீங்கள்ல.... மேடம்தான் நம்ம குருஜி. ஸ்பாட்டுக்கு வந்ததுமே 'குட்மார்னிங் குருஜி'னு சொல்லாம ஷாட்டுக்கு போக மாட்டேன். ஒரு விஷயத்தை ஆரம்பிக்கறதுக்கு முன்ன நல்லது பண்ணணும்னு எங்க வீட்ல சொல்லிக் கொடுத்திருக்காங்க.''

''தம்பி, இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல?''

''ஹலோ ரீட்டாக்கா, நான் காமெடி பண்ணல. நெஜமாதான் சொல்றேன். வந்த புதுசுல, 'ஷாட் ரெடி'னு சொன்னதும், டயலாக் மறந்துடும். நெறய டேக் வாங்கிட்டே இருப்பேன். நம்ம குருஜியை பாத்துதான் நெறைய கத்துக்கிட்டேன். மேடம் ஸ்பாட்டுக்கு வந்து பத்து நிமிஷத்துல தடதடனு மேக்கப் முடிச்சு, டயலாக்கை வாங்கி மடமடனு மனப்பாடம் பண்ணி, 'ஷாட் ரெடினு சொன்னதும் படபடனு பேசி நடிச்சுடுவாங்க. இப்படி துறுதுறுனு இருக்கிற அவங்க, மொத்தத்துல பரபரனு வெடிக்கிற சரவெடி''னு மூச்சு வாங்கின சித்தாந்த்,

''என்ன ரீட்டாக்கா, தீபாவளி ஸ்பெஷலுக்கு ஏத்த மாதிரி டயலாக் அடிச்சுவுட்டேன் பாத்தியா. எப்பூடி!''னு சொன்னபடியே ஷாட்டுக்கு எழுந்து போனார்.

புஸ்வாண சபீதா!

''வாம்மா பூஜா (சுஜாதா)... இப்படி வந்து உக்காரு!''

''என்ன ரீட்டா, பலமா கவனிக்கிறே... என்ன விஷயம்?''

''ஒண்ணுமில்ல... நம்ம சித்தாந்த், கிரேஸி மேடத்துக்கு சரவெடி பட்டம் கொடுத்துட்டான். நீ யாருக்கு, என்ன பட்டம் கொடுக்கப் போறே?''

''என்னோட ஆல் டைம் ஃபேவரைட் சபீதா மேடம் (சரோஜா) தான். எந்த விஷயத்தையும் தைரியமா ஷேர் பண்ணலாம். அந்தளவுக்கு நம்பிக்கையானவங்க. நாம டல்லா இருக்கறத பாத்தா, ரொம்ப அக்கறையா விசாரிப் பாங்க. இந்த சீரியல்ல என்னோட ஃபர்ஸ்ட் டே ஷூட்டுக்கு கான்ஃபிடென்ஸே இல்லாம போனேன். மேடம்தான் என்கரேஜ் பண்ணாங்க. மேடத்தை புஸ்வாணம்னுதான் சொல்வேன். பட் படார்னு வெடிச்சு இம்சை கொடுக்காம, ரொம்ப சாஃப்டா, அழகா இருக்கிறதால எல்லாரோட ஃபேவரெட் வெடி புஸ்வாணம்தானே!'' - பூஜா சொன்ன விளக்கத்துல, நானும் புஸ்வாணமாகிப் போனேன்!

கேபிள் கலாட்டா!

ஆட்டம் பாம் - கணேஷ்!

ரெஸ்ட் எடுக்க வந்த கிரேஸியை மடக்கினேன்.

''எனக்கு நம்ம கணேஷ் (மூர்த்தி) சாரை ரொம்ப புடிக்கும். செட்லயே பயங்கர காமெடி அவர்தான். சும்மா ஆட்டம் பாம் கணக்கா, நல்லா ஸ்ட்ராங்கா காமெடி பண்ணி, எல்லார் மனசுலயும் எடம் புடிச்சுட்டாருல்ல.''

கேபிள் கலாட்டா!

செவன் ஷாட்- சத்யா!

''வாங்க ஆடிட்டர் ஸ்ரீதர் (தேவராஜ்) சார். நீங்க யாரை சொல்லப் போறீங்க?''

''வாணியைத்தான் (சத்யா) சொல்லுவேன். சீரியல்ல என்னோட தங்கை மகளா நடிச்சாலும் நெஜத்துல என்னை 'அப்பா’னும், என்னோட மனைவியை 'அம்மா’னும்தான் வாணி கூப்பிடுவா. இந்த செவன் ஷாட் வெடி எவ்ளோ அழகா வெடிச்சு, வானத்துல கலர்கலரா பூ மாதிரி பொழியுதோ... அதேமாதிரி, பொண்ணு. தைரியம் ப்ளஸ் அமைதினு கலந்துகட்டின கலவை. என் மனைவிக்கும் ரொம்பப் பிடிச்ச நிஜ கேரக்டர்தான் வாணி!''

தூவானம்!

ரொம்ப நேரமாகியும் டைரக்டர் திரும்பி வராததால... பெரிய சல்யூட் போட்டு நைஸா கிளம்ப நினைச்சேன்.

''என்ன ரீட்டா, அதுக்குள்ள கிளம்பிட்டே போல. என்கிட்ட எதுவும் கேக்கலயா? சரி, நானே சொல்றேன். எனக்கு நம்ம வெண்ணிற ஆடை நிர்மலா மேடம், அப்புறம் எஸ்.வி.எஸ்.குமார் (சிதம்பரம்) சார்... இவங்க ரெண்டு பேரையும்தான் ரொம்பப் புடிக்கும். வானத்துல ரொம்ப உயரமா போனாலும், ரொம்ப அமைதியா கலர்கலரா பொழியுற தூவானம் மாதிரிதான் இந்த ரெண்டு பேரும். மத்தபடி நம்ம டீம் இருக்கே, ஷாட் நேரத்தை தவிர, எல்லாமே சரியான தவுசன் வாலா. ஒரே அரட்டை கச்சேரிதான்!''

இதைக் கேட்டதுமே... கச்சேரி பலமாவே களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

'தமிழ் உள்ளவரை மறையாது..!’

''விஜய் டி.வி-யில் 21.9.14 அன்று ஒளிபரப்பான 'நீயா... நானா?’வில் சிவாஜி ரசிகர்களுடன் கோபிநாத் கலந்துரையாடினார். சுமார் 100 பேர் கலந்துகொண்டு சிவாஜியின் ஸ்டைல், நடை, சிரிப்பு, அழுகை, வசனம் மட்டுமல்லாமல், அவர் நடித்த படங்களில் இருந்து பல நிகழ்வுகளை நினைவூட்டினர். நிகழ்ச்சியைப் பார்த்த நான் கண்ணீர் விட்டேன். சிவாஜி என்ற சரித்திர நாயகனின் புகழ் தமிழ் உள்ளவரை மறையாது!'' என்று உணர்ச்சி ததும்புகிறார் சீர்காழி, கீழமணி கிராமத்தில் இருந்து செ.கலைச்செல்வி.

டூ இன் ஒன்!

''பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிரிப்பு வெடிகள்’ காமெடி நிகழ்ச்சி அருமையாக உள்ளது. அதில் காம்பியரிங் செய்யும் விதம் சிந்தனையைத் தூண்டி, இயற்கையை ரசிக்க வைத்து, தெளிவு தரும் விதமாக இருக்கிறது. அத்துடன் சிரிப்பை அள்ளித்தந்து மனதையும், முகத்தையும் வாட்டம் நீக்கி புதுப்பொலிவுடன் ஜொலிக்கச் செய்கிறது. 'டூ இன் ஒன்’ நிகழ்ச்சி போல வலம் வருகிறது... சிரிப்பு வெடிகள்!'' என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் சீர்காழியில் இருந்து ஆர்.சீதா.