Published:Updated:

நமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி! (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

நமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி!  (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
நமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி! (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

நமக்குள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி! (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


பிக் பாஸ் பார்வையாளர்களின் பெரும்பான்மையான கோபத்தையும் எரிச்சலையும் சம்பாதித்திருந்த காயத்ரியின் வெளியேற்றம் எப்போது நிகழும் என்கிற ஆவல் பலருக்கும் இருந்தது. எதிர்பார்த்தபடியே அது நிகழ்ந்தது. காயத்ரியும் அதை உள்ளூற எதிர்பார்த்திருந்தார். அதற்கான ஒப்பனையில் அவர் தயாராக வந்திருப்பதை வைத்து இதை கணிக்க முடிந்தது. 

சனிக்கிழமை நிகழ்ந்த கேள்வி –பதில்கள் பகுதி கமலின் தலையீடு அல்லாமல் போட்டியாளர்களின் இடையில் நிகழ்ந்து சுருதி இறங்கிப் போயிற்று என்பதால், அதை ஈடு செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த வெளியேற்றத்தின் போதாவது கமலே நேரடியாக கேள்விகளை முன்வைக்கக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இந்த முறையும் பந்துகளை சபையின் பக்கமாக தள்ளி விட்டு கமல் பின்னால் நின்று கொண்டது சிறிது ஏமாற்றம்தான்.

இதர போட்டியாளர்களிடம் நிகழ்த்தப்படாத மாற்றம் இது. ஜூலியிடம் அவரது தவறுகளை கமலே நேரடியாக உணர்த்தி பிறகு ‘என் தங்கையை வெளியே அனுப்புகிறேன்’ என்று மக்களின் கோபத்தையும் சமன் செய்தது சரியானது. சக்தி உள்ளிட்ட மற்றவர்களுக்கும் கூட இப்படியே நிகழ்ந்தது. ஓவியாவின் வழக்கைப் பொறுத்தவரை அவருடைய எதிர்மறை அம்சங்களை சுட்டிக்காட்டும் சூழல் அப்போது இல்லை. அவரது மனநிலை சமநிலையாக இல்லாமல் இருந்தது. எனவே அதுவொரு விதிவிலக்கு. 

ஆனால் காயத்ரி தொடர்பான பகுதியை மட்டும் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ கூட்டத்திடம் ஒப்படைத்து விட்டது ஒருவகையில் நெருடல். ‘மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு’ என்று கமல் நினைத்திருக்கலாம். ஆனால் கமல் கடவுள் மறுப்புக் கொள்கையை உடையவர். மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வார். மகேசனின் மீது நம்பிக்கையிருக்காது. 

காயத்ரியின் வெளியேற்றம் நிகழ்ந்து முடிந்து விட்ட இந்த நிலையிலும் கூட அவருக்காக சில சலுகைகள் காட்டப்பட்டனவா என்று தொடர்கிற நெருடலை கடைசி நாளிலாவது தீர்த்து வைத்திருக்கலாம். 

தன் உரையாடலின்போது இது தொடர்பாக கமல் விளக்கம் அளித்திருந்த போதிலும் ஏன் அவரே கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும் என ஏன் வற்புறுத்துகிறேன்? கமலின் கிடுக்கிப்பிடிகளால் காயத்ரி கூனிக்குறுகி அமரும் காட்சியைக் கண்டு ரசிக்கும் குரூரமான ஆசையினால் அல்ல.
கூட்டத்தின் கேள்விகளை விதம்விதமாக சமாளித்த காயத்ரி, சமாளிக்க முடியாத இடங்களில் மன்னிப்பு கேட்ட காயத்ரி, கமல் கேட்கும் போது மட்டும் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைந்து விடுகிறார். 

‘தலைவாரும் போதெல்லாம் உங்களுக்கு நீங்கள் சொன்ன கெட்ட வார்த்தை நினைவிற்கு வர வேண்டும்’ என்று நுட்பமாக காயத்ரியின் கெட்ட வார்த்தை வழக்கத்தை சுட்டிக் காட்டிய போது ‘சார் …இனிமே தலையே வார மாட்டேன்’ என்றார். 

சில பூட்டுக்கள் சில சாவிகளின் மூலம்தான் சட்டென்று திறக்கும். கமலின் நுட்பமான குறுக்கு விசாரணையை ரசிக்கும் அதே சமயத்தில், எதிர் தரப்பினரும் தம்முடைய தவறுகளை உணர்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதற்காகவே இந்தக் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்துகிறேன். 

**

தம் கடந்தகால பிழைகளை எவராவது சுட்டிக்காட்டி, நாமும் அதை அந்தரங்கமாக உணர்ந்திருக்கும் பட்சத்தில் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி மனதார மன்னிப்பு கேட்டு விடுவதே அறம். சம்பிரதாயத்திற்காக மன்னிப்பு கேட்பதோ அல்லது தாம் செய்தது சரி என்று அதை நியாயப்படுத்துவதோ முறையாகாது. 

காயத்ரி எல்லா விதங்களிலும் பதிலளித்தார். ஆனால் மக்களை எதிர்கொள்வதற்கான பதற்றமும் அச்சமும் அவர் முகத்தில் வெளிப்படையாக தென்பட்டது. என்றாலும் அந்தச் சூழலை அவர் திறமையாக கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மனது பலகீனமாக இருப்பவர்கள் என்றால் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு என்று முதலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்திருப்பார்கள் அல்லது அழுதிருப்பார்கள். அதன் மூலம் கிடைக்கும் அனுதாபத்தின் மூலம் தன் தவறுகளை மூட முடியுமா எனவும் சிலர் பார்ப்பார்கள். (வையாபுரி செய்த தவறை சுஜா சுட்டிக் காட்டியதும் வையாபுரியும் இதுபோல்தான் செய்தார்).

இந்த வகையில் காயத்ரி தைரியமானவர்தான். தன்னம்பிக்கையுள்ளவர்தான். 

**

சிலபல விமர்சனங்கள் இருந்தாலும் சமநிலையுடைய ஒரு நெறியாளராக கமல் தன் பணியைத் திறம்பட செய்தார் என்றே சொல்வேன். மக்களின் ஆவேசத்தை தானும் கையில் எடுத்துக் கொண்டு அப்படியே பிரதிபலிக்கக்கூடாது. . அதே சமயத்தில் போட்டியாளருக்கு சார்பாக விழாதவாறும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கயிறு மேல் நடக்கும் இந்த வித்தையை கமல் நன்றாகவே நடத்திக் காட்டினார். கேள்விகள் மக்களிடமிருந்து வந்தாலும் அதை சிறப்பாகவே வழிநடத்தியது நன்று. அவர் நினைத்தது போல் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதது குறித்து நாம் பெருமைப்படலாம். 

மீண்டும் மீண்டும் அதேதான். தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. சிநேகன் இந்த நிகழ்ச்சியில் முன்பு சொல்லியதைப் போல ‘மன்னிக்க முடியாத குற்றம் என்ற ஒன்று இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. தம்மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு காயத்ரி நிறைய சமாதானங்கள் சொன்னாலும், அவரளவில் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும் என்றாலும், எல்லாவற்றிற்கும் பொதுவாக ‘மன்னிச்சுடுங்க’ என்றார். நாம் அதைச் செய்வதே உத்தமம்.

நம்முள் இருக்கும் காயத்ரித்தனங்களை நமக்கே அறிமுகப்படுத்திய காயத்ரிக்கு ஒருவகையில் நாம் நன்றிதான் சொல்ல வேண்டும். 
நிகழ்ச்சியின் சில போட்டியாளர்களை திட்டித்தீர்த்து விட்டு ‘அப்பாடா’ என்று செளகரியமாக சாய்ந்து அமர்ந்து விடுவதில் இல்லை விஷயம். இந்த விளையாட்டின் மூலம் நமக்குள்ளான சுயபரிசீலனைகள் எந்த அளவிற்கு உசுப்பப்பட்டன, அவற்றில் எத்தனை சதவீதம் நாம் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது. 

கமல், கேள்விகளை தாம் முன்வைக்காமல் மக்களிடம் விட்டு விட்டதற்கான காரணத்தை ஒரு தருணத்தில் உணர முடிந்தது.

“நாம ரெண்டு பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்’ என்பதால் உங்களிடம் கனிவு காட்டினேன் என்கிறார்கள். இதுதான் நிஜமான கெட்ட வார்த்தை. இப்படிச் செய்யாதீங்க. நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கேன். வேற எதுல வேணா கிண்டல் பண்ணுங்க. சாதிதான் ஆபத்தான கெட்ட வார்த்தை.’ என்று அவர் பேசியபோது ஆத்மார்த்தமான ரெளத்ரத்துடன்தான் அதைச் சொல்கிறார் என்பதை உணர முடிகிறது.

“இப்படிச் சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமாயில்லையா?” என்று சமூகத்தை நோக்கி கேட்பதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும். உள்ளே உண்மையிருந்தால்தான் இப்படி கேட்க முடியும். வெல்டன் கமல்.

இந்த விஷயம் காயத்ரிக்கு நிச்சயமாகப் புரியவில்லை என்பது அவருடைய முகபாவங்களில் தெரிகிறது. கமல் சொன்னது போல ‘புரியாமலே இருக்கட்டும்’.

**
துறை சார்ந்த ஒரு பணியாக இருக்கட்டும், விளையாட்டுப் போட்டியாக இருக்கட்டும், ஒருவர் ஒய்வு பெற்று வெளியேறும்போது அல்லது தோல்வியடைந்து வெளியேற்றப்படும் போது சம்பந்தப்பட்டவர்களின் மீதுள்ள எதிர்மறையான அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நேர்மறையான விஷயங்களையும் கொண்டு சமநிலையாக பார்க்க வேண்டும். இதுவே அடிப்படையான நாகரிகமும் அறமும். 

இந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் காயத்ரியின் பங்களிப்பை நிறை குறைகளுடன் பார்க்கலாம். 

காயத்ரியின் சமையல் திறமை அவருக்கு ஒரு பெரிய நேர்மறையான அம்சமாக அமைந்திருக்கிறது. வீட்டில் நிகழும் பெரும்பான்மையான சர்ச்சைகளில் ஒதுங்கி நிற்காமல் உடனே வந்து பேசியது, கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஓவியாவின் நெருக்கடியான சூழலில் அவருக்கு ஆறுதலாக இருந்தது போன்றவையெல்லாம் நேர்மறையான அம்சங்கள். 

புறம் பேசுவது, குழு மனப்பான்மையை உருவாக்கி வளர்ப்பது, உயர்வு மனப்பான்மையுடன் இருப்பது, அடிமைகளின் இருப்பில் மகிழ்ச்சியடைவது, சட்டென்று கோபமடைவது, தகாத வார்த்தைகளை இறைப்பது, கோபம் தணிந்த பிறகும் அதற்காக வருத்தம் அடையாமல் இருப்பது போன்றவை எதிர்மறையான அம்சங்களாக இருந்தன. 

குணச்சித்திரங்களின் கலவை நாயகியாக காயத்ரி இருந்தாலேயே இந்த விளையாட்டு இத்தனை நாள் சுவாரசியமாகவும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்போடும் நகர்ந்தது. அதற்காகவாவது காயத்ரிக்கு நன்றி. 

பார்வையாளர்களின் முன்னிலையில் காயத்ரிக்கு சிந்திப்பதற்கான, உணர்வதற்கான சாவகாசமான நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தின் கேள்விகள் நிலைக்கண்ணாடியைப் போன்றவை. அதை நிதானமாக பார்த்து விட்டு தம் ஒப்பனையில் உள்ள பிசிறுகளை இனியாவது காயத்ரி திருத்திக் கொள்ள வேண்டும். அது அவருடைய நலனுக்காகவே. நமக்காக அல்ல. 

காயத்ரியிடம் கேட்கப்பட வேண்டிய பெரும்பான்மையான கேள்விகள் பார்வையாளர்களின் மூலம் கேட்கப்பட்டு விட்டன. ‘சேரி பிஹேவியர்’ என்பது போன்ற சில சர்ச்சைகள் விடப்பட்டது குறித்து சிலருக்கு வருத்தங்கள் இருக்கலாம். அதற்கும் காயத்ரி ஏதாவது சமாதான வார்த்தைகளோ, மழுப்பல்களோதான் சொல்லியிருப்பார். 

ஒருவர் நிரந்தரமான மனமாற்றத்தை நோக்கி நகர்வதே முக்கியம். அப்போதைக்கான மன்னிப்பை, சம்பிரதாயத்தை அவரிடம் வலியுறுத்துவதில் என்ன உபயோகமிருக்கிறது?

காயத்ரியின் இடத்தை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டிருக்கிற காஜல், காயத்ரிக்கே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்து விடுவார் போலிருக்கிறது. பார்ப்போம். கமல் குறிப்பிட்ட அதே அளவுகோலைத்தான் காஜலுக்கும் பின்பற்ற வேண்டும். விமர்சனங்கள் நிச்சயம் தேவை. ஆனால் அவை தரத்துடன் அமைய வேண்டும். 

**
மக்களின் வில்லங்கமான கேள்விகள், போட்டியாளர்களுக்குள்ளாக நிகழ்த்தப்பட்ட விதம் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்தோம். அப்படியே ஆயிற்று. 

‘Attitude’-ன்னா என்ன? என்று அப்பாவியாகக் கேட்கிறார் ரைசா. உண்மையிலேயே இந்தச் சொல் அதன் பொருள் புரியாமல் பிக்-பாஸ் வீட்டில் அதிக புழக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. ‘Attitude காண்பிக்கறே’ என்பதற்கு நேரடிப் பொருளே கிடையாது. ‘உன் அணுகுமுறை சரி, அல்லது தவறு’ என்பது போல்தான் அமைய வேண்டுமே தவிர பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக உபயோகிக்கக்கூடாது. 

தம்முடைய வருகை நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே ‘வையாபுரி’ அப்படியொரு விவகாரமான பாட்டைப் பாடினார் என்பதை கேள்வி-பதில் சமயத்தில் அறிந்த சுஜா உளைச்சலுக்கு உள்ளானார் என்பது அப்போதே அவருடைய முகபாவத்தில் இருந்து தெரிந்தது. தன் தந்தையைப் போன்ற வயதில் உள்ளவர் இப்படி நடந்து கொண்டாரே என்று சுஜா கோபப்படுவதிலும் ஆதங்கப்படுவதிலும் நிச்சயம் நியாயமுள்ளது. போலவே ‘பெண்களை’ அது.. இது.. என்று அழைப்பதும் தன்னிச்சையான ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. 

இவையெல்லாம் நம்மையும் அறியாமல் நாம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிழைகள். இவை சுட்டிக்காட்டப்படும் போது உணர்வதும் சரிசெய்து கொள்வதுமே நாகரிகம். இதுதான் என் மொழி, இத்தனை என் இத்தனை வருட இயல்பு என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவது முறையானதல்ல. தம் கிண்டலுக்கு உடன்படுகிறவர்களிடம் விளையாட்டு வைத்துக் கொள்ளலாம். ஆட்சேபம் தெரிவிக்கிறவர்களிடம் மன்னிப்பு கேட்பதே சரி. 

வையாபுரி இதை நேரடியாக, ஆத்மார்த்தமான மன்னிப்புடன் நேர்மையாக எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் அழுது சீன் போட்டது எரிச்சல். மன்னிக்கவும் வையாபுரி. முன்னர் அழுத்தமான குரலின் மூலம் ஓவியாவின் பக்கம் நீங்கள் நின்ற போது உங்கள் மீது உயர்ந்த மதிப்பு இப்போது பரமபத பாம்பு போல மறுபடியும் சறுக்கி விட்டது. 

சுஜா தன் மனக்குமுறலை கொட்டும் போது சப்பைக்கட்டு கட்ட வந்த சிநேகனையும் இன்னபிறரையும் ஒதுக்கி விட்டு வையாபுரியிடம் நேரடியாக சுஜா பேசியது சிறப்பு. ஓவியாவை தன்னுடைய முன்னுதாரணமாக சுஜா கொண்டிருக்கலாம் என்பது என் யூகம்.

**

இதைப் போலவே தம் மீது நிகழ்த்தப்பட்ட ‘ராகிங்’ குறித்தும் பிந்துவிடம் நேரடியாக பேசியது சிறப்பு. முதலில் சில சமாதானங்களைச் சொல்ல முற்பட்ட பிந்து, சுஜா அதனால் வருத்தம் அடைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன் மன்னிப்பு கேட்டு விட்டார். நல்லது. 

இந்த உரையாடலிலும் கணேஷ் தானொரு கனவான் என்பதை நிரூபித்தார். (அவங்களுக்குப் பிடிக்கலைன்னா ஸாரி சொல்றதுதான் சரி)

சரத்பாபு போன்ற நடிகர்களை ஏன் ஹீரோக்களாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்கிருக்கிற நீண்டகால கேள்வியைப் போலவே கணேஷின் பெரும்பான்மையான நல்லியல்புகளைத் தாண்டி ஏன் அவரைத் தந்திரக்காரராக சிலர் பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. மற்றவர்களை விட இந்த விளையாட்டை இதுவரை சரியாக ஆடுகிறவர் கணேஷ் மட்டுமே.

அடுத்து ரைசாவிடமும் ‘ராகிங்’ குறித்த ஆதங்கத்தை தெரிவிக்க முற்பட்டார் சுஜா. ஆனால் இவர்களின் உரையாடல்களை ஏற்கெனவே கவனித்து விட்டு, சுஜாவின் அழைப்பையும் கவனிக்காமல் கடந்து சென்ற ரைசா, சுஜாவுடன் உரையாடலை நிகழ்த்த விரும்பவில்லை. குற்றமுள்ள நெஞ்சு. ‘இப்படில்லாம் செஞ்சாதான் ஃபேமெண்ட் அதிகம் கிடைக்கும்’ என்று ஒருவரை சீண்டுவதெல்லாம் குரூரமான விளையாட்டு. ஒருவரின் தன்மானத்தை நேரடியாக பாதிக்கும் விஷயம். ஆர்த்தி ஜூலிக்கு முன்பு செய்ததும் இதுவே. 

சுஜாவின் கோபத்தில், கேள்வியில் உள்ள சுயமரியாதையுணர்வை ரைசா புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. ‘எனக்கு அது ஜோக். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை’ என்றார் திமிரான தோரணையுடன். ரைசா… இதுதான் ‘Attitude’. புரிகிறதா?

நாம் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டு செய்யும் விஷயம், எதிர் தரப்பை ஆழமான புண்படுத்தியிருக்கிறது என்று அறிய நேர்ந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்பதுதான் அடிப்படையான நாகரிகம். 

‘நீ எக்கேடும் கெட்டு போ.. என் ஜாலிதான் முக்கியம்’ என்று நினைக்கும் மனோபாவமும் அணுகுமுறையும் இழிவானது. 

இந்த உரையாடலை அடுத்த ஆபாச நகர்வுக்கு எடுத்துச் சென்றவர் காஜல். ‘பதில் சொல்லியே ஆகணும்’னு என் கிட்டல்லாம் வந்து நின்னா முடிஞ்சது கதை’ என்று ரவுடி தோரணையில் ராவடி செய்தது அராஜகம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல காயத்ரியை விடவும் அதிக சர்ச்சைகளை உருவாக்கப் போகிறவர் இவராகத்தான் இருப்பார். இதை ரைசா உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் விரைவில் உணர்வார்கள். பிக்பாஸின் நோக்கமும் அதுவே.

ஒருவர் வெளிப்படையாக இருப்பதற்கும் அநாகரிகமாக நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்று நமக்கான குடிமைச்சமூகம் அமைவதற்கு முன்னால் எத்தனையோ கற்காலத்தனங்களை கைவிட வேண்டியிருந்தது. இன்னமும் அந்தக் காட்டுமிராண்டித்தனங்களை விட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் நாம் நாகரிக உலகத்திற்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. 

**

இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன்.


பழைய போட்டியாளர்களின் தவறுகளை, புதியவர்களின் முன், அவர்களே ஒருவருக்கொருவர் இணைந்து மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். புதியவர்களிடம் ஏதேதோ சமாதானம் சொல்கிறார்கள். இதுவும் தவறான அணுகுமுறை. ஒருவர் தன்னுடைய நெருக்கமான நண்பர் என்பதற்காக அவர் என்ன அநீதியைச் செய்தாலும் அதற்கு உடன்படுவது, நட்பிற்காக அந்தச் சிறுமைகளை மற்றவர்களிடம் மழுப்புவது போன்றவை சரியானதல்ல. 

இது நட்பிற்கான உதவியல்ல. மாறாக நண்பனை இன்னமும் கீழே தள்ளும் நடவடிக்கையே. தம் நட்பிடம் இது குறித்து தனிமையிலாவது எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். போலவே இது குறித்த பஞ்சாயத்தில் நீதியின் பக்கம் நிற்பதே சிறந்த மனோபாவம். 

ஒருவருடன் அதிக காலம் இணைந்து வாழ்வதால் அது சார்ந்து ஏற்படும் பிரியம் வேறு. சரியான சமயத்தில் நீதியின் பக்கம் நிற்பது வேறு. 

**

அகம் தொலைக்காட்சிக்குள் நுழைந்த கமல், வையாபுரியின் பிசிறுகளை தனது பிரத்யேகமான நகைச்சுவையின் மூலம் இடித்துரைத்தது ரகளை. புண்படுத்தாத நகைச்சுவைக்குத்தான் மதிப்பு அதிகம் என்பதை வையாபுரி உணர்வார் என நம்புவோம். 

வேறென்ன, இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வார இறுதியிலும் பாடங்களைக் கற்பதாக கூறுகிறார் கமல். குழந்தைக்கும் ஞானிக்கும் இடையிலான அவரின் தத்தளிப்பின் சிதறல்கள் நமக்குள்ளும் உண்டு. 

எனவே நாமும் இதிலிருந்து பாடங்களைக் கற்க முயல்வோம். ‘வெளியேறும் போதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை காயத்ரிக்குப் புரிந்திருக்கிறது. உங்களுக்கும் புரிந்திருக்கிறதா? என்கிற கமலின் கேள்வி நமக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இருக்குமா?

அடுத்த கட்டுரைக்கு