Published:Updated:

"லீடு ரோல் வேணும்; வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!" - 'பாசமலர்' சந்திரா

வே.கிருஷ்ணவேணி

''யாராக இருந்தாலும் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்யும் போது அயர்ச்சியாக இருக்கும். அது எனக்கும் இருந்தது. மேலும்,தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வந்தது. அதனால்தான் பிரேக் எடுத்தேன்!"

சந்திரா
சந்திரா

சன் டிவி-யில் ஒளிபரப்பான `பாசமலர்' சீரியலுக்குப் பிறகு எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருக்கிறார், நடிகை சந்திரா. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக அவரை சினிமா, சீரியல் என எதிலும் பார்க்க முடியவில்லை. என்ன செய்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என போன் செய்தால், மாறாத சிரிப்போடு உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்.

சந்திரா
சந்திரா

``17 வருடமா இந்தத் துறையில் இருக்கிறேன். நான் எங்கேயும் போகவில்லை. யாராக இருந்தாலும் தொடர்ந்து ஒரு விஷயத்தைச் செய்யும்போது அயர்ச்சியாக இருக்கும். அது எனக்கும் இருந்தது. மேலும், தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வந்தது. அதனால், நல்ல கதாபாத்திரம் வந்த பிறகு நடிப்பைத் தொடரலாம் என இருந்தேன். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான `காதலிக்க நேரமில்லை' சமயத்தில்தான், `கோலங்கள்' சீரியலும் ஒளிபரப்பானது. அப்போது அவ்வளவு பரபரப்பாக இருந்தேன். ஓய்வே இல்லாமல் நடித்தேன். நண்பர்களுடன் பேச முடியவில்லை; பிடித்த சினிமாவைப் பார்க்க முடியவில்லை. இதற்காக இடையில் ஏழு வருடத்துக்கு முன்னாடியும் இரண்டு, மூன்று மாதங்கள் ஓய்வு எடுத்திருந்தேன். பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தேன்." என்றவர், தொடர்ந்தார்.

``2002- ம் வருடம் மலையாளத்தில் `ஸ்வந்தம்' என்ற சீரியல் ஏசியா நெட்டில் ஒளிபரப்பானது. பிறகு, `ஸ்டாப் வைலன்ஸ்' என்கிற படத்தில் ப்ரித்விராஜ் ஜோடியாக நடித்தேன். அந்தப் படம் அவருக்கு இரண்டாவது படம். எனக்கு மலையாளத்தில் முதல் படம். அதன் பிறகு சீரியல் வாய்ப்புகள் வந்தன.

சந்திரா
சந்திரா

`மமதல கோவிலா' என்ற தெலுங்கு சீரியலில் நடித்தேன். அதைத்தான் தமிழில் `சொந்த பந்தம்' என்கிற பெயரில் எடுத்தாங்க. `காதலிக்க நேரமில்லை', `வசந்தம்', `மகள்', `பாசமலர்' என இதுவரை 12 சீரியல்களில் நடித்திருக்கிறேன்." என்றவரிடம், சில கேள்விகளை முன் வைத்தேன்.

உங்களுக்கு மறக்க முடியாத சீரியல் எது..?

`கோலங்கள்' சீரியல். மூன்று வருடம் அந்த சீரியல்ல நடிச்சேன். தேவயானிகூட நடிச்சது, நல்ல அனுபவம். இந்த சீரியல் ஷூட்டிங் சமயத்துல மெயின் கேரக்டர்ல நடிச்ச திருச்செல்வத்துக்கு உடல்நிலை சரியில்லாமப் போனது. பிறகு, என் கேரக்டருக்கும் முக்கியத்துவம் குறைந்துபோனது. அதேநேரம், ஒரு தெலுங்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதனால், `கோலங்கள்' சீரியலின் இறுதிவரை என்னால் நீடிக்க முடியவில்லை.

சந்திரா
சந்திரா

இடையில் மியூரல் வேலைப்பாடுகளில் இறங்கிவிட்டதாகச் செய்திகள் வந்ததே?

அம்மாவுக்கு, மியூரல் ஆர்ட்டில் ஆர்வம். அதையே தொழிலாகவும் பண்ணாங்க. நான்தான் அந்த பிசினஸுக்கு சோஷியல் மீடியாவுக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டேன். முழுக்க அதிலேயே கவனம் செலுத்தலாம்னுதான் பிரேக் எடுத்துக்கிட்டேன். `பாசமலர்' சீரியலுக்குப் பிறகு ஒரேமாதிரியான கதாபாத்திரங்கள்தான் என்னைத் தேடி வந்தது. அதனால, கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிட்டா, நல்ல கேரக்டர்கள் வரும்னு நம்புனேன். இதுவரை அப்படி எதுவும் அமையவில்லை.

கலைஞர்களுக்கு கேமரா பழகிடும்; விடாது. அதனால, மீண்டும் நடிக்கத் தயாரா இருக்கேன். நல்ல சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடிக்கணும். அப்படி இருந்தால்தான் ரீ-என்ட்ரி கொடுப்பேன். இல்லையென்றால் சீரியலில் நடிக்கமாட்டேன். மற்றபடி, என் முழுக் கவனமும் இப்போ சினிமாவுலதான் இருக்கு.

சந்திரா
சந்திரா

திருமணம் எப்போ?

வரக்கூடிய வரன்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்துதான் வருது. ஒரு விசிட்டராக வெளிநாடுகளுக்குப் போகலாம். அங்கேயே தங்குவதென்றால், என்னால் முடியாது. அதனால்தான், வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாமெனச் சொல்லிட்டேன். இந்தியாவில் எங்கிருந்து வரன் வந்தாலும் எனக்கு ஓகேதான். அந்தப் பொறுப்பை எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன்.