Published:Updated:

காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate

காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?!  - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate
காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate

காதலை மிஸ் செய்கிறாரா காயத்ரி?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 54) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்


‘ஒரு நாள் வீட்ல இருந்து கிளம்பி மறுபடியும் வீடு போய்ச் சேர்றதுக்குள்ளே உசுரு போயி உசுரு வருது’ என்பார் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில். அதைப் போலவே  பிக் பாஸ் வீட்டு நிகழ்வுகளைப் பற்றி என்னதான் எழுதுவது என்று இப்போதெல்லாம் தினமும் தோன்றுகிறது. அந்தளவிற்கு சுவாரசியமற்றதாக சமீபத்தில் மாறிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ். 

சிம்பு பாடலான ‘லவ் பண்லாமா, வேண்டாமா’ போல ‘சாப்பிடலாமா, வேண்டாமா’ என்றொரு பஞ்சாயத்தை வைத்து இன்றைய நாளை நீண்ட நேரம் ஓட்டினார்கள். “நீங்க சாப்பிடுங்க..” “இல்ல.. எங்களுக்கு வேணாம்’' என்கிற வசனங்களையே எவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பது?

சிக்கன் உள்ளிட்ட விதம் விதமான உணவுகளை ஒதுக்கி வைத்து விட்டு வெட்டி வீம்புடன் இவர்கள் செய்து கொண்டிருந்த பஞ்சாயத்துக் காட்சிகளை, காய்ந்த ரொட்டியும் நேற்றைய சாம்பாரையும் வைத்து உண்டு கொண்டே பார்த்தேன். என்ன கொடுமை!

திரைத்துறையில் இருந்து இன்னொரு ‘பிரபலத்தை’ நிகழ்ச்சியில் இன்று இறக்கியிருக்கிறார்கள். பிரபலம் என்கிற சொல்லுக்கு பிக் பாஸ் அகராதியில் என்ன பொருள் என்று தெரியவில்லை. புது வரவான காஜலின் தோரணைகளைப் பார்த்தால் காயத்ரிக்கு சரியான போட்டியாக இருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் இது தொடர்பான சண்டைக்காட்சிகள் சாத்தியமாக வேண்டுனெ்றால், காயத்ரி இந்த வாரம் வெளியேறாமல் இருக்க வேண்டும். 

மற்றபடி வேறேன்ன! பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக ஆண்களுக்குள் சண்டை நிகழ்ந்தை வேண்டுமானால் இன்றைய நாளின் முக்கிய விஷயமாக சொல்லலாம். ஆனால் இதற்கும் பின்னால் ஒரு பெண்தான் இருந்தார் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. காயத்ரி கூட்டணியுடன் ரைசா மறுபடியும் இணைந்து கொண்டார். பழைய ரைசாவிற்கான தோரணைகள் மறுபடியும் அவரிடம் தென்படுகின்றன. இவர்கள் இணைந்து சிநேகனை குறிவைக்கிறார்கள் போல. 

வையாபுரி எந்த அணியில் இருக்கிறார் என்றே புரியவில்லை. . திடீரென்று எவரையோ நோக்கி கத்துகிறார். சிலரிடம் சமாதானமாகப் பேசுகிறார். 

சற்று விரிவாகப் பார்ப்போம். 

**

53-ம் நாளின் தொடர்ச்சியாக ஒரு துண்டுக்காட்சியைக் காட்டினார்கள். புது வரவான ஹரீஷை அமர்த்தி வைத்துக் கொண்டு காயத்ரி கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘தன்னைப் பற்றியும் சக்தியைப் பற்றியும் வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்’ என்பதை அறிய பயங்கர ஆர்வமாக இருக்கிறார். ஹரீஷ் குத்துமதிப்பாக சில விஷயங்களைச் சொல்லிச் சமாளித்தார். 

முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் ஓர் ஆண் இத்தனை நேர்த்தியாக நடனமாடியது குறிப்பிடத்தக்க மாற்றம். ‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது’ பாடலுக்கு காலையில் ஹரீஷ் நன்றாகவே ஆடினார். தனக்கு நடனமாடுவது பிடிக்காது என்று சொன்ன வையாபுரி கூட தன்னிச்சையாக ஆடியது வேடிக்கை. புது போட்டியாளரான ஹரீஷின் இந்த நடவடிக்கைளை ஆரவ் எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தது போல் பட்டது. ‘அக்கா’ காயத்ரி அழைத்தவுடன் அங்கு சென்று தஞ்சம் அடைந்தார். ஆரவ்வின் மண்டையில் சுர்ரென்று எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும்.

பிந்து மற்றும் ரைசா செய்யும் ராகிங்கை, ஹரீஷ் திறமையாகவே எதிர்கொள்கிறார். ‘இன்னிக்கு நீங்கதான் சமைக்கணும்’ என்று இருவரும் ஹரீஷிடம் மல்லுக்கட்ட சாமர்த்தியமாக நழுவினார். ‘நேற்று நடந்த task-ஐ நெனச்சு தூங்கலையா? என்றார் ரைசா. “ஏங்க.. அதை நினைச்சு நான் ஏன் தூங்காம இருக்கணும். ஏமாந்தது நீங்கதானே?'' என்று சரியான பதிலடி கொடுத்தார் ஹரீஷ். அதுவரை தங்களிடம் வழியும் ஆண் போட்டியாளர்களை மட்டுமே பார்த்தி்ருந்த பெண் மயில்கள் ‘யார்ரா.. இவன்?’ என்று எரிச்சலுடன் அங்கிருந்து அகன்றார்கள். ஹரிஷ், கண்ணா..ஆண்களின் மானத்தைக் காப்பாற்றுகிறாயடா. வெல்டன்.

சுஜாவை காயத்ரி குழு ராகிங் செய்து கொண்டிருந்தது. (இன்னுமா இந்த ராகிங் முடியலை). ‘ஓவியாவோட மைக்’ வெச்சிருப்பதால நீ ஓவியா மாதிரிதான் நடந்துக்கணும். ஓவியா சண்டையே போட மாட்டாங்க. நாங்கதான் காரணமேயில்லாம சண்டை போடுவோம்” என்றெல்லாம் காயத்ரி சொல்லிக் கொண்டிருந்தார். (காயத்ரி மேடம், கிண்டல் செய்யறதா நெனச்சுக்கிட்டு நீங்க உண்மையை கொட்டிக்கிட்டிருக்கீங்க”)

‘ஓவியா மாதிரி நான் ஏன் இருக்கணும்? நான் நானா இருப்பேன். ஓவியாவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது’ என்று சுஜா அழுத்தம் திருத்தமாக சொன்னது சிறப்பு. வெளியில் சிரித்துக் கொண்டே இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் காயத்ரிக்கு  உள்ளூற நிச்சயம் எரிச்சல் தோன்றியிருக்க வேண்டும். 

உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் சரி, வெளியே இருந்து வரும் புதிய நபர்களும் சரி, ஓவியாவின் பெயரை சர்வஜாக்கிரதையாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பெயர் தொடர்பாக சிறிய அளவிலான எதிர்மறைக் கருத்தைச் சொன்னால் கூட பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. 

‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்று ஆரவ்விடம் ஜாலியாக பேசிக்காட்டினார் சுஜா. ‘நான் இந்த கேம்லயே இல்லைங்க’ என்று விரக்தியாகப் பேசினார் ஆரவ். (விரக்திக்கு ஹரீஷ்தான் காரணமா)

காயத்ரி, ரைசா, ஆரவ் என்று மூவர் கூட்டணி சிநேகனைப் பற்றி உற்சாகமாக புறம் பேசிக் கொண்டிருந்தது. காயத்ரியுடன் இணைந்த பழக்க தோஷமோ என்னமோ, ஆரவ் பேசிய உரையாடலில் ஓரிடத்தை அமைதியாக்கி எடிட் செய்தார்கள். எதிரணியில் இருந்த ரைசா இப்போது காயத்ரி குழுவில் நன்றாக ஐக்கியமாகி விட்டார். ‘both are sailing in the same boat’ என்பது போல நாமினேஷன் வரிசையில் காயத்ரியுடன்  இணைந்து நிற்பது காரணமா, அல்லது எப்படியும் காயத்ரி இந்த வாரம்  உறுதியாக வெளியேறி விடுவார் என்கிற நம்பிக்கை காரணமா?

**

‘அரிசி புடைத்தல்’ என்றொரு task. 

ஓ… இந்த நெல்லுக்குள்ள இருந்துதான் அரிசி –ன்ற மேட்டர் வெளியே வருதா? என்று சிலர் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் எல்லாம் கிடைக்கும் என்கிற மேட்டிமைத்தனம் உள்ளவர்களுக்கு சில பொருட்கள் எப்படி உற்பத்தியாகின்றன என்று கூட தெரியாமல் இருந்திருக்கலாம். 

‘புதிய பணிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது போன்ற taskகளை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கமல் சொன்னதை மறந்து விட்டு, வழக்கம் போல் வையாபுரி தன் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தார். உடலுழைப்பு சம்பந்தமான task என்றால் இவருக்குப் பிடிப்பதில்லை போல. வயதானவர் என்பதால் அவருக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் இப்படிக் கத்திக் கூப்பாடு போட்டு மற்றவர்களை discourage செய்வது தவிர்க்கப்பட வேண்டும். இன்றைய task பிடிக்கவில்லை என்பதால் அதன் விளைவாக தனது அணிக்கு பரிசான கிடைத்த உணவையும் தொட மறுத்தார்.

**

‘அரிசி புடைத்தல்’ போட்டியில் சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு விதம் விதமான உணவுகள் பரிசாக வழங்கப்பட்டது. எல்லோரும் அதைப் பகிர்ந்து சாப்பிடலாம் என்கிற நாகரிகத்துடன் காயத்ரியை அழைத்தார் சிநேகன். ‘இல்ல.. நாங்க.. லஞ்ச் செய்யத் துவங்கிட்டோம். அது வேஸ்ட்டா போயிடும்’ என்று மறுத்தார் காயத்ரி. 

பிறகு துவங்கியது அந்த நீண்ட பஞ்சாயத்து. கணேஷ் சொன்னது போல எதிரணிக்கு கிடைத்த பரிசாக இருந்தாலும் உணவு போன்ற விஷயங்களை பகிர்ந்து உண்பதுதான் அடிப்படையான நாகரிகமும் கலாசாரமும். வெட்டி வீம்பிற்காக உணவை மறுப்பதும் அது பாழாகும்படி போக விடுவதும் உணவிற்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி. 

நம்முடைய வீடுகளில் அல்லது விழாக்களில் கூட இதைப் பார்த்திருக்கலாம். உற்சாகமாக இணைந்து விதம்விதமான உணவுகளை தயார் செய்வார்கள். அப்போது எவரோ ஒருவர் கிளப்பிய ஓர் அற்ப விவகாரம் அப்படியே பற்றிக் கொண்டு தீயாக பரவும். காரசாரமான விவாதங்கள், பரஸ்பர வசைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து ‘உணவைச் சாப்பிட மாட்டோம்’ என்று மறுப்பார்கள். சுவையான உணவுகள் அப்படியே ஆறிப் போய் கிடக்கும். இதில் என்னவொரு கூடுதல் கொடுமையென்றால், இந்தப் பஞ்சாயத்திற்கு தொடர்பேயில்லாத அப்பாவிகள் கூட பசியுடன் மனதில் எச்சில் ஊற அந்த உணவுகளை பார்த்தும் பார்க்காமலிருப்பது போல பாவனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். 

**

காயத்ரியின் பிடிவாதத்தாலும் வீம்பினாலும் அவரது அணியில் உள்ளவர்கள் சுவையான உணவுகளை சாப்பிட முடியாமல் போயிற்று. ‘எனக்கு அழைப்பு வந்திருந்தால் சாப்பிட்டிருப்பேன்’ என்றார் ரைசா. ‘நான் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். பிறகு இந்த பஞ்சாயத்து காரணமாக எடுப்பதை தவிர்த்தேன்’ என்றார் பிந்து. காயத்ரி பேரவையின் தளபதியான ஆரவ், முதலிலேயே உறுதியாக மறுத்து விட்டார். 

சிநேகன் மீதுள்ள கருத்து வேறுபாடுகளை, கோப தாபங்களை உணவின் மீது காட்டுவது அநியாயம். ‘மானம் ரோஷம் இருக்கறவன் இதைச் சாப்பிடுவானா” என்று வெட்டி வீறாப்பாக கத்திக் கொண்டிருந்த வையாபுரி, பசியுடன் காயத்ரி செய்யப் போகும் சாம்பார் சாதத்திற்காக பரிதாபத்துடன் காத்திருந்தார். தேவையா இது?

காயத்ரி கூட்டணியின் இந்த புறக்கணிப்பை தாங்க முடியாத சிநேகன், ‘இனி இந்த வீட்டில் எனக்கு நானே சமைச்சுக்கறேன்’ என்று ஆரவ்விடம் கூற, ‘எதுக்கு என் கிட்ட கத்தறீங்க” என்று அவர் பதிலுக்கு கத்த, இந்த உணவுப்பஞ்சாயத்தின் சூடு இன்னமும் கூடியது. எதுவும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்தார் காயத்ரி. 

‘திரும்பத் திரும்ப பேசற நீ’ காமெடியாக இந்த சாம்பார் சாத பஞ்சாயத்து நீண்ட நேரமாக ஓடியது. சாப்பாடு மூலம் கிடைத்த சக்தியெல்லாம் இதிலேயே செலவாகியிருக்கும். 

வெற்றி பெற்ற அணிக்கு மட்டும் சுவையான உணவுகளை பரிசளிப்பதின் மூலம் நிச்சயம் கலகம் உருவாகும் என்று கணக்குப் போட்ட பிக் பாஸின் ஆசையை போட்டியாளர்கள் திறம்பட நிறைவேற்றி வைத்தார்கள்.

**

‘இந்தச் சண்டையில் யார் பக்கம் தப்பு –ன்னு நெனக்கறீங்க? என்று ஹரீஷின் வாயைக் கிளறினார் காயத்ரி. இதன் மூலம் அவர் எந்த தரப்பின் பக்கம் இருக்கிறார் என்று அறிந்து கொள்வது காயத்ரியின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். தான் புதுசு என்பதாலோ என்னமோ, கணேஷைப் போலவே.. ‘அவன் உயரமாவும் இருப்பான், குள்ளமாவும் இருப்பான். கருப்பாவும் இருப்பான், வெள்ளையாவும் இருப்பான்’ என்று சாமர்த்தியாக சாட்சியம் கூறினார் ஹரீஷ். 

பெண்கள் சண்டையாக இருந்தால் ஒரு வாரத்திற்கும் மேல் ஓடியிருக்கும். ஆண்கள் இந்த விஷயத்தில் சுத்த வேஸ்ட். ஆரவ்வை அழைத்த சிநேகன் ‘தம்பின்ற உரிமைலதான் உங்க கிட்ட சத்தம் போட்டேன்’ என்று பாசமழை பொழிய ‘அதனால என்ன ப்ரோ’ என்று இறங்கி வந்தார் ஆரவ். 

ஆனால் இன்னொரு புறம் காயத்ரியிடம் சென்று ‘எங்கிட்ட ஸாரி கேட்டாரு. நான் பதிலுக்கு ஸாரி சொல்லலை. அடிங் மவனே.. இந்த டகால்ட்டி வேலையெல்லாம் யாரு கிட்ட’ என்றும் ஆரவ் புறம் பேசத் தவறவில்லை. கூடாநட்பு. காயத்ரி சகவாசம். 

இந்த ரணகளத்தின் இடையே கிளுகிளுப்பாக ‘நான் எப்போது நடிக்கத் துவங்கணும்?’ என்று அப்பாவியாக கேட்டுக் கொண்டிருந்தார் சுஜா.  பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி சில சண்டைகளை நாமாகப் போட வேண்டும் என்று பிந்து சொல்லியிருந்ததால் ‘நான் எப்ப சண்டை போடணும்?’ என்று வெள்ளந்தியாக கேட்டுக் கொண்டிருந்தார். 

**

புதுவரவான காஜல் தடபுடலான தோரணைகளுடன் வீட்டிக்குள் நுழைந்தார். புஸ்வாணங்கள் வெடிக்க அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் வந்து இறங்கினார். பிந்துவிற்கு பல்லக்கு. காஜலுக்கு ஆட்டோ. நபர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப பிக்பாஸ் ஏதோவொரு ப்ரோட்டாகாலை கறாராக பின்பற்றுகிறார் போலிருக்கிறது. 

‘அடப்பாவிகளா.. ஆம்பளைங்கன்னா.. சுவரேறி குதிக்கச் சொல்றாங்க.. ஒரு ஓலைப்பட்டாசு கூட வெடிக்கலை. பொம்பளைங்கன்னா.. என்னா ஏற்பாடு’ என்று ஹரீஷ் மனதிற்குள் வெம்பியிருக்க வேண்டும். 

சரளமான ஆங்கில உச்சரிப்புடன் எல்லோரிடமும் அறிமுகம் செய்து கொண்டார் காஜல். இவர் வந்தவுடனே காயத்ரி இவரை வெறுக்கத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது. ‘மாஸ்டர்.. கீஸ்டர்ன்றா.. யாருன்னே தெரியாது’ என்று கழிவறைக்கு சென்று கொண்டிருந்த ரைசாவிடம் சொன்னவர், சட்டென்று காமிராவை நோக்கி ‘இந்த வாட்டி என்னை அனுப்பிடுச்சுங்க.. இல்லாட்டி அழுதுடுவேன்’ என்று விளையாட்டுத்தனமாக பேசிய போது, அதுவரை அப்படியொரு காயத்ரியைப் பார்த்திராத நாம், பூச்சாண்டியைப் பார்த்த கைக்குழந்தை போலவே அலற வேண்டியிருந்தது. 

**

‘நீங்க flirt செஞ்சிக்கிட்டிந்த பொண்ணு. திடீர்னு ‘லவ் யூ’ சொன்னா ஏத்துக்குவீங்களா? – இப்படியொரு taskஆம். ‘உங்க மனசுல எது இருக்கோ, அதைக் கேளுங்க’ன்னு  சொல்லி அனுப்பிச்சாங்க.. எனக்கு இதைத்தான் கேட்கத் தோன்றியது’ என்றார் காஜல். 

இது கனகச்சிதமாக ஆரவ்விற்கு வைக்கப்பட்ட செக் மேட். பாவம், மனிதர் தர்மசங்கடத்துடன் நெளிந்து கொண்டிருந்தார். 

‘ஏன் லவ் –னு சொன்னவுடனே பயந்துட்டீங்களா?’ என்று ஆர்வ்விடம் நேரடியாகவே கேட்டார் காஜல். தனது கேள்விகளை பட்டவர்த்தனமாக கேட்கும் காஜலிடம் அதற்கான தெளிவு இல்லை. என்று தோன்றுகிறது. வழவழவென்று மாறி மாறிச் செல்லும் துண்டு துண்டான வார்த்தைகளால் குழப்புகிறார். காஜல் தந்த சாக்லெட்டை சம்பிரதாயத்திற்கு நன்றி சொல்லி வாங்கிய ஆரவ் வெறுப்புடன் பக்கத்தில் வைத்தார். 

‘சக்தியோட சேர்த்து என்னையும் அனுப்பியிருக்கலாம். இனி இங்கே என்னால் தங்க முடியாது. மத்தவங்க லவ் ஸ்டோரிய கேட்கறதுக்கு பதில் ‘என் லவ் ஸ்டோரியைப் பார்க்கப் போகலாம்’ என்றெல்லாம் காயத்ரி புலம்பிக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது... இத்தனை வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள்ளே நிலவும் சண்டைகளுக்கு வியூகம் வகுத்துக் கொண்டிருந்த காயத்ரி, சில நாட்களாக வீட்டுக்கு வெளியே செல்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதுவும் காதல் பற்றியெல்லாம் பேசுவதைப் பார்த்தால், தன் காதலை மிஸ் செய்கிறாரோ காயத்ரி என்றே தோன்றுகிறது.

அசரிரீக்குரல் சொன்னது போல, புதிய வரவுகள் காரணமாக ஏற்கெனவே இருக்கும் போட்டியாளர்கள் விரக்தியடைகிறார்கள் என்று தெரிகிறது. தாங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகி விடுமோ என்று சலிப்படைகிறார்கள். 

என்ன செய்ய, ஓர் ஓட்டப்பந்தயத்தில் இவர்தான் உறுதியாக வெற்றி பெறுவார் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் போது, இறுதிச்சுற்றில் எங்கிருந்தோ மின்னல் போல வேறொருவர் வந்து வெற்றிக் கோட்டை தாண்டிச் சென்று பரிசு பெறலாம். விளையாட்டிலுள்ள எதிர்பாராத தன்மைதான் இதன் சுவாரஸ்யமே.

அடுத்த கட்டுரைக்கு