Published:Updated:

‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..! (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..! (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..! (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

‘விவேகம்’ அஜித் சுஜா... ‘சின்னத்தம்பி’ கவுண்டமணி காஜல்..! (57-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் நாள். எனவே அது சார்ந்த பதற்றங்களும் காய் நகர்த்தல்களும் போட்டியாளர்களுக்குள் நடப்பது வழக்கம்தான். காயத்ரி வெளியேற்றம் உள்ளிட்ட கடந்த வார சர்ச்சைகளின் கொதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை. புது வரவுகளுக்கும் பழைய செலவுகளுக்கும் உள்ள மோதல் வேறு தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கிறது. 

இப்படியொரு அசந்தர்ப்பமான சூழலில் பொழுது விடிந்தபோது ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாட்டு ஒலித்தது. காலையில் ஒலிக்கும் இந்தப் பாட்டை எப்படி புரிந்துகொள்வது? பிக்பாஸ் வீட்டில் இரண்டு கழிவறைகள்தான் உள்ளன. அங்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலுமே காலை நேரத்தில் இங்கு இடம்பிடிக்க எல்லோருக்கும் அவசரம்தான். 

பிந்து – சுஜா – ஹரீஷ் .. என்று மூவர் கூட்டணி நடனமாடியது. நடனத்தில் ஆர்வமுள்ள ஹரீஷிடம் க்ரேஸ்னஸ் தெரிந்தது. சுஜா தேவலை. ஆனால் ‘குத்தி’ ஆடியதில் அட்டகாசமாக வென்றது பிந்து. 

அந்தப் பாடலை எழுதியவர் சிநேகன் என்பதால் அவருக்கான பிரத்யேக கையசைப்பை தந்தார் காஜல். காஜலுக்கு ஸ்பெஷல் க்வாலிட்டி மைக் ஏதாவது தந்தால் நல்லது. அவர் சொல்வதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது. பாடலின் இறுதியில் செமயாக ஒரு விசில் அடித்தார். 

வையாபுரியின் சில ஒழுங்கீனங்கள் மீதான ஐயங்களை வெளிப்படுத்தினார் ரைசா. போகிற போக்கில் வையாபுரி சொல்லும் கமெண்ட்டுகள் விளையாட்டா, வினையா என்பதை ரைசாவால் பிரித்தறிய முடியவில்லை. இருக்கலாம். வையாபுரியின் வயதைக் குறித்து கமல் சொன்ன கமெண்ட் சரி.

நாற்பதுகளில் உள்ளவர்களின் குணாதிசயங்கள் பிரத்யேகமானவை. தங்கள் வயதுக்கான சலுகையை அதிகம் எதிர்பார்ப்பார்கள். வயதை சாதகமாகக் கொண்டு இளம்பெண்களை கிண்டலடிப்பார்கள். ‘வயதானவர்தானே’ என்று விடப்படுவதை அனுமதியாக புரிந்து கொள்வார்கள். எவராவது சரியாக திருப்பிக் கேட்டால் ‘நான் உங்க அப்பா மாதிரி, அண்ணன் மாதிரி’ என்று அப்படியே பம்மி  விடுவார்கள். 

ஓர் அந்நிய இளைஞனின் பக்கத்தில் அமர்ந்து கூட ஒரு பெண்ணால் நிம்மதியாக பிரயாணம் செய்ய முடியும். ஆனால், வயதான கேஸ்களை நம்ப முடியாது’ என்று பொதுவாக சொல்லப்படுவதில் பெரும்பாலும் உண்மையிருக்கிறது. தன் வயதுக்கேற்ற நேர்மையுடனும் முதிர்ச்சியுடனும் நடந்துகொள்பவர்கள் குறைந்த சதவிகிதமே. 

ரைசாவைப் பற்றி சிநேகனும், சிநேகனைப் பற்றி ரைசாவும் பரஸ்பரம் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். விடலை வயதுள்ள ஒருவன் கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு கணத்தில்தான் வாலிபப்பருவத்தில் சென்று விழுகிறான். அந்த தருணத்தில்தான் தன்னை பொறுப்பானவனாக உணர்கிறான். கண்ணுக்குத் தெரியாமல் இந்த மாற்றம் நிகழ்வதைப் போலவே ஒரு நெருக்கமான நட்பும் எப்போது பகையாகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. 

வையாபுரி மறுபடியும் தன் அனத்தலை துவங்கிவிட்டார். மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். கமல் சொல்றதைக் கேட்டிருக்கணும். வேலை செய்ய சோம்பேறித்தனம் படக்கூடாது என்பதெல்லாம் அவருடைய புலம்பல்.

**
சுஜா அறையைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டில் அப்படியொரு காட்சியை இதுவரை பார்த்த நினைவில்லை. ‘முடியலைன்னா விட்டுடுங்க’ என்றார் பிந்து அனுதாபத்துடன். ‘பரவாயில்லை. முடிச்சிடறேன்’ என்றார் சுஜா. (பிறகு பிக்பாஸிடம் பேசும் போது, ‘ஒரு வேலையை துவங்கி விட்டால் செய்து விட்டுத்தான் முடிப்பேன்’ என்றார்). விவேகம் டிரைய்லரைப் பார்த்திருப்பாரோ.. Never Ever Give up. 

“முதுகு வலிக்குதுன்னா.. விட்டுடுங்கன்னு எத்தனையோ தடவை சொல்றேன். கேட்கலைன்னா என்ன பண்ண முடியும்?” என்றார் ரைசா. வையாபுரியைப் போலவே பணி செய்பவர்களை கெடுப்பவர்கள்தான் ஒரு குழுவின் பின்னடைவிற்கு அதிகம் காரணமாக இருப்பார்கள். இது போன்று உடலுழைப்பு சார்ந்த பல பணிகளை நாம் இன்று கை விட்டு விட்டதால்தான் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். 

பிந்துவின் உத்தரவின் பேரில் வையாபுரி காமிராவின் முன்பு வந்து சில மசாலா பொருள்களை ‘ஆர்டர்’ செய்தார். ஒரு பார்பி பொம்மை பஞ்ச் டயலாக் பேச முயன்றால் எப்படி ரணகளமாக இருக்குமோ அப்படியொரு தோரணையுடன் பின்னணியில் தீவிரமாகப் பேச முயன்றார் பிந்து. ஆனால் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஆட்டோ மாதிரி அவருடைய தமிழ் தட்டுத் தடுமாறியது. அந்தத் தமிழும் அழகுதான் என்போர் சான்றோர். 

உண்ணாவிரதத்துக்கு தமிழில் என்ன? Hunger strike என்றதை வையாபுரி, ஹாங்கர் ஸ்ட்ரைக் என்றார். இரண்டு பேருமே ஹாங்கரில் மாட்டி வைக்கக்கூடிய எடையுடன்தான் இருக்கிறார்கள். சிறந்த நகைச்சுவைக் கூட்டணி. இது போன்ற நகைச்சுவையைத்தான் வையாபுரியிடமிருந்து எதிர்பார்ப்பது. 


**

காஜல் – பிந்து – சுஜா என்று மூவர் குழு பேசிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியைப் பார்த்தற்கும் உள்ளே வந்த பிறகான அனுபவத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் பற்றி. குறிப்பாக காயத்ரி எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி.

காஜலும் காயத்ரியும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவர்கள். எனவே அவர்களின் அலைவரிசை ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. பிக்பாஸின் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு காயத்ரியின் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் பிடிக்காமல் போன போது, காஜல் போன்றவர்களுக்கு மட்டும் காயத்ரியைப் பிடித்து விடுகிறது. 

‘சின்னதம்பி’ நகைச்சுவையின் கவுண்டமணி மாதிரி ‘வில்லன்’ வரும் காட்சியில் கைத்தட்டும் அபூர்வமானவர்கள். ‘அவன் வரும் போதுதான் கதைல ஒரு கசமுசால்லாம் நடக்குது’ என்று அதற்கொரு தர்க்கம் சொல்கிறார்கள். 

யதார்த்தத்தில் ஹீரோ வில்லன் என்கிற துல்லியமான பாகுபாடு எல்லாம் இல்லை என்றாலும் தீமையான குணங்களை அதிகம் வெளிப்படுத்துகிறவர்களைக் கண்டு மனம் கூசுவதின் மூலம்தான் நல்லியல்புகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட முடியும். ஆனால் வில்லன்கள்தான் இப்போது ஹீரோக்கள். ஒருவகையில் அறநோக்கில் நம்முடைய கலாசார வீழ்ச்சியைத்தான் இது காட்டுகிறது. இந்த வகையில் நமக்கு ஒரு எம்.ஜி.ஆர். எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அதாவது திரையில் சித்தரிக்கப்படும் ‘எம்.ஜி.ஆர்’தனங்கள். 

“யாராவது சீண்டினாத்தான் காயத்ரி கோபப்படுவாங்க.. அவங்களை மொக்கை பண்ணினா டென்ஷன் ஆயிடுவாங்க. ரைசா சிரிச்ச மாதிரி. மாஸ்டருக்குண்டான மரியாதையை அவர் எதிர்பார்க்கத்தானே செய்வார், இல்லையா?” என்று காயத்ரி பேரவையின் அடுத்த தளபதியாக மாறிக் கொண்டிருக்கிறார் காஜல். 

தங்களின் அந்தஸ்துகளை வெளியில் வைத்து விட்டு சமநோக்கிலான தகுதியுடன் இருப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை என்பது போட்டியாளர்களுக்கு பல நேரங்களில் மறந்து விடுகிறது. ஒரு பாவனைக்காக கூட தங்களின் அந்தஸ்துகளை கீழே வைக்க முடியவில்லையென்றால், அந்த போலி கீரீடம்தான் எத்தனை சுமையானது!

விடைபெறும் போது தன்னிடம் காயத்ரி பேசியது குறித்து சுஜாவிற்கு வருத்தம். ‘55 நாள் இருந்துட்டேன். இது ‘என்’ ஃபேமிலி. கெஞ்சிக் கேட்டுக்கறேன். டிரிக்கர் பண்ணி எதையும் கெடுத்துடாதீங்க’ என்று சொல்லி விட்டுச் சென்றார் காயத்ரி. 

நல்ல உபதேசம்தான். ஆனால் இதை தாம் சொல்வதற்கான அருகதை எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை காயத்ரி சற்று சிந்தித்துப் பார்த்திருக்கலாம். மட்டுமல்லாமல் நியாயமான விஷயத்திற்காகத்தான் சுஜா வாதாடினார். மேலே நின்று கொண்டு உபதேசம் செய்வதுதான் எளிமையானது. பின்பற்றுவதுதான் கடினம். பிரிவுபச்சாரம் நடக்கும் சமயத்தில் தன்மீது விழும் அனுதாப வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் அதிகமாக நடந்து கொள்வார்கள். காயத்ரி செய்ததும் அதுதான். 

**

இந்த வார நாமினேஷன் பட்டியல் மிகவும் சுருங்கி விட்டதைப் பற்றி சிநேகனும் ஹரீஷூம் பேசிக் கொண்டார்கள். ‘என்ன காரணம்தான் சொல்லுவது’ என்று சிநேகன் அலுத்துக் கொண்டார். சங்கடமான விஷயம்தான். 

புது வரவுகளுக்குள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடந்தது. மறுபடியும் அதேதான். உடல்பலத்தை வைத்து தலைவரை தேர்ந்தெடுப்பது முறையானதல்ல. பெண்கள் தோற்றுப் போகும் வாய்ப்பு அதிகம். 

போட்டியில் வென்று தலைவரானார் ஹரீஷ். ‘வந்தவுடனேயே தலைவரா” என்று விளையாட்டும் ஆதங்கமுமாக கிண்டலடித்தார் பிந்து. வாரிசு அரசியல் கொடிகட்டிப் பறக்கும் சூழலில் இதெல்லாம் சாதாரணமப்பா…

போட்டியில் வென்று வந்தாலும் தலைவருக்கான தோரணையும்  அணுகுமுறையும் ஹரீஷிடம் இருப்பது போல் படுகிறது. முதிர்ச்சியாகவே இதுவரை நடந்து கொள்கிறார். 

**

புது வரவான சுஜாவால் இனி அதிக பிரச்சினைகள் வரக்கூடும் என்று கணிக்கிறார் சிநேகன். ‘ஓவியா மாதிரி நடிக்க டிரை பண்றா. அது ரத்தத்துலயே இருக்கணும். நடிச்சால்லாம் வராது’ என்கிற சிநேகனின் அவதானிப்பு சரிதான் என்று தோன்றுகிறது. சுஜா மட்டுமல்ல, இதர பெண் போட்டியாளர்கள் கூட சமயங்களில் இப்படி நகலெடுக்க முயல்கிறார்கள்.

தலைவி பொறுப்பை சோகத்துடன் ஒப்படைத்தார் பிந்து. விளையாட்டான அழுகை. ஜூலியின் சாயலையும் பிந்துவிடம் அவ்வப்போது காண முடிகிறது. மிக ஆச்சர்யகரமாக கணேஷ் கூட நகைச்சுவை செய்ய முயன்றார். பிக்பாஸில் இன்னும் என்னென்ன விபரீதங்கள் காத்துக் கொண்டிருக்கிறதோ?

கணேஷின் ‘லவ்’ ஸ்டோரி பற்றிய உரையாடலும் ஆச்சரியகரமாக ஓடியது. இதுவரை யோகா நிலையில் மட்டுமே கணேஷை அதிகம் பார்த்திருக்கிறோம். அவர் சாவகாசமாக அமர்ந்து பேசும் காட்சிகள் அதிகம் இல்லை. இப்போதுதான் பார்க்கிறோம். விளையாட்டின் முக்கியமான போட்டியாளர்கள் இப்போது விலகி விட்டதால், எதையாவது இட்டு நிரப்புவதற்காக கணேஷின் ஃபுட்டேஜ்களை இணைக்கிறார்களா, என்னவோ. சினிமா இடைவேளையில் போடப்படும் பாடல்களைப் போல. 

மனிதர் வெட்கப்பட்டுக் கொண்டே தன் ஃபிளாஷ்பேக்கை சொன்னது அத்தனை அழகு. 

**

நாமினேஷன் படலம் துவங்கியது. பட்டியல் சுருங்கியிருந்தாலும் இந்த முறைதான் காரணங்கள் துல்லியமாக வெளிப்பட்டன என்று நினைக்கிறேன். 

வயதான காரணத்தினால் வையாபுரி பணிகளைச் செய்யாமலிருப்பது பற்றி எவருக்கும் புகாரில்லை. ஆனால் தம்முடைய புலம்பலின் மூலம் மற்றவர்களின் பணிகளையும் பாதிக்கிறார் என்பது சரியான புகாரே. ‘ஆதிக்க மனோபாவத்துடன் செயல்படுகிறார்’ என்பது சிநேகனின் மீதுள்ள புகார். (ரைசா – ஆரவ் சொன்னது) 

இருக்கலாம். ‘இவங்களை சமாளிக்கிறது எனக்கு ரொம்ப ஈசி’ என்று பிற்பாடு சிநேகன் சொன்னார். காயத்ரி இல்லாததால் வந்த துணிச்சலும் நம்பிக்கையும். ஆச்சரியகரமாக கணேஷின் மீதும் எதிர்மறைப் புள்ளிகள் விழுந்தன. என்றாலும் அவர் தப்பித்தார்.

‘ரைசா என்னை ராகிங் செய்தது கூட பரவாயில்லை. ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்கக் கூட தயாரில்லை என்பதுதான் அதிக வேதனையைத் தருகிறது’ என்கிற சுஜாவின் காரணம் சுயமரியாதை நோக்கில் நியாயமானதாகப் படுகிறது. 

ஆக.. இறுதியில் ரைசா, சிநேகன், வையாபுரி ஆகியோர்கள் இறுதியாக நாமினேஷனுக்கு வந்திருக்கிறார்கள். இதில் வாக்காளப் பெருமக்கள் எவரைத் தேர்ந்தெடுத்து வெளியே அனுப்ப முடிவு செய்யப் போகிறார்கள் என்பதை யூகிப்பது சிரமமாக இல்லை. ‘க்ளூ’ பாணியில் சொன்னால் அவரது பெயர் ‘ரை’யில் துவங்கி ‘சா’ –வில் முடியும். இடையில் எந்த வார்த்தையும் வராது. 

*

‘வெற்றி நிச்சயம்’ என்றொரு task. “இந்த விளையாட்டில் தாம் உறுதியாக வெல்வதற்கான காரணங்களை நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும்”

‘என் வீட்டையே நான்தான் வழிநடத்துகிறேன். எனவே இங்கும் நான்தான் வெல்வேன்’ என்கிற சுஜாவின் முழக்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உணர்வுவயப்படுகிறவர்கள் இதில் வெல்வது சிரமமானது என்று தோன்றுகிறது. 

இந்த வரிசையில் ஹரீஷ் முன்வைத்த காரணங்கள்தான் அழுத்தமாக இருந்தன. உறுதியும் நம்பிக்கையும் அவரது தோரணையில் தென்பட்டது. 

‘இந்தப் போட்டிக்குப் பிறகு வெளியில் சென்று அதிகம் ஜொலிக்கப் போகிறவர் எவர்?’ என்றொரு task. இந்த நோக்கில் தங்க கோப்பை உள்ளிட்டு எல்லா கோப்பைகளையும் ஓவியா ஏற்கெனவே வென்று விட்ட பிறகு இது போன்ற கேள்விகள் எதற்கு பிக்பாஸ்? 

என்றாலும் இப்போது உள்ளவர்களில் எவர் அதிகம் ஜொலிக்கப் போகிறார் என்பதை யூகிப்பது சிரமம்தான். அவரவர்களுக்கான சம்பிரதாயமான காரணங்களைச் சொன்னார்கள். போட்டியாளர்களுக்குள் கருத்துவேறுபாடுகளும் முட்டல்களும் ஏற்பட்டால்தானே அது வருங்காலச் சண்டைகளுக்கு உரமாகும்! பிக்பாஸ் திருவிளையாடல்கள். 

**

‘எப்படிம்மா இருக்கே சுஜா?’ என்று விசாரிக்கத் துவங்கிய பிக்பாஸ் பிறகு அதற்காக நொந்து போயிருப்பார் என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு தன் கதையை இழுத்துச் சொன்னார் சுஜா. நீளமாக அமைந்து விட்டாலும் அவர் சொன்னதில் நிறைய பரிதாபமும் முக்கியமான விஷயங்களும் இருந்தன. 

ஏற்கெனவே குறிப்பிட்டபடி திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க முயன்று சினிமாவின் பரமபத ஆட்ட விதிகளின் படி சற்று ஏறி நிறைய சறுக்கி கீழே விழும் பல்லாயிரக்கணக்கானவர்களின் ஏக்கமே சுஜாவின் பெருமூச்சிலும் விழுகிறது. நாயகியாக ஆக முயன்று சந்தர்ப்பவசத்தால் பாடலுக்கு ஆடும் நடிகையாகி அதுவே தொடர்ந்து ஒரு கணத்தில் அதிலிருந்து பிடிவாதமாக தன்னை நிறுத்திக் கொண்டு  தம்முடைய ‘நடிப்பு’ வெளிப்படும் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் சுஜாவின் நிலைமை பரிதாபம். (‘கிடாரி’ திரைப்படத்தில் இவரது நடிப்பு நன்றாக அமைந்திருந்தது)

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சுஜாவின் துயரத்தைப் போக்குவார்கள் என நம்புவோம். 

‘ஐட்டம் டான்சர்’ –ன்றது சொல்றது தப்பு. பொருள்களைத்தானே ‘ஐட்டம்’னு சொல்லுவாங்க.. வீட்டுக்கு வர்ற விருந்தினரை ‘Guest’ன்னு சொல்லுவீங்களா.. ஐட்டம் ‘னு சொல்லுவீங்களா என்று அவர் கேட்பது மிக முக்கியமான விஷயம். சுயமரியாதை சார்ந்தது. 

மேற்கத்திய நாடுகளில் நீலப்படங்களில் நடிக்கிறவர்களுக்கு கூட சமூக அந்தஸ்தும் மதிப்பும் உள்ளது. தாங்கள் செய்வதை ஒரு தொழிலாகவே அவர்களும் பார்க்கிறார்கள். சமூகமும். ஆனால் பாலியல் ரீதியிலான மனப்புழுக்கம் அதிகமுள்ள இந்தியா போன்ற தேசங்களில் ‘பாடல்களுக்கு நடனமாடும் நடிகைகளை ஒருபுறம் ஆவலாக வெறித்துப் பார்த்து விட்டு பின்பு அவர்களை கீழ்தரமாகவும் கொச்சையாகவும் நினைக்கவோ கிண்டலடிக்கவோ ஆண்கள் தயங்குவதில்லை. அவர்களுக்கான சமூக மதிப்பும் இல்லை. இது சார்ந்த விரக்தியினால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் குற்றவுணர்வுடனும் வருத்தத்துடனும் ஒதுங்கி வாழ நேர்கிறது. 

‘எதையும் சீக்கிரம் நம்பிடுவேன். அதுதான் என் பலவீனம்’ என்றார் சுஜா. ‘எனக்கு அழ வெச்சுதான் பழக்கம்’ என்று முதலில் கெத்து காட்டியவர் இப்போது அழுது கொண்டேயிருப்பது சோகம். உணர்வுவயப்படுதலை கைவிட்டு நம்பிக்கையுடன் இயங்கினால் வெற்றியாளர் வரிசையில் சுஜா இணையக்கூடும். தன் துக்கத்தின் வெம்மை இன்னமும் தணியாமல் கலங்கிக் கொண்டே தனிமையில் சுஜா உணவு அருந்திய காட்சியும், அவருக்காக வைக்கப்பட்ட அண்மைக் கோணங்களும் துயரச்சாயல் கொண்டது. 

‘இந்த வீட்டில் உண்மையாக இருப்பவராக வையாபுரியைப் பார்க்கிறேன்’ என்றார் ஹரீஷ். இருக்கலாம். வையாபுரிக்கு அந்த வீட்டில் நீடிப்பது நிச்சயம் பிடிக்கவில்லை. எப்போது வெளியே போகலாம் என்று தவிக்கிறார். ஆனால் வீட்டிலிருந்து வந்த குறிப்பு காரணமாக எப்படியாவது தாக்குப்பிடித்து விட முடியுமா என்றும் பார்க்கிறார். இது சார்ந்த தத்தளிப்பு அவரிடம் நிறையத் தெரிகிறது. பினாத்திக் கொண்டேயிருக்கிறார். ஆனால் இந்த உணர்வுகள் சார்ந்து உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். மறைத்துக் கொள்ளவில்லை. நகைச்சுவையுணர்வு உள்ளவர்களுக்கு உள்ள பிரச்னையிது. சிரிப்புக்கு மறுபுறம் அதிகம் உணர்வுவயப்படுகிறவர்களாக இருப்பார்கள். 

**

என் வாழ்க்கையை பெரும்பாலும் தனிமையிலேயே கழித்திருப்பதால் தனிமை எப்போதும் எனக்கு சுமையாக இருந்ததில்லை. கடைசியாக எப்போது அழுதேன் என்பதே நினைவில் இல்லை. நண்பரின் மரணத்திற்காக சில ஆண்டுகள் முன்பு அழுதேன். இந்த வீட்டுக்கு வந்த பிறகு அழுததே இல்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது என்ற  ஆரவ், ‘சக்தியின் பிரிவின் போது தன்னிச்சையாக அழுதேன்’ என்றார். 

ஓவியாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட ஆரவ்விடமிருந்து வெளிவரவில்லை. போலித்தனமாக அவர் சொல்லாதது குறித்து மகிழ்ச்சி. என்றாலும் பரவாயில்லை ஆரவ். ஓவியா உளைச்சலில் இருந்த போது நீங்கள் ஒருவர் கலங்கவில்லையென்றாலும் பரவாயில்லை. 

அப்போது ஓவியாவிற்காக மனம் கலங்கி கோடிக்கணக்கானவர்கள் துயரப்பட்டார்கள்; பிரார்த்தனை செய்தார்கள் என்பதை வெளியே வந்த பிறகு அறிந்து கொள்வீர்கள். 

‘நாளை’ என்ற பகுதி காட்டப்படவில்லை. பிக்பாஸு சஸ்பென்ஸ் வெக்கிறாராம்.

அடுத்த கட்டுரைக்கு