பரத் டான்ஸ் ஸ்டுடியோ தொடங்க வங்கியில் கடன் கேட்கிறான். ஏற்கெனவே புனிதாவின் பெயரில் டான்ஸ் ஸ்டுடியோ ஆரம்பிப்பதாக சொல்லி கடன் கேட்டு இருந்ததை நினைவுப்படுத்தி வங்கி மேலாளர் பரத்திடம் பேசுகிறார். தற்போது அவனது பெயரில் உத்தரவாதம் இல்லாமல் கடன் கொடுக்க முடியாது என்றும் கூறுகிறார். அந்த நேரத்தில் புனிதா அங்கு வருகிறாள். மேலாளர் புனிதாவின் பெயரில் தயாராக வைத்திருந்த ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடனுக்கு ஒப்புதல் அளிக்கிறார்.
தனக்கு தேவையான நேரத்தில் புனிதா தன்னுடன் இருப்பதில்லை என்று குற்றம் சாட்டும் பரத்திடம், தன்னைச் சார்ந்து இருக்க வேண்டாம் என்றும் அவன் தைரியமிக்கவனாக இருக்க வேண்டும் என்றும் புனிதா எடுத்துச் சொல்கிறாள். அதோடு அவனுக்கு தேவையான நேரத்தில் அவன் சொல்லாமலேயே அங்கே தான் இருப்பதாகவும் உறுதி கூறுகிறாள். புனிதா தன்னுடைய முடிவுகளைத்தானே எடுக்கிறாள். பரத்துக்கு அவள் சுதந்திரமாக இருப்பது, தன்னை மதிக்காமல் அடிமையாக நடத்துவது போல் இருக்கிறது.

ஆண்கள் எப்போதுமே சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய முடிவுகளை யாரிடமும் கேட்காமல் அவர்களே எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு பலருக்கும் இருக்கிறது. அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டு விட முடியாது. பெண்கள் தங்களுடைய சின்ன சின்ன முடிவுகளை தாங்களே எடுக்கும் வாய்ப்பு பெரும்பாலும் சுயமாக வருமானம் ஈட்டும் போது தான் தொடங்கும். அதற்கே காதலன், கணவன், குடும்பத்தினர் என அனைவரும் பதறுகின்றனர். அவள் தங்கள் கை மீறி நடந்து கொள்கிறாள் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது.
புனிதாவுக்கு பரத்தை முதன் முதலில் பார்க்கும்போதே பிடித்திருக்கிறது. அவனுடைய தாழ்வு மனப்பான்மை பற்றி தெரிந்தாலும் கூட அவன் வெளிப்படையாக பேசுவதால் அவனை காதலிப்பதாக சொல்கிறாள். புனிதா பரத்திடம், “உன்னை பார்த்ததும் முடிவு செய்து விட்டேன், நீ எனக்குத்தான்” என்று சொல்கிறாள். அன்பின் புனிதா, உடைமை எண்ணம் கூடாது... கூடாது... தோழி!
பரத் சோகமாக இருப்பது தன்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாக புனிதா பரத்திடம் கூறுகிறாள். நம்முடன் இருப்பவர்கள் மன வருத்தத்துடன் இருக்கும்போது நம்மால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது இயல்பு. புனிதாவுக்கும் அதுதான் நடக்கிறது. ஆனால் அதை சொல்லும்போது அவன் மீதிருக்கும் அக்கறையில் சொல்கிறாள் என்று புரியாமல், புனிதா தன் வேலையை பற்றியே பேசுகிறாள் என்று பரத் தவறாக புரிந்து கொள்கிறான்.
இந்த பிரச்னையை எதிர்கொள்ளாதவர்கள் இல்லை எனும் அளவுக்கு உறவில் அவரவர் முக்கியத்துவம் பற்றிய சண்டைகள் எல்லோரின் வாழ்விலும் நடக்கும் ஒரு இயல்பான விஷயமாகிவிட்டது. ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் அக்கறையை பற்றி பேசும்போது ஏதாவது ஒரு இடத்தில், ’என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை, தூங்க முடியவில்லை’ என்று சொன்னால், அது, ‘நீ உன்னைப் பற்றி மட்டும்தான் யோசிக்கிறாய்’ என்பதில் போய் முடியும்.
பரத்தை போல தன்னுடைய தாழ்வுணர்ச்சி மற்றும் தவறான புரிதலால் உடன் இருப்பவர்களுக்கு தொடர்ந்து குற்ற உணர்ச்சி ஏற்படுத்துவது ஒரு ஆரோக்கியமான உறவுக்கு நல்லதல்ல. புனிதா பரத்திடம், அவன் தன்னுடைய தாழ்வுணர்ச்சியை களைந்து, தன்னை தானே உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாள். பரத் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்கிறான். அந்தவகையில் பரத்தை நிச்சயமாக பாராட்ட வேண்டும். நிஜ வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரம் யாரும் இதை புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வது இல்லை.

சிவாவின் காலில் இருக்கும் கட்டை பிரிப்பதற்காக காயத்ரியும், சிவாவும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் சிவாவின் காலில் கட்டை பிரிக்கையில் கத்தரிக்கோல் காலில் பட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வருகிறது. கோபப்பட்டு சிவா மருத்துவரை திட்டி விடுகிறான். மருத்துவர் மூத்த மருத்தவரை வரவழைத்து அவரிடம் புகார் செய்கிறார். மேலும் சிவா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர் பிடிவாதமாக இருக்கிறார். முதலில் சிவா மறுத்தாலும், பிறகு காயத்ரி சொல்லும்போது மருத்துவரிடம் மன்னிப்பு கேட்கிறான். தான் சொன்னதும் ஏற்றுக்கொண்டு சிவா மன்னிப்பு கேட்டதில் காயத்ரிக்கு தாங்க முடியாத பெருமிதமும், சந்தோஷமும் ஏற்படுகிறது.
சிவாவுக்கு இன்னமும் கூட தன்னுடைய கோபத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கோபம் வரும்போது அவன் என்ன பேசுகிறான் என்பதை அவன் அறிவதில்லை. யாராக இருந்தாலும் கோபத்தில் மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி விடுகிறான். காயத்ரி உடனிருந்து எடுத்துச் சொல்லும்போது சிவா மருத்துவரிடம் மன்னிப்பு கேட்கிறான்.
ஆனால், இந்த இடத்தில் சிவாவின் காலில் காயம் ஏற்படுத்திய மருத்துவர் அதற்காக மன்னிப்பு கேட்காவிட்டாலும், குறைந்தபட்சம் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். மருத்துவர் தவறு செய்தால் அது தவறு இல்லை என்றாகி விடாது. எப்போதும் ஒரு பிரச்னையில் இரு தரப்பையும் கேட்காமல் ஒருவர் முன்பு நடந்து கொண்டதை வைத்து எந்த முன் முடிவுக்கும் வரக் கூடாது. மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. பின்பு புரியும்போது தாமாகவே அதை திருத்திக் கொள்வதும் வழக்கம்.
காயத்ரி சிவாவிடம், “நீங்கள் கோபம் வந்தால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று தெரியும், மன்னிப்பு கேளுங்கள்” என்று சொல்கிறாள். அதே சமயம் சிவாவின் காலில் ரத்தம் வரும் அளவுக்கு காயமாகி இருப்பது பற்றி காயத்ரி மருத்துவரிடம் கேட்டிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. அல்லது சீனியர் மருத்துவராவது அது பற்றி பேசி வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

கவிதா திருமணத்துக்கு சம்மதம் சொன்னதிலிருந்து ராஜேஷுக்கு கவிதாவை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சென்று கவிதாவிடம் பேசுவது, அல்லது அவளை தன் அறைக்கு அழைப்பது என இருக்கிறான். ஒரு கட்டத்தில் கவிதாவின் கைகளை பிடித்துக் கொண்டு அவளை அப்படியே பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறும் ராஜேஷிடம், கவிதா அது அலுவலகம் என்பதை நினைவுப்படுத்தி எச்சரிக்கிறாள்.
அப்படி என்றால் வெளியில் எங்காவது உணவகம் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் என்று ராஜேஷ் கேட்கிறான். கவிதா உடனடியாக பாண்டியனுக்கு அழைத்து, அவனையும் வரச்சொல்கிறேன் என்கிறாள். ராஜேஷ் முகம் மாறுகிறது. கவிதா பாண்டியனுக்கு கால் செய்கிறாள்.
ஏற்கனவே சொன்னது போல கவிதா - பாண்டியன் நட்பு வித்தியாசமானது. இந்த சமூகத்தில் அவ்வளவு எளிதாக யாரும் புரிந்து கொள்ள முடியாதது. கவிதா பாண்டியனுக்கு தன்னுடைய வாழ்வில் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒரு சராசரி ஆணால் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தும். ராஜேஷுக்கு முதல்முறை கவிதாவை வெளியில் அழைத்துச் செல்ல ஆரம்பிக்கும் போதே பிரச்னை தொடங்கி விடுகிறது.
புனிதா தனக்கும் பரத்துக்கும் சண்டை வருவதற்கு தங்களது அறையின் “Bad vibes” காரணம் என்று சொல்லி பாண்டியனிடம் அறையை மாற்றிக்கொள்ள கேட்கிறாள்.
வீட்டின் அறையை மாற்றும் புனிதா, பரத்துக்கு மன அறையில் அன்பு பெருகுமா? தனக்கும் கவிதாவுக்கும் இடையில் இருக்கும் பாண்டியனை ராஜேஷ் எப்படி தவிர்க்கப் போகிறான்?
காத்திருப்போம்!