சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் TV: ஸ்டாலின் நடித்த இரண்டாவது சீரியல்!

வின்செண்ட் ராய்
பிரீமியம் ஸ்டோரி
News
வின்செண்ட் ராய்

சீரியல்ல ஹீரோ அவரு. அவருடைய ரூம் மேட் மாதிரி கூடவே இருக்கிற தாமஸ்ங்கிற கேரக்டர்ல நான் நடிச்சேன்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஆரம்பத்தில் ‘குறிஞ்சி மலர்’ என்னும் சீரியலில் நடித்தார் என்பது பலருக்கும் தெரியும். ‘தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அந்த சீரியலுக்குப் பிறகு சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான இன்னொரு சீரியலிலும் நடித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

‘‘அந்த சீரியலின் பெயர் ‘சூர்யா.’ சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஒளிபரப்பானது’’ என்கிறார் தொடரில் ஸ்டாலினுடன் நடித்திருந்த நடிகர் வின்செண்ட் ராய்.

வின்செண்ட் ராய்
வின்செண்ட் ராய்

‘`சீரியல்ல ஹீரோ அவரு. அவருடைய ரூம் மேட் மாதிரி கூடவே இருக்கிற தாமஸ்ங்கிற கேரக்டர்ல நான் நடிச்சேன். சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. சைதாப்பேட்டை, சின்னமலைப் பகுதிகள்ல ஷூட்டிங் நடந்தது. ‘தலைவர் மகன் நடிக்கிற சீரியல் ஷூட்டிங்’னு அந்தப் பகுதியின் கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லா உதவிகளையும் செய்வாங்க. சைதை கிட்டு வீட்டுல இருந்து சாப்பாடெல்லாம் வரும்.

தொடர் முழுக்க என்னுடைய கேரக்டர் இருந்ததால ஷூட்டிங் பிரேக்ல ரெண்டு பேரும் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கோம். ‘நீங்க நடிப்பா அரசியலான்னு முடிவு செய்துட்டீங்களா’ன்னு அப்ப அவர்கிட்ட கேட்டேன். ‘இன்னொரு மூணு மாசத்துல அதுல ஒரு தெளிவான முடிவு கிடைச்சிடும்’னார்.

சொன்னது போலவே அந்த சீரியலுடன் நடிப்புக்கு விடை தந்துட்டு முழுக்க முழுக்க அரசியல்னு முடிவு செய்தார். சீரியலின் கடைசிக் காட்சியில அவரைக் காப்பாத்த நான் இறந்து போற மாதிரி சீன். சின்னமலை சர்ச்ல சவப்பெட்டி செஞ்சு அடக்கம் நடந்த அந்த சீன்ல மனுஷன் நிஜமாகவே கலங்கிட்டார்.

சீரியல் முடிஞ்சபிறகு அவருடன் தொடர்பு விட்டுப்போச்சு. நாலஞ்சு வருஷம் கழிச்சு ஒரு கல்யாண வீட்டுல சந்திச்சோம். கட்சிக்காரங்க புடைசூழ அங்க வந்திருந்தவர் கூட்டத்துல என்னைப் பார்த்ததும், `தாமஸண்ணே’ன்னு அந்தக் கேரக்டர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதும் ஒரு செகண்ட் எனக்கு இன்ப அதிர்ச்சியாகிடுச்சு. பழசு மறக்கலை.

விகடன் TV: ஸ்டாலின் நடித்த இரண்டாவது சீரியல்!

ரெண்டு மாசத்துக்கு முன்னாடிகூட ஒரு சம்பவம். இப்ப நான் நடிச்சிட்டிருக்கிற ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியல்ல, உடன் நடிக்கிற லியோனியும் நானும் பேசிட்டிருக்கிறப்ப ஸ்டாலினுடன் நடிச்சதைப் பத்திச் சொல்ல, அவர் ஸ்டாலினைச் சந்திச்சப்ப அதுபத்திக் கேட்டிருக்கார். ‘உங்க நண்பரா நடிச்சவருடன் இப்ப நான் நடிச்சிட்டிருக்கேன்’னு சொன்னதும், அதேபோல ‘தாமஸ்னு ஒரு கேரக்டர்ல நடிச்சார்’னு சரியாச் சொல்லியிருக்கார். அப்பா மாதிரி புள்ளைக்கும் ஞாபக சக்தி அபாரம்தான்’’ என்கிறார் வின்செண்ட் ராய்.