Published:Updated:

``நம்ம கலையை ஒரு பிரெஞ்சு  பெண் இப்படிச் சொன்னதுசெருப்படியா இருந்தது!'' - வெற்றி

வெற்றி

தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய நாடகத்தை இயக்கி அப்ளாஸ்களை அள்ளியிருக்கும் வெற்றி, நாடகக் கலை மீதான தன் காதல் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``நம்ம கலையை ஒரு பிரெஞ்சு  பெண் இப்படிச் சொன்னதுசெருப்படியா இருந்தது!'' - வெற்றி

தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய நாடகத்தை இயக்கி அப்ளாஸ்களை அள்ளியிருக்கும் வெற்றி, நாடகக் கலை மீதான தன் காதல் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Published:Updated:
வெற்றி

`கனா காணும் காலங்கள்' கல்லூரியின் கதை, `சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சீரியல்களின் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்த வெற்றி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தற்போது முழு நேர நாடகக் கலைஞனாக உருமாறியிருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய நாடகத்தை இயக்கி அப்ளாஸ்களை அள்ளியிருக்கும் வெற்றி, நாடகக் கலை மீதான தன் காதல் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாடகக் குழு
நாடகக் குழு

"நான் வடசென்னை பையன். சின்னத்திரையில இருக்கும்போதே புதுசா எதாவது கத்துக்கணும்ங்கிற ஆசை இருந்தது. குறிப்பா நாட்டுப்புறக் கலைகள் மேல எனக்கு ஆர்வம் அதிகம். சீரியல், சினிமானு எதுவா இருந்தாலும் நம்ம நாட்டுப்புறக் கலைகள்தான் அதுக்கு அடித்தளம். ஏன்னா, எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டது நம்மத் தெருக்கூத்துதான். தெருக்கூத்து மேடை நாடகமாச்சு; மேடை நாடகம் சினிமா உருவாச்சு. இப்போ, யூ-டியூப், ஃபேஸ்புக்னு நிறைய டிஜிட்டல் தளங்கள் வந்துடுச்சு. ஆனா, நம்மோட தெருக்கூத்து கண்டுக்கப்படாமலே இருக்கு.

நான் `கனா காணும் காலங்கள்' சீசன் 2-ல் நடிச்சிட்டிருந்தப்போ லைஃப் ரொம்ப பிஸியா போகும். பகல் இரவுனு ஷூட் இருந்துட்டே இருக்கும். டப்பிங்கும் நானே பேசினதால மாசத்துல மூணு நாள்கூட ரெஸ்ட் இருக்காது. ஆனா, பாரம்பர்யக் கலைகள் கத்துக்கணும், நாடகக் கலைஞனா ஆகணும்னு ஆசை மட்டும் இருந்துட்டே இருக்கும். அடுத்தடுத்து சீரியல்கள்ல கமிட்டானப்போ என்னோட ஃபைனான்ஷியல் ஸ்டேட்டஸும் அதிகமாச்சு.

வெற்றி
வெற்றி

அந்த சமயத்துல எல்லாத்தையும் விட்டுட்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகலாம்னு ஒரு பக்கம் குழப்பம் இருந்தது. இந்தப் புகழ், பணம் எல்லாத்தையும் பிரேக் பண்ணாதான், மனசுக்கு நிறைவான விஷயத்தைப் பண்ண முடியும்னு ஏக்கப்பட்டதுலேயே நாள்கள் நகர்ந்துடுச்சு. ஒருவேளை சீரியலை விட்டுட்டு மனசுக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணா, விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க முடியாதுனு வேற தோணுச்சு. அப்புறம் ஒருக்கட்டதுல என்னோட மனசுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு முடிவெடுத்தேன்.

2015-ல் பாண்டிச்சேரியின் இண்டியானோஸ்ட்ரமில் தியேட்டர் கலைஞனாகப் பயிற்சியில சேர்ந்தேன். அங்கதான் நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். இலங்கையை அடிப்படையாக வெச்சு நாடகம், தப்பாட்டம், சிலம்பட்டம், தேவராட்டம்னு நிறைய பண்ணோம். நம் பாரம்பர்யக் கலைகள் பத்தி அங்கு நிறைய கத்துக்கிட்டேன். அங்கிருந்து பிரான்ஸுக்குப் போனதுக்கு அப்புறம் நாடகங்கள்ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. பாரீஸ்ல மூணு மாசம் வெவ்வேறு இடங்கள்ல நாடகம் பண்ணோம்.

நாடகக் குழு
நாடகக் குழு

பாரீஸ்ல இருந்த தியேட்டர் உரிமையாளர் ஒரு ஆச்சர்யமான விஷயத்தைச் சொன்னாங்க. `மேற்கத்திய நாடகங்கள்ல Clown-ன்னு ஒரு கதாபாத்திரம் ரொம்ப ஃபேமஸ். அதை உங்களோட தெருக்கூத்துல வர்ற கட்டியங்காரனைத் தழுவி உருவாக்கப்பட்டதுதான். ஆனா, நீங்க தெருக்கூத்தையும் தெருக்கூத்துக் கலைஞர்களையும் கொண்டாட மறந்துட்டீங்க. அந்தக் கலையையே மறந்துட்டு இருக்கீங்க’ன்னு அந்த பிரெஞ்சு பெண்மணி சொன்னாங்க.

எனக்கு செருப்படி வாங்கின மாதிரி இருந்துச்சு. அவங்க சொன்ன விஷயம் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. பிரான்ஸ் ட்ரிப் முடிஞ்சு பாண்டிச்சேரி வந்ததும், இண்டியானோஸ்ட்ரமில் தியேட்டர்ல இருந்து ரிலீவ் ஆகிட்டேன்.

நாடகக் குழு
நாடகக் குழு

2016-ல் சென்னை வந்ததும் எப்படியாச்சும் தெருக்கூத்து போன்ற கலைகளை வளர்க்கணும்னு ட்ரூப் தேட ஆரம்பிச்சேன். ஆனா, நான் ஒரு கற்பனை உலகத்துல இருக்கேனோனு தோணுச்சு, யாருமே என் ஐடியாலஜிக்கு ஒத்து வரலை. அப்புறம் சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நடிச்சேன்.

இதுக்கு நடுவுல இண்டியானோஸ்ட்ரம் தியேட்டர் நண்பர்களோட சேர்ந்து ஒரு நாடகம் எழுதி, ட்ரூப் உருவாக்கினோம். அந்த ட்ரூப்புக்குத் தமிழ் ஆயுத எழுத்தை (Theatre Akku) பெயரா வெச்சோம். அதுக்கப்புறம், `அடவு’ங்கிற நாடகத்தை நான் இயக்கினேன். இதை முன்னெடுக்கவே இரண்டு வருடங்களாகிடுச்சு. நல்ல பேர் கிடைச்சிருக்கு. நாடக கலைஞர் ஏ.கே, கதைசொல்லி சதீஷ் போன்றவர்கள்லாம் தியேட்டர் அக்குவின் பலம். என் மாஸ்டர் சம்பந்தம் ஐயா, நெல்லை மணியன், கண்ணன் குமார், குமரன் வளவன் இவங்க எல்லாரும்தான் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுப்பாங்க.

நாடகக் குழு
நாடகக் குழு

அந்த பிரெஞ்சு பெண் சொன்ன மாதிரி தெருக்கூத்தையும் அதன் கலைஞர்களையும் மையமா வெச்சு உருவாக்கப்பட்டதுதான் 'அடவு' நாடகம். தெருக்கூத்து கலைஞர்களின் இப்போதைய நிலைமை என்னன்னு சொல்லியிருக்கோம். எங்க நாடகத்தை வெவ்வேறு இடங்களிலும் களங்களிலும் கொண்டு போய் சேர்க்குறோம். இதுவரைக்கும் 25 ஷோ போட்டு முடிச்சிருக்கோம்.

தமிழ்நாட்டில் சிட்டி, கிராமம், பள்ளி, கல்லூரி, சிறுவர் சீர்த்திருத்த பள்ளின்னு எல்லா இடங்கள்லேயும் நாடகத்தைப் போட்டுடோம். நகரங்கள்ல குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிச்சிருக்கோம். கிராமங்கள்ல காசு வாங்குறது இல்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் கலை மக்களுக்குப் போய்ச் சேரணும். கலை வடிவங்களை மக்கள் கத்துக்கணும்னு பயிற்சிப் பட்டறையும் நடத்துறோம். பயிற்சிப் பட்டறையில் சொல்லிக் கொடுக்குறது வேறு யாருமில்லை, கிராமங்கள்ல இருக்கிற தெருக்கூத்துக் கலைஞர்கள்தான். அவங்க வாயிலா தெருக்கூத்து போன்ற கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கணும்.

நாடகக் குழு
நாடகக் குழு

வழக்கமா தெருக்கூத்து நடக்கும்போது பார்வையாளர்கள் விருப்பப்படி காசு போடலாம்னு துண்டை விரிச்சு வெப்பாங்க (Crowd funding). நாங்களும் அப்படிப் பண்ணுவோம். ஒருவாட்டி பழங்குடியினர் கிராமத்துல நாடகம் முடிஞ்சதும் துண்டை விரிச்சி வெச்சிருந்தோம். அதைத் திறந்து பார்த்தப்போ ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லறைகளா இருந்துச்சு. நெகிழ்ந்துட்டோம். எங்க நாடகம் பார்த்த பழங்குடியினச் சிறுவர்கள் அத்தனை பேரும் அவங்ககிட்ட இருந்த காசையெல்லாம் போட்டுட்டுப் போயிருந்தாங்க. இதைவிட ஒரு பெரிய வெகுமதி இருந்துடவே முடியாது.

நான் செஞ்சிட்டு இருக்க வேலையில ஒரு சில பொருளாதார நெருக்கடி இருந்தாலும் மனசுக்கு நிறைவா இருக்கு. சீரியல்கள்ல நடிச்சிட்டிருந்தப்போ மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிப்பேன். அதை விட்டுட்டு தியேட்டர் கலைஞனா சேர்ந்தப்போ என்னோட மாசச் சம்பளம் 1500 ரூபாய்தான். என் வீட்டுல எனக்கு முழு ஆதரவு கொடுக்குறாங்க. ஆனாலும் என் செலவுகளை நானே பார்த்துப்பேன்.

நாடகக் குழு
நாடகக் குழு

நான் ஒரு சில படம் பண்ணிட்டிருக்கேன். அதுல வர்ற சம்பளத்தை என் செலவுக்குப் போக மிச்சத்தை தியேட்டரில்தான் இன்வெஸ்ட் பண்றேன். ஒரு கலைஞனுக்குக் கைத்தட்டல்களும், காசும் இருந்தா மட்டும் போதும். காசு கொடுத்துட்டு கூட்டமில்லைனாலும் சரி, கூட்டம் வந்தும் காசு கிடைக்கலைனாலும் சரி... பாதிப்பு அந்தக் கலைஞனுக்குதான். எந்த அளவுக்கு எளிமையோட வாழ முடியுமோ அந்த அளவுக்கு எளிமையா வாழ்றேன். எந்தச் சூழலிலும் இந்தக் கலையை விடவே மாட்டேன்’’ என்றார் உற்சாகம் குறையாமல்!