Published:Updated:

"ஒரு வேளை மட்டுமே சாப்பாடு... இதில் இ.எம்.ஐ கட்ட நான் எங்க போவேன்?" - மறைந்த நடிகர் ராஜசேகர் மனைவி

ராஜசேகர்
ராஜசேகர்

'' 'யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லுங்க'ங்கிறாங்க. நான் என்ன சொல்றது? ஒவ்வொரு நாளுமே கலக்கத்தோட விடியுது. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது. வெளியில சொல்லவே வேதனையாத்தான் இருக்கு.''

இயக்குநர் ராஜசேகர் (ராபர்ட்) மறைந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ''அவருக்கு இருந்தது ஒரே ஆசை... அது நிறைவேறாமலேயே போயிட்டார்'' என அவர் இறந்தபோது பேசியிருந்தார், அவரது மனைவி தாரா. வாழும் காலம் முடிவதற்குள் சொந்த வீட்டில் ஒரு நாளாவது வசித்துவிட வேண்டுமென்பதே ராஜசேகரின் அந்த ஆசை. அதற்காக, இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு ஃபிளாட்டையும் வாங்கியிருக்கிறார். ஆனால், பத்திரப்பதிவு உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாக, அந்த வீட்டில் குடியேறாமலேயே இறந்துவிட்டார். அவரது உடல் மட்டுமே சில மணி நேரம் அங்கு இருந்துவிட்டு சென்றது.

ராஜசேகர், தாரா
ராஜசேகர், தாரா

உறவுகளின் ஆதரவு அவ்வளவாக இல்லாத நிலையில், தனி மனுஷியாக இருந்த தாரா, தற்போது எப்படி இருக்கிறார்? அவரிடம் பேசினோம்.

''நல்லா சம்பாதிக்கத் திறமை இருந்தும் ஆசையில்லாத மனுஷனா வாழ்ந்துட்டுப் போயிட்டார். எங்களுக்கு குழந்தைகள் இல்லாதபோதும், அவரோட இருந்த வரைக்கும் சந்தோஷமாவே வாழ்ந்தேன். நாலு காசு சேர்க்கலையேன்னு அவரைத் திட்டக் கூட தோணாது. அந்தளவு என் மனசை அவரோட பிரியம் ஆக்கிரமிச்சு வச்சிருந்தது. அதுவும் போக, எதிர்காலத்தை நினைச்சு நிகழ்காலத்தை பயத்துலயே கழிக்கக் கூடாதுன்னு அடிக்கடி சொல்வார். ஆனா, கடைசிக் காலத்துல என்னைப் பத்தின கவலை வந்திடுச்சு.

லோன் போட்டு 500 சதுர அடியில ஒரு ஃபிளாட்டை வாங்கினார். மொத்தத் தொகையில பாதித்தொகைக்கு மேல கட்டி முடிச்சுட்ட நிலையில திடீர்னு இறந்துட்டார். அவர் இறப்புக்குப் பிறகு எனக்கு 'சாப்பாட்டுக்கு என்ன'ங்கிறதே கேள்வியா இருக்கு... முப்பது வருசமா வீட்டை விட்டு வெளியில விடாம பழக்கிட்டார். இப்ப என் கண் முன்னாடி ரெண்டே வாய்ப்புதான் இருக்கு. அவர் ஷூட்டிங் போறப்ப கூடவே போயிட்டு வந்ததை வச்சு, ரெண்டு இடத்துல போய் 'நடிக்க வாய்ப்பு கொடுங்களேன்'னு கேட்டுருக்கேன். தந்தாங்கன்னா, வீட்டுப் பிரச்னை தீருதோ இல்லையோ வீட்டுலயே அடைஞ்சு கிடக்கற அழுத்தம் குறையலாம். அப்படி எதுவும் நடக்கலைன்னா, அடுத்த வழி எங்காச்சும் வீட்டு வேலை.

ராஜசேகர்
ராஜசேகர்
வாவ்... காதலை இவ்ளோ அழகாச் சொன்னதுக்கே... வி லவ் `வாரணம் ஆயிரம்' கெளதம்! #11YearsofVaaranamAayiram

இப்படி சாப்பாட்டுக்கு தீர்வு கிடைக்காதான்னு நான் யோசிச்சிட்டிருக்கிற நிலையில, மாசா மாசம் இ.எம்.ஐ கட்ட நான் எங்க போவேன்? இந்த ரெண்டு மாசத்துல, கடன் கொடுத்த பேங்க்ல இருந்து பத்து தடவைக்கும் மேல வந்துட்டுப் போயிட்டாங்க. 'உங்க பேர்லதான் வீடு இருக்கு; அதனால யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லுங்க'ங்கிறாங்க. நான் என்ன சொல்றது? ஒவ்வொரு நாளும் கலக்கத்தோடவே விடியுது. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது. வெளியில சொல்ல வேதனையாத்தான் இருக்கு. பதினைஞ்சு நாளா ராத்திரி ஒரு வேளை சாப்பாடுதான்'' என்றவரின் குரல் உடைகிறது!

ஆசுவாசப்பட, காத்திருந்தோம். தொடர்ந்த தாரா ''வீட்டை வித்து கடனை அடைச்சுட்டு எங்காவது கிடைக்கிற இடத்துல ஒண்டிக்கலாம்னா, வீடு அவரோட ஆசையா இருந்ததேங்கிற எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோகுது. இன்னொரு பக்கம், நம்ம அவசரத்துல ஆதாயம் கிடைக்குமான்னு பார்க்கிறாங்க.

ராஜசேகர்
ராஜசேகர்
``தண்ணீர் வாங்கிக் கொடுக்ககூட ஆள் இல்லை!’’ - மறைந்த நடிகர் ராஜசேகர் குறித்து`சத்யா’ இந்திரன்

வீட்டை வித்தா வர்ற காசு கடனைக் கட்டத்தான் சரியா இருக்கும்கிறாங்க. பாரத்தை முழுக்க கடவுள் மேல போட்டுட்டு தேமேன்னு உட்கார்ந்திருக்கேன். அவரு நடிச்ச சீரியல், சினிமாக்களைப் பார்த்தா அவர்கிட்ட பேசற மாதிரி ஒரு ஃபீல் கிடைச்சது. ஆனா, போனை ரீ-சார்ஜ் பண்ண முடியாம அதுவும் இப்ப கட் ஆகிடுச்சு'' என வருந்துகிறார் தாரா.

அடுத்த கட்டுரைக்கு