தமிழில் சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய காலம் தொட்டு சீரியல் ஏரியாவில் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். 'ராடான் டிவி' என்கிற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சன் டிவியுடன் இணைந்து 'சித்தி' உள்ளிட்ட பல மெகா ஹிட் சீரியல்களைத் தந்தார். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியிலிருந்து வெளியேறினார்.

அப்போதே ராடானின் சீரியல்கள் இனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராதிகாவோ கலர்ஸ் தமிழ் பக்கம் போனார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் பெரும்பாலான சீரியல்கள் முடிவுக்கு வந்து கிரிக்கெட், வெப் சீரிஸ் என வேறு ரூட்டில் இறங்கி விட்ட நிலையில்தான், ராடான் டிவியின் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன.
இது குறித்து ராடான் நிறுவனத்துடன் தொடர்பிலிருந்த சிலரிடம் நாம் விசாரித்த போது,
''ராடான் டிவி, விஜய் டிவி இடையே இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் கிட்டத்தட்ட முடிவடைஞ்சிடுச்சு. 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் கதையின் சீரியல் வெர்ஷனா `கிழக்கு வாசல்' -ங்கிற ஒரு கதையை டிக் செய்திருக்கறதாச் சொல்றாங்க. அந்தப் படத்தில் விசு நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் பல சீனியர் நடிகர்களை அலசி ஆராய்ஞ்சு கடைசியா, நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரைக் கமிட் செய்திருக்காங்க.

சீரியலில் நடிக்க இருக்கிற மத்த நடிகர். நடிகைகள் தேர்வு விறுவிறுப்பா நடந்திட்டிருக்கு. ஆர்ட்டிஸ்ட் கமிட் ஆகி முடிஞ்சதும் இம்மாத இறுதியில் ஷூட்டிங் இருக்கும்னு தெரியுது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலிருந்து அந்தப் புதிய சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கலாம்'' என்கிறார்கள்.