Published:Updated:

AKS - 43 | பெண் தன் குடும்பத்தினர் மீது நம்பிக்கை இருந்தால் பொய் சொல்வாளா?!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (20-10-2021) வெளியான 43-வது எபிசோட் எப்படி இருந்தது?!

Published:Updated:

AKS - 43 | பெண் தன் குடும்பத்தினர் மீது நம்பிக்கை இருந்தால் பொய் சொல்வாளா?!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' (AKS) டிஜிட்டல் சீரிஸ் தினமும் இரவு 8.30 மணிக்கு யூடியூபில் ஒளிபரப்பாகிறது. இதில் நேற்று (20-10-2021) வெளியான 43-வது எபிசோட் எப்படி இருந்தது?!

கவிதாவும் ராஜேஷும் திரையரங்கின் வாசலில் பாண்டியனுக்காகக் காத்திருக்கிறார்கள். கவிதா, பாண்டியன் வரவில்லை என்கிற பரிதவிப்பில் இருக்கிறாள். ராஜேஷிற்கு பாண்டியன் வந்துவிடக் கூடாது என்கிற பரிதவிப்பு. வெகு நேரமாகியும் அவன் வராததால் கவிதா, பாண்டியனுக்கு கால் செய்கிறாள். பாண்டியன் கவிதாவின் அழைப்பை ஏற்கவில்லை. தான் ஆபீஸ் ப்ராஜெக்டில் பிஸியாக இருப்பதால் வர முடியாது என பாண்டியன் கவிதாவிற்கு மெசேஜ் அனுப்புகிறான். ”பாண்டியன் முன்பு ஒருமுறை செய்தது போல ஏற்கெனவே வந்துவிட்டு நம்மிடம் ஏமாற்றுவானாக இருக்கும்” என்று ராஜேஷிடம் கவிதா சமாதானம் சொல்கிறாள்.

சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு இருவரும் திரையரங்கின் உள்ளே சென்று உட்காருகிறார்கள். திரையரங்கின் உள்ளேயும் கவிதா, பாண்டியனை தேடிக் கொண்டிருக்கிறாள்.
AKS - 43
AKS - 43

நட்புக்கும், நண்பனுக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் கவிதா ஒரு முறையாவது ராஜேஷின் காதலை புரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். ஏற்பாட்டுத் திருமணங்களில் பெரும்பாலும் பெண்ணிடம் மாப்பிள்ளையை காட்டி சம்மதம் கேட்பார்கள். அந்த பெண் சம்மதம் கொடுத்தால் போதும். மற்றபடி பெண்ணுக்குத் திருமணம் சார்ந்த எந்த வேலையும் இருக்காது. அதுபோல தான் கவிதா ராஜேஷிடம் சம்மதம் கொடுத்ததோடு சரி. காதல், புரிதல் எல்லாமே தானாகவே நடக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

ராஜேஷின் அம்மா திருமணத்தைப் பற்றி பேசியபோது கவிதா ராஜேஷிடம் கோபம் கொண்டாள். தனக்கு ராஜேஷை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை என்று சொன்னாள். இப்போதே அவசரப்பட்டு திருமணத்தைப் பற்றி பேசுவது தன்னை நிர்பந்திப்பது போல என்று கூறினாள். ராஜேஷ் அவளது பேச்சை மதித்து திருமணத்தைப் பற்றி பேசுவதில்லை. இருவரும் பேசிப் புரிந்து கொள்ளலாம் என்று அவள் சொல்வதற்கு எல்லாம் ஒப்புதல் அளிக்கிறான்.

அலுவல் நேரத்தில் அலுவலகத்தில் பேசுவது தவறு என்று கவிதா சொன்னதால் ராஜேஷ் தனியாக வெளியில் சென்று பேசலாம் என்று கவிதாவை பலமுறை வெளியில் அழைத்து செல்கிறான். ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் பாண்டியனையும் கவிதா தவறாமல் அழைத்து வருகிறாள்.

இதுவரை இருவரும் வெளியே சென்ற எல்லா நேரமும் ராஜேஷ் மன வருத்தத்துடனேயே திரும்பி இருக்கிறான். பல சமயங்களில் அவனுக்கு கவிதா மற்றும் பாண்டியனுக்கு இடையில் இருக்கும் நட்பு எரிச்சலாகக் கூட இருந்திருக்கிறது. அவன் ஒரு முற்போக்காளன் என்பதால் அவர்களைப் பற்றி தவறாக நினைப்பதில்லை. ஆனால் தன்னுடைய ’பிரைவசி’ பாதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபப்படுகிறான்.

”இதுதான் முதல் முறை பாண்டியன் இல்லாமல் திரையரங்கிற்கு வந்திருப்பது” என்று கவிதா கூறுகிறாள். ராஜேஷிடம் கவிதா சிரித்துப் பேசும் ஓரிரு நிமிடங்களில் கூட பாண்டியனை பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறாள். கவிதாவிற்குத் தங்களுடன் பாண்டியன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்பதை விட தான் பாண்டியனை விட்டு வந்தால் அவன் தவறாக நினைப்பான் என்கிற குற்ற உணர்ச்சியே அதிகமாக இருக்கிறது.

AKS - 43
AKS - 43

திரையரங்கின் உள்ளே சென்றதில் இருந்து கவிதா ஒரு நிமிடம் கூட ராஜேஷை பற்றி எண்ணவில்லை. ஒரு கட்டத்தில் தனது இருக்கையை விட்டு எழுந்து பாண்டியன் இருக்கிறானா என்று பார்க்க திரையரங்கின் வெளியே சென்று விடுகிறாள். இதற்கு மேலும் ராஜேஷ் பொறுமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று நாமே முடிவுக்கு வருமளவு கவிதா ராஜேஷை சோதிக்கிறாள்.

கவிதா தன்னைப் பற்றியும், தனது குற்ற உணர்ச்சிகள் பற்றியும் மட்டுமே சிந்திப்பவளாக இருக்கிறாள். கவிதா செய்யும் காரியத்தை பார்த்து பயந்த ராஜேஷ், பாண்டியனுக்கு கால் செய்து பாண்டியன் வர மாட்டான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். பாண்டியன், “நான் வரவில்லை ப்ரோ” என்று சொல்லும்போது நமக்கும் சங்கடமாக இருந்தாலும், ராஜேஷின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. எல்லா ஏற்பாட்டையும் செய்துவிட்டு மீண்டும் ராஜேஷ் திரையரங்கினுள் நுழையும்போது கவிதா எழுந்து வெளியே சென்று விடுகிறாள்.

புனிதாவின் வீட்டில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்க, சுந்தர் சென்னை வந்ததில் இருந்து நடக்கும் பிரச்னைகள் பற்றி பேசுகிறார்கள். காயத்ரியின் விசயத்தில் அவளை அங்கே தங்க வைத்து இந்தப் பிரச்னையை தொடங்கி வைத்தது தான் தான் என புனிதா வருத்தப்படுகிறாள். சுந்தரை ஒவ்வொரு நாளும் சமாளிப்பது மிக சிரமமாக இருப்பதால் புனிதா ஆண்கள் மூவரையும் வெளியில் சென்று ஒரு பத்து நாள்கள் தங்குமாறு கேட்கிறாள். பாண்டியனும், பரத்தும் சம்மதம் தெரிவித்து, காயத்ரிக்காகச் செய்கிறோம் என்கிறார்கள். சிவா அமைதியாக இருக்கிறான். காயத்ரியை பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

AKS - 43
AKS - 43

ஒரு பிரச்னை என்றால் அதிலிருந்து மீட்க அல்லது உறுதுணையாக உடன் நிற்கவே மனிதர்கள் குடும்பமாக வாழ்வது. ஆனால் பெண்களுக்கு வெளியில் பிரச்னை என்றால் வீட்டில் சொல்ல பயந்து கொண்டு அடுத்தவரிடம் உதவி கேட்பது அல்லது மேலும் பிரச்னையில் சிக்கிக் கொள்வதே இங்கே பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் நிலையாக உள்ளது. வெளியூரில் சென்று கல்வி கற்பது, வேலை செய்வது போன்ற விஷயங்களில் பெண்களை வீட்டில் இருப்பவர்கள் புரிந்து கொண்டால் புனிதா, காயத்ரி போன்று கிராமத்தில் இருந்து படித்து திறமையுடன் வேலைக்கு வரும் பெண்கள் தங்கள் கரியரில் முன்னேற முடியும்.

அதேபோல் காயத்ரியின் மீது தன் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இருந்திருந்தால் அவள் ஆரம்பத்தில் இருந்தே எதையும் மறைக்காமல் உண்மையைச் சொல்லி இருப்பாள். சுந்தர் வயதுக்கு ஏற்றவாறு முற்போக்காக இருந்திருந்தால் கூட அதே வீட்டில் அவனும் தங்கி இருக்க முடியும். ஆனால் இப்போது இந்தப் பிரச்னை அனைத்தும் காயத்ரி மற்றும் புனிதாவின் மீது தவறு என்பதுபோல முடியும்.
AKS - 43
AKS - 43

ஆண்கள் மூவரும் பெட்டியுடன் வெளியே வர, வாசல் கதவின் வெளியே குறுக்காக தன் ஜீப்பை நிறுத்தி பானட்டின் மீது ஸ்டைலாக கால் நீட்டி போலீஸ் கேரக்டரில் இருக்கும் கதாநாயகனை போல உட்கார்ந்து ஷாக் கொடுக்கிறான் சுந்தர்! பதற்றத்துடன் முடிந்திருக்கிறது 43வது எபிசோட். நாளைய எபிசோடிற்காக மிக ஆவலுடன்...

காத்திருப்போம்!