Published:Updated:

“மிஸ் பண்ணக்கூடாதுன்னு காதலைச் சொல்லிட்டேன்!”

மதன்-ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
மதன்-ரேஷ்மா

டிவி - ரியல் ஜோடி

“மிஸ் பண்ணக்கூடாதுன்னு காதலைச் சொல்லிட்டேன்!”

டிவி - ரியல் ஜோடி

Published:Updated:
மதன்-ரேஷ்மா
பிரீமியம் ஸ்டோரி
மதன்-ரேஷ்மா

`லாக்டௌன் மட்டும் இல்லாம இருந்திருந்தா இப்போ நாங்க தலை தீபாவளி கொண்டாடியிருப்போம்!' என்று புன்னகைக்கிறார்கள், மதன்-ரேஷ்மா ஜோடி. `கலர்ஸ் தமிழ்' டி.வி-யில் ஒளிபரப்பாகும் `அபி டெய்லர்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர்களுடன் ஒரு குட்டிக் கலந்துரையாடல்.

கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார் மதன். ``என் சொந்த ஊர் மதுரை. டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் என் காலேஜ் ஃப்ரெண்ட். அவர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். அவர் சொன்னதாலதான் நடிக்க ட்ரை பண்ணலாம்னு முடிவெடுத்தேன். `கனா காணும் காலங்கள்' சீரியலில் என்ட்ரி. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆதிக்கின் `த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ஜிவிக்கு ஃப்ரெண்டா நடிச்சேன். இப்போ சினிமா, சீரியல்னு தொடர்ந்து நடிக்கிறேன்'' என்றவரிடம், ரேஷ்மாவைச் சந்தித்த கதையைப் பகிரச் சொன்னால் சிரிக்கிறார்.

``ஜீ தமிழில் `டான்ஸ் ஜோடி டான்ஸ்' ஷோவில்தான் இவங்களைப் பார்த்தேன். அப்போ பெருசா அவங்ககிட்ட நான் பேசினதுகூடக் கிடையாது. அதே சேனலில் `பூவே பூச்சூடவா'ன்னு ஒரு சீரியலில் நடிச்சேன். அந்த சீரியலில்தான் நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸானோம். குடும்பத்துக்காக அவங்க மெனக்கெட்டுப் பல விஷயங்கள் பண்றது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இவங்களைக் கண்டிப்பா மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தோண ஆரம்பிச்ச தருணமே அவங்ககிட்ட காதலைச் சொல்லிட்டேன். உடனே கிரீன் சிக்னல் கிடைச்சுது'' என்றதும் ரேஷ்மா பேச ஆரம்பித்தார்.

``மதன் தன்னைச் சுற்றி இருக்கிறவங்களை எப்பவும் சிரிக்க வச்சிட்டே இருப்பார். அவர் பேச்சைக் கேட்டா, நேரம் போறதே தெரியாது. அந்தப் பேச்சு பிடிச்சதனாலதான் அவர்கிட்ட ஃப்ரெண்ட் ஆனேன். ஒரு ஃப்ரெண்டா எல்லா சந்தோஷத்திலும், சோகத்திலும் என்கூட இருந்தார். பேசப் பேச ஒருத்தருக்கொருத்தர் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு வாழ்க்கை முழுக்க மதன்கூட ஃப்ரெண்டாக டிராவல் பண்ணணும்னு ஆசை. ஆனா, வேற ஒருத்தருடன் கல்யாணம் ஆச்சின்னா அது சாத்தியமான்னு தெரியாது. அதுக்கு ஃப்ரெண்டையே கணவராக்கிட்டா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு. ரெண்டு பேருக்குள்ளேயும் லவ் இருக்குன்னு ஒருத்தருக்கொருத்தர் தெரியும். அவர் முதலில் காதலை வெளிப்படுத்தவும் காதலர்களாகிட்டோம்'' என்றவர் தன் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்தார்.

“மிஸ் பண்ணக்கூடாதுன்னு காதலைச் சொல்லிட்டேன்!”

``அப்பா அம்மா ரெண்டு பேரும் கேரளா. எனக்கு மாடலிங்ல ஆர்வம் இருந்ததால அதுதொடர்பான விஷயங்கள் பண்ணிட்டு இருந்தேன். `மிஸ் சென்னை' டைட்டில் வின் பண்ணினேன். அந்தச் சமயத்தில்தான் ஜீ தமிழ் `டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சிக்கு செலக்ட் ஆனேன். அந்த ஷோ மூலமா `பூவே பூச்சூடவா' சீரியலில் லீடு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. மதன் ரொம்பவே ஜாலியான பர்சன். அதனாலேயே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆரம்பத்தில் எங்க காதலை ரெண்டு பேருடைய வீட்டிலும் ஏத்துப்பாங்களான்னு ரொம்பவே பயந்தோம். ஆனா, பயந்த அளவுக்கு எதுவும் நடக்கலை. கிட்டத்தட்ட ஐந்து வருஷம் எங்க லவ்ல நாங்க ஸ்ட்ராங்கா இருந்ததால அவங்களும் புரிஞ்சுக்கிட்டாங்க'' என்றதும் மதன் தொடர்ந்தார்.

``ரேஷ்மா ரொம்ப போல்டான பொண்ணு. நான் எப்பவும் அவளை சிங்கம்னுதான் கூப்டுவேன். அவங்களை வாழ்க்கை முழுக்க சந்தோஷமா பார்த்துப்பேன். இப்போ நிறைய ரிசர்ச் பண்ணி ஒரு கதை எழுதிட்டு இருக்கேன். அதை ஒரு நல்ல டைரக்டர்கிட்ட கொடுத்துப் படம் பண்ணணும். என் அப்பா ஒரு செஃப். எனக்கும் சமையலில் நிறைய இன்ட்ரஸ்ட் இருக்கு. ஃப்யூச்சர்ல சொந்தமா ஒரு ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் பண்ணலாம்னு பிளான் இருக்கு'' என்றவரின் கரங்களைப் பற்றியவாறு ரேஷ்மா பேசினார்.

``இப்போ ரெண்டு பேரும் `அபி டெய்லர்' சீரியலில் நடிக்கிறோம். ஃபர்ஸ்ட் டைம் ஜோடியா சேர்ந்து நடிக்கிறது ரொம்பவே ஜாலியாவும், புது அனுபவமாவும் இருக்கு. எனக்கு எதிர்காலத்தில் புரொபஷனல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகணும்னு ஆசை'' எனப் புன்னகைத்தார். தலைதீபாவளி வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.