Published:Updated:

"பிக்கி பிக்கி பாஸ்"... குட்டி புயல் ஆரி மகள்... ஆஜித்துக்குக் கிடைத்த அட்வைஸ்! பிக்பாஸ் - 88

பிக்பாஸ் - 88

பிக்பாஸ் தன் குரலின் இறுக்கத்தை சற்று கழற்றி வைத்து விட்டு குழந்தையுடன் இயல்பாகப் பேசியது கூடுதல் சுவாரஸ்யம். கேமராதான் பிக்பாஸ் என்று குழந்தை புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 88

Published:Updated:

"பிக்கி பிக்கி பாஸ்"... குட்டி புயல் ஆரி மகள்... ஆஜித்துக்குக் கிடைத்த அட்வைஸ்! பிக்பாஸ் - 88

பிக்பாஸ் தன் குரலின் இறுக்கத்தை சற்று கழற்றி வைத்து விட்டு குழந்தையுடன் இயல்பாகப் பேசியது கூடுதல் சுவாரஸ்யம். கேமராதான் பிக்பாஸ் என்று குழந்தை புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 88

பிக்பாஸ் - 88
இன்றைய நாளின் ஹைலைட் என்பது ஆரியின் மகள் ரியாதான். ஒரு குட்டி பூங்கொத்தாக பிக்பாஸ் வீடு முழுக்க துறுதுறுவென்று அவள் ஓடித் திரிந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

இந்தக் கட்டுரைத் தொடரை தினமும் வாசிக்கும், ஆர்வத்துடன் பின்னூட்டங்களை பதிவு செய்யும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து! (ஆரி ஆதரவாளர்களுக்கு ஸ்பெஷல் வணக்கம்!).

சகிக்க முடியாததொரு குத்துப்பாடலுடன் பொழுது விடிந்தது. வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் சார்பில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க். வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லோகோ பிளாக்குகளாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும். எந்த அணி முதலில் அவற்றை இணைத்து லோகோவை வடிவமைக்கிறார்களோ, அவர்களுக்கு வெற்றி.

ரியோ அணி இதை திறமையாக திட்டமிட்டது. அதாவது வீட்டை படுத்தவாக்கில் கட்டி விட்டு அப்படியே நிமிர்த்து வைத்து விடலாம் என்பது அவர்களின் திட்டம். "ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா” என்பது போல அது தோல்வியில் முடிந்தது. கட்டப்பட்ட வீட்டை கொம்புக்குள் பொருத்தும் போது ஆஜித் சற்று சொதப்பிவிட எதிரணி எளிதாக ஜெயித்துவிட்டது.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

இவர்களுக்கு கேக்கும் ஐஸ்கீரிமும் பரிசாக அளிக்கப்பட்டது. (தினமும் கேக்கைப் பார்த்து பார்த்து இவர்களுக்கு வெறுப்பு வந்துவிடாதா?!). ‘'ஐஸ்கிரீம் மேங்கோ ஃபிளேவரா இருந்தா நல்லாயிருக்கும்'’ என்று ஆவலுடன் அங்கேயே திறந்து பார்க்க முயன்றார் ரம்யா. (எனக்கு பிடித்ததும் மேங்கோ ஃபிளேவர்தான்... ஹிஹி).

ரம்யா கிச்சன் அறையில் எதையோ வேகவைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எல்லோரையும் ஃப்ரீஸ் செய்தார் பிக்பாஸ். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ பாடல் ஒலித்தது. அதென்னமோ இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு உள்ளுக்குள் ஏதோ நிகழும். இப்போதும் நிகழ்ந்தது. ரஹ்மானின் மேஜிக் அது. ‘யாரோ வரப்போகிறார்கள்’ என்பதை வீடு உணர்ந்தது.

மகளின் மீது பெற்றோர்கள் பொழியும் அன்பு சம்பந்தப்பட்ட பாடல் என்பதால் அது ஆரியின் குழந்தையாக இருக்கலாம் என்று பார்வையாளர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆரியின் முகபாவமும் அப்படித்தான் தெரிந்தது. ஆனால் வந்தவர் கேபியின் அம்மா சுனிதா.

பிள்ளைகளுக்கு வழிகாட்டும் போதும், அறிவுரை தரும் போதும் முதலில் அவர்களின் பிளஸ் பாயின்ட்டுகளைச் சொல்லி பாராட்டி விட்டு பிறகு அவர்களிடமிருக்கும் குறைகளை உறுத்தாத வகையில் சுட்டிக் காட்டுவதுதான் முறையான அணுகுமுறை. கேபியின் அம்மா இந்த விஷயத்தை திறம்படச் செய்தார்.

பிறகு சபைக்கு வந்த சுனிதா, "பல சமயங்களில் இவதான் எனக்கு அம்மா” என்று கேபியைச் சுட்டிக் காட்டினார். அம்மாவிற்கு மட்டுமல்ல பல சமயங்களில் அப்பாவிற்கு கூட மகள்தான் அம்மாவாக இருப்பாள். மகள்களைப் பெற்றவர்கள் இதை உணர முடியும். கேபியின் அம்மா சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டார் போலிருக்கிறது. அல்லது சுவாரஸ்யமான ஃபுட்டேஜ் அவ்வளவுதான் தேறிற்றோ… என்னமோ! அவர் விரைவில் கிளம்பி விட்டார்.

‘நாளைக்குப் படிச்சுக்கலாம்’ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த மாணவன், தேர்வு நெருங்கியவுடன் ‘ஹய்யய்யோ’ என்று பயப்படுவதைப் போல, ‘அய்யோ. கொஞ்ச நாள்ல ஃபைனலே வந்துடும்ல’ என்று ஜாலியாக அச்சப்பட்டார் ரம்யா. "நான் வெளில போய் உங்களுக்கெல்லாம் ஓட்டு போடறேன்” என்று அவர் குறும்பாகச் சொல்ல, "இப்படிச் சொல்லியே எங்களை வெளியே அனுப்பிச்சிட்டு நீ டைட்டிலை அடிக்கப் போறே... அதானே உன் பிளானு?” என்று பதிலுக்குக் கலாய்த்தார் ஆரி.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

“நான் வெளில போறதுல பிரச்னையில்ல. ஆனா ஆடியன்ஸ்க்கு என்னை பிடிக்குதா, பிடிக்கலையான்றதுதான் எனக்கு முக்கியம். பிடிக்கும்னுதான் நம்பறேன்" என்றார் ரம்யா.

ரம்யாவின் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகியாகிய சமயத்தில் அதைப் பற்றி கிண்டலாகவும் எரிச்சலாகவும் நான் ஃபேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன்... ஏனெனில் ஒரு பெண் தன் புறஅழகின் கவர்ச்சியைக் கொண்டு கவனத்தை ஈர்ப்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. ‘பெண் என்றால் உடல்தான்’ என்று நினைக்கும் ஆணாதிக்க மனோபாவத்திற்கு பெண்களே முன்வந்து தீனி போடக்கூடாது என்று நினைப்பவன் நான்.

ஒரு பெண் புறஅழகோடு அறிவும் சேரும் போதுதான் பல மடங்கு அழகாகிறாள். அந்த வகையில் பிக்பாஸில் சிறிது நாட்கள் ரம்யாவை அப்சர்வ் செய்த பிறகுதான் அவரும் எனக்குப் பிடித்தமான போட்டியாளர்களில் ஒருவராக மாறினார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது சரியாக திசை மாற்றுவதுதான் அவரிடம் எனக்குப் பிடித்த ப்ளஸ் பாயின்ட். ஏனெனில் அதுதான் என் பலவீனம் என்பதால் அந்த குணாதிசயம் எனக்கு அதிகம் ஈர்க்கிறது. ஒரு பெண் புத்திசாலித்தனமாகவும் சாதுர்யமாகவும் இருப்பதும் கூட அத்தனை தவறல்ல. அது அவசியமும் கூட. ஆண்களின் உலகில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவளது அறிவும் சமயோசிதமும் அதிகம் அவசியமாக தேவைப்படுகிறது.

இதைச் சற்று விளக்க முயல்கிறேன். பாலாவின் நிழலாகவே தொடர்வதுதான் ஷிவானியின் பின்னடைவுக் காரணங்களில் ஒன்று. உணவு மேஜை, கமல் வரும் நாள், கார்டன் ஏரியா என்று பலவிடங்களிலும் அவர்கள் நெருக்கமாகவே அமர்ந்திருப்பார்கள். இதை நாம் கவனித்திருக்கிறோம். இதனால் கூட ஷிவானி – பாலாஜி ஜோடியின் மீது பலர் எரிச்சல் கொள்ளலாம்.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

ஆனால் ரம்யா இதிலிருந்து வேறுபடுகிறார். ஓரேயொரு உதாரணக் காட்சியைச் சொல்கிறேன். ஒருமுறை வரவேற்பறை ஏரியாவில் ரம்யா ஒரு விஷயத்தை நின்று கொண்டே சொல்லும் போது, ‘'இங்க உக்காந்து சொல்லு'’ என்றார் பாலா. "உக்கார இடம் தந்தால்தானே உட்கார முடியும்” என்று ரம்யா சிரித்துக் கொண்டே சொன்னவுடன் நன்றாக இடம் விட்டு தள்ளி அமர்ந்தார் பாலா.

ரம்யா சொன்ன விதம் இருக்கிறதே, அது பாலாவைப் புண்படுத்தாத வகையில் அமைந்திருந்தது. அதே சமயத்தில் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலும் இருந்தது. இந்தச் சாதுர்யம்தான் ஒரு பெண்ணுக்கு அடிப்படையான தேவை. ஆணாதிக்க உலகில் உலவுவதற்கு இது போன்ற தகுதிகளை ஒரு பெண் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதைப் போலவே சோமுவையும் ரம்யாவையும் இணைத்தும் அந்த வீட்டில் சில விஷயங்கள் கிண்டலடிக்கப்படுகின்றன. ஆனால் அது கண்ணியமான எல்லைக்குள் நடப்பதை கவனித்திருக்கலாம். ஒரு ஆண் தன்னை எத்தனை தூரம் அணுக முடியும் என்பதை ஒரு பெண்தான் தீர்மானிக்க வேண்டும்.

அனைவரையும் உறைய வைத்தார் பிக்பாஸ். ‘ஆராரிராரோ... நானிங்கு பாட’ என்கிற விஜய் டிவியின் டெம்ப்ளேட் பாட்டு ஒலித்தது. ஆனால் எப்போது கேட்டாலும் மனதை உருக வைக்கும் பாடல் இது. அப்போதே ஆஜித்தின் கன்னத் தசைகள் துடிக்க ஆரம்பித்து விட்டன. அழப்போவதற்கு முந்தைய நிலையில் இருந்தார். ஆஜித்தின் அம்மாவும் அக்காவும் உள்ளே நுழைந்தார்கள். அப்படியே பெரிய சைஸ் ஆஜித் போல இருக்கிறார் அவரது அம்மா.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடி ஆடி நடந்து சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டார் ஆஜித். தாயும் மகனும் ஆழமாக அரவணைத்துக் கொண்டு கலங்கிய காட்சி நம்மையும் நிச்சயம் நெகிழ வைத்திருக்கும். இவர்கள் உருதுவில் பேசத் துவங்கி சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு ‘தமிழில்தான் பேசணும்னு சொன்னாங்க’ என்றார் அக்கா.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

"இந்தக் குட்டியூண்டு ஏரியாவைப் பெருக்கறதுக்கா அப்படிச் சண்டை போடறீங்க?” என்று நம் மனதில் உள்ளதை அப்படியே கேட்டார் ஆஜித்தின் அக்கா. "வாக்யூம் க்ளீனர் கிடையாதுங்க” என்று கோரஸ் பாடினார்கள் போட்டியாளர்கள். பெருக்குவதற்கு வீடே இல்லாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் துடைப்பமே போதும் என்று தோன்றி விடும்.

அதென்னமோ வருகிறவர்கள் எல்லாம் பாலாவைத்தான் ஸ்பெஷலாக தேடுகிறார்கள். அவருடைய குறைகளை பார்வையாளர்கள் மன்னிப்பதற்கு அவரின் வெளிப்படைத்தன்மைதான் காரணமாக இருக்கும். எனவே பலரின் உள்ளம்கவர் கண்ணனாக இருக்கிறார் பாலா. ஆஜித்தின் அம்மாவின் அம்மாவே பாலாவின் ரசிகையாம். அவர்களின் உறவினர் சாயலில் பாலா இருப்பதால் கூடுதல் பிரியமாம். ‘பாலா மாமா’ என்று கூப்பிட்டு கலாய்த்தார் ரம்யா. "நான் ரொம்ப கொயட்” என்று அஹிம்சை முகத்தை பாலா காண்பிக்க ‘நம்பிட்டோம்’ என்று சர்காஸ்டிக்காக சொன்னார் அக்கா.

"கோபம் வந்தா கதவுலதான் போய் குத்துவான்" என்று ஆஜித்தின் சைலன்ட்டான வயலன்ட் ரகசியத்தை சபையில் போட்டு உடைத்தார் ஆஜித்தின் அம்மா. ஒரு ரவுடி பாகவதர் ஆகலாம், ஆனால் ஒரு பாகவதர் ரவுடி ஆகக்கூடாது ஆஜித்!

ஆஜித் அக்காவின் பேச்சு ஸ்மார்ட்டாக இருந்தது. “ஈடுபாடு இல்லன்னு அவனைப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்கீங்களே... யாராவது அவனுக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா” என்று அவர் ஆதங்கப்பட "அதான் என் வாயை அடைச்சிட்டாங்களே" என்று டைமிங்கில் அடித்தார் ஆரி. அதை ஆமோதித்த அக்கா "கரெக்ட்டுதான். ஆனா உங்க அட்வைஸ் ரொம்ப லெங்க்த்தா போவுமே தம்பி’’ என்றது நல்ல நகைச்சுவை.

வெளியில் வந்து ஆஜித்திடம் ரகசியம் பேசும்போது அக்கா அதே உபதேசத்தையே செய்தார். “பேச வேண்டிய சமயத்துல பேசிடணும்டா தம்பி. ரம்யா உன்கிட்ட நல்லா நடந்துக்கிறதுல்லாம் ஓகே... அக்கான்றாங்க... தம்பின்றாங்க... ஆனா உனக்கு எந்த அட்வைஸூம் பண்ணலையே?" என்று அவர் ஆதங்கப்பட, “அவர்கள் போட்டியாளர்கள்" என்று ஆஜித் சொன்னது சரியான காரணம். (பரவாயில்ல... பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தம்பி கொஞ்சம் ஸ்மார்ட்டா பேசக் கத்துக்கிட்டான்). என்றாலும் இதே ஆதங்கம் ஆஜித்திற்குள்ளும் இருப்பதை பலமுறை உணர முடிகிறது.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

“உங்க சிரிப்புல்லாம் ஒகே. அதுல ஒரு நக்கல் தெரியுது பாருங்க.. அதான் பிரச்னை” என்று ரம்யாவிற்கு நிகராக அக்கா பொடி வைத்து பேசி விட்டு இறுதியில் ‘அறிவான பொண்ணு’ என்று சமாளித்து சொன்னவுடன்தான் ரம்யாவிற்கு மூச்சே வந்தது. சபையில் போன மானம் திரும்பி வந்தது.

"பாலா கிட்ட பிடிச்சதே அந்த திமிர்தான். இப்படி இவன் திருந்தி அமைதியா இருக்கறதை பார்க்கவே சகிக்கலை" என்று ஆஜித்தின் அம்மா சொன்னதற்கு அடக்கமாக சிரித்தார், ‘உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்’ பாலா.

‘ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா...’ என்கிற ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தில் வரும் பாடலை ஆத்மார்த்தமாகவும் அருமையாகவும் பாடினார் ஆஜித். தமிழ் திரைத்துறையின் இசையமைப்பாளர்கள் இந்த இளைஞனுக்கு வாய்ப்புகளைத் தந்து வளர்த்து விடலாம். அத்தனை அருமையான பாடகராக ஆஜித் இருக்கிறார். (இந்தப் பாடலுக்கு இசையமைத்த ரஹ்மானின் தாயாரும் சமீபத்தில் மறைந்து போன துயரமான தகவலும் இந்தச் சமயத்தில் நினைவிற்கு வருகிறது).

“நீ இரண்டு நாட்கள் இருந்தால் கூட பரவாயில்லை. தைரியமாக, நன்றாக விளையாடு" என்று அறிவுறுத்திய ஆஜித்தின் குடும்பம் விடைபெறுவதற்கு கிளம்பியது. அனைவரையும் பிக்பாஸ் உறைய வைக்க “நீ போடா ஆஜித்" என்று இதர போட்டியாளர்கள் வாய்க்குள் முனகினார்கள். “அப்புறம் லக்ஷுரி மார்க் போச்சு –ன்னு ஆஜித்தை நீங்க நாமினேட் பண்ணக்கூடாது" என்று டைமிங்கில் கலாய்த்தார் ஆஜித்தின் அக்கா. ப்பா... ரம்யாவிடம் உள்ள அதே கிண்டல் உணர்வு இவரிடமும் இருக்கிறது.

‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தையும் காட்டு’ என்கிற விவிலிய வாசகத்தில் பிக்பாஸிற்கு நம்பிக்கையுள்ளது போல. சோமுவின் கன்னத்தில் ரியோ ஒரு தட்டு தட்ட சரியான சமயத்தில் ‘லூப்’ என்றார் பிக்பாஸ். எனவே சோமுவிற்கு அடி விழுந்து கொண்டேயிருந்தது. இந்தச் சமயத்தில் கேபியும் சோமுவின் கன்னத்தில் அடிக்க அதையும் ‘லூப்’ என்றார் பிக்பாஸ். ஆக இரண்டு பக்கத்திலிருந்தும் சோமுவின் கன்னத்தில் அடிகள் விழுந்து கொண்டேயிருக்க ‘வலிக்குதுடா’ என்று ஜாலியாக அலறினார் சோம். "அடிக்கிற மாதிரி பண்ணுங்க... போதும்..." என்று அஹிம்சை பாணி ஐடியாவைத் தந்தார் ரம்யா.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

சிறிது நேரத்தில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்கிற பாடல் ஒலித்தது. ஆரியை மட்டும் ஃப்ரீஸ் செய்திருந்தார் பிக்பாஸ். எனில் அப்போதே புரிந்து போயிற்று, ஆரியின் குடும்பம் வரப்போகிறது என்று. ஆடாமல் அசையாமல் இருந்த நிலையிலும் ஆரியின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியதைப் பார்க்க நெகிழ்வாக இருந்தது.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை அண்டர்லைன் செய்து (உண்மையான அண்டர்லைன்) சொல்லியே ஆக வேண்டும். மற்றவர்கள் எல்லாம் பிக்பாஸ் தந்த உத்தரவை அவ்வப்போது கலைத்து விட்டு இயல்பாக எழுந்து செல்ல, தன் குடும்பம் வரப்போகிறது என்பதை அறிந்தும் கூட விளையாட்டு விதிகளை மனஉறுதியுடன் பின்பற்றி எழாமல் அமர்ந்திருந்த ஆரிக்குப் பாராட்டு. Hats off!

வெளியில் மழை பெய்து கொண்டிருக்க வெளிக்கதவு திறந்தது. மஞ்சள் உடையில் முயல்குட்டி மாதிரி ஒரு சிறுமி தன் பற்களை வெளியில் காட்டிக் கொண்டு நின்றிருக்க ‘ஸோ... ஸ்வீட்’ என்று மக்கள் அள்ளிக் கொண்டார்கள். அப்போதும் ஆரி அசையாமல் இருந்தார். மகள் அருகில் வந்த போதும் அவர் கலையவில்லை. இதற்கு மேலும் விளையாடாமல் ஆரியை ரிலீஸ் செய்தார் பிக்பாஸ்.

ஆரி அழுத்தமாக முத்தம் தந்தவுடன் முகத்தைத் துடைத்துக் கொண்ட ரியாவைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள். ‘பாப்பாக்கு பல்லெல்லாம் முளைச்சுடுச்சே’ என்று வியந்தார் ஆரி. ஓ... ரியா பல்லைக் காட்டிக் கொண்டே வந்த ரகசியம் இப்போதுதான் புரிந்தது.

நீண்ட நாட்கள் கழித்து அப்பாவைப் பார்ப்பதால் அது சார்ந்த திகைப்புடனும் ஆனால் உள்ளுற எதையோ உணர்ந்த சிரிப்புடனும் இருந்தாள் ரியா. "அம்மா ஒளிஞ்சிருக்காங்களா?” என்று ஆரி கேட்கும் போது குறும்பான புன்னகையுடன் ரியா தலையாட்டியது அழகான காட்சி.

குருவி ஒன்று ‘குயிக்... குயிக்’ என்று சத்தமிடும் தொனியில் ஒவ்வொரு போட்டியாளரின் பெயரையும் ரியா சொன்னதைப் பார்க்க அத்தனை க்யூட்டாக இருந்தது. 'சோமே’ என்று ஆரி சொல்லித் தந்ததை திருத்தி ‘சோம்’ என்று அவள் திருத்தி சொன்னதும் அத்தனை அழகு.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

"ஹாய் ரியா... வெல்கம்" என்றார் பிக்பாஸ். பிக்பாஸைின் குரலைக் கேட்டு போட்டியாளர்களே சமயங்களில் நடுங்கும் போது "பிக்பாஸ் நீ எப்படியிருக்கே?” என்று குழந்தைகளுக்கேயுரிய ஒருமையுடன் ரியா பதிலுக்கு விசாரித்தது சுவாரஸ்யமான காட்சி. பிக்பாஸூம் தன் குரலின் இறுக்கத்தை சற்று கழற்றி வைத்து விட்டு குழந்தையுடன் இயல்பாக பேசியது கூடுதல் சுவாரஸ்யம். கேமராதான் பிக்பாஸ் என்று குழந்தை புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

‘கன்ஃபெஷன் ரூம்ல உங்க அம்மா இருக்காங்க. கூட்டிட்டு வாங்க’ என்று பிக்பாஸ் சொன்னவுடன் குடுகுடுவென்று ஓடியது குழந்தை. அது சைஸிற்கு ஒரு மைக்கை வேறு மாட்டி வைத்திருந்தார்கள். அலைபாய்ந்து ஓடிய குழந்தைக்கு மக்கள் வழிகாட்டினார்கள். கன்ஃபெஷன் ரூமின் இருளில் தன் மனைவியை ஆரி ‘பாசத்துடன்’ வரவேற்ற போது, "டாய்... டாய்... அங்கயும் கேமரா இருக்கு... பார்த்துக்க" என்பது போல் ஜாலியாக எச்சரித்தார் ரியோ. பிறகு குழந்தையை மட்டும் வெளியில் தூக்கி எடுத்துக் கொண்டு வந்து "நீ வந்துடு செல்லம்… அவங்க வேற விளையாட்டு விளையாடறாங்க" என்பது போல் கலாய்த்தது ரியோவின் சுவாரசியமான குறும்புகளில் ஒன்று.

இதர குடும்பத்தினர்களைப் போலவே ஆரிக்கு சரியான உபதேசத்தையும் வெளிச்சத்தையும் தந்தார் ஆரியின் மனைவி. உண்மையில் ஆரிக்கு அதிக உபதேசம் தேவையில்லை என்பதே அவரின் கருத்தும்கூட!

"நான் feedback-லாம் சொல்ல மாட்டேன். நல்லா விளையாடுறீங்க. வீட்ல இருக்கிற மாதிரியும் இங்கயும் நீங்க நீங்களா இருக்கீங்க" என்று மகிழ்ந்த ஆரியின் மனைவி பிறகு கலங்கத் துவங்கினார். ஆரியைப் பற்றி சிலர் புறணி பேசுவது குறித்து அவருக்கு வருத்தம் இருக்கலாம். "இது ரத்தபூமி... அப்படித்தான் இருக்கும். தெரிஞ்சுதானே வந்திருக்கோம்... கப்பு கொடுத்தா எடுத்துட்டு வர்றேன்... இல்லைன்னா... இங்க இருக்க டீ கப்பை எடுத்துட்டு வர்றேன்" என்று ஜாலி கமென்ட் அடித்தார் ஆரி.

"நான் இங்க க்ளீன் சிலேட்டாதான் வந்தேன். நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கிற ஒவ்வொருத்தர் மேலயும் எனக்கு அன்பு இருக்கு. ஒருவகையில் என்னை அடையாளம் காட்டியவர்கள் இவர்கள்தான்" என்று சக போட்டியாளர்களைப் பற்றி நெகிழ்ந்தார் ஆரி.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

வெளியே மக்கள் குழந்தையை வைத்து விதம் விதமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷிவானி கூட தன் அமைதியான இயல்பிலிருந்து வெளியே வந்து குழந்தையைக் கொஞ்சியது பார்க்க நன்றாக இருந்தது. மழைத் துளிகளை கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த ரியா, படியின் நுனி தாண்டி விழுந்து விடப் போகிறாள் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, "அவ ஜாக்கிரதையாத்தான் இருக்கா... யாரு ஆரி பேபியாச்சே?” என்று கிண்டல் செய்தார் கேபி. யார் தூக்கினாலும் அவர்களிடம் இயல்பாகச் செல்வது சில குழந்தைகளுக்கு மட்டுமே வாய்க்கும் குணாதிசயம். அது ரியாவிடம் இருந்தது.

“நானும் உங்களைப் போல ரிசர்வ் டைப்தான். அப்படி இருக்கறது பார்க்க நல்லாத்தான் இருக்கு. அதுதான் சரியும் கூட. ஆனால் போட்டி என்று வந்திருக்கும் இடத்தில் நாம் இன்னும் கொஞ்சம் வெளியில் வரலாம்" என்று ஷிவானிக்கு சிறந்த முறையில் உபதேசம் செய்தார் ஆரியின் மனைவியான நதியா.

ரம்யாவைப் பற்றிய பேச்சு வந்த போது, "இவங்களைப் பத்தி என்ன சொல்றது... ஸ்மார்ட்" என்று புகழ, தன் பாணியில் வெட்கப்பட்டு சிரித்தார் ரம்யா. பாலாஜியும் சிறந்த ஆட்டக்காரர்தான் என்பது அவரது எண்ணம். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்களை வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ். ஒவ்வொருவருக்கும் கன்னத்தில் முத்தமிட்டாள் ரியா. சமயோசிதமாக உள்ளேயிருந்து சாக்லேட்டுக்களைக் கொண்டு வந்து கொடுத்தார் ரம்யா. ‘நன்றி’ என்று தமிழில் சொல்லி அசத்தினாள் ரியா. அடிப்படையான வார்த்தைகளைக் கூட இன்று குழந்தைகள் தமிழில் சொல்வதில்லை. அப்படியிருக்கிறது ஆங்கில மோகம்.

‘பை ரியா’ என்று பிக்பாஸ் தனது பாசத்தைக் காட்டியவுடன் போட்டியாளர்களைப் போலவே மகிழ்ந்து போனாள் ரியா. ‘பிக்கிபிக்கி பாஸிடம்’ அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். ஓர் இனிமையான குட்டிப் புயல் போல நுழைந்து இனிமையான அதிர்வுகளை அந்த வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறாள் ‘அழகு குட்டி’ ரியா.

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

"குழந்தை வந்து போனது ஒரு மாதிரியா இருக்குல்ல" என்று சோமுவும் ரியோவும் நெகிழ்ந்து போனார்கள். "பிக்பாஸ். நாளைக்கு உங்க ஃபேமிலி வருவாங்களா?” என்று ரம்யா கேட்டது க்யூட்டாக இருந்தது.

"என் ரசிகர்கள் என்னிடம் ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்கள்ல... ரொம்ப லேட்டாதான் புரியுது...” என்று பெருமிதமாக சலித்துக் கொண்டார் ஆஜித். (அடக்கம் வேணும்டா தம்பி!) "என்னைப் போல இறங்கி விளையாடறவங்க ஜெயிச்சாதான் நல்லாயிருக்கும். உட்கார்ந்து கடலை போடறவங்க ஜெயிக்கக்கூடாது” என்று தன்னையும் ஆரியையும் சிறந்த உதாரணமாக காட்டி விட்டு சோமையும் ரியோவையும் ‘கடலை பார்ட்டிகளாக’ அடையாளம் காட்டினார் பாலாஜி.

ஷிவானியுடன் மறுபடியும் பாலாஜி பேசத் துவங்கியது நல்ல விஷயம். கொரானோ காலத்திற்கு வேண்டிய அவசியத்தோடு ‘போதுமான இடைவெளி’யோடு இந்த உரையாடல் துவங்கியிருப்பது கூடுதல் நல்ல விஷயம். சற்று முன்புதான் ஆரியைப் புகழ்ந்த பாலாஜி, ஆரியின் மீதான புகார் பட்டியலை கொஞ்சம் நல்லதும் பொல்லாததும் கலந்து சொல்லி விட்டு "அவர் ஆடற கேமே வேற. அவரு ஜெயிச்சாதான் நான் வருத்தப்படுவேன்" என்று பிளேட்டை தலைகீழாக இப்போது மாற்றிக் கொண்டிருந்தார் பாலாஜி. (அது வேற வாய். இது நாற வாய்)..

பிக்பாஸ் - 88
பிக்பாஸ் - 88

இந்த Freeze டாஸ்க்கில் நான் அதிகம் எதிர்பார்த்தது, அனிதா – பிரபா சந்திப்புதான். "ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு" என்பது குருதிப்புனல் திரைப்பட வசனம். அதைப் போல ‘கன்னுக்குட்டி’ என்பதுதான் அனிதாவின் பிரேக்கிங் பாயிண்ட் சொல். இந்தச் சந்திப்பில் அனிதா எவ்வாறெல்லாம் உணர்ச்சிகளைக் கொட்டுவார் என்று வேடிக்கை பார்க்க காத்திருந்தேன். அது நடக்காமல் போனது துரதிர்ஷ்டம்.

நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை புத்தாண்டு வாழ்த்துகள். எந்தவொரு போட்டியாளரையும் அதிகம் வெறுக்காமல் அல்லது எதற்கும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இந்த நிகழ்ச்சியை விளையாட்டாக மட்டுமே பாருங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இதில் வரும் சம்பவங்களோ, நபர்களோ நம் வாழ்க்கையின் தலையழுத்தை தீர்மானிக்கப் போகிறவர்கள் இல்லை. அடிப்படையில் இதுவொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. 'இதிலிருந்து நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்’ என்பதை புத்தாண்டுச் செய்தியாக பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.