Published:Updated:

அப்போ இப்போ-11: "ஆங்கரா ரிஜிஸ்டர் ஆகிட்டு படத்துல நடிக்கிறது ரொம்பவே கஷ்டம்!" - லிங்கேஷ் ஷேரிங்ஸ்

லிங்கேஷ்

நான் சன் மியூசிக்ல இருந்தப்ப பீக் லெவலில் ரசிகர்களைப் பார்த்தேன். நாம போய் இறங்கினாலே நம்மளைப் பார்க்க 200,300 பேர் இருப்பாங்க. அதே இடத்துல 4,5 வருஷம் கழிச்சு போகும்போது யாருமே நம்மளை கண்டுக்கலைங்கிறப்ப தான் வாழ்க்கையோட எதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டேன்

அப்போ இப்போ-11: "ஆங்கரா ரிஜிஸ்டர் ஆகிட்டு படத்துல நடிக்கிறது ரொம்பவே கஷ்டம்!" - லிங்கேஷ் ஷேரிங்ஸ்

நான் சன் மியூசிக்ல இருந்தப்ப பீக் லெவலில் ரசிகர்களைப் பார்த்தேன். நாம போய் இறங்கினாலே நம்மளைப் பார்க்க 200,300 பேர் இருப்பாங்க. அதே இடத்துல 4,5 வருஷம் கழிச்சு போகும்போது யாருமே நம்மளை கண்டுக்கலைங்கிறப்ப தான் வாழ்க்கையோட எதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டேன்

Published:Updated:
லிங்கேஷ்

 ` மழை வருவதற்கு முன்னர் வருகிற மழையின் வாசம் போல லிங்கேஷ் பேச ஆரம்பிக்கும் போதே அவருடைய கணீர் குரல் அவரின் அடையாளத்தை நினைவூட்டியது. 90களில் பிரபல ஆங்கராக வலம் வந்தவர். தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் லிங்கேஷ். விகடனின் `அப்போ இப்போ' தொடருக்காக அவரைச் சந்தித்தோம்.

லிங்கேஷ்
லிங்கேஷ்

" என் அப்பா போலீஸுங்கிறதனால வீட்ல எப்பவும் ஸ்ட்ரிக்ட் ஆகத்தான் இருப்பார். நான் பயங்கரமா சேட்டை பண்ணுவேன். என்னோட சின்ன வயசு எனக்கு பர்சனலா ஜாலியாதான் இருந்துச்சு. எப்பவும் அடிதடி, சண்டை தான்! என் அப்பா பயங்கரமா அடிப்பாரு. கிட்டத்தட்ட திருச்சிற்றம்பலம் பிரகாஷ்ராஜ் மாதிரிதான் என்னோட அப்பாவும்! உடம்புல இருக்கிற எல்லா தழும்பும் என் அப்பா அடிச்சதுல வந்ததுதான். என்னோட சின்ன வயசு அனுபவங்களை வச்சு கிட்டத்தட்ட 20 படத்துக்கும் மேல எடுக்கலாம்னா பாத்துக்கோங்க அத்தனை அனுபவங்கள் இருக்கு.

ஸ்கூல் முடிச்சதும் லயோலா தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணமே சினிமாதான்! அங்கேயே ஸ்ட்ரீட் பிளே, கல்சுரல் ஈவன்ட்னு எல்லாத்துலேயும் கலந்துப்பேன். எம் ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் சேர்ந்தேன். அங்க படிச்சிட்டு இருக்கும்போதே ஜெயா டிவியில் அசிஸ்டென்ட் டைரக்டராக போக ஆரம்பிச்சேன். அந்தத் துறை பிடிச்சுப் போக படிப்பை விட்டுட்டு அதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்" என்றவரிடம் சச்சின் படம் குறித்துக் கேட்டோம்.

லிங்கேஷ்
லிங்கேஷ்

``சச்சின் படத்துல நடிக்கிறதுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தேவைங்கிறதைத் தெரிஞ்சுகிட்டு தாணு சார்கிட்ட கேட்டேன். ஏற்கெனவே நிறைய ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இருக்காங்கன்னு சொன்னார். ஆனாலும், பரவாயில்லைன்னு சொல்லி நைட்டோட நைட்டா கிளம்பி ஊட்டிக்குப் போனேன். படத்துல தூரத்துல ஒரு 150 பேர் நின்னுட்டு இருப்பாங்க. அதுல நானும் ஒருத்தன்! காலையிலிருந்து சாப்பிட முடியல. பயங்கரமான குளிர் வேற! இட்லி, சட்னி எல்லாமே பனியில் உறைஞ்சு இருந்தது. நாளைக்காவது ஏதாவது சீன் இருக்குமான்னு அங்க உள்ளவங்ககிட்ட கேட்டேன். அப்ப அவங்க நிறைய பேர் வந்திருக்காங்க... நீ முடிவு பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க. ஒரு நாள் முழுக்க சாப்பிடல. நைட்டு தூங்க கிச்சன்ல மட்டும்தான் இடம் இருந்துச்சு. மனசு ஏதோ நீ தப்பான இடத்துல எதையோ தேடிட்டு இருக்க... சென்னைக்கு போடான்னு சொல்லுச்சு. தளபதியைப் பார்க்க மட்டும்தான் முடிஞ்சது. அவரோட நடிக்க முடியல. ஆனாலும், பரவாயில்லைன்னு ஊருக்குக் கிளம்பி வந்துட்டேன். அதற்குப் பிறகு சன் மியூசிக் ஆடிஷனில் கலந்துகிட்டு ஆங்கர் ஆனேன்" என்றவர் ஆங்கர் அனுபவம் குறித்துப் பேசினார்.

"2014க்குப் பிறகு சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம் ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது. நாங்க இருந்த காலகட்டத்தில் அது இல்ல. ஆங்கரா ரிஜிஸ்டர் ஆகிட்டு படத்துல நடிக்கிறதுங்கிறது ரொம்பவே கஷ்டம். டிவி ஆர்ட்டிஸ்ட் சினிமாவில் நடிக்க முடியாது. டிவியில் இருந்ததை மறைக்கிறதுக்காக நாம ஒன்னு பண்ணும்போது டிவியில் இருந்தவங்க எல்லாரும் நடிக்க வந்துட்டாங்க. அதுக்காக நாம மறுபடியும் டிவிக்குள்ளே போக முடியாது. நான் சன் மியூசிக்ல இருந்தப்ப பீக் லெவலில் ரசிகர்களை பார்த்தேன். நாம போய் இறங்கினாலே நம்மளைப் பார்க்க 200,300 பேர் இருப்பாங்க. அதே இடத்துல 4,5 வருஷம் கழிச்சு போகும்போது யாருமே நம்மளை கண்டுக்கலைங்கிறப்ப தான் வாழ்க்கையோட எதார்த்தத்தைப் புரிஞ்சுகிட்டேன்" என்றவர் இயக்கநல் ரஞ்சித்துக்கும் அவருக்குமான நட்பு குறித்துப் பேசினார்.

லிங்கேஷ்
லிங்கேஷ்

2012-ல் ரஞ்சித் அண்ணாவை மீட் பண்ணினேன். அவருடைய படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். அந்த சமயம் நான் ஜீரோவில் இருந்து மறுபடி ஓட ஆரம்பிச்ச சமயம்! கபாலி படத்துல எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை ரஞ்சித் அண்ணா கொடுத்தார். அதைத் தொடர்ந்து இப்ப வரைக்கும் படங்கள் போயிட்டு இருக்கு. எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்கும். இதை விட்டுட்டு என்னால வெளியில போக முடியாது. எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் இது மட்டும்தான்! ஃபேமஸாக இருந்துட்டு அந்த ஃபேமை மறுபடி பிடிக்க முடியாம பலர் மன அழுத்தத்தில் இருக்காங்க. வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, ஏமாற்றம், அவமானம் எல்லாத்தையும் பார்த்துட்டேன். போராட்டமே வாழ்க்கையாகிடுச்சு என்றவரிடம் `காலேஜ் ரோடு' படம் குறித்துப் பேசினோம்.

காலேஜ் படிக்கிற பையன் மாதிரி இருக்கணும்னு கடுமையா வெயிட் லாஸ் பண்ணினேன். இப்ப 65 கிலோ தான் இருப்பேன். இந்தப் படத்துடைய இயக்குநர் ஜெய் அமர் சிங் என்னோட நெருங்கிய நண்பன். இந்தப் படத்துல ஆரம்பத்தில் நான் நடிக்கிற ஐடியாவே இல்ல. எதார்த்தமா அமைஞ்சதுதான் இந்தத் திரைப்படம். டானாக்காரன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துல நடிச்சதால எந்தப் படமும் கமிட் பண்ணிக்கல. இப்ப தொடர்ந்து 4,5 படங்களில் கமிட் ஆகியிருக்கேன்!" எனப் புன்னகைத்தார்.

லிங்கேஷ்
லிங்கேஷ்

இன்னும் பல விஷயங்கள் குறித்து லிங்கேஷ் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!