தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் புதுப்புது சேனல்களைத் தொடங்கிவந்த காலத்தில் சன் டி.வி-யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்தவர் பிரஜின். 'பக்கத்து வீட்டுப் பையன்' போல இயல்பாகப் பேசியபடி இவர் தொகுத்து வழங்கிய விதம் டி.வி ரசிகர்களுக்கு அப்போது ரொம்பவே பிடித்துப்போனது. குறிப்பாக இவரது நிகழ்ச்சிகள் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகைகள் கிடைத்தனர்.
சின்னத்திரை மூலம் கிடைத்த புகழ் சினிமாக் கனவுகளை விரிக்க, பரபரப்பான தொகுப்பாளராக இருந்த நேரத்திலேயே டி.வி-யை விட்டு வெளியேறி சினிமாப் பக்கம் போனார்.
ஆனால் இவர் எதிரபார்த்தபடி சினிமா இவரை வரவேற்கவில்லை. பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு இவர் நடித்த சில படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனதில் ரொம்பவே அப்செட் ஆனார்.

இதற்கிடையில் இவரைப் போலவே டி.வி-யில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சாண்ட்ராவைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்.
தொடர்ந்து சில ஆண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த காலமும உண்டு. அதன்பின் மீண்டும் சீரியல் ஹீரோவாக டி.வி பக்கம் வந்தார். சன் டி.வி-யில் சில சீரியல்களில் நடித்தவர், கடைசியாக விஜய் டி.வி-யில் 'சின்னத்தம்பி', 'அன்புடன் குஷி', 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய தொடர்களில் நடித்தார்.
இந்தச் சூழலில் மறுபடியும் சினிமாவில் நடிப்பதற்காக சில மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் 'டி3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
பிரஜினிடம் பேசினோம்.
"என்னுடைய சினிமாப் பயணம் முதல் ரவுண்டுல சரியா அமையாத நிலையிலதான் சீரியலில் நடிக்க வந்தேன். காலம் தீர்மானிச்ச முடிவு அது. இப்ப மறுபடியும் இரண்டாவது வாய்ப்பா சில படங்கள் அமைஞ்சிருக்கு. இளையராஜா இசையமைச்சிருக்கிற ஒரு படமெல்லாம்கூட வெளிவர இருக்கு. இந்த முறை சினிமா என்னைக் கைவிடாதுன்னு நம்பறேன்.

சிவகார்த்திகேயன் என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்தது. முன்னாடி அவர் தொகுத்து வழங்கின ஒரு நிகழ்ச்சியில நான் கெஸ்ட்டா போய் உட்கார்ந்திருக்கேன்.
சிலர், சிவகார்த்திகேயன் டி.வி-யில இருந்து வந்து சாதிச்சிட்டாரே, உங்களால ஏன் முடியலைன்னு கேக்கறாங்க. அவருக்கான நேரம் வந்துடுச்சு. எனக்கான நேரத்துக்கு நான் காத்திருக்கேன், அவ்ளோதான்" என்றவர், தன் மனைவி சாண்ட்ரா குறித்து பேசினார்.
”அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, எனக்கு ஊக்கம் தந்து துவண்டு விடாதபடி பார்த்துக்கறவங்க அவங்கதான். நல்ல நடிகை அவங்க. குடும்பச் சூழ்நிலை அவங்களை நடிக்க விடாம வச்சிருக்கு. அவங்க நடிக்க, நான் ஒரு படம் இயக்கணும்கிறதுதான் என்னுடைய ஆசை. அந்த ஆசையும் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்" என்கிறார்.