Published:Updated:

``கோகுலின் இறப்பு என்னைக் கலங்கச் செய்துவிட்டது"- ரசிகரின் மறைவால் நடிகர் பாலகிருஷ்ணா கண்ணீர்

தன் ரசிகரின் மறைவிற்கு நடிகர் பாலகிருஷ்ணா இரங்கல்!

ஜீ டிவி தெலுங்கு சேனலில் ஒளிபரப்பான 'டிராமா ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர் கோகுல் சாய். இவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர். அவருடைய கெட்டப்பில் கோகுல் வரும் ஒவ்வொரு எபிசோடும் ஹிட். படத்தில் பாலகிருஷ்ணா பேசிய வசனங்களை அவரைப் போலவே பேசி தனக்கான ரசிகர்களை உருவாக்கினார், கோகுல் சாய். அவருடைய வீடியோக்களுக்கு இணையத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அந்த நிகழ்ச்சியில் இவரை செல்லமாக ஜூனியர் பாலகிருஷ்ணா என்று அழைக்க ஆரம்பித்தனர். பாலகிருஷ்ணாவும் இவரது பர்ஃபாமென்ஸைப் பார்த்து பாராட்டியுள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோகுல் சாய், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அக்டோபர் 17-ம் தேதி இரவு கோகுலுடைய உயிர் பிரிந்தது.

பாலகிருஷ்ணா - கோகுல் சாய்
பாலகிருஷ்ணா - கோகுல் சாய்

இந்தச் சிறுவனுடைய இறப்பு தெலுங்கு சின்னத்திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏராளமான நடிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறப்புச் செய்தியை அறிந்த நடிகர் பாலகிருஷ்ணா, ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் ரசிகர்களைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. கோகுல் என்னுடைய தீவிர ரசிகன். இந்தச் சிறுவனுடைய இறப்புச் செய்தி என்னை மிகவும் கலங்கச் செய்துள்ளது. கோகுலைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தச் சிறுவயதில் கோகுலின் நடிப்புத் திறனும் டயலாக் டெலிவரியிலும் என்னை ஈர்த்தது. இந்தச் சிறுவனின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.