Published:Updated:

``கொரோனோ சூழலில் குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சிதான்.. ஏன்னா..?" – `ராஜா ராணி’ சஞ்சீவ் - ஆல்யா

"எங்களுடைய மகள் பிறந்த அடுத்த நொடியிலேயே அந்தப் போருக்குத் தயாராகியிருக்கா. கடினமான சூழ்நிலைகளை ஒருதடவை எதிர்கொண்டுட்டா ஒரு துணிச்சல் வரும் பாருங்க, அது எங்க பாப்பு குட்டிக்கும் கிடைக்கும்கிறதுதான் சந்தோஷத்துக்குக் காரணம்"

"பெண் குழந்தைதான் பிறக்கும்னு நாங்க ரெண்டு பேரும் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தோம். அதனால், முன்னாடியே பெண் குழந்தைக்கான டிரெஸ் எடுத்து வெச்சிருந்தோம். எங்க நம்பிக்கையும் நிஜமாச்சு. பெண் குழந்தையும் பிறந்தாச்சு" என உற்சாகமாகிறார் சஞ்சீவ். `ராஜா ராணி’ சீரியலில் ஜோடியாக நடித்தபோது சஞ்சீவ் – ஆல்யா இடையே காதல் மலர, கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தத் திருமணத்துக்கு ஆல்யாவின் வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. பின்னர், திருமணத்துக்குப் பின் ஆல்யா கர்ப்பமடைய பெற்றோர்களின் கோபம் தணிந்தது.

சஞ்சீவ் ஆல்யா
சஞ்சீவ் ஆல்யா

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஆல்யாவுக்குப் பிரசவ வலி வர, சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருந்த சூழலில் நேற்று (23/3/20) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஆல்யா.

"நாங்க எதிர்பார்த்தது போலவே பெண் குழந்தை பிறந்ததுல எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால், இந்த மகிழ்ச்சியை நாலு பேருக்குச் சொல்லிக் கொண்டாடடுற மனநிலை இப்ப இல்லை. காரணம், உலகமே கொரோனாவை எதிர்த்துப் போராடிட்டிருக்க இந்தச் சூழல்தான். திரும்பின பக்கமெல்லாம் கொரோனா பீதியா இருக்கே சார். ஆல்யா இப்போதான் பிரசவத்தைச் சந்திச்சுருக்காங்க. அதனால், உடலளவுல ரொம்பவே பலவீனமா இருப்பாங்க. அதேபோல், எங்க குழந்தையும் இந்த உலகத்துக்குப் புது உயிர். காத்து, வெளிச்சம்னு பூமியில அவ சந்திக்கிற எல்லாமே அவளுக்குப் புது அனுபவம்தான். அதனால், இவங்க ரெண்டு பேரையும் பக்கத்துலயே இருந்து பார்த்துக்க வேண்டியிருக்கு. படப்பிடிப்புகள் கேன்சலானது கூட ஒருவகையில உதவியாகத்தான் இருக்கு.

ஆல்யா சஞ்சீவ்
ஆல்யா சஞ்சீவ்

ஆனாலும் கொரோனா குறித்து வர்ற செய்திகள் ஒவ்வொரு நாளும் பதற்றத்தைக் கூட்டிக்கிட்டே போறதை நினைக்கிறப்போ பயமா இருக்கு. இயல்பு நிலை எப்போ திரும்பும்னு காத்திட்டிருக்கேன். ஆல்யாவுமே, ‘முதல்ல, கொரோனா ஒழியட்டும், நாம கொண்டாட்டத்தை அப்புறம் வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டாங்க" என்றவரிடம், `டெலிவரிக்கு சில நாள்கள் முன்பாக குழந்தைகளுக்கான பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தில் ஆல்யா நடித்ததற்கு விமர்சனங்கள் வந்தனவே?' எனக் கேட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"முழு விருப்பத்துடனே அந்த விளம்பரத்துல ஆல்யா நடிச்சாங்க. காரணம் பணமில்லை. குழந்தைகள் புராடக்டுகளுக்குப் பெயர்போன அந்த நிறுவனம், ‘ஒரு மாடலை கர்ப்பிணியாக நடிக்க வைக்கிறதை விட, நிஜ கர்ப்பிணியே நடிச்சா நல்லாருக்கும்னு நினைச்சு எங்களை அணுகினாங்க. அது ஆல்யாவின் விருப்பம்னு நானும் அவங்க முடிவுக்கே விட்டுட்டேன். சிலர்கிட்ட இருந்து வந்த விமர்சனங்கள் கூட ஆல்யா மீதான அவர்களோட அக்கறையின் வெளிப்பாடுதான்" என்றார் சஞ்சீவ்.

ஆல்யா-சஞ்சீவ்
ஆல்யா-சஞ்சீவ்

அதேநேரம், இந்த ஜோடிக்குத் தற்போது இன்னொரு சந்தோஷமும் சேர்ந்திருக்கிறது. ’உலகத்தையே மிரட்டுற கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பார்க்கிறப்ப இதை ஒரு போர்னு சொல்றதுல தவறே இல்லை. எங்களுடைய மகள் பிறந்த அடுத்த நொடியிலேயே அந்தப் போருக்குத் தயாராகியிருக்கா. கடினமான சூழ்நிலைகளை ஒருதடவை எதிர்கொண்டுட்டா ஒரு துணிச்சல் வரும் பாருங்க, அது எங்க பாப்பு குட்டிக்கும் கிடைக்கும்கிறதுதான் சந்தோஷத்துக்குக் காரணம்’ என்கிறார்கள் இருவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு