Published:Updated:

டார்கெட் ஆரி... பாலாஜி செய்தது ஸ்மார்ட்டா, சொதப்பலா? பிக்பாஸ் – நாள் 58

பிக்பாஸ் – நாள் 58

பாலாஜியை ஓரங்கட்டிய ரமேஷ், "ஏம்ப்பா... ப்ரொட்யூசர் பையன் மேட்டரையெல்லாம் இழுத்திருக்க வேண்டாமே. அனிதா மேட்டரை என்கிட்ட வந்து நேரா கேட்டிருக்கலாமே?” என்று வருத்தப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 58

Published:Updated:

டார்கெட் ஆரி... பாலாஜி செய்தது ஸ்மார்ட்டா, சொதப்பலா? பிக்பாஸ் – நாள் 58

பாலாஜியை ஓரங்கட்டிய ரமேஷ், "ஏம்ப்பா... ப்ரொட்யூசர் பையன் மேட்டரையெல்லாம் இழுத்திருக்க வேண்டாமே. அனிதா மேட்டரை என்கிட்ட வந்து நேரா கேட்டிருக்கலாமே?” என்று வருத்தப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 58

பிக்பாஸ் – நாள் 58
பாலாஜிக்கு ஒரு முறை ‘ராஜமுந்திரி’ என்று எழுதியிருந்தேன். ராஜதந்திரம் அவரிடம் இருந்தாலும் கூடவே முந்திரிக்கொட்டைத்தனமும் இருப்பதால் இரண்டையும் மிக்ஸ் செய்து அப்படியொரு விசித்திர வார்த்தையை உருவாக்கியிருந்தேன். இன்று அதை மறுபடியும் நிரூபித்தார் பாலாஜி. ஒருவர் ஸ்மார்ட் ஆக இருக்கலாம். ஓவர் ஸ்மார்ட்டாகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டால் சில விஷயங்கள் நமக்கே திரும்பி வந்து விடும். இன்று அப்படித்தான் ஆயிற்று.

குத்துச்சண்டை மேடையில் எதிராளியின் கைகளைப் பின்னால் கட்டிப் போட்டு விட்டு கடகடவென்று அவரைக் குத்தி விட்டு ‘நான்தான் ஜெயிச்சேன்... கப்பு எனக்குத்தான்’ என்று ஒருவர் கத்தினால் அது எத்தனை அபத்தமாக இருக்குமோ, அத்தனை அபத்தமாக இருந்தது, பாலாஜி இன்று ‘ஆரி’யை கால்சென்டர் டாஸ்க்கில் டீல் செய்த விதம். ஆரிக்குப் பதில் சொல்ல எவ்வித வாய்ப்பையும் அளிக்காமல் ‘ஆதங்கம்’ என்கிற பெயரில் ஆரிக்கு எதிரான அனைத்து கருத்துகளையும் வரிசையாக கேட்டு விட்டு இறங்கி விட்டார் பாலாஜி.

இதன் மூலம் ஆரியைப் பற்றி ‘பார்வையாளர்கள் அறிந்து கொள்வார்கள்’ என்பது அவரது கணக்கு. ஆனால் இதன் மூலம் பாலாஜியின் கபட நாடகம்தான் வெளியானது. இந்த நோக்கில்தான் பார்வையாளர்கள் கருதுவார்கள் என்று நினைக்கிறேன்.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

துணைத்தலைவர் பதவியை ஏற்காமல் அழும்பு செய்தது, மைக் மாட்டாமல்தான் இருப்பேன் என்று வெளிப்படையாக அறிவித்தது, ஆரிக்குப் பதில் சொல்ல சந்தர்ப்பம் அளிக்காதது என்று வார துவக்கத்திலேயே பாலாஜி மீதான புகார்கள் ஏராளமாக சேரத் துவங்கிவிட்டன.

ஓகே... 58-வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘கனா’ படத்திலிருந்து ‘ஒத்தையடிப் பாதையிலே’ என்கிற பாடல் ஒலித்தது. மக்கள் ஏனோ இன்று மந்திரித்து விட்ட கோழி மாதிரி சுறுசுறுப்பில்லாமல் மெத்தனமாக எழுந்து அசைந்தார்கள். பாடலின் மெட்டு வேறு தாலாட்டுவது போலவே இருந்தது போல.

கால் சென்டர் டாஸ்க்கின் இரண்டாம் கட்டம். கடந்த வாரம் கேள்வி கேட்டவர்கள் எல்லாம் இந்த வாரம் பதில் சொல்பவர்களாக மாறுவார்கள்.

முதல் ஜோடி அர்ச்சனா vs ஆஜீத். ‘இந்தப் புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்-னு யாரு நெனச்சா’ என்பது போல் ‘நச்’சென்ற கேள்விகளை நைசாக செருகினார் ஆஜீத். சேலையுடுத்தி அன்பின் வடிவமாகவே உருவெடுத்திருந்த அர்ச்சனா, கடுப்பை மறைத்துக் கொண்டு இனிமையான குரலில் பதில் வழங்கினார்.

"லவ் பெட்ல இருந்து நீங்க யாரையாவது நாமினேஷன் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணியிருக்கீங்களா?” என்று முதலிலேயே அதிரடி பெளன்சரை ஆஜீத் வீச, "இல்லை" என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட அர்ச்சனா (வேறு வழியும் இல்லை) "ஆனா.. Worst performer கேட்டகிரியில் செலக்ட் பண்ணியிருக்கோம்" என்று சமாளித்தார். “வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் உள்ள பிடிக்காத விஷயங்களை சொல்லுங்க" என்று அடுத்த கேள்வியை வீசினார் ஆஜீத். 'பரவால்லையே... பய நம்பளைப் பார்த்து தேறிட்டானே’ என்று பிக்பாஸ் உள்ளுக்குள் புன்னகைத்திருக்க வேண்டும்.

"வீட்டுக்குப் போகணும்னு தோணிடுச்சு" என்று தன்னைப் பற்றி சொல்லிக் கொண்ட அர்ச்சனா, இதர போட்டியாளர்களிடமிருந்த குறைகளையும் பட்டியலிட்டார். ‘"ரம்யாவோட தராசு முள் இப்ப சாய்ஞ்ச மாதிரி தெரியுது'’ என்பது உள்ளிட்ட பல வெளிப்படையான விஷயங்கள் அர்ச்சனாவின் கருத்துகளில் வெளிப்பட்டன. அவை பெரும்பாலும் உண்மையாக இருந்தன.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

"நான் இந்த வீட்டில் தகுதியில்லாதவன் என்பதற்கு நான்கு காரணங்களைச் சொல்லுங்க" என்று ஆஜீத் தன்னைப் பற்றியே கேட்ட போது "அந்த மாதிரி என் மனசுல எதுவுமே இல்லை" என்று சொல்லி அழைப்பை தானே துண்டித்து விட்டார் அர்ச்சனா. இதன் மூலம் தன்னைப் பற்றிய நேர்மறையான பிம்பம் பார்வையாளர்களிடம் உருவாகும் என்று அவர் கணக்குப் போட்டிருக்கலாம். இதர போட்டியாளர்களைப் பற்றி வெளிப்படையான கருத்துக்களைச் சொன்னவர், ஆஜீத்தைப் பற்றியும் அப்படியே சொல்லியிருக்கலாம். அர்ச்சனாவிற்கு ஐந்து நட்சத்திரங்களை அள்ளி வழங்கினார் ஆஜீத்.

“என் மனசுல இருந்த விஷயங்களை எல்லாம் சொல்ல வெச்சிட்டான். ஸ்வீட் பாய்!" என்று அர்ச்சனா சொல்ல, “சூப்பரா பேசினான்ல" என்று ஆஜீத்தை மக்கள் புகழ்ந்தார்கள்.

அடுத்ததாக கேபி vs சோம். (இது ஏதோ ப்ளான் மாதிரியே இருக்குதே!) கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஒருவருக்கொருவர் வலிக்காமல் நடந்து கொண்டார்கள். "எதுக்கு பிக்பாஸ் வந்தீங்க?” என்ற கேபியின் கேள்விக்கு ‘அர்ச்சனாவின் அன்பைப் பெறுவதற்கு’ என்று சோம் சொல்லி விடுவாரோ என்று நினைத்தேன். இல்லை. தன்னுடைய கரியரில் பத்து வருடங்கள் வீணாக கடந்து போனதை உண்மையான வருத்தத்துடன் அவர் பகிர்ந்தபோது நமக்கே நெகிழ்வாகத்தான் இருந்தது.

ஆனால், இழந்துபோன காலத்தை எண்ணி வருத்தப்படும் சோம், விட்டதைப் பிடிப்பதற்காக பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை அடைந்திருக்கும் சோம், அந்த வாய்ப்பை இப்போதாவது சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் அர்ச்சனாவின் நிழலில் இருந்து விலகினால்தான் தன் தனித்தன்மையை வெளிப்படுத்த முடியும். ‘நான் நானாத்தான் இருக்கேன்’ என்கிற பாதுகாப்பான பதிலை சொல்லி சமாளிக்க முயன்றார் சோம்.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

"இந்த வாரம் நாமினேட் ஆகியிருப்பவர்களைப் பற்றி சொல்லுங்கள்" என்கிற கேபியின் அடுத்த கேள்விக்கு ஏறத்தாழ அனைவரைப் பற்றியும் பாசிட்டிவாக சோம் பதில் சொல்லியது சிறப்பு. ரம்யாவைப் பற்றி சொல்லும் போது மட்டும் "நைட்டு தூங்கும் போது உளறுவாங்க" என்றார். (நைட்லயுமா?!) "நைட்ல ஐஸ்கிரீம் திருடுவாங்க. இத்துப் போன ஒரு கடி ஜோக்கை இன்னமும் நல்லா கடிச்சு சொல்வாங்க. அவங்க போடற ஒரு டான்ஸ் ஸ்டெப்பை பிரபுதேவா கூட போட முடியாது" என்று எக்ஸ்ட்ரா புகழுரைகளை தன்னிச்சையாக சொல்லிக் கொண்டே போனார் சோம். (புகழ்வதில் நம்மை மிஞ்சிவிடுவான் போலிருக்கிறதே!)

கேபியின் மூவ்மென்ட்களைப் பார்த்தால் அவர் பாலாஜியிடமிருந்து சோமிற்கு ஷிஃப்ட் ஆகி விட்டதைப்போல் இருக்கிறது. சோமிடம் நிறைய வழிகிறார். போலவே அந்த டீமில் ஷிவானியை தனது போட்டியாக நினைத்ததைப் போல ரம்யாவை இங்கு போட்டியாக நினைக்கிறார் போல. சோமையும் ரம்யாவையும் இணைத்து அவர் ஜாலியாக கிண்டலடித்தாலும் அதில் உள்ளுக்குள் ஏதோவொரு ஏக்கம் மறைந்திருப்பது போல் தோன்றுகிறது. இவை வெறும் யூகங்களாக இருக்கலாம். பார்ப்பதற்கு அப்படித் தோன்றுகிறது.

“என்னைப் பத்தி ஏதாவது நல்ல விஷயங்களைச் சொல்லுங்க" என்று கேபி கேட்டவுடன் “கூச்சப்படாமல் கலாய்ப்பது... சிறப்பாக டான்ஸ் ஆடுவது... கண்ணைப் பார்த்து பேசுவது உண்மையாக இருக்கிறது" போன்ற காரணங்களைச் சொல்லி கேபியை அதிகமாக வெட்கப்பட வைத்தார் சோம். (ஆனால் இவர் கேள்வி கேட்பவராக இருந்த போது கேபி டான்ஸ் ஆடாததை ஒரு குறையாக முன் வைத்தார்).

கேபியின் கேள்விகள் முடிந்த பிறகு ‘ஜோபியின் ரசிகர் மன்றத்திலிருந்து’ ஒரு போன் வந்தது போன்ற பாவனையுடன் ‘உங்களை நாமினேட் பண்ண முடியாது’ என்று சொல்லி உரையாடலைத்தானே துண்டித்து விட்டார் சோம். இதன் மூலம் அவர் அடுத்த வாரம் நாமினேட் ஆகி விடுவார்.

‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’ போட்டியாக நடக்க வேண்டிய இந்த டாஸ்க்கை இவர்கள் விக்ரமன் படம் போல ‘லாலாலா’ பாடிய படி நடத்துவதைக் கண்டு உள்ளுக்குள் பிக்பாஸ் கொலைவெறி ஆகியிருப்பார் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58
“ஏன் ஒரு மாதிரி ஆயிட்டீங்க?” என்று வெளியே வந்த சோமை விசாரித்துக் கொண்டிருந்தார் கேபி. ‘பிளாஷ்பேக்’கை விவரித்த காரணத்தினால் அப்படி ஆனதாக சோம் சொன்னது நெகிழ்வு. வருங்காலம் எப்படியிருக்குமோ என்கிற கவலையும் அச்சமும் நெருக்கடியும் ஏற்படும் ஓர் இளைஞனை சோமிடம் பார்க்க முடிந்தது. ஆல் தி பெஸ்ட் பிரதர்!

"மத்தவங்களுக்கு எல்லாம் ஒரு வரில பதில் சொல்லிட்டு ரம்யா போர்ஷனுக்கு மட்டும் ஒரு பெரிய காவியமே படைச்சிட்டார் சார்" என்று ரமேஷ் சோமை கிண்டல் செய்ய, கேபியும் அதில் இணைந்து கொண்டார். (சாக்லேட்டை பிரிக்கறதுலதான் க்ளைமாக்ஸ் இருக்கும் போல!).

அடுத்து ஆரம்பித்தது அந்த ஆக்ரோஷமான போட்டி. ஆரி Vs பாலாஜி. ஆனால் இது இரண்டு பக்கமிருந்தும் போட்டியிடும் விளையாட்டாக அல்லாமல் ஒருபக்கமாக சாய்ந்து விட்டதுதான் பரிதாபம். அப்படியான முறைகேடான விளையாட்டை விளையாடினார் பாலாஜி.

‘"உங்களோட பெரிய ஃபேன் நானு…. ஆனா வீட்டிற்கு வெளியில" என்று துவக்கத்திலேயே குண்டூசியை இறக்கிய பாலாஜி, போகப் போக கடப்பாறைகளாக இறக்க ஆரம்பித்தார்.

"பெண்களுக்கு ஒரு பிரச்னைன்னா நீங்க தட்டிக் கேட்கறீங்க. நல்ல விஷயம். சனத்திற்கும் எனக்கும் சண்டை வந்தப்ப கூட தட்டிக் கேட்டீங்க. ஆனா ரமேஷ் லெமன் கேட்ட விஷயத்துல அனிதா பதில் சொன்னப்ப நீங்க ரமேஷை தட்டிக் கேட்காம, அனிதாவைப் போய் ‘நீங்க தாழ்வு மனப்பான்மையுள்ளவர்’னு சொல்லியிருக்கீங்க... அவங்க என்கிட்ட வந்து அனத்தினாங்க.. ரமேஷ் பெரிய தயாரிப்பாளர் பையன்றதால அவரை கேட்காம விட்டுட்டீங்களோ?"

"சேர்ந்து விளையாடலாம்னு முதல்ல சொல்லிட்டு, இப்பல்லாம் சின்ன மேட்டர்ல கூட மத்தவங்களை அடிச்சி காலி பண்ணப் பார்க்கறீங்க... எல்லாத்துக்கும் தைரியமா குரல் தர்ற நீங்க... 'ஏன் கேப்டன்சியை விட்டுத் தந்தீங்க?’ ன்னு ரம்யா கேட்டப்ப சரியா பதில் சொல்லாம தட்டிக் கழிச்சீங்க… ஷிவானியும் நானும் லவ் பண்றமா இல்லையான்னு நாங்கதான் சொல்லணும்... அட்வைஸ் சொல்றேன்னுட்டு ஆஜீத்தை டார்ச்சர் பண்றீங்க…"

இப்படி பெரிய பட்டியலாக நீட்டிய பாலாஜி, "நான் கெட்டவன்-னு சொல்றவனை கூட நம்பலாம். தன்னை நல்லவன்னு சொல்றவனை கூட நம்பலாம். ஆனா... நான் மட்டும்தான் நல்லவன்னு சொல்றவனை நம்பவே முடியாது" என்று கமல் திரைப்படத்தின் வசனத்தை காப்பியடித்து ஆரிக்கு எதிரான ஆயுதமாக மாற்றினார்.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

"நான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட போது டிராமான்னு சொன்னீங்க... அப்ப கமல் சார் ஷோல மட்டும் ரொம்ப லேட்டா சாம் கால்ல விழறேன்னு சொன்னீங்க. அப்ப அது டிராமா இல்லையா? இப்ப நடந்த கேப்டன்சி டாஸ்க்ல கூட பழைய பகையை மனசில வெச்சி என்னை பழிவாங்கிட்டீங்களோன்னு தோணுது..."

‘ரொம்ப லெங்க்த்தா போயிட்டிருக்கே’ என்கிற வடிவேலுவின் வசனம்போல் பாலாஜியின் குண்டூசிகளும் கடப்பாறைகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. ‘பீஸூ பீஸா கிழிக்கும் போது யேசு போல முகத்தைப் பாரு’ என்கிற பாட்ஷா பாடலின் வரியைப் போல அனைத்திற்கும் வலுக்கட்டாயமான புன்னகையுடன் அமர்ந்திருந்த ஆரி ‘'இதுக்கு இப்ப பதில் சொல்லட்டுமா'’ என்று ஒவ்வொரு முறையும் பணிவாகக் கேட்ட போது "இருங்க... நாம திரும்பியும் வருவோம்... இதெல்லாம் என் ஆதங்கம்தான்... கொட்டிடறேன்" என்று அழும்பு செய்து கொண்டிருந்த பாலாஜி ஒரு கட்டத்தில், "இதெல்லாம் சொல்லணும்னு தோணுச்சு..." என்று அழைப்பைத் துண்டித்து விட்டார்.

“என்னா பாஸூ... நீங்க பேசவேயில்ல" என்று ஷாக்கானார் ரியோ. "அவரு சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டு வெச்சிட்டார்னு நெனக்கறேன்" என்று சரியான பாயின்ட்டைப் பிடித்தார் ரம்யா. பாலாஜியின் அந்த செய்கைக்கு ஆரி கோபப்படவில்லை. அல்லது கோபம் வராதது போலவே பாவனை செய்தார்... "அவனுக்குத் தோணினதை சொல்லிட்டான்... ஸ்மார்ட் மூவ்..." என்ற ஆரி ‘என் ஸ்வப்னா புத்திசாலிடா’ என்பதைப் போலவே ‘என் பாலாஜி புத்திசாலி’ என்று சான்றிதழும் தந்தார்.

ஸ்டார் ரேட்டிங்கிற்காக ஆரி மறுபடியும் பாலாஜியை அழைக்க வேண்டியிருந்தது. "அண்ணா சாரி கேட்கணும்... விளக்கம் சொல்றதுக்கு டைம் தர்றேன்னு சொல்லியிருந்தேன். மறந்துட்டேன்..." என்றார் பாலாஜி.

'அடடே! நாதஸ் திருந்திட்டாம்ப்பா... நாமதான் தப்பா நெனச்சிட்டோம்’ என்று நமக்குள்ளும் அப்போது தோன்றியது. ‘சரி பதில் சொல்லலாமா’ என்பது போல் ஆரி தயார் ஆனவுடன் ‘ஒரு நிமிஷம்ண்ணா... இதையெல்லாம் நேர்ல விவாதிச்சா நீங்க என்னைப் பேசவே விட மாட்டீங்க... அதனால்தான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் மனசுல இருந்ததையெல்லாம் கொட்டிட்டேன். நான் போனை வெக்கறேன், நன்றி!" என்ற பாலாஜி ஐந்து நட்சத்திரங்களை வழங்கிவிட்டு போனை வைத்து விட்டார். "என்ன பாஸூ... இப்பவும் நீங்க பேசலையா?” என்று மறுபடியும் ஷாக் ஆனார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

"பழைய குப்பைகளை மனதில் சுமையாக வைத்துக் கொள்ளாதீர்கள். இறக்கி வைத்து விடுங்கள்" என்று கமல் சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் பாலாஜி அனைத்தையும் தூக்கி ஆரியின் தலையில் வைத்தது அநியாயம். அழைப்பைத் துண்டித்ததின் மூலம் அடுத்த வார எவிக்ஷன் பிராசஸஸிற்கு நாமினேட் ஆனார் பாலாஜி.

“முதல்ல கிளாரிட்டி வேணும்தான் ஆரம்பிச்சான். அப்புறம் ஆதங்கம்னு மாத்திட்டான். ஆரி ப்ரோவை பதில் சொல்லவே விடலை" என்று சோமிடம் இதை சொல்லிக் கொண்டிருந்தார் கேபி. "அவன் கருத்து மட்டுமே வரணும்னு நெனச்சான்... சாதிச்சிட்டான்" என்று அடிபட்ட முகத்துடன் வெளியே வந்து சொல்லிக் கொண்டிருந்தார் ஆரி.

"வெளியே இருக்கற ஆரிக்கு நான் ஃபேன்... உள்ளே இருக்க ஆரிக்கு இல்ல... இதான் என் கான்செப்ட்" என்று லவ் பெட் அருகே அமர்ந்து அர்ச்சனா டீமிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. "என்னைக் காலி பண்ணிட்டேல்ல... எனக்கும் பதில் சொல்ல நீ வாய்ப்பு தந்திருக்கணும்... அப்பத்தான் கம்ப்ளீட் ஆகியிருக்கும்" என்கிற நியாயமான கருத்தை அப்போது உள்ளே வந்து சொன்னார் ஆரி.

இந்த உரையாடலில் பாலாஜி ஜெயித்து விட்டதாக தன்னைக் கருதிக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் ஜெயித்தவர் ஆரிதான். பார்வையாளர்களின் கரிசனமும் அனுதாபமும் ஆரியின் பக்கம்தான் முழுக்க சாயும் என்பது என் யூகம். தனக்குத்தானே பாலாஜி சூன்யம் வைத்துக் கொண்டார் என்று தோன்றுகிறது. விசாரணை சபையில் இது விரிவாக விவாதிக்கப்படலாம்.

பாலாஜி ஷிவானியை தங்கச்சி என்றதாகவும் அவர் பதிலுக்கு ‘போடா லூசு’ என்றதாகவும் தன் காதில் விழுந்த தகவலை சிரிக்கச் சிரிக்க ரம்யாவிடம் பகிர்ந்து கொண்டிருந்தார் ஆஜீத். அப்போது ஷிவானியைப் போலவே நடந்து கொண்டு ரம்யா பேசிக் காட்டியது அருமை. "நீங்களும் என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று சிணுங்கினார் ஷிவானி.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58
பாலாஜியை ஓரங்கட்டிய ரமேஷ், "ஏம்ப்பா... ப்ரொட்யூசர் பையன் மேட்டரையெல்லாம் இழுத்திருக்க வேண்டாமே. அனிதா மேட்டரை என்கிட்ட வந்து நேரா கேட்டிருக்கலாமே?” என்று வருத்தப்பட்டார். ரமேஷின் வருத்தத்தில் நியாயம் இருந்தது. ‘ஒரு ஃப்ளோல வந்துடுச்சிண்ணா. மன்னிச்சுடுங்க’ என்று எஸ்கேப் ஆக முயன்றார் பாலாஜி. பிட்டு பேப்பர் மாதிரி பெரிய லிஸ்ட்டில் முன்கூட்டியே எழுதிச் சென்ற பாலாஜிக்கு எப்படி அது ‘ஃப்ளோ’வில் வரும்?

கடந்த சீஸனில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி போட்டியாளராக இருந்த போது ‘சினிமா வாய்ப்பு கிடைக்கும்’ என்பதால் அவரிடம் ஜூலி உள்ளிட்ட சிலர் பணிவாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சீஸனிலும் இப்போது இந்த விஷயம் ‘உள்ளுக்குள்ளேயே’ எழுந்திருக்கிறது.

இதில் காமெடி என்னவென்றால் சக்திக்கும் சரி... ரமேஷிற்கும் சரி... முதலில் அவர்களுக்கே சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பதுதான். தனக்கு மிஞ்சினால்தானே தானமும் தர்மமும். ஒருவேளை ஜூலி அப்படி சக்தியிடம் நடந்திருந்தால் கூட இப்போது அவரொன்றும் ஸ்டாராக இல்லையே?!

கிச்சன் மேடையில் இருந்த கேபியிடம், "இந்த கான்வர்சேஷன் வெளில பார்க்க எப்படியிருந்துச்சு?” என்று கவலையுடன் விசாரித்துக் கொண்டிருந்தார் ஆரி. "உங்க பேரை டேமேஜ் பண்றதுதான் பாலாஜியோட டார்கெட்டா இருந்தது" என்கிற நிதர்சனமான உண்மையைச் சொன்னார் கேபி.

அடுத்ததாக ‘சொல்லி அடிப்பேனடி’ என்கிற முட்டை டாஸ்க் நடந்தது. இது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்கு ரமேஷ்தான் நடுவர். ஆனால் இவரால் இந்த விளையாட்டை திறம்பட நடத்த முடியவில்லையோ என்னமோ... ஒரு குறும்பான அசரிரீ குரல் வந்து நடத்தியது... "என்ன நடுவர் அண்ணே... முடிவுகளைச் சொல்லுங்க..." என்று அந்தக் குரல் ரமேஷை அவ்வப்போது மெலிதாக அதட்டியது சுவாரஸ்யம். தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் அவ்வப்போது திடுக்கிட்டார் ரமேஷ்.

வீடு இரண்டு அணிகளாகப் பிரிய வேண்டும். பஸ்ஸர் அடித்ததும் இரண்டு அணியிலிருந்தும் ஒவ்வொருவர் வர வேண்டும். இருவருக்கும் இடையில் ஒரு முட்டை மந்திரித்து வைக்கப்பட்டிருக்கும். அசரிரீ குரல் ‘தலை’ என்று சொல்லும் போது தலையைத் தொட வேண்டும். கால் என்று காலைத் தொட வேண்டும். ‘முட்டை’ என்று சொல்லும் சமயத்தில் டக்கென்று முட்டையை எடுத்துவிடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர். அவர் தோற்றவரின் தலையில் முட்டையை உடைக்க வேண்டும். (முட்டை விக்கற விலைல இது தேவையா? உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்கிற உபதேசமெல்லாம் எங்கே போனது?)

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

குரல் தந்தவர் இந்தப் போட்டியை சுவாரஸ்யமாக நடத்தினார். பேசாமல் அவரையே ரமேஷிற்குப் பதிலாக உள்ளே இறக்கியிருக்கலாம் போல. ‘முட்டி’ என்று அவர் சொன்ன போதெல்லாம் போட்டியாளர்கள் முட்டையை நோக்கிப் பாய்ந்து பிறகு தடுமாறியது சுவாரஸ்யம்.

தோற்றவரின் தலையில் முட்டையை உடைக்கும் போது சிலர் அதை நிதானமாகச் செய்தார்கள். சிலர் மண்டையைப் பேர்த்து விடுவது போல உடைத்தார்கள். சைவ உணவுப் பழக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் (பிக்பாஸில் அப்படி யாரும் இருப்பது போல் தெரியவில்லை) அவர்களுக்கு இந்தப் போட்டி நெருடலாக மாறிவிடலாம். தொடர்ந்து எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்த ரம்யா ஒரு கட்டத்தில் மாட்டிக்கொண்டது சுவாரஸ்யம். அனிதாவின் முகம் முழுக்க வழியும்படி கொலைவெறியுடன் முட்டையை உடைத்தார் நிஷா.

ஷிவானிக்கும் சனத்திற்கும் இடையில் போட்டி நடந்த சமயத்தில் ‘தாங்கள்தான் முட்டையைப் பறித்ததாக’ இருவருமே சண்டையிட்டார்கள். இதில் சனம் ஆக்ரோஷமாக வாதாடினார். ‘ஸ்போர்ட்மேன்ஷிப்பாக இருந்தீர்கள்’ என்று கமல் பாராட்டி விட்டதால் பாலாஜியின் மோடிற்கு மாறி ஒவ்வொன்றிற்கும் அடம் பிடிக்கலாம் என்று சனம் நினைக்கிறாரோ என்னவோ? இறுதியில் பாலாஜி இருந்த அணி வெற்றி பெற்றது.

“நீங்க ஏன் போனை வெச்சீங்க.. அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்திருக்கணும். ஆரி உங்களை சேவ் பண்ணனும்தான் நெனச்சாராம்" என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சனம். "அவர் என்னை சேவ் பண்றதை நான் விரும்பலை. யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணியிருப்பேன். ஆரியைப் பற்றி பார்வையாளர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினேன்" என்றார் பாலாஜி. ஆரியைப் பதில் சொல்ல அனுமதிக்காததால் அவரின் திட்டம் தோல்வி என்றுதான் பொருள்.

"விஜய் டிவில எப்பப்பார்த்தாலும் இவங்கதான் வர்றாங்க. அதிலும் ஒரே மாதிரியான காமெடி" என்று முகத்தை சுளித்துக் கொண்டு நிஷாவைப் பார்த்து சொன்னார் ஆஜீத். எனக்கும் விஜய் டிவி மீது நெடுங்காலமாக இதே விமர்சனம் இருக்கிறது. ஏறத்தாழ எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் ஒரே முகங்கள் திரும்பத் திரும்ப வருவது பயங்கர சலிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே தோசை மாவை வைத்துக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் ஊற்றுவது போல திரும்பத் திரும்ப ஒரே ஆட்களை வைத்துக் கொண்டு வெவ்வேறு தோசை ஊற்றி சமாளிக்கிறார்கள்.

பிக்பாஸ் – நாள் 58
பிக்பாஸ் – நாள் 58

ஆஜீத்தின் கமென்ட்டை வைத்துக் கொண்டு நிஷாவை ரியோவும் அர்ச்சனாவும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ‘அது standup comedy இல்ல. ஒரே மாதிரியான standard comedy’ என்று அர்ச்சனா ரைமிங்கில் கலாய்த்தது சுவாரஸ்யம்.

‘சமரசத்தோடு நடந்த இந்த டாஸ்க்கில் சில சவாலான திருப்பங்கள் இனிதான் நடைபெற உள்ளன’ என்கிற வாய்ஸ் ஓவரோடு நிகழ்ச்சி முடிந்தது. ‘நாளைக்கும் வந்துடுங்கோ சாமியோவ். கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கப் போவுது’ என்பது மாதிரியே அந்த அறிவிப்பு இருந்தது.

ஆரிக்குப் பதில் அளிக்க சந்தர்ப்பமே தராமல் பாலாஜி தன் ஆதங்கத்தை மட்டும் பதிவு செய்து விலகியது நியாயமா, அல்லது அது அவரின் ஸ்ட்ராட்டஜியா? உங்கள் ஆதங்கங்களை கொலைவெறியுடன் கமென்ட் பாக்ஸில் கொட்டுங்கள்.