Published:Updated:

``அந்தக் குழந்தையைக் கொஞ்சினப்போ நிஜமாவே அழுதேன்!’’ - ரித்விகாவின் `நாட்படு தேறல்’ அனுபவம்

ரித்விகா
News
ரித்விகா

``சுசீலாம்மா பாட்டுக்கு நான் நடிச்சது நம்பவே முடியாத நிஜம்’’ என்று சிலிர்க்கிறார் ரித்விகா.

கூட்டுக் குடும்பத்தின் தாய்மை `சித்தெறும்பு கடிச்சாலும் சித்தப்பா வருவாக; தாங்கி தோள் மாத்த தாய்மாமன் வருவாக' என்று மகிழ்ச்சியுடன் மகவைத் தாலாட்டுகிறது.

தனிக்குடித்தன தாய்மை `தாய்மாமன் பொழப்புக்கு தாராவி போயிட்டாக; சித்தப்பா எல்லாரும் சீமையில இருக்காங்க' என்று மென் சோகத்துடன் மகவை தாலாட்டுகிறது.

டிரெண்டி தாய்மையோ `ஆத்தா ஒரு மூலையில, அப்பன் ஒரு மூலையில, காத்தா பறக்குறாக கவர்மென்டு வேலையில' என்று அலுவலகத்தில் இருந்தபடியே வீடியோ காலில் மகவுக்குத் தாலாட்டு பாடுகிறது. கவிஞர் வைரமுத்துவின் `நாட்படு தேற'லின் `தாலாட்டு’ ஆல்பம் நம் கைவிட்டுப்போன கூட்டுக்குடும்ப குழந்தை வளர்ப்பின் இனிமையைக் கண்கலங்கச் சொல்கிறது.

படப்பிடிப்பின்போது
படப்பிடிப்பின்போது

தழைய வாரிய தலை, சொந்தங்கள் எல்லாம் அருகில் இருக்கும் மகிழ்ச்சி என்று வலம் வருகிற முதல் தலைமுறை அம்மாவைவிட, தனிக்குடித்தனத்தில் கணவனும் அருகில்லாமல் குழந்தையைத் தாலாட்டுகிற இரண்டாம் தலைமுறை அம்மா நடிப்பில் 16 அடி பாய்கிறார். ஐ.டி-யில் வேலைபார்க்கும் அம்மாவின் தாய்மைத் தருணங்களை வெளிப்படுத்துகிற மூன்றாம் தலைமுறை அம்மா, இந்தக்கால பெண்களின் பிம்பமாக நம்மையெல்லாம் அழ வைத்துவிடுகிறார். மூன்று தலைமுறை அம்மாக்களாகவும் நடிகை ரித்விகா. பிக்பாஸுக்குப் பிறகு மறுபடியும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வருபவரிடம், `நாட்படு தேறல்’ அனுபவம் எப்படியிருந்தது என்றோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``இந்தப் பாட்டை இயக்குநர் சரண் சார் டைரக்ட் பண்ணார். அவர்தான் வைரமுத்து சாரோட லிரிக்ஸ்க்கு நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டார். அதுவரைக்கும் சாரோட பாட்டுல நான் நடிச்சதில்லை. உடனே ஓகே சொல்லிட்டேன். கொரோனா முதல் அலை முடிஞ்சு லாக்டெளன் தளர்த்த ஆரம்பிச்சதும் ஷூட்டிங் நடந்துச்சு. ஜஸ்ட் மூணு நாள் ஷூட்டிங்தான். ஆனா, என் கரியர்லேயே மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்திடுச்சு தாலாட்டு.

நடிகை ரித்விகா
நடிகை ரித்விகா

இதுபத்தி சரண் சார் என்கிட்ட பேசினப்போ, பாட்டோட வரிகள் எல்லாம் இலக்கியத் தமிழ். பாட்டுக்கேத்த மாதிரி சரியா லிப் மூவ்மென்ட் கொடுக்கணும் நீங்க. இந்தப் பாட்டை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நல்லா மனப்பாடம் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு ஆடியோவை அனுப்பி வெச்சாரு. பாடல் வரிகளைப் படிச்சு ஒருபக்கம் பிரமிப்பானேன்னா, இன்னொரு பக்கம் சுசீலாம்மா, சித்ராம்மா, ஹரிணி மேடம்னு பாடினவங்க குரலைக் கேட்டதும் சந்தோஷத்துல திக்குமுக்காடிப் போயிட்டேன். சுசீலாம்மா பாட்டுக்கு நான் நடிச்சது நம்பவே முடியாத நிஜம்’’ என்று சிலிர்க்கிறார் ரித்விகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``கொரோனா காரணமா சுசீலாம்மாவால வீட்டை விட்டு வெளியே வர முடியலை. அதனால, அம்மாவோட வீட்டுக்கே போய் ரெக்கார்டிங் பண்ணியிருக்காங்க. அவங்க குரலுக்கு லிப் மூவ்மென்ட் கொடுக்கிறப்போ சந்தோஷம், பயம்னு ஒரு கலவையான உணர்வா இருந்துச்சு.

நடிகை ரித்விகா
நடிகை ரித்விகா

மூணு நாள் ஷூட்டிங் நடந்தப்போ ஒருநாள் வைரமுத்து சார் வந்திருந்தார். `பாட்டு பிடிச்சிருக்காம்மா’ன்னு கேட்டாரு. `ரொம்ப எமோஷனலா இருந்துச்சு சார்’னு சொன்னேன். ஷூட் முடிஞ்சதும் பின்னணிக் குரல்களுக்கு ஏத்தமாதிரி நடிச்சிருந்தீங்கன்னு பாராட்டினார்’’ என்றவர், மூன்றாவது தலைமுறை அம்மாவுக்குக் கிடைத்த ஃபீட்பேக் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

``வீடியோ கால்ல தாலாட்டு பாடுற மாதிரி நடிக்கணும்னு சரண் சார் சொன்னப்போ ஆச்சர்யமா இருந்துச்சு. `ஐ.டி-ல நைட் ஷிஃப்ட் வேலைபார்க்கிற அம்மாங்க இப்படித்தான் இருக்காங்க’ன்னு அவர் சொன்னதும் ஐயோன்னு இருந்துச்சு. அந்த கேரக்டர்ல நடிக்கிறப்போ என்கூட நடிச்ச அந்தக் குழந்தையை கொஞ்சினப்போ நான் நிஜமாகவே அழுதேன். அந்த கேரக்டரை பத்திதான் நிறைய பேர் பாராட்டுறாங்க" என்றவருக்கு நம்முடைய பாராட்டையும் தெரிவித்தோம்.