Published:Updated:

"சினிமாவைவிட்டு ஏன் சீரியலுக்கு வந்தேன்றதுக்குப் பெரிய காரணம் இருக்கு!" - `செந்தூரப்பூவே' ரஞ்சித்

சினிமா டு சீரியல் பயணம் சொல்கிறார் நடிகர் ரஞ்சித்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'பொன் விலங்கு', 'சிந்து நதிப்பூ' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஞ்சித். தொடர்ந்து படங்களில் நடித்துவந்த ரஞ்சித் சமீபத்தில் ஒரு அரசியல்கட்சியிலும் இணைந்தார். இந்நிலையில் சினிமாவிலிருந்து இப்போது சீரியலுக்கு வந்திருக்கிறார். 'செந்தூரப்பூவே' தொடரில் ஹீரோவாக இவர் நடிக்கும் நிலையில், இவரது மனைவியும் முன்னாள் சினிமா நடிகையுமான ப்ரியா ராமனும் 'செம்பருத்தி' தொடரில் நடித்துவருகிறார். ரஞ்சித்திடம் பேசினேன்.

‘’வீட்டுல அது ஒரு டின்னர் நேரம். எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தோம். டிவியில நான் அறிமுகமாகிற ‘செந்தூரப்பூவே’ சீரியலின் ப்ரமோ ஒளிபரப்பாகுது. ‘இரவு ஒன்பது மணிக்கு’ன்னு சொல்றாங்க. 9 மணி ஸ்லாட்ங்கிறது அப்பத்தான் என்னுடைய மனைவிக்குத் தெரியவருது. ஒரு செகண்ட் அதிர்ந்து போய் ‘என்னது ஒன்பது மணிக்கா’னு கேட்டு அப்படியே எழுந்துட்டாங்க. ஏன்னா, அவங்களுடைய ‘செம்பருத்தி’ சீரீயல் ஒளிபரப்பாகிற டைம் அது.

ரஞ்சித்
ரஞ்சித்

எனக்கு 9 மணி ஸ்லாட்ங்கிற விஷயம் முன்னாடியே தெரியும். அதை ப்ரியாகிட்டச் சொல்லத் தயக்கமா இருந்ததால பேசாம இருந்துட்டேன். இப்பவும் கூட பல விஷயங்களை நினைச்சுப் பார்த்தா கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு’’ என்றார் நடிகர் ரஞ்சித்.

''எப்ப தொடர் ஆரம்பமாகுது... ஷூட்டிங்லாம் எப்ப நடந்தது?''

''2020 ஜனவரியிலேயே இந்த சீரியலின் ஷூட்டிங் தொடங்கிடுச்சு. மார்ச் கடைசி வாரத்துல முதல் எபிசோடு ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்தாங்க. சரியா அப்பத்தான் நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

திரும்ப சுமார் மூணு மாசம் கழிச்சு சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி தந்ததும் ஒளிபரப்பைத் தொடங்கிடலாம்னு அறிவிச்சு முதல் எபிசோடும் ஒளிபரப்பாச்சு. ஆனா மறுபடியும் சென்னையில் முழு ஊரடங்கு. அதனால திரும்பவும் தள்ளிப்போயிருக்கு.''

ரஞ்சித்
ரஞ்சித்

''சீரியல் நடிகரா மாறிட்டீங்க... இந்த அனுபவம் எப்படியிருக்கு?''

''சீரியல் பண்ணணும்கிற ஆர்வம்லாம் சேட்டிலைட் சேனல்கள் வந்தப்போவே எனக்குள்ள இருந்தது. நிறைய பேர்கிட்ட பேசியிருக்கேன். ஏன் என் மனைவி ப்ரியாகிட்டயே இதைப் பத்தி எத்தனையோ முறை சொல்லியிருக்கேன். நான் நினைச்சபடியே அந்த வாய்ப்பும் வந்திடுச்சு. ஆனா இந்தக் கொரோனா குறுக்க வந்து ஆட்டம் காமிச்சிட்டிருக்கு. அதோட ஆட்டம் சீக்கிரமே முடிவுக்கு வந்துடும்னு நம்பறேன்.

சீரியல் நடிகரா என் அனுபவத்துல சீரியல்/சினிமான்னு இரண்டுத்துக்கும் ஷூட்டிங்ல பெரிசா நான் வித்தியாசத்தை உணரலை. ரெண்டுமே நடிப்புதானே!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''சினிமாவைவிட்டு ஏன் டிவிக்கு வந்தீங்கன்னு எல்லோரும் கேட்பாங்கள்ல?''

''ஆமாம். அவங்க எல்லோருக்கும் உங்க மூலமாவே பதில் சொல்லிடுறேன். அதுக்கு பெரிய காரணம் இருக்கு. சினிமாங்கிறது இன்னைக்கு ரொம்ப மாறிடுச்சு. சினிமாவுல உச்ச நட்சத்திரங்களோட படங்களை மட்டுமே எல்லோரும் போட்டிபோட்டுக்கிட்டு வாங்குறாங்க. என்னை மாதிரி நடிகர்களோட படங்களுக்கு எங்காச்சும் ஒரு காலைக்காட்சி மட்டும் தந்துட்டு, படம் பிக் அப் ஆகறதுக்கு முன்னாடியே தூக்கிடுறாங்க. அப்புறம் எப்படி நாங்க சினிமாவில் தொடர்ந்து இருக்கமுடியும்.

சினிமால சர்வைவ் பண்றதுன்றது பெரிய போராட்டமாகிடுச்சு. ‘ஒருதலை ராகம்’, ’சேது’ மாதிரிப் படங்களேகூட இன்னைக்குத் தேதிக்கு ரிலீஸ் ஆகியிருந்தா ஓடியிருக்காது. இதுதான் இப்போதைய நிலைமை.’’

ப்ரியா ராமன் செம்பருத்தி ஸ்பாட்டில்
ப்ரியா ராமன் செம்பருத்தி ஸ்பாட்டில்

''அப்பா, அம்மானு ரெண்டு பேரோட சீரியலும் ஒரே நேரத்துல வரப்போகுதே... உங்க பசங்க யாரோட சீரியலைப் பார்ப்பாங்க?''

''அதை நினைக்கறப்பதான் கொஞ்சம் திக் திக்னு இருக்கு. அவங்க நடிக்கிற சீரியல் ரசிகர்கள்கிட்ட நல்ல வரவேற்பைப் பெற்று போயிட்டிருக்கு. ’செந்தூரப்பூவே’ ஒரு குழந்தை. பசங்களுக்கும் யார் சீரியலைப் பார்க்குறதுன்ற குழப்பம் இப்பவே வந்துடுச்சு. ப்ரியாவைப் பொறுத்தவரை முதல்ல ஜெர்க் ஆனாலும், சீரியலுக்கு வரும் போதே ப்ரைம் டைம் ஸ்லாட் கிடைச்சதுக்கு வாழ்த்தினாங்க.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு