தொடர்கள்
Published:Updated:

தடங்கலுக்கு வருந்துகிறோம்!

 தடங்கலுக்கு வருந்துகிறோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தடங்கலுக்கு வருந்துகிறோம்!

அந்தக்காலம் வசந்த அண்ட் கோ காலமா என்பது தெரியாது. நிச்சயம், வசந்த காலம்!

ந்தத் தொலைபேசிகளின் தொல்லைகள் இல்லாத தொலைக்காட்சிகளின் காலம், தூர்தர்ஷனின் காலம். தனது 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நம் தூர்தர்ஷனைப் பற்றிய அந்தநாள் ஞாபகங்களை நினைவுகூர்வோமா நண்பர்களே, நண்பிகளே... வாருங்கள் டிடி லோகோவைப் பின்னோக்கி சுற்றுவோம்...

 தடங்கலுக்கு வருந்துகிறோம்!

டிடி நேஷனலோ, டிடி பொதிகையோ, டிடி மெட்ரோவோ எந்தச் சேனலை நாம் பார்க்கவேண்டுமென சேனல்தான் முடிவு செய்யும். மெட்ரோவில் நாம் பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் எல்லாம், கனவில் வந்து `காபி ஆறுது எந்திரிடா’ என எழுப்பிவிட்டுப்போகும் அளவுக்கு வாழ்க்கையோடு காபியும் சர்க்கரையுமாகக் கலந்திருந்தது. `ஸ்ரீ’ கிருஷ்ணா’ நாடகம் பார்த்துவிட்டு மாமா, சித்தப்பா எல்லோரையும் “மாமா அவர்களே”, “சித்தப்பா அவர்களே” எனக் கூப்பிட்டுக்கொண்டிருந்த கிறுக்குத்தனமெல்லாம் கண்முன்னே வந்துபோகிறது. இதுபோக `ஜெய் அனுமான்’, `மகாபாரதம்’ வேறு. சாமி நாடகங்கள் ஓடும்போது, டிவியை நோக்கிக் கால்நீட்டி அமர்ந்து கரண்டியால் அடி வாங்கிய சம்பவமெல்லாம் இருக்கிறது. `ஓம் நமசிவாயா’ நாடகத்தில் வரும் நல்ல பாம்பு, உண்மையான பாம்பா இல்லை வெறும் டூப்பா என ஆராய்ந்ததிலேயே நாடகத்தின் ஹீரோயினைக் கவனிக்காமல்போனது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன். அந்த ஹீரோயின் வேறு யாரும் அல்ல, நம் `மெட்டி ஒலி’ சரோ...

 தடங்கலுக்கு வருந்துகிறோம்!

அந்தக்காலத்துத் துப்பறிவாளன்கள் எல்லோரும் கெத்தறிவாளன்களாய் இருந்தார்கள். டோரோ புஜ்ஜிக்கு முன்னரே மனிதன் - குரங்கு காம்பினேஷேனில் கலக்கியது `ராஜா அவுர் ரான்சோ’தானே. டிடெக்டிவ் ராஜாவும் குரங்கு ரான்சோவும் சேர்ந்து செய்யும் குரங்குச்சேட்டைகள் தாறுமாறு தக்காளிச்சோறு! “அட நம்ம ரான்சோ” என ஏதோவொரு குரங்கிடம் கைக்குலுக்கப்போய் இடுப்பில் கடி வாங்கிய வீரத்தழும்பு இன்னும் இருக்கிறது. பிறகுதான் புரிந்தது, ரான்சோ ஒரு குரங்குதான். எல்லாக் குரங்கும் ரான்சோ அல்ல. துப்பறிவாளர்களிலேயே மாஸ் பீஸ் என்றால் ‘சுராக்’ இன்ஸ்பெக்டர் பரத்தான். இப்படி, டிடெக்டிவ் சீரியல்களாகப் பார்த்துவிட்டு, பள்ளியில் திருட்டுப்போன பென்சில், ஷார்ப்பனர்களைத் துப்புதுலக்கிக் கண்டுபிடிக்கிறேன் எனச் செய்த வேலைகளை நினைக்கும்போது, சிப்புச்சிப்பா வருது.

துப்பறிவாளன்கள் ஒருபக்கம் என்றால் முகமூடிகள் இன்னொரு பக்கம். சக்திமான், ஆரியமான், கேப்டன் வ்யூம், சூப்பர் ஹ்யூமன் சாமுராய் போன்றோரை மறக்கமுடியுமா? இந்தியக் குழந்தைகளுக்கு ஸாரி சொல்லும் பழக்கத்தை ஞாயிற்றுக்கிழமை கறிச்சோறோடு சேர்த்து ஊட்டிய உன்னதர் சக்திமான் முகேஷ் கண்ணா. அவரே ஸ்டார் வார்ஸ் படங்களை அப்படியே ஆட்டையைப்போட்டு ஆரியமான் எனப் புதுசீரியல் எடுக்க, ஆக்கி வைத்த கறிச்சோறெல்லாம் ஆறிப்போனது. அந்த `ஸாரி’யை `ஸ்டார் வார்ஸ்’ க்ரியேட்டர்களுக்கு இப்பவாச்சும் சொல்லிடுங்க முகேஷ் கண்ணா. `பையா’ படத்தில் கார்த்தியிடம் அல்லையில் குத்து வாங்கிக் குடம் குடமாய் ரத்தம் வடிக்கும் மிலிந்த் சோமனை நினைத்து, “என்னடா நம்ம கேப்டன் வ்யூமுக்கு வந்த சோதனை” என்றெல்லாம் கண் கலங்கியிருக்கிறேன். ஸாரி, மிலிந்த் சோமன்.

 தடங்கலுக்கு வருந்துகிறோம்!

`சக்திமானி’ல் வரும் கீதா விஸ்வாஸ், `சுரபி’யைத் தொகுத்து வழங்கும் ரேணுகா சஹானே, `சாந்தி’யாக வந்த மந்த்ரா பேடி போன்றோர்தான் நம் பால்யகாலத்து க்ரஷ்ஷாக இருந்திருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரிகிறது. காரணம், க்ரஷ் எனும் வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்ததே இப்போதுதான். `மோக்லி - தி ஜங்கிள் புக்’, `டக் டேல்ஸ்’, `சிப் அண்ட் டேல்ஸ்’, `ஹி மேன் : மாஸ்டர் ஆஃப் தி யுனிவர்ஸ்’ எல்லாம் பார்த்துவிட்டு மொட்டைமாடியில் காய்கறி வெட்டும் கத்தியோடு நின்று அலறிக்கொண்டிருந்த நமக்கு, க்ரஷ்தான் ஒரு கேடு. பிரமாண்டமான ‘சந்திரகாந்தா’, ஆயிரத்து ஓர் இரவு அரபுக்கதைகள் சொல்லும் `ஆலிஃப் லைலா’, அழுக்கான, அசலான மனிதர்களை முதன்முறையாகத் திரையில் காண்பித்த `மால்குடி டேஸ்’, மறக்கவே முடியாத `ஜுனூன்’ என எல்லா நாடகங்களையும் நாம் விட்டுவைக்கவில்லை. ஏன், சம்பா நெல் முப்போக சாகுபடி செய்வதெப்படி எனச் சொல்லிக்கொடுத்த `வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியைக்கூட ஒரே சிட்டிங்கில் பார்த்த பயலுகதானே நாம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்ட எண்ணிக்கையைவிட `ரோஜா’ படம் பார்த்த எண்ணிக்கை அதிகம். `நம்மவர்’, `செங்கோட்டை’, `ஜெய்ஹிந்த்’ என ஒரே படத்தை அடிக்கடி எடுத்துப்போடுவதில் விஜய் டிவிக்கெல்லாம் முன்னோடி டிடி பொதிகை. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் என்னவென்று நினைவிலேயே இல்லை. ஏன், தீபாவளிக்குச் சிறப்பு நிகழ்ச்சிகள் போடுவார்களா என்பதே நினைவில் இல்லை. எப்போதாவது இந்தியா விளையாடிய கிரிக்கெட் மேட்சின் ஹைலைட்ஸ் போடுவார்கள். “இதுல மட்டும் நல்லா அடிக்குறாய்ங்க, நேர்ல உருட்டுறாய்ங்க” எனத் திட்டித்தீர்க்கும் என் அப்பத்தாவின் அம்மா. `மிலே சுர் மேரா தும்ஹாரா’ பாடலில் பாலமுரளி கிருஷ்ணாவைப் பார்த்ததும் மனம் குதூகலமாகிவிடும். அதற்கு காரணம், அவர் தமிழில் பாடுவார் என்பதைவிட, அவருக்குப் பிறகு கமலைக் காட்டுவார்கள் என்பதுதான். வாஷிங் பவுடர் நிர்மா, உஜாலா சொட்டு நீலம், வுட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர் விளம்பரங்கள் எல்லாம் நினைவில் இருக்கிறதா மக்கா. அதிலும், `லிரில்’ விளம்பரத்தில் வரும் ப்ரீத்தி ஜிந்தாவை மறக்கமுடியுமா?

ப்ரீத்தி ஜிந்தாவையே மறக்கமுடியுவில்லை. தூர்தர்ஷனை எப்படி மறக்கமுடியும்! இந்த இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட தடங்கலுக்கு நாங்கள் நிச்சயம் வருந்துகிறோம். தடங்கல்களைத் தகர்த்தெறிந்து பழைய பன்னீர் செல்வமாய் மீண்டும் வரணும். ஆங்..!