Published:Updated:

``ரீல் ஜோடி, ரியல் ஜோடி ஆகணும்னு பேசினாங்க; அது உண்மையாகிடுச்சு!" - நடிகை சந்திரா லக்ஷ்மண் ஷேரிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சந்திரா லக்ஷ்மண் - டோஷ் கிரிஸ்டி
சந்திரா லக்ஷ்மண் - டோஷ் கிரிஸ்டி

நடிகை சந்திரா லக்ஷ்மண், சீரியல் ஒன்றில் உடன் நடிக்கும் நடிகர் டோஷ் கிரிஸ்டியைத் திருமணம் செய்துள்ளார். வாழ்த்துகள் கூறி சந்திராவிடம் பேசினோம். தனது திருமணம் முதல் தன்னைப் பற்றிய வதந்திகள்வரை வெளிப்படையாகப் பேசினார்.

`என்னைத்தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

உன்னைத்தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்!'

- விஜய் டிவி-யில் ஒளிபரப்பான `காதலிக்க நேரமில்லை' சீரியலின் இந்த டைட்டில் பாடல், 90'ஸ் கிட்ஸின் ரிங் டோனாகவும் காலர் டியூனாகவும் நீண்ட காலம் ஒலித்தது. இந்த சீரியல் ஒளிபரப்பான காலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார், இந்தத் தொடரின் நாயகி சந்திரா லக்ஷ்மண்.

கணவருடன் சந்திரா லக்ஷ்மண்
கணவருடன் சந்திரா லக்ஷ்மண்

தற்போது மலையாள சீரியல் ஒன்றில் நடித்துவரும் சந்திரா, அந்தத் தொடரில் நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை சில தினங்களுக்கு முன்பு கரம் பிடித்துள்ளார். மணமக்களுக்கு வாழ்த்து மழை பொழிய, கூடுதல் உற்சாகத்துடன் இருக்கும் சந்திராவுக்கு வாழ்த்துகள் கூறிப் பேசினோம்.

``நானும் என் கணவரும் திடீர்னு கல்யாணம் செஞ்சுகிட்டதாவும், இது காதல் கல்யாணம்னும் பலரும் நினைச்சுகிட்டிருக்காங்க. இதெல்லாம் உண்மையில்ல. இது பெற்றோரால நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். வதந்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாதுனு எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகத்தான் செய்து கிட்டிருக்கோம்" என்று சிரித்தவர், கல்யாண மகிழ்ச்சித் தருணத்தைப் பகிர்ந்தார்.

கணவருடன் சந்திரா லக்ஷ்மண்
கணவருடன் சந்திரா லக்ஷ்மண்

``மலையாள சினிமாக்கள்லயும் சீரியல்கள்லயும்தான் அதிகமா வேலை செஞ்சேன். நடுவுல தமிழ், தெலுங்கு புராஜெக்ட்டுகள்ல நடிக்க ஆரம்பிச்சதால, மலையாள இண்டஸ்ட்ரியுடன் 11 வருஷங்களா இடைவெளி ஏற்பட்டுடுச்சு. இந்த நிலையில, மலையாள சூர்யா சேனல்ல `ஸ்வந்தம் சுஜாதா'ங்கிற சீரியல்ல ஹீரோயினா நடிக்குறேன். சினிமாவுல நடிச்சுகிட்டிருந்த என் கணவரும் 10 வருஷங்களுக்குப் பிறகு இந்த சீரியல் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்தார். சீரியல் கதைப்படி நான் சிங்கிள் பேரன்ட். என் வாழ்க்கையில நண்பரா இணையும் டோஷ் கிறிஸ்டி, என்னை மறுமணம் செய்துக்க ஆசைப்படுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனா, அதுல உடன்பாடில்லாம, நானே அவருக்குக் கல்யாணம் செஞ்சு வைப்பேன். நிஜ வாழ்க்கையில எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகாதது ரசிகர்களுக்குத் தெரியும். அதனால, நாங்க ரெண்டு பேரும் கதையிலயும் ரியல் லைஃப்லயும் ஜோடி சேர்ந்தா நல்லாயிருக்கும்னு பலரும் பேச ஆரம்பிச்சாங்க. அதேமாதிரி சீரியல் யூனிட்லயும் எங்க ஜோடிப் பொருத்தம் பத்தி தமாஷா பேசுவாங்க. இதெல்லாம் ரெண்டு வீட்டுப் பெற்றோருக்கும் தெரியுற அளவுக்கு வைரலாச்சு. ஆனா, நானும் அவரும் சிரிச்சுட்டு கடந்து போயிடுவோம். நான் இந்து. அவர் கிறிஸ்துவர். மத வேறுபாடுகளைக் கடந்து, ரெண்டு வீட்டுலயும் நாங்க ஒண்ணு சேர்ந்தா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டாங்க.

Chandra Lakshman with her husband
Chandra Lakshman with her husband

அதுக்கப்புறமாதான் நானும் அவரும் இந்த விஷயம் பத்தி வெளிப்படையா பேசினோம். எங்க ரெண்டு பேர் மனசும் ஒத்துப்போச்சு. கடந்த அக்டோபர்ல எங்க கல்யாண அறிவிப்பை வெளியிட்டோம். சில தினங்களுக்கு முன்னாடி கேரளாவுல எங்க கல்யாணம் நடந்துச்சு. சர்ச், கோயில்னு இல்லாம, பொதுவான ஒரு ஹால்லதான் கல்யாணத்தை நடத்தினோம். எங்க சமூக முறைப்படி என் அப்பா மடியில என்னை உட்கார வைச்சு, தாரைவார்த்து கொடுத்தார். தாலி, செயின்னு ரெண்டு மதத்துக்குமான தாலிகளை ஒரே செயின்ல இணைச்சு எனக்குக் கட்டினார் என் கணவர்.

கேரளாவுல கோவிட் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரல. அதனால, முக்கியமான உறவினர்கள், நண்பர்களை மட்டும்தான் கூப்பிட்டிருந்தோம். சினிமா, சின்னத்திரை நண்பர்கள் பலரையும் கூப்பிட வாய்ப்பு அமையல. நடிகர் விஜய் சேதுபதி வீடியோகால்ல எங்களை வாழ்த்தினார். பல பிரபலங்கள் போன்ல வாழ்த்தினாங்க. அடுத்த மாசம் சென்னையில வரவேற்பு நடந்த திட்டமிட்டிருக்கோம்" என்பவரின் குரலில் குதூகலம் கூடுகிறது.

கணவருடன் சந்திரா லக்ஷ்மண்
கணவருடன் சந்திரா லக்ஷ்மண்
''குண்டா இருந்த நான் ஒல்லியானதும் ஏதோ நோய்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க'' - நடிகை மஞ்சரி

38 வயதில் கல்யாணம் செய்துகொண்டிருக்கும் சந்திரா, திருமணம் குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். அதுகுறித்துப் பேசுபவர், ``எனக்கான கல்யாண ஏற்பாட்டுக்காக என் வீட்டுல நிறைய வரன்கள் பார்த்தாங்க. எனக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு லைஃப் பார்ட்னர் அமையவே இல்ல. என் விருப்பத்துக்கு ஏத்த வாழ்க்கைத்துணை வரப்போ கல்யாணம் செஞ்சுக்கலாம்னு பல வருஷங்களா காத்திருந்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்காதுங்கிற ரியாலிட்டியை நல்லா புரிஞ்சு வெச்சுருக்குறதால, கல்யாண விஷயத்துல எனக்கு நானே பிரஷர் கொடுத்துக்கல.

பலவிதமான பொருள்களுக்கும் காலாவதி தேதி இருக்குற மாதிரி, இந்த வயசுக்குள்ளதான் கல்யாணம் செஞ்சாகணும்னு காலக்கெடு இருக்கா என்ன? சமூகத்துல பலரும், தங்களோட வாழ்க்கையைவிடவும், மத்தவங்களோட வளர்ச்சி, வாழ்க்கையைப் பத்திதான் தேவையில்லாம பேசிகிட்டு இருப்பாங்க. அவங்க பேச்சுக்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்ல. நமக்குப் பிடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்குறது அவரவர் விருப்பம். சமூக அழுத்தம், சொந்த பந்தங்களோட நிர்ப்பந்தம்னு இந்த விஷயத்துல பெற்றோரும் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. அந்தக் கண்ணியத்தை இயல்பாவே என் பெற்றோர் கடைப்பிடிச்சாங்க.

பெற்றோருடன் சந்திரா லட்சுமண்
பெற்றோருடன் சந்திரா லட்சுமண்
''அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கேன், கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கிட்டேன்!'' - நீலிமா இசை

வீட்டுல நான் ஒரே பொண்ணு. என் சின்ன வயசுலேருந்தே நானும் என்னோட பெற்றோரும் நண்பர்களாகத்தான் பழகுறோம். என்கிட்ட எதையும் அவங்க மறைச்சதில்ல. என் விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் அவங்ககிட்ட நானும் வெளிப்படையா சொல்லுவேன். இந்த இடைவெளி ரொம்பவே விலகியிருக்குறதாலதான், நிறைய குடும்பங்கள்ல பெற்றோர் - பிள்ளை உறவுமுறையில நிறைய மனக்கசப்புகள் ஏற்படுது. நான் சினிமா, சீரியல்ல நடிக்குறதுக்கு என் பெற்றோர் ஒருபோதும் எதிர்ப்பு சொன்னதில்ல. இத்தனை வயசாகியும் கல்யாணமாகல. கல்யாணமாகி அமெரிக்காவுல செட்டிலாகிட்டேன். அது, இதுன்னு என்னைப் பத்தி அவ்வப்போது தமிழ், மலையாள மீடியாக்கள்ல வதந்திகள் உலவும்.

அந்தச் செய்திகள் என் பெற்றோர் பார்வைக்குப் போனா, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து எனக்கு அனுப்புவாங்க. `இன்னொருத்தரைப் பத்தி பொய்யான, உறுதிசெய்யாத, வதந்திகளைப் பரப்புறவங்களுக்கு உளவியல் ரீதியா, மன ரீதியா ஏதாச்சும் பாதிப்பு இருக்கும்போல'ன்னு சிரிச்சுட்டு கடந்து போயிடுவோம். இந்த வதந்திகள் எதுவுமே என்னைத் துளியும் பாதிச்சதில்ல. எனக்கு நல்லா பழக்கமானவங்களா இருந்தாலும்கூட, `நீங்க ஏன் கல்யாணம் செஞ்சுக்கல? ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கல? ஏன் ஒரு குழந்தையோடு நிறுத்திட்டீங்க?'ன்னு இன்னொருத்தர் பர்சனல் விஷயங்கள் பத்தி நான் யார்கிட்டயும் கேட்க மாட்டேன். அப்படிக் கேட்குறது அநாகரிகமான செயல்.

கணவருடன் சந்திரா லட்சுமண்
கணவருடன் சந்திரா லட்சுமண்

கல்யாணத்துக்குப் பிறகு கேரளாவுல கணவர் வீட்டுல இருக்கேன். அவரும் நானும் தொடர்ந்து அவரவர் விருப்பப்படி மீடியாவுல வேலை செய்வோம். என் பெற்றோருக்கு இப்போ ஒரு மகனும் கிடைச்சிருக்கார். அவர் வீட்டுக்கு மகளா நான் மாறியிருக்கேன். எண்ணம் போல வாழ்க்கைனு சொல்லுவாங்களே... அதுபோல எல்லாம் நல்லபடியா போகுது" என்று புன்னகையுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு